சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 8, 2018

இருவேறு உலகம் – 73

ந்த மூதாட்டி முக்கால் மணி நேரம் ஆன போது தான் மெல்ல பேச ஆரம்பித்தாள். “இந்தச் சீட்டு உன்னுடையதல்ல….. உனக்கானதும் அல்ல…… நீ இதைத் திருடிக் கொண்டு வந்திருக்கிறாய்…. பாழடைந்த இந்துக் கோயில் தெரிகிறது ……. பக்கத்தில் ஏதோ பெரிய நதி தெரிகிறது…… கோயிலுக்குள் ஒரு பெண் தெய்வச்சிலை……. கோபமான முகம்…… பின்னால் ஒரு சுவர்…. சிலையில் இருக்கும் ஆயுதமே சுவரில் வரையப்பட்டிருக்கிறது…….“

அவள் பிறகு ஒரு நிமிடம் மௌனமாகவே இருந்தாள். மர்ம மனிதன் மெல்லச் சொன்னான். ”இந்தச் சீட்டு இருந்த இடம் எனக்குத் தெரிய வேண்டியதில்லை. இதில் வரையப்பட்டிருக்கிறது எதைக் குறிக்கிறது, இது ஒரு இடத்தைக் குறிக்கிறதென்றால் அது எந்த இடம் என்று தெரிய வேண்டும்…..”

அவள் முகம் வேறு பக்கமாகத் திரும்பியது. ஆனால் இப்போதும் அவள் கண்கள் மூடியபடியே இருந்தன.  சுமார் ஏழு நிமிடங்கள் மௌனமாக இருந்து விட்டு மறுபடி பேச ஆரம்பித்தாள். ”குளிர்கிறது…….. பனிமலைப்பகுதி………. பிரம்மாணடமான மலை போல் தெரிகிறது…… கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனி படர்ந்திருக்கிறது….. பனிக்கு அடியில் ஒரு மிகப்பெரிய பாறை……  பாறையின் மேல் ஒரு ஆயுதம்….. அந்தக் கோயிலில் பெண் தெய்வம் கையில் இருந்தது போல் ஆயுதம் சொருகப்பட்டிருக்கிறது…… அந்தப் பாறைக்கு அடியில் ஒரு குகை……..”

சொல்லிக் கொண்டே வந்த மூதாட்டி திடீரென்று நிறுத்தினாள். அவள் முகத்தில் திகைப்பு தெரிந்தது. ஏதோ பார்த்தது போலவும் அதை அவள் நம்பாதது போலவும் தெரிந்தது……

“அந்தக் குகைக்குள் என்ன இருக்கிறது……”

“என்ன ஆச்சரியம்…… குகைக்குள்ளே ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்…”

அந்த மூதாட்டி இது வரை சொன்னதை எல்லாம் எதிர்பார்த்திருந்த மர்ம மனிதன் இதை எதிர்பார்க்கவில்லை. அவனும் திகைத்தான். “யாரது?”

“மிக வயதானவன்……. இடுப்பில் ஆரஞ்சு நிறத்துணியை உடுத்தியிருக்கிறான்….. கண்களை மூடித்தியானத்தில் இருக்கிறான்…… வேறு உடை எதுவும் உடலில் இல்லை…. ஆனால் இந்தக் குளிரிலும் அவன் உடம்பு நடுங்கவில்லை…..”

“அவன் அருகே வேறு எதாவது வித்தியாசமாய் தெரிகிறதா? ஏதாவது சிலையோ, பொருளோ…..”

“இல்லை….”

“அவனையே கவனியுங்கள்…. வித்தியாசமாய் எதாவது தெரிகிறதா?”

அவள் இரண்டு நிமிடங்கள் கழித்துச் சொன்னாள். “என்ன ஆச்சரியம் அவன் மூச்சு விடமாட்டேன்கிறான்…..”

“உயிரோடு தான் இருக்கிறானா?”

“ஆமாம். உடலில் உயிர் இருக்கிறது……….ம்ம்ம்ம்ம்…… இப்போது ஒரு முறை மூச்சு விட்டான்……. பல நிமிடங்களுக்கு ஒரு முறை தான் மூச்சு விடுகிறான் போலிருக்கிறது…… அதுவும் ஒரு மூச்சு தான் விடுகிறான்……..”

அந்தச் செய்தியை சிந்திக்க வேண்டிய ஒன்றாக மனதின் ஒரு மூலையில் ஒதுக்கி வைத்து விட்டு மர்ம மனிதன் அடுத்த கேள்வியைக் கேட்டான்.

“குகைக்கு மேல் எதாவது கருப்புப் பறவை தெரிகிறதா?”

“இல்லை”

“பாறைக்கு மேல் இருக்கும் ஆயுதம் எத்தனை நீளம்? அதன் மேல் படர்ந்திருக்கும் பனி எத்தனை அடி? இதைச் சொல்ல முடியுமா?

“ஆயுதம் ஒன்றரை அடி இருக்கும் போல் தெரிகிறது…… பனி பத்தடிக்கும் மேல் மூடி இருக்கிறது……”

அதற்கு மேல் அவளால் அந்தக் காட்சியில் கவனம் செலுத்த முடியவில்லை. கண்களைத் திறந்து விட்டாள்.


ரிணி மாஸ்டர் வீட்டுக்கு 10.55க்கே போய்ச் சேர்ந்து விட்டாள்.  அழகான காட்டன் புடவையை உடுத்தியிருந்தாள். க்ரிஷ் தான் ”ஜீன்ஸ், சுடிதார் எல்லாம் வேண்டாம், சேலை உடுத்திக் கொண்டு போ அது தான் மரியாதை” என்று சொல்லி இருந்தான். அவனுடைய அந்த ஆலோசனையை மட்டும் தான் பின்பற்றினாள். மற்றபடி என்னவெல்லாம் கேட்கப் போகிறாய் என்று அவன் கேட்டதற்கு ‘அதெல்லாம் உனக்குச் சொல்ல மாட்டேன். நீ மட்டும் என்கிட்ட எல்லாமுமா சொல்றாய்’ என்று சொல்லி விட்டாள். “பார்த்துப் பேசு” என்று சொன்னதற்கு “பார்த்து தான் பேசுவேன். கண்ணை மூடிட்டா பேச முடியும்?” என்று அதிரடியாய் சொல்லி விட்டு வந்திருக்கிறாள்.

சுரேஷ் க்ரிஷின் காதலியை ஆர்வத்துடன் பார்த்தான். அவள் புத்திசாலி, தைரியமானவள் என்று தோற்றத்திலேயே தெரிந்தது. அணிந்திருந்த கண்ணாடி கண்டிப்பானவள் போலக் காட்டியது. அழகாய் கைகூப்பி வணக்கம் தெரிவித்து அறிமுகப்படுத்திக் கொண்டாள். சுரேஷ் புன்னகைத்து அவளை அமரச் சொல்லி விட்டு மாஸ்டரிடம் போய் ஹரிணி வந்திருப்பதைத் தெரிவித்தான்.

மாஸ்டர் வந்தவுடன் ஹரிணி எழுந்து நின்று அவர் காலைத் தொட்டு வணங்கினாள். ஆசிர்வதித்த மாஸ்டர் அவள் மூலமாகவாவது க்ரிஷ் பற்றி புதியதாக ஏதாவது அறிய முடிகிறதா என்று பார்த்தார். முடியவில்லை. அவள் மூலமாகவும் க்ரிஷ் குறித்து அறிய முடிந்த எல்லா சம்பவங்களும் எதிரி அவன் மனதுக்குள் புகுவதற்கு முந்தைய சம்பவங்களாக இருந்தன. நேரடியாக மட்டுமல்ல க்ரிஷை மறைமுகமாகவும் அறிய வழியில்லை…..

அவள் அவர் அமர்வதற்காகக் காத்திருந்தாள். அவர் அமர்ந்தவுடன் அவளும் அமர்ந்தபடி சொன்னாள். “க்ரிஷ் எனக்கு பெரிய க்ளாஸே எடுத்துட்டான். அவர் கிட்ட மரியாதையா பேசு…. சொல்றத கவனமா கேளு….  ஏடாகூடமா எதுவும் கேட்காதே…. அவர் எனக்கு குரு….. அப்படி இப்படின்னு சொன்னான்….. அதனால தான் நீ வராதேன்னு அவனை வெட்டி விட்டு நான் தனியா வந்திருக்கேன்…..”

சுற்றி வளைத்துப் பேச மாட்டாள் என்று க்ரிஷ் முன்பே சொல்லியிருந்தது நினைவுக்கு வந்து மாஸ்டர் புன்னகைத்தார். ”நீ தாராளமா உனக்குக் கேட்கத் தோணியதைக் கேளும்மா”

“நீங்க க்ரிஷுக்கு எதோ சொல்லியெல்லாம் தர ஒத்துகிட்டதா கேள்விப்பட்டேன். என்னென்னவோ சொல்லிக் குடுத்து அவனை சாமியாராக்கிட மாட்டீங்கல்லவா?” ஹரிணி தன் தலையாய கேள்வியை எடுத்தவுடன் கேட்டு விட்டாள்.

மாஸ்டர் வாய் விட்டுச் சிரித்தார். அவனும் கிட்டத்தட்ட இதே கேள்வியைத் தன் காதல் இந்தப் படிப்புக்குத் தடையாகி விடாதல்லவா என்று தயங்கிக் கொண்டே நாசுக்காகக் கேட்டது நினைவுக்கு வந்தது.

அவளைச் சீண்டிப் பார்க்கத் தோன்றியது.  “ஒருவேளை அப்படி மாத்திடற மாதிரி இருந்தா?”

அவளும் சின்னச் சிரிப்புடன் சொன்னாள். “நானும் அவன் கூடவே வர ஆரம்பிச்சுடுவேன்…. இங்கே உக்காந்து சத்யாகிரகம் செய்வேன்….”

மாஸ்டர் புன்னகையோடு சொன்னார். “அப்படியெல்லாம் அவன் சாமியாராயிட மாட்டான். பயப்படாதே.”

ஹரிணியும் திருப்தியுடன் புன்னகைத்தாள். “நல்லது. அவன் உயிருக்கே ஆபத்துங்கற மாதிரி நினைக்கறான். என்ன ஏதுன்னு வாய்விட்டுச் சொல்ல மாட்டேன்கிறான்….. நீங்க ரொம்ப சக்தி படைச்சவர்னு உதய் அண்ணன் சொல்றார். அவன் நினைக்கிறது நிஜம் தானா மாஸ்டர்?”

“நிஜம் தான்ம்மா”

அவள் முகத்தைக் கவலை சூழ்ந்தது. சிறிது நேரம் மௌனத்தில் ஆழ்ந்து விட்டு உணர்ச்சிவசப்பட்டு மெல்லச் சொன்னாள். “மாஸ்டர்! மனுஷன் செய்யற நல்லதெல்லாம் தான் ஆபத்துக் காலத்துல ஒருத்தனைக் காப்பாத்தும்னு அவன் அடிக்கடி சொல்வான். அது உண்மைன்னா அவன் நல்ல குணமே அவனைக் காப்பாத்திடும். அவன் எப்பவுமே நல்லது தான் செஞ்சிருக்கான். பிரார்த்தனை தான் காப்பாத்தும்னா அவன் அம்மா எப்பவுமே செய்யற பிரார்த்தனை அவனைக் காப்பாத்தும்….. அவனைக் காப்பாத்தற மாதிரி நானும் ஏதாவது செய்ய முடியும்னா சொல்லுங்களேன்…. நான் செய்யறேன்……”

காதல் என்று பலரும் சினிமாத்தனமாக நினைத்துக் கொள்ளும் பருவம் ஏற்படுத்தும் உணர்ச்சியால் உந்தப்பட்டு அவள் பேசவில்லை. மனதின் ஆழத்தில் அவனை நேசித்து அந்த உண்மைக்காதலால் உறுதியாய் கேட்கிறாள் என்பது மாஸ்டருக்குப் புரிந்தது. அவர் அமைதியாய் சொன்னார். “கர்மாவும், பிரார்த்தனையும் காப்பாத்த முடியாட்டி வேற எதாலும் ஒருத்தனைக் காப்பாத்திட முடியாதும்மா”

அவள் ஒரு கணம் யோசித்து விட்டுச் சொன்னாள். “இல்லை மாஸ்டர். எதை நாம நம்மளோட ஒரு பகுதியா உணர்றோமோ அதைக் காப்பாத்த நாம எதாவது செய்ய முடியும்னு தோணுது. அவனை நான் என்னோட ஒரு பகுதியா தான் நான் நினைக்கறேன்…. மன்னிக்கணும். துறவியான உங்க கிட்ட காதலை பத்தி இப்படி உயர்வா சொல்றது தப்பாயிருக்கலாம். ஆனா எனக்குத் தோணினதைச் சொல்லாம இருக்க முடியல”

(தொடரும்)
என்.கணேசன்


5 comments:

  1. Came to the edge of my seat while reading about the man inside the cave. Superb. Harini is rocking.

    ReplyDelete
  2. சக்திக்கு பாதிப்பென்றால், அது சிவனாரையும் பாதிக்கும், சிவனாருக்கு பாதிப்பென்றால், அது சக்தியையும் பாதிக்கும் அருமை அண்ணா அர்த்தநாரீஸ்வரர் கான்செப்ட்.

    ReplyDelete
  3. எபி ரொம்ப சின்னதாக இருந்தாலும், அதில் சொல்லிய விஷயங்கள்.......
    unbelievable.......அந்த பாட்டி கூறும் விஷயங்கள்......பனி மூடிய பாறையின் அடியில்
    உள்ள குகையில் ஒரு வயதான மனிதனின் தியானம்.....மூச்சுத்தடை எப்போதோ ஒரு தடவை...,
    அமானுஷ்ய உணர்வை தருகிறது.....ஹரிணி லவ்லி.....

    ReplyDelete
  4. அந்த மூதாட்டி சொன்னதை படிக்கும் போது எனக்கும் பிரமிப்பாகவே இருந்தது...
    ஒருவேளை அது இமயமலையாக இருக்குமோ..?
    யார் அந்த சக்தி வாய்த துறவி?
    அவருக்கும் மாஸ்டருக்கும் என்ன சம்பந்தமாக இருக்கும்....??????

    ReplyDelete
  5. ஆச்சரியமான விஷயங்களின் தொடர்புடைய விஷயங்களை படிக்கும் பொது ஒரு மாயையும் ஒரு சிலிர்ப்பும் ஆர்வமும் எழுகிறது இந்த எபியும் அப்படியே

    ReplyDelete