மாஸ்டர்
தன் வாழ்க்கையில் அன்றைய நாள் வரை அடுத்தவர் முன் கூனிக்குறுகி நின்றதில்லை. இலக்கில்லாத
வாழ்க்கை வாழ்ந்து திரிந்து கொண்டிருந்த இளமைப் பருவத்திலும் கூட யாருக்கும் பணிந்தோ, தலைகுனிந்தோ நின்றதில்லை. முதல் முறையாக தன் ஆன்மிக இயக்கத்தின்
உறுப்பினர்கள் முன் கூனிக்குறுகி நின்றார். இயக்கத்தின் மிக மூத்த துறவி ஒருவரையும்
பிரத்தியேக அழைப்பு விடுத்து வரவழைத்திருந்தார். அந்தத் துறவி தவ வாழ்க்கை வாழ்பவர்.
இயக்கத்தின் கூட்டங்களிலோ, மற்ற நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்வதைத் தவிர்ப்பவர். அவரை
வற்புறுத்தியே மாஸ்டரால் வரவழைக்க முடிந்தது. வந்தவர்களில் இந்தக் கூட்டம் ஏன் என்று
அறிந்தவர்கள் இருவர் மட்டுமே. கிருஷ்ணவேணி மற்றும் சுரேஷ்…..
இப்படிப்பட்ட மனிதர் இரண்டு நாட்களில் நடைப்பிணமாகக் காட்சி
அளிப்பார் என்று சற்றும் எதிர்பார்த்திராத கிருஷ்ணவேணி மாஸ்டருக்காக மனமுருகினார்.
ஏமாந்த கதையை போனில் தெரிவித்த போதே மாஸ்டரின் மனவேதனையை அவரால் உணர முடிந்தது. நேரில்
பார்த்த போதோ மேலும் கொடுமையாக இருந்தது.
தளர்ந்த குரலில் அனைவரையும் வரவேற்றுப் பேசிய மாஸ்டர் க்ரிஷ்
அவரிடம் “பரஞ்சோதி முனிவர் சொன்ன ஆள் நீங்களாகக்கூட இருக்கலாம் அல்லவா?” என்று எழுப்பிய
கேள்வியில் ஆரம்பித்து ஹரித்வாரில் வங்கியில் சொத்துக்களும், பணமும் மொத்தமாக கபளீகரம்
ஆனது அறிந்தது வரை சொன்னார். கூட்டத்தினரின் அதிர்ச்சி அவர்கள் முகங்களில் தெரிந்தது.
அவர்களில் பலருக்கும் கூச்ச சுபாவம் உள்ள, அதிர்ந்து கூடப் பேசாத, மிகவும் பணிவாகவும்
இத்தனை காலம் காட்சி அளித்த விஸ்வம் இப்படி
நடந்து கொண்டார் என்பதை ஜீரணிக்க முடியாமல் இருந்தது அவர்கள் முக பாவனையில்
இருந்தே தெரிந்தது. அவரவர்களுக்கு வர வேண்டிய தொகைகளைத் தகுந்த ஆவணங்களுடன் தெரிவித்தால்
சிறிதும் கால தாமதமில்லாமல் அவரவர் கணக்குக்கு அந்தப் பணம் வந்து சேர்வது பற்றி அவர்கள்
பல முறை தங்களுக்குள் சிலாகித்துப் பேசிக் கொண்டதுண்டு. அந்த மனிதரா இப்படி?
மாஸ்டர் மிகுந்த வேதனையுடன் மனம் விட்டு எதையும் ஒளிக்காமல்
தன் தற்கொலை முயற்சியையும், க்ரிஷின் போன்கால் அந்த சமயம் வந்து அதைத் தடுத்ததையும்
கூடச் சொன்னார். கேட்டுக் கொண்டிருந்தவர்கள் முகங்களில் அதிர்ச்சியும், சிலர் கண்களில்
ஈரமும் தெரிந்தது.
மாஸ்டர் தொடர்ந்து சொன்னார். “நான் செய்தது தவறல்ல. மாபெரும்
குற்றம். எத்தனையோ அபூர்வ சக்திகளைக் கூடப் பெற்ற நான், ஒரு சாதாரண அறிவும், நேர்மையும்
இருக்கிறவன் பொறுப்பாக நடந்திருக்கக்கூடிய அளவு கூட பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை.
என் குருநாதர் எனக்குக் கொடுத்திருந்த அதிகாரம் முழுவதையும் விஸ்வத்துக்குத் தந்த நான்,
குருநாதர் என்னை அறிந்திருந்தது போல விஸ்வத்தை முழுமையாக அறிந்திருந்தேனா என்ற கேள்வியை
கிருஷ்ணவேணி அம்மா என்னைக் கேட்டார். அறியவில்லை என்பதும், அறிந்து கொள்ள நான் சரியான
முயற்சியை மேற்கொள்ளவில்லை என்பதுமே உண்மை. வீட்டு சாவியை நம்பி ஒருவனிடம் தரும் முன்
ஒரு சராசரி மனிதன் யோசிக்கிற அளவு கூட நான் யோசிக்கவில்லை. இந்த அலட்சியத்தில் நான்
தொலைத்தது என் செல்வமாய் இருந்திருந்தால்……” மாஸ்டரின் குரல் உடைந்து போனது. கண்களில்
நீர் நிரம்பியது. கஷ்டப்பட்டு தொடர்ந்தார். “…….. என் செல்வமாக இருந்திருந்தால் கூட
நன்றாக இருந்திருக்கும். நான் தொலைத்தது இந்த இயக்கத்தின் செல்வம்….. நீங்கள் எல்லாரும்
என் மேல் வைத்திருந்த நம்பிக்கை…… என் குருநாதர் என் மீது வைத்திருந்த நம்பிக்கை……”
குருநாதர் நம்பிக்கையைத் தகர்த்ததைச் சொன்ன போது மாஸ்டர் முழுவதுமாக உடைந்து போனார்.
கண்களில் இருந்து ஆறாக நீர் பெருகியது. அங்கிருந்தோர் கண்களும் நிறைந்தன.
அவர்கள் அவரை அறிவார்கள். கம்பீரமான மனிதர், எதற்கும் அஞ்சாத
மனிதர், நேர்மையில் சிறு குறை கூட அவரிடம் அவர்கள் கண்டதில்லை. எத்தனையோ சக்திகள் பெற்றிருந்தாலும்
எத்தனை சிறியவரையும் குறைவாகப் பார்க்கத் தெரியாத மனிதர்…. இது நாள் வரை தன் குருவைத்
தவிர யாரையும் தலைவணங்கி அவர்கள் பார்த்திராத மனிதர் இன்று தன்னைத் தானே குற்றம் சாட்டிக்
கொண்டு தலைதாழ்ந்து நிற்பதை அவர்களுக்குப் பார்க்கச் சகிக்கவில்லை.
மாஸ்டர் கைகூப்பினார். “என்னை மன்னித்து விடுங்கள். மானசீகமாக
ஒவ்வொருவர் காலையும் தொட்டு வணங்கி நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பாவியை மன்னித்து
விடுங்கள்…..”
கூட்டத்தில் இரண்டு மூன்று ஆட்கள் கதறி விட்டார்கள். கதறியவர்களில்
சுரேஷும் ஒருவன். கலங்காத கண்கள் அங்கே இருக்கவில்லை.
“இந்த இயக்கத்தின் மிக மோசமான தலைவனாக நான் இருந்து விட்டேன்.
இனியும் இந்தப் பொறுப்பில் சிறிதும் அருகதை இல்லாத நான் இருப்பது சரியல்ல. அதனால் தலைமைப்
பொறுப்பில் இருந்து விலகுகிறேன். நம் இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினர்களில் மிக
மூத்த துறவி இமயமலையில் இருந்து வந்திருக்கிறார்கள். அவரிடம் இந்த ராஜினாமா கடிதத்தை
ஒப்படைக்கிறேன். தகுதி இருக்கும் ஒரு நல்ல தலைவரை நியமிக்கும்படியும், எனக்கு என்ன
தண்டனை என்பதைத் தீர்மானிக்கும்படியும் அவரைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்”
மாஸ்டர் ராஜினாமா கடிதத்தை கலங்கிய கண்களுடன் தந்து விட்டு
அவர் காலில் விழுந்து வணங்கி எழுந்தார்.
மூத்த துறவி சிலை போல அமர்ந்திருந்தார். அவர் நடந்த நிகழ்வுகளையும்,
இப்போது நடப்பதையும் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது அவர் முகபாவனையில் இருந்தே
தெரிந்தது. கூட்டத்திலும் மயான அமைதி நிலவியது. அவர் மெல்ல எழுந்து மிக அமைதியாகப்
பேசினார்.
“நல்ல மனிதர்களின் மிகப் பெரிய பலவீனம், மற்றவர்களின் தீமைகள்
எந்த அளவில் இருக்கக்கூடும் என்பதைச் சந்தேகிக்கக் கூட முடியாத அளவு நல்லவர்களாக இருப்பது
தான். அதைப் பல சமயங்களில் தீய மனிதர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இது இயற்கை. சாதாரண அறிவு படைத்தவன் கூட இப்படி ஏமாற மாட்டானே, இத்தனை அறிவும், அமானுஷ்ய
சக்திகளும் படைத்த நீங்கள் எப்படி ஏமாந்தீர்கள் என்று பச்சாதாபப்படுகிறீர்கள். இது
உங்கள் அறிவையும், அமானுஷ்ய சக்திகளையும் விட அதிகமாக நீங்கள் நல்லவராக இருக்கிறீர்கள்
என்பதையே காட்டுகிறது மாஸ்டர். உங்கள் குரு உங்களை சந்தேகிக்காதது போல, சந்தேகிக்க
காரணம் எதுவும் காட்டாமல் கச்சிதமாக வேலை பார்த்த இன்னொருவரை உங்களால் சந்தேகப்பட முடியவில்லை.
இதை நல்லவர்களின் இயல்பான தவறு என்று சொல்லலாமே ஒழிய குற்றம் என்று சொல்ல முடியாது.
நல்லவர்களைத் தண்டிப்பதும் நியாயமல்ல. ஆனாலும் தண்டனையைக் கேட்கிறீர்கள், மாஸ்டர்.
ஏமாற்றப்பட்ட உண்மை தெரிந்த நிமிஷத்திலிருந்து இந்த நிமிஷம் வரையும் நீங்கள் அனுபவித்த
வேதனையும், இனியும் இந்த உறுத்தலில் காலம் பூராவும் நீங்கள் அனுபவிக்க இருக்கும் வேதனையும்
தேவைக்கும் அதிகமான பெருந்தண்டனையாக இருக்கப் போகிறது. கூடுதல் தண்டனையைக் கேட்காதீர்கள்…”
“இந்த ஆன்மிக இயக்கம் இழந்திருப்பது பணத்தை மட்டும் தான்.
அது அளவில் எத்தனை பெரிதாக இருந்தாலும் கூட பணம் மட்டுமே. இந்த இயக்கத்தின் ஆணி வேரான
ஆன்மிக நாட்டத்தையோ, உலக நன்மை நாட்டத்தையோ நாம் இழந்து விடவில்லை. அதனால் உங்கள் தலைமையில்
மிக முக்கியமான எதையும் இந்த இயக்கம் இழந்து விடவில்லை. நம் இயக்கத்து தவசிகள் எச்சரித்திருக்கும்
மிகவும் பிரச்னைக்குரிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். உலக நடப்புகள் அப்படியே தெரிகின்றன.
நம் இயக்கத்திலேயே ஒரு விஷமி ஊடுருவி இருக்கிறான். நம் குருவின் அசாதாரண மரணம் நிகழ்ந்திருக்கிறது.
இந்த அசாதாரண சூழ்நிலையில் நம் இயக்கத்திற்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. நாம்
செயல்பட வேண்டிய நேரமிது. இந்த நெருக்கடியான கட்டத்தில் நீங்கள் தகுதி வாய்ந்த நல்ல
தலைவராக வேறு ஆளை நியமிக்கச் சொல்கிறீர்கள். எல்லா விதங்களிலும் உங்களை விடத் தகுதி
வாய்ந்த நல்ல மனிதர் எங்களுக்கு எங்கே கிடைப்பார்கள்?”
குற்றம் பெரிதானாலும் அன்பின் காரணமாக அதைச் சிறிதாகப் பார்க்கிறார்கள்
என்று நினைத்த மாஸ்டர் மறுபடியும் கண்கலங்கினார்.
பேச வார்த்தைகள் அவருக்குக் கிடைக்கவில்லை. அதனால் மறுத்து கைகளை மட்டும் அசைத்து வேண்டாம்
என்று சைகையால் சொன்னார்.
அவர் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்த கிருஷ்ணவேணி எழுந்து
பேசினார். “மாஸ்டர் உங்கள் தவறையோ, இயக்கத்தின் பண இழப்பையோ நாங்கள் சரி என்று சொல்லவில்லை.
ஆனால் மனிதகுலமே அழியும் என்கிற நிலை உருவாகி வருகிறது என்று நம் தவசிகளும் எச்சரித்திருக்கிறார்கள்.
க்ரிஷிடம் வேற்றுக்கிரகவாசியும் எச்சரித்திருக்கிறான். மனிதகுலமே அழியும் நிலை வந்தால்,
இந்த பணத்தையும் சொத்துக்களையும் வைத்து எதைக் காப்பாற்றப் போகிறோம். மதிப்பிற்குரிய
மூத்த துறவி அவர்கள் சொன்னது போல நாம் இழக்கக்கூடாத அதிமுக்கியமான எதையும் இழக்கவில்லை.
இப்போது தலைமைப் பொறுப்பில் இருந்து நீங்கள் விலகுவது தான் இந்த இயக்கத்துக்கு மிகப்
பெரிய நஷ்டமாக இருக்கும். நீங்கள் தலைவராகத் தொடர வேண்டும், முன்பை விடத் தீவிரமாக
செயல்பட வேண்டும். எந்த விதத்திலும் எதிரியை வெல்ல அனுமதிக்கக்கூடாது. அந்தக் கடமை
உங்களுக்கிருக்கிறது. உங்கள் குரு உங்களை இறக்க அனுமதிக்காத காரணமும் இந்தக் கடமைக்காகவே
இருக்கும் என்று நம்புகிறேன்…..”
(தொடரும்)
என்.கணேசன்
27.9.2018 முதல் 07.10.2018 வரை தேவக்கோட்டையில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 61 (ராமகிருஷ்ணா மட அரங்கு)ல் என் நூல்கள் சிறப்புத்தள்ளுபடியில் கிடைக்கும். அங்கு செல்ல முடிந்த வாசகர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
27.9.2018 முதல் 07.10.2018 வரை தேவக்கோட்டையில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் அரங்கு எண் 61 (ராமகிருஷ்ணா மட அரங்கு)ல் என் நூல்கள் சிறப்புத்தள்ளுபடியில் கிடைக்கும். அங்கு செல்ல முடிந்த வாசகர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளவும்.
Very touching update. Great going.
ReplyDeleteSuper sir... What writer you are.. Hats off...
ReplyDeleteமாஸ்டர் கண்கலங்க வைத்துவிட்டார்.... மூத்த துறவியும்..கிருஷ்ணவேனி அம்மாவும்... சரியான நேரத்தில் சரியாக பேசினார்கள்...
ReplyDeleteஅந்த குறிபேட்டில் இருந்த இமயமலைத் துறவி இவர் தானோ? அந்த துறவிக்கும் மாஸ்டர்க்கும் என்ன சம்பந்தம்...?
இதை முன்பே அறிந்து தான் குறிப்பு எழுதி வைத்தார்களோ?
Really great ...நல்ல மனிதர்களின் மிகப் பெரிய பலவீனம், மற்றவர்களின் தீமைகள் எந்த அளவில் இருக்கக்கூடும் என்பதைச் சந்தேகிக்கக் கூட முடியாத அளவு நல்லவர்களாக இருப்பது தான்....
ReplyDeleteஎத்தனை ஆழமான உண்மையிது .... எப்படி சொக்கத்தங்கம் ஆபரணம் செய்ய உதவாதோ ... அதேபோல சுத்தமான யோக்கியவானாக இருப்பவன் லௌகீக வாழ்க்கையும் ஏமாற்றம் நிறைந்ததாகிறது ....
குருநாதர் நம்பிக்கையைத் தகர்த்ததைச் சொன்ன போது மாஸ்டர் முழுவதுமாக உடைந்து போனார். கண்களில் இருந்து ஆறாக நீர் பெருகியது. அங்கிருந்தோர் கண்களும் நிறைந்தன. படிப்பவர் அனைவரின் கண்களில் இருந்து ஆறாக நீர் பெருகியது. நன்றி.
ReplyDelete