சிவாஜியின் ஒற்றர்கள் கல்யாண் வரிவசூல் தொகை போகும் பாதையின்
முழுவிவரங்களோடு அவன் கொடுத்த காலத்திற்கு முன்பாகவே வந்து சேர்ந்தார்கள். அவர்கள்
சொன்ன வழித்தடத்தை சிவாஜி மிகவும் கவனமாகக் கேட்டான். பின்பு அவர்களிடம் நிதியோடு வரும்
படை பற்றிக் கேட்டான்.
“இதுவரை
எப்போதும் பணப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் சிறிய ரதங்கள் ஐந்தாகவே இருந்திருக்கின்றன.
ஒவ்வொரு ரதத்திலும் ஐந்து வீரர்கள் வாள், ஈட்டிகள் வைத்துக் கொண்டு பயணிக்கிறார்கள்.
ஒவ்வொரு ரதத்தையும் இரண்டிரண்டு குதிரைகள் இழுத்துச் செல்கின்றன. ஐந்து ரதங்களுக்கு
முன்னால் சுமார் இருநூற்றி இருபது குதிரை வீரர்களும், பின்னால் இருநூற்றி இருபது குதிரை
வீரர்களும் செல்கிறார்கள். ரதங்களின் பக்கவாட்டில் இருபக்கங்களிலும் பத்து பத்து குதிரைவீரர்கள்
வருகிறார்கள். அனைவரும் வாள் அல்லது ஈட்டி வைத்திருக்கிறார்கள். இது வரை இந்தச் செல்வத்தை
வழிப்பறி செய்ய பல முயற்சிகள் நடந்திருக்கின்றன. முயற்சி செய்தவர்கள் தோல்வியடைந்து
மரணத்தைத் தழுவி இருக்கிறார்கள். கல்யாண் பகுதியின் தலைவன் முல்லானா அகமது தன் படையில்
இருப்பவர்களில் வலிமையானவர்களையே தேர்ந்தெடுத்து இந்த வேலையில் ஈடுபடுத்துகிறார் என்பதால்
வீரர்கள் அனைவரும் சிறந்தவர்கள் தான்…..”
“அவர்கள்
இரவுகளில் தங்கி இளைப்பாறும் இடங்கள் எவை?” சிவாஜி கேட்டான். கல்யாணிலிருந்து பீஜாப்பூர்
சென்று சேரப் பல நாட்கள் ஆகும் என்பதால் பிரயாண காலத்தில் அவர்கள் தங்கி இளைப்பாறும்
இடங்கள் மிக முக்கியமானவை. ஒற்றர்கள் தெரிவித்த இடங்கள் அனைத்தும் இரவு நேரத் தாக்குதல்களுக்கு
உகந்ததல்ல என்பது அவனுக்கு உடனே புரிந்தது. கொள்ளையர்கள் அடிக்கடித் தாக்குதல் நடத்துவது
இரவு நேரங்களிலேயே என்பதால் முன்கூட்டியே திட்டமிட்டு பாதிக்கப்படாத, பாதுகாப்பான இடங்களிலேயே முல்லானா அகமது தன் ஆட்களைத் தங்க ஏற்பாடு
செய்திருந்தான்.
சிவாஜி
அடுத்ததாக அவர்கள் பயண வேகம் குறித்துக் கேட்டான். எத்தனை நாட்களில் பீஜாப்பூரை அடைகிறார்கள்?
ஒரே வேகத்தில் செல்கிறார்களா அல்லது சில இடங்களில் வேகமாகவும், சில இடங்களில் மந்தமாகவும்
செல்கிறார்களா என்று கேட்டான். சீரான வேகத்திலேயே செல்கிறார்கள் என்ற பதில் வந்தது.
மேலும் பல கேள்விகள் கேட்டுத் திருப்தி அடைந்த சிவாஜி அந்த ஒற்றர் தலைவனை அழைத்துக்
கொண்டு தங்கள் பகுதிகளுக்கு மிக அடுத்து அவர்கள் பயணிக்கும் பாதையில் பயணம் செய்தான்.
தங்கள் எல்லை முடியும் வரை பயணம் செய்த சிவாஜி மீண்டும் அதே வழியில் திரும்ப வந்து
பாதையில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தான்.
அவன்
தேர்ந்தெடுத்த இடம் சற்றுக் குறுகலான பாதை, இருமருங்கிலும் மலைகள். எத்தனை பெரிய படை
வந்தாலும் இந்தக் குறுகிய பாதையில் வரிசை வரிசையாகவே செல்ல முடியும்… இரு பக்க மலைகளிலும்
பதுங்கிக் காத்திருக்க வசதியான பாறைகள் இருக்கின்றன. குறுகிய பாதை முடிவடைகையில் அகலமான
பகுதி இருக்கிறது. அங்கு கணிசமான குதிரை வீரர்களை ரகசியமாய் காத்திருக்க வைக்கலாம்….
சிவாஜி
ஒற்றர் தலைவனிடம் கேட்டான். “அவர்கள் இந்த இடத்திற்கு வந்து சேர்வது எந்த நேரத்திலாக
இருக்கும்?”
“சுமார்
மாலை நேரமாக இருக்கும் தலைவரே. அடுத்து அவர்கள் இளைப்பாறும் இடத்திற்கு சுமார் அரைமணி
நேரத் தொலைவு தான் இருக்கிறது…”
சிவாஜி
திருப்தியுடன் புன்னகைத்தான். இங்கு வரும் போது கண்டிப்பாகப் பயணக் களைப்பில் இருப்பார்கள்.
சிறிது நேரத்தில் இளைப்பாறும் இடம் என்பதால் இங்கு வரும் போதே மானசீகமாக இளைப்பாறுவதற்கு
அவர்கள் மனம் தயாராகி விட்டிருக்கும். எல்லா விதங்களிலும் அந்த இடம் அவன் திட்டத்திற்கு
ஏற்றதாக இருக்கிறது….
சிவாஜி
ஒற்றர் தலைவனிடம் கேட்டான். “நாம் கல்யாண் நிதியைக் கைப்பற்றினால் அந்தத் தகவல் பீஜாப்பூருக்கும்,
கல்யாணுக்கும் குறைந்த பட்சம் எந்தக் கால அளவில் போய்ச் சேரும்”
ஒற்றர்
தலைவன் கண்களை மூடிக் கணக்குப் போட்டு விட்டுச் சொன்னான். “பீஜாப்பூருக்கு குறைந்தபட்சம்
ஒன்றரை நாளிலும், அதிகபட்சமாய் இரண்டு நாளிலும் தகவல் போய்ச் சேர வாய்ப்பிருக்கிறது.
கல்யாணுக்குக் குறைந்த பட்சம் இருபது மணி நேரங்களிலும் அதிக பட்சம் ஒரு நாளிலும் தகவல்
போய்ச் சேர வாய்ப்பிருக்கிறது….”
சிவாஜி
திருப்தியுடன் தலையசைத்தான்.
மறுநாள்
அவன் நண்பர்களும் படைத்தலைவர்களும் தங்கள் தங்கள் திட்டங்களுடன் வந்தார்கள். அவர்கள்
ஒவ்வொருவராகத் தங்கள் இலக்கு இடங்களின் பலம், பலவீனங்களையும், தங்கள் திட்டங்களையும்,
அதை நிறைவேற்றத் தேவையானவற்றையும் சொன்னார்கள். சிவாஜி ஒவ்வொருவர் சொன்னதையும் கூர்ந்து
கேட்டான். அவர்கள் கருத்தில் இருந்து வித்தியாசப்பட்டால் அதை வெளிப்படையாகவே காரணங்களுடன்
தெரிவித்தான். ஒவ்வொருவரும் தாங்கள் இந்த இரண்டு நாட்களில் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்ததையும்,
சிந்தித்ததையும் விட அதிகமாக அவன் அறிந்திருந்தான் என்பதை உணர்ந்தார்கள். சிலர் கேட்டதை
விட அதிகமாய் ஒதுக்கினான். சிலர் கேட்டதை விடக் குறைவாக ஒதுக்கினான். சிலர் கேட்டபடியே
தந்தான். கிட்டத்தட்ட அனைவர் திட்டங்களிலும் சின்னச் சின்ன மாறுதல்கள் செய்தான். அந்தச்
சின்ன மாறுதல்கள் திட்டங்களின் பலவீனங்களை அடைத்து பலமடங்கு பலப்படுத்துவதாக இருப்பதைக்
கண்டு பிரமித்தார்கள்.
சிவாஜி
சொன்னான். “நான் கல்யாண் நிதியைக் கைப்பற்றியவுடன் இந்த நிகழ்வுகள் வேகமாக கிட்டத்தட்ட
ஏக காலத்தில் நடக்க வேண்டும். முடிந்த அளவு மற்றவர்கள் என்ன நடக்கிறது என்று புரிந்து
கொண்டு தயாராவதற்குள் நாம் அவர்களை வென்றுவிட வேண்டும்…..”
அவர்கள்
தலையசைத்தார்கள். அவர்களில் அபாஜி சோன் தேவ் என்பவனிடம் கல்யாணைக் கைப்பற்றும் பொறுப்பை
சிவாஜி ஒப்படைத்து இருந்தான். அவனிடம் சொன்னான். “அபாஜி. கல்யாண் தலைவன் முல்லானா அகமது
தன் வலிமையான வீரர்கள் அனைவரையுமே வரிவசூலை பீஜாப்பூருக்குக் கொண்டு செல்லும் பணியில்
ஈடுபடுத்தி இருக்கிறான். எனவே நீங்கள் செல்லும் போது அங்கே பெரிய எதிர்ப்பிற்கு வாய்ப்பில்லை.
உங்கள் பணி சுலபமாகப் போகிறது….”
அபாஜி
சோன் தேவுக்கு அது தான் கிடைத்திருக்கும் முதல் பெரிய வாய்ப்பு. அவனை நிரூபிக்கக் கிடைத்திருக்கும்
சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் காட்ட நினைத்திருந்த அவனுக்கு இந்தச் செய்தி
கூடுதல் உற்சாகத்தைத் தந்தது.
கடைசியில்
அனைவரிடமும் சிவாஜி சொன்னான். “எந்த ஒரு திட்டமும் பரிபூரணமானதல்ல. நடைமுறையில் வரும்
போது எதிர்பாராத எத்தனையோ விஷயங்கள் நம் திட்டத்திற்கு எதிர்மாறானதாக இருக்கலாம். அப்படி
நடப்பது விதிவிலக்கல்ல. சொல்லப் போனால் அதுவே விதி. அப்படி நடக்கும் போது பதறாதீர்கள்.
மன தைரியம் இழக்காதீர்கள். இருக்கும் நிலைமையை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று
கூர்மையாகக் கவனியுங்கள். கண்டிப்பாக வழி ஏதாவது புலப்படவே செய்யும். அந்த வழியைப்
பயன்படுத்திக் கொள்ளுங்கள். தோல்வியே வரும் நிலைமை வந்தாலும் கூட உடைந்து போகாதீர்கள்.
நான் இருக்கிறேன். உங்கள் உதவிக்கு நான் விரைந்து வருவேன்…. இது என் சத்தியம்…..!”
சிவாஜி
உணர்வு பூர்வமாக ஆத்மார்த்தமாகச் சொன்னது. அத்தனை மனங்களிலும் பெரும் தைரியத்தை ஏற்படுத்தியது.
நம்பிக்கையை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் ஒரு கற்பனை தைரியத்தை அவன் உருவாக்கவில்லை.
இப்போது அவர்கள் பழுதேயில்லாத பிரமாதமான திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம் என்ற உணர்வில்
இருக்கும் போதும் அது அப்படியே செயல்படுத்த முடியாமல் போகலாம், சில மாற்றங்கள் தேவைப்படலாம்
என்று அவன் எச்சரித்தது நிஜங்களின் யதார்த்தத்தை உணர்த்தியது போல் இருந்தது. வெற்றி
வாகை சூட்டி வாருங்கள் என்று அனுப்பி வைப்பவன் தோல்வியே வந்தாலும் துவண்டு விடாதீர்கள்,
உங்கள் உதவிக்கு நான் வருவேன் என்று சொன்ன விதம் அவர்களுக்கு அசாதாரண மனவலிமையை ஏற்படுத்தியது.
இந்தத் தலைவனின் கீழ் அவர்களுக்கு முடியாதது தான் என்ன? அனைவரும் புத்துணர்ச்சியோடு
அங்கிருந்து சென்றார்கள்.
அவர்கள்
சென்ற பின் சிவாஜி தன்னுடன் நாளை வர மொத்தம் முன்னூறு வீரர்களைத் தேர்ந்தெடுத்தான்.
முன்னூறு பேரில் நூறு பேர் கொரில்லா போர்முறையில் தேர்ச்சி பெற்றவர்கள். சகாயாத்ரி
மலைத்தொடரில் முன்பு வாழ்ந்தவர்கள். மலைப்பகுதியில் நடத்தப் போகும் தாக்குதலுக்குப்
பொருத்தமானவர்கள்…..
திட்டத்தைச்
செயல்படுத்தும் நாளில் சிவாஜி அதிகாலையில் குளித்து அன்னை பவானியை நீண்ட நேரம் பிரார்த்தித்தான்.
பின் அவன் எழுந்து கிளம்பிய போது வீர அன்னை பவானியும் கூட வருவதாக அவன் உணர்ந்தான்.
மாபெரும் சக்தி ஒன்று உள்ளத்தை ஆக்கிரமிக்க முன்னூறு வீரர்களுடன் சிவாஜி புறப்பட்டான்.
(தொடரும்)
என்.கணேசன்
Thrilling and interesting
ReplyDeleteArputham!
ReplyDeleteஎனக்கு ஹாலிவுட்டில் எடுக்கும் பிரபல வரலாற்று சினிமாவை நேரில் பார்க்கிறது போல இருக்கிறது. சூப்பர். சிவாஜியின் திட்டம் எப்படி நிறைவேறுகிறது என்று அறிய திங்கள்கிழமை வரை காத்திருப்பது தான் கஷ்டம்.
ReplyDeleteNeengal eludhiya kadhaikalil this is best
ReplyDeleteWhen I'm reading the story, I feel I'm there and watching it.Great Narration. 🙏
ReplyDeleteஎந்த ஒரு திட்டமும் பரிபூரணமானதல்ல ... என்று தொடங்கும் வரிகள் தான் ஸ்பெஷல் ... இந்த மாதிரி கதையின் போக்கில் வரும் வாழ்க்கை தத்துவங்கள் தான் 2010 முதல் உங்கள் படைப்புகளை தொடர்ந்து வர காரணம்.. என்னளவில் ... நன்றிகள் பல..
ReplyDeleteசிவாஜி... மற்றவர்களின் மனநிலை(எதிரணியின் மனநிலை உட்பட)யை அறிந்து திட்டமிடுவதும்.... அதற்கேற்றாற் போல வீரர்களை தயார்படுத்தும் விதமும் சூப்பர்...
ReplyDeleteஇந்த திட்டத்தை பார்க்கும் போதே சிவாஜி கண்டிப்பாக வெற்றிபெறுவார் என்பது தெரிகிறது...
waiting
ReplyDeleteThe reading gives an feeling as if we are living it. Fantastic.
ReplyDelete