நிதியும் வேண்டும், ஆனால் பீஜாப்பூர் சுல்தானின் பகையும் உசிதமல்ல
என்ற வகையிலேயே சிவாஜியின் நண்பர்களும், படைத்தலைவர்களும் சிந்தித்தார்கள். ஆனால் இரண்டும்
சேர்ந்து சாத்தியப்படாது என்று சிவாஜி மறுபடியும் சுட்டிக் காட்டிய போது சிலர் கல்யாண்
நிதியைக் கைப்பற்றுவது முக்கியம் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்கள். சிலர் பீஜாப்பூர்
சுல்தானின் பகையைச் சம்பாதிப்பது முட்டாள்தனம் என்ற நிலைப்பாட்டை எடுத்தார்கள். ஆனால்
அனைவரும் சிவாஜி என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்று அவனுக்குத் துணையாக இருப்போம் என்று
உறுதியாகச் சொன்னார்கள்.
சிவாஜி
சொன்னான். “என்றாவது ஒரு நாள் பீஜாப்பூர் சுல்தானுக்கு எதிராக நேரடியாகவே நாம் செயல்பட
வேண்டும். ஆனால் அந்த சமயத்தில் இப்படி ஒரு நிதி கிடைக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்க
வாய்ப்புகள் குறைவு. அதனால் என்றோ செய்ய வேண்டியதை இப்போதைய லாபகரமான சூழ்நிலையில்
செய்வதே புத்திசாலித்தனம் என்று நினைக்கிறேன்…..”
அனைவருக்கும்
அவன் சொன்னது சரியென்றே தோன்றியதால் அவன் சொன்னதை உற்சாகத்தோடு ஏற்றுக் கொண்டார்கள்.
ஆனால் அடுத்ததாக சிவாஜி சொன்னது அனைவரையுமே அதிர வைப்பதாக இருந்தது. “பீஜாப்பூர் அரசின்
பகையைப் பெறுவது நிச்சயம் என்றால் ஏன் நாம் கல்யாண் நிதியோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.?”
அனைவரும்
சிவாஜியைக் கேள்விக்குறியோடு பார்க்க நண்பன் தானாஜி மலுசரே வாய் விட்டுக் கேட்டான்.
“மற்ற கஜானாக்களையும் கைப்பற்றப் போகலாம் என்கிறாயா சிவாஜி?”
“நாம்
கொள்ளையர்கள் அல்ல. ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கப் போகும் கனவில் இருக்கும் வீரர்கள்
கூட்டம். கல்யாண் நிதியைக் கைப்பற்றுவது மாத்திரமல்ல கல்யாணையே கைப்பற்றினால் நாம்
செய்வது திருட்டாகாது. எப்படியும் ஆதில்ஷா கோபம் தான் கொள்ளப் போகிறார் என்றால் கல்யாணோடு
ஏன் நிறுத்த வேண்டும். இங்கிருந்து கல்யாண் வரை உள்ள எல்லாப் பகுதிகளையுமே கூடக் கைப்பற்றி
விடலாமே”
“அந்த
அளவு நம்மிடம் படை வலிமை இருக்கிறதா சிவாஜி?” இன்னொரு நண்பன் பாஜி பசல்கர் கேட்டான்.
சிவாஜி
சொன்னான். “படையின் வலிமை வீரர்கள், யானைகள், குதிரைகள் இவற்றின் எண்ணிக்கையில் இல்லை நண்பனே. போரிடும் யுக்தியிலும்,
போரிடுவோரின் மன வலிமையிலுமே உண்மையான வலிமை இருக்கிறது. இப்போதைய நிலைமையில் நம் எதிரிகளின்
மிகப்பெரிய பலவீனம் அவர்கள் தயார் நிலையில் இல்லை என்பது தான். எத்தனை பெரிய படையாக
இருந்தாலும் அது போரிடும் தயார்நிலையில் இல்லாத போது பலவீனமாகவே இருக்கிறது. அது சுதாரிப்பதற்குள்
நாம் வெற்றியைப் பெருமளவு நிச்சயித்து விடலாம். என்ன சொல்கிறீர்கள் படைத்தலைவர்களே?”
படைத்தலைவர்கள்
அவன் சொல்வது சரிதான் என்று தலையசைத்தார்கள். ஒரு மூத்த படைத்தலைவர் மட்டும் சொன்னானர்.
“நீ சொல்வது முதலில் ஒரு இடத்தை வெற்றி கொள்ளும் விஷயத்தில் பொருந்தலாம் சிவாஜி. ஆனால்
மற்ற இடங்களுக்குப் பொருந்தாதே. முதல் இடத்தை நாம் வெற்றி கொண்ட செய்தி கிடைத்தவுடன் மற்ற இடங்களில்
உள்ளவர்கள் சுதாரித்துக் கொள்வார்களே. அதனால் நாம் அங்கு செல்லும் போது அவர்கள் தயார்நிலையில்
அல்லவா இருப்பார்கள்?”
சிவாஜி
புன்னகைத்தான். “வாஸ்தவம். சரியாகச் சொன்னீர்கள். அதற்குத் தான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்.
நாம் தாக்கிக் கைப்பற்ற நினைக்கும் அத்தனை இடங்களையும் ஒரே சமயத்தில் திட்டமிட்டுத்
தாக்க எண்ணியிருக்கிறேன்!...”
அங்கிருந்த
அத்தனை பேருக்கும் அந்தத் திட்டம் கைகூடுமா என்கிற சந்தேகம் இருந்ததை சிவாஜி கண்டான்.
அவன் சொன்னான். “நேரம், காலம், அறிந்து எதிரிகளின் பலவீனம் அறிந்து, அவர்கள் சற்றும்
எதிர்பாராத சமயத்தில் ஆக்கிரமித்து நம் சக்தியை முழுவதுமாக, முறையாகப் பிரயோகித்தால்
வெற்றி முடியாததல்ல. எல்லா இடங்களிலும் நம் பலத்தைப் பிரயோகிக்க வேண்டியும் வராது.
சில இடங்களில் பேச்சு வார்த்தைகளிலும், அங்கு நிர்வாகத்தில் இருப்பவர்களின் அதிருப்தியிலும்
கூட அவை நம் கைக்கு வந்து சேரக்கூடும். முதலில் நம் எண்ணங்கள் வலிமையாகவும் உறுதியாகவும்
இருக்க வேண்டும். மற்றவை ஒரு அறிவாளிக்குத் தானே புலப்படும்…..”
முடியாது
என்று முன்பு மலைத்தவர்கள் இப்போது அவனுடைய உறுதியான வார்த்தைகளிலும், தன்னம்பிக்கையிலும்
நம்பிக்கையைப் பெற்றார்கள். உற்சாகமடைந்தார்கள். சிவாஜி தரையில் அந்தப் பிராந்தியத்தின்
வரைபடம் ஒன்றை வரைந்தான். அதில் தான் கைப்பற்ற எண்ணியிருக்கும் ஒன்பது கோட்டைகள் மற்றும்
பகுதிகளைக் குறித்துக் காட்டினான்…. பின் சொன்னான். “இந்த ஒன்பது இலக்குகளையும் நம்
ஆதிக்கத்திற்குக் கொண்டு வரும் பொறுப்பை இங்கிருப்பவர்களில்
ஒன்பது பேருக்குத் தருகிறேன். இரண்டு நாட்கள் அவகாசத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இலக்குகளைக் கைப்பற்றுவதில் உள்ள அனுகூலங்கள், பிரச்சினைகள்
என்ன, பலங்கள், பலவீனங்கள் என்ன என்று முதலில் பட்டியல் இடுங்கள். வெற்றி பெற உங்களுக்கு
என்னென்ன தேவை என்று நினைக்கிறீர்கள் என்பதையும் பட்டியலிடுங்கள். எல்லாவற்றையும் பயன்படுத்தி
வெற்றி பெற திட்டம் தீட்டுங்கள். இரண்டு நாட்கள்
முடிந்து பட்டியல்கள் மற்றும் திட்டத்தோடு வாருங்கள். பின் யோசிப்போம்……” சொல்லி விட்டு
யாருக்கு எந்த இலக்கு என்று சிவாஜி வரிசையாகத் தெரிவித்தான்.
வரைபடம்
வரைந்து ஒன்பது இடங்களைக் குறித்த போதும் சரி, அந்த இடங்களை ஆக்கிரமிக்கும் பொறுப்பை
ஒன்பது ஆட்களுக்கு ஒதுக்கும் போதும் சரி சிவாஜி யோசிக்க நேரம் எடுத்துக் கொள்ளவில்லை.
அதற்குக் காரணம் அவர்களை அழைப்பதற்கு முன்பே எல்லாவற்றையும் சிவாஜி முன்கூட்டியே ஆழ்ந்து
யோசித்து வைத்திருப்பது தான் என்பது அவர்களுக்குப் புரிந்து அவர்களை வியக்கவும் வைத்தது. ஒன்பது பேரும் தங்களை
நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்று மகிழவும் செய்தார்கள். சில மணி
நேரங்களுக்கு முன்பு யாராவது இப்படி ஒரு பொறுப்பைத் தந்திருந்தால் அவர்கள் இதெல்லாம்
தங்கள் சக்திக்கு மேலானது என்று மறுத்திருப்பார்கள். ஆனால் சிவாஜி வேலையைத் தரும் போதே
அத்துடன் பெரியதொரு நம்பிக்கையையும் சேர்த்தே தந்தான்.
சிவாஜி
மேலும் சொன்னான். “சில நேரங்களில் காலம் தான் நம் எதிரி. சில நேரங்களில் காலம் தான்
நம் நண்பன். காலம் எதிரியாவதும், நண்பனாவதும் நாம் காலத்தைப் பயன்படுத்தும் விதத்திலேயே
தீர்மானிக்கப் படுகிறது. இனி வரும் நாட்கள் நம் எண்ணமெல்லாம் நம் இலக்காகவே இருக்க
வேண்டும். தொடர்ந்து இலக்கு குறித்து எண்ணும் போதே அது குறித்த ஞானம் விரிவடைகிறது.
முழுமையாக அறிந்து கொள்ளாத எதையும் நம்மால் வெல்ல முடிவதில்லை. முழுமையாக அறிய முடியாததை
வெல்ல முடிந்தாலும், வென்றதை இழக்கும் வாய்ப்புகளும் அதிகம். எனவே இனி மனதில் வேறு
சிந்தனைகளைத் தவிர்த்து இலக்கையே எண்ணுங்கள். ஒவ்வொருவரும் நல்லதொரு திட்டத்தோடு இரண்டு
நாட்களில் வாருங்கள். ..….”
சிவாஜியின்
நண்பன் யேசாஜி கங்க் கேட்டான். “கல்யாண் நிதியைக் கைப்பற்றும் வேலையை யாருக்கு ஒதுக்கியிருக்கிறாய்
சிவாஜி. அதைப் பற்றி நீ எதுவும் சொல்லவில்லையே”
“அந்தப்
பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்…. அது குறித்த கவலை யாருக்கும் வேண்டாம்… “
அவர்கள்
அனைவரும் சென்ற பிறகு தரையில் வரைந்திருந்த வரைபடத்தையே பார்த்தபடி சிவாஜி தனியாக அமர்ந்திருந்தான்.
அந்த வரைபடம் அவன் மனதில் உண்மை இராஜ்ஜியமாகவே விரிந்தது. அத்தனையும் அவன் கற்பனையில்
அவனுடையதாகவே ஆகியிருந்தது. சத்தமில்லாமல் அவன் பின்னால் வந்து நின்ற ஜீஜாபாய் அந்த
வரைபடத்தைக் கூர்ந்து பார்த்தாள். மகன் குறித்து வைத்திருந்த பகுதிகள் கண்டிப்பாக ஒருநாள்
மகனுடையதாகவே ஆகிவிடும் என்பதில் அவளுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. அப்படி ஆகி விட்டால்
பீஜாப்பூர் சுல்தான் சும்மா இருந்து விட மாட்டார். இத்தனை நாட்கள் அவர் சும்மா இருந்ததே அதிசயம் தான்.
அவருடைய எதிர்வினை எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்த போது அவளை அறியாமல் அடிவயிற்றில்
ஒரு பயத்தை அவள் உணர்ந்தாள்.
அவளுடைய
பயம் அவள் மகனைக் குறித்ததாக இருக்கவில்லை. அவன் எந்த நிலையிலும் தன்னைக் காத்துக்
கொள்ள முடிந்தவன். அவளுடைய பயம் அவளுடைய கணவரைப் பற்றியதாக இருந்தது. ஆதில்ஷாவுக்கு
சிவாஜியின் மேல் வரும் கோபம் சிவாஜியைத் தாக்குவதோடு நின்று விடாது. அந்தக் கோபம் அவன்
தந்தை மேலும் நீள கண்டிப்பாக வாய்ப்பு உள்ளது. அப்படி நீண்டால்…..?
அதற்கு
மேல் சிந்திக்க அவள் மனம் பயந்தது. ஆனால் அவள் தன் பயத்தை மகன் அறிந்து கொள்வதை விரும்பவில்லை.
அவள் சத்தமில்லாமல் வந்த வழியே திரும்பினாள்.
(தொடரும்)
என்.கணேசன்
சிவாஜியின் வளர்ச்சி அவனுடைய தெளிவான சிந்தனைகளிலும், துணிச்சலிலும் தான் இருக்கிறது. உண்மையிலேயே சிறந்த தலைவன்.
ReplyDeleteSivaji's way of seeing things and executing the plans are excellent. Eagerly waiting to know how he executes his present plans.
ReplyDeleteசிவாஜியின் திட்டங்களும்... அவன் அதை செய்யும் விதமும் அருமை...
ReplyDeleteஅவனுடைய திட்டத்தை பார்க்கும் போதே வெற்றி உறுதி என்பது புலப்படுகிறது.