சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, March 19, 2018

சத்ரபதி – 12


த்தனை தான் ஒரு மனிதன் வீரனாக இருந்தாலும், திறமையும் கூடவே பெற்றிருந்தாலும் விதி அனுகூலமாக இல்லா விட்டால் எல்லாமே வியர்த்தமே என்பதை சகாயாத்ரி மலைத்தொடரில் ஒரு மறைவிடம் நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் ஷாஹாஜி பரிபூரணமாக உணர்ந்தார். வெற்றி மேல் வெற்றி அடைந்து வரும் வேளையில் எல்லாம் இப்படித் திடீரென்று தலைகீழாய் மாறும் என்று அவர் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. முகலாயப் பெரும்படை பீஜாப்பூர் சுல்தான் ஆதில்ஷாவை பரிபூரண சரணாகதி அடைய வைத்த செய்தி கிடைத்தவுடனேயே அவர் மிக எச்சரிக்கையுடன் தானிருந்தார். அடுத்த செய்தி ஒன்றரை நாளில் வந்து சேர்ந்தது. பீஜாப்பூர் சுல்தான் ஆதில்ஷா ஒரு பெரும்தொகையை  முகலாயச் சக்கரவர்த்தி ஷாஜஹானிடம் கப்பம் கட்டியதுடன், ஷாஹாஜியைச் சிறைப்பிடிக்க முகலாயப்படையுடன் தன் பீஜாப்பூர் படையையும் சேர்த்து அனுப்பியிருக்கிறாராம்….

நண்பன் பகைவனாவதும், பகைவன் நண்பனாவதும் அரசியலில் சகஜம் என்றாலும், அதற்குக் காரணம் அவரவருக்கு இருக்கும் நிர்ப்பந்தங்களே என்றாலும், ஒருவர் தனிமைப்படுத்தப்படும் காலங்களில் அது அதிகமாகவே பாதிக்கத் தான் செய்கிறது. கூடுதல் படைகள் வரும் முன்பே, பதுங்கியிருக்கும் கோட்டையிலிருந்து வெளியேறி விடுவது தான் புத்திசாலித்தனம் என்பது புரியவே ஷாஹாஜி அவர் அகமதுநகர் அரியணையில் ஏற்றியிருந்த சிறுவனைத் தூக்கிக் கொண்டு சிறு எண்ணிக்கை வீரர்களுடன் சேர்ந்து நேற்று நள்ளிரவு தான் ரகசியமாக வெளியேறினார்.

அந்தச் சிறுவனின் பாதுகாப்பு அவரைப் பொருத்த வரை மிக முக்கியமானது. “சாம்ராஜ்ஜியம் வேண்டாம் படைத்தலைவரே. என் மகன் உயிரோடிருந்தால் போதும்” என்று அந்தச் சிறுவனின் தாய் உறுதியாகச் சொல்லியிருந்தாள். ஷாஜஹான் அந்த ராஜவம்சத்து ஆண்வாரிசுகளையே அழித்து விடக் கங்கணம் கட்டிக் கொண்டிருந்ததால் அவள் மகன் உயிருக்கு ஆசைப்பட்டாளேயொழிய, மகன் அரசனாக வேண்டும் என்பதெல்லாம் அந்தச்சூழலில் அவளுக்குப் பேராசையாகவே அவளுக்குத் தோன்றியிருந்தது.  

’என்ன ஆனாலும் சரி அவன் உயிருக்கு ஆபத்து வராமல் நான் பார்த்துக் கொள்வேன்’ என்று ஷாஹாஜி சத்தியம் செய்து தந்த பிறகு தான் அச்சிறுவனின் தாய் அச்சிறுவனை அவர் அரியணை ஏற்ற சம்மதித்திருந்தாள். செய்த சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டிய பெரும்பொறுப்பு ஷாஹாஜிக்கு இருக்கிறது….

பயணக்களைப்பில் அவர் மார்பில் சாய்ந்து உறங்கியிருந்த அந்த அரச சிறுவனைப் பார்க்கையில் ஷாஹாஜிக்குத் தன் மகன் சிவாஜியை நினைக்காமல் இருக்க முடியவில்லை. இருவரும் ஒரே வயதினர் தான்…. சிவாஜியும் இந்த சகாயாத்ரி மலைத் தொடரில் தான் எங்கேயோ இருக்கிறான். மகனை நினைக்கையில் அவர் மனம் லேசாகியது. அவன் என்ன செய்து கொண்டிருக்கிறானோ…. !

ஓரிடத்தில் இளைப்பாற அவர்கள் குதிரைகளை நிறுத்திய போது அந்தச் சிறுவன் விழித்துக் கொண்டான். அந்தச் சிறுவனின் கண்களில் பயம் தெரிந்தது. அவனைப் பார்க்க ஷாஹாஜிக்குப் பாவமாக இருந்தது….. ’என் மகனும் இப்படிப் பயந்து கொண்டிருப்பானோ’

அதன் பின் இளைப்பாறிக் கொண்டிருக்கையில் எல்லாம் அவருக்கு சிவாஜி நினைவாகவே இருந்தது. அவன் எத்தனை தூரத்தில் இருக்கிறான். அவருக்குக் காணக் கிடைப்பானா என்றெல்லாம் மனம் யோசிக்க ஆரம்பித்தது. அவர் மகனை அவரிடம் ஒப்படைக்கத் தயங்கும் சத்யஜித்தின் மேல் கோபம் வந்தது. தந்தையை விடத் தாயிற்கு ஒரு குழந்தை மேல் உரிமை அதிகம் என்பதாய் அவன் தீர்மானித்ததில் அவருக்கு ஆத்திரமாய் இருந்தது. என்னவொரு முட்டாள்தனமிது என்று அவர் உள்ளம் கொதித்தது. ஆனால் அத்தனைக்கும் பின்னால் அவன் வீரர்களிடம் சொன்ன காரணத்தில் இருந்த உண்மையையும் அவரால் மறுக்க முடியவில்லை. ஜீஜாபாய்க்கு இப்போது இருப்பது சிவாஜி மட்டுமே!

ஒரு கணம் அவர் ஜீஜாபாய்க்காக மனமிரங்கினார். கட்டாயத்தில் திருமணம் நடந்ததாலோ என்னவோ ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் திருமண வாழ்க்கையின் அடித்தளத்தில் ஒரு பிசிறு இருந்து கொண்டேயிருந்தது. குடும்பங்கள் இணையவில்லை என்பது கூட இரண்டாம்பட்சக் காரணமே. அவர்கள் மனங்கள் இணையவில்லை என்பதே முதல் உண்மை. அவரது மாமியார் மால்சாபாய் தன் மகள் ஒரு மகாராணியாக வேண்டியவள் என்று அவர் காதுபடவே சொல்லியிருக்கிறார். என்ன தான் ஜீஜாபாய் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளா விட்டாலும் அவளிடம் ஒரு மகாராணியின் தோரணை அவளறியாமலேயே இருந்தது. இத்தனைக்கும் அவள் ஒரு முறை கூடத் தன் பிறந்தகத்துப் பெருமையைக் காட்டிக் கொண்டதில்லை. அவர் குடும்பத்துக் குறைவைச் சுட்டிக் காட்டவில்லை. மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதில்லை. தன் பிறந்த வீட்டார் பற்றிப் பேசியது கூட இல்லை. ஆனால் இயல்பான பணிவை அவரால் அவளிடம் பார்க்க முடிந்ததில்லை. பெண்மையின் மென்மையை விட கம்பீரமே அவளிடம் விஞ்சியிருந்தது. அதை ஏனோ அவரால் ரசிக்க முடியவில்லை. அவர் தாய் இருந்த இடம் தெரியாதது போல் ஜீஜாபாய் இருக்கவில்லை. அவர் தாய் அரசியலில் கவனம் செலுத்தியதில்லை. அவர் தந்தையிடம் அதுபற்றிப் பேசியதை அவர் ஒருபோதும் கண்டதும் இல்லை. ஆனால் ஜீஜாபாய் அரசியல் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிப்பவளாகவும், அது குறித்துக் கருத்துத் தெரிவிப்பவளாகவும் இருந்தாள். பல நேரங்களில் அவள் கருத்துக்கள் அவருடைய கருத்துக்களை விட புத்திசாலித்தனமாகவும், மேம்பட்டதாகவும் இருந்தன. இப்படி அந்தஸ்து மாத்திரமல்லாமல் மற்ற சில விஷயங்களிலும் அவரை விட ஒருபடி மேலேயே ஜீஜாபாய் இருந்ததாய் அவர் உணர்ந்ததாலோ என்னவோ அவர் ஒரு இடைவெளியை என்றுமே தங்கள் மணவாழ்க்கையில் உணர்ந்தார்.

அவர் இரண்டாவது மனைவி துகாபாயிடம் இந்தப் பிரச்சினைகள் ஏதும் இருக்கவில்லை. அவளுடைய பிறந்த வீட்டு அந்தஸ்து குறைந்ததாகவே இருந்தது. அவளுக்கு அரசியல் புரியவில்லை. குடும்பத்தை மட்டுமே பிரதானமாக நினைக்கும் வீட்டுப் பெண்மணியாகவே இருந்தாள். அவர் சொல்வதே வேதவாக்கு என்று அவள் நினைத்தாள். அவளுடைய தந்தையும், சகோதரனும் ஷாஹாஜியை ஒரு அரசனுக்கு இணையாகப் பார்த்தார்கள். அவள் சாம்பாஜியையும் தன் மகனைப் போலவே எண்ணிப் பாசமாக வளர்த்து வருகிறாள். ஷாஹாஜிக்கு அவையெல்லாம் திருப்தியைத் தருவனவாக இருந்தன.   அதனாலேயே அவர் ஜீஜாபாயை பீஜாப்பூருக்கு வரவழைத்துக் கொள்ளவில்லை. அழைத்தாலும் அவள் இன்முகத்தோடு வந்திருப்பாளா என்ற சந்தேகமும் அவருக்கு இருக்கிறது. தானில்லாமல் தன் இரண்டாம் மகனை அவள் அனுப்பியிருக்கவும் மாட்டாள். இந்தக் காரணங்களால் தன் இரண்டாம்  மகனை அவர் தன்னுடன் இருத்திக் கொள்ள முடியாமல் போனது. அந்தக் குறை அவர் மனதில் இப்போதும் இருக்கிறது…. இப்போது அவன் தந்தை தாய் இருவருமில்லாமல் யாரோ ஒருவனுடன் இந்த மலைத் தொடரில் எங்கேயோ இருக்கிறான்….. இப்போது இந்த அரச சிறுவன் எல்லோரையும் விட்டு அவர் தயவில் இருப்பதைப் போலவே!....





த்யஜித் ஷாஹாஜி சகாயாத்ரிக்கு வந்து சேர்ந்ததை அறிந்தான். ஆரம்பத்தில் அவர் சிவாஜியைத் தேடித் தான் அங்கு வந்திருக்கிறாரோ என்று சந்தேகப்பட்டான். ஆனால் பிற்பாடு தான் அங்கு அவர் மறைவிடம் தேடி வந்திருக்கிறார் என்பது தெரிந்தது. மறைவிடம் தேடி வந்தவர் அங்கு மகனைத் தேடவும் வாய்ப்பிருக்கிறது…. தந்தையைப் பார்த்தவுடன் மகன் அவருடன் போய் விடவும் வாய்ப்பிருக்கிறது….

“எதற்காகக் கவலைப்படுகிறாய் மாமா” என்று ஒரு மரக்கிளையில் அமர்ந்து கொண்டிருந்த  சிவாஜி கேட்டான்.

இந்தச் சிறுவனின் உள்ளுணர்வு மிகவும் சூட்சுமமானது என்று சத்யஜித் நினைத்துக் கொண்டான். சிவாஜி தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுடைய எந்தச் சிறு வித்தியாசத்தையும் உடனடியாக அறிந்து கொண்டு விடுகிறான்…

“இந்த மலைத் தொடருக்கு வேறு சில வீரர்களும் வந்திருக்கிறார்கள் போலத் தெரிகிறது. அதைப் பற்றி யோசித்தேன்…..” சத்யஜித் சொன்னான்.

“அவர்கள் நம் எதிரிகளா?”

உண்மையைச் சொல்வதில் சத்யஜித் தர்மசங்கடத்தை உணர்ந்தான். பின் மெல்லச் சொன்னான். ”ஆட்களைப் பார்க்காமல் எதையும் சொல்ல முடியாது. ஆனால் நாம் எச்சரிக்கையாக மறைவாகவே இருப்பது நல்லது…..”  



தூரத்தில் ஒற்றைக் குதிரையின் காலடியோசை கேட்டது. ஷாஹாஜியும், வீரர்களும் எச்சரிக்கையானார்கள். அவர் தன் வீரன் ஒருவனைப் பார்த்துத் தலையசைக்க அவன் எழுந்து போய் மேடான இடத்திற்குச் சென்று கூர்ந்து பார்த்து விட்டு வந்தான். “நம் ஆள் தான் தலைவரே. ஏதோ செய்தி கொண்டு வருகிறான் போலிருக்கிறது…..”

சிறிது நேரத்தில் செய்தி கொண்டு வந்த குதிரை வீரன் அரச சிறுவன் முன் அந்த செய்தியைச் சொல்லத் தயங்கவே ஷாஹாஜி தள்ளிப் போய் அவன் கொண்டு வந்த செய்தி என்னவென்று கேட்டார்.

அவன் தாழ்ந்த குரலில் சொன்னான். “முகலாயச் சக்கரவர்த்திக்குத் தாங்கள் தப்பிச் சென்று விட்ட செய்தி எட்டி விட்டது தலைவரே. எப்படியாவது தங்களைப் பிடித்து விடக் கட்டளையிட்டிருக்கிறார். அப்படித் தங்களைப் பிடிக்க முடியாமல் போனாலும் அரசரைக் கண்டுபிடித்து சிறுவன் என்றும் பாராமல் அவரைக் கொன்று விடும்படி கட்டளையிட்டிருக்கிறார்…… அப்படி அவர் பிணத்தை ஒப்படைப்பவர்களுக்குப் பெரிய சன்மானம் ஒன்றை அறிவித்திருக்கிறார்…. தங்களையும் மன்னரையும் சிறைப்படுத்திக் கொண்டு செல்ல ஒரு பெரும்படை தயாராகிக் கொண்டிருக்கிறது….”

ஷாஹாஜி அதிர்ந்து போனார். அரியணையில் அமர்த்திய அந்தச் சிறுவனின் தாயார் பயப்பட்டது போலவே நடந்திருக்கிறது. அவர் தன் உயிரைக் கொடுத்தாவது அந்தச் சிறுவனைக் காப்பாற்றியாக வேண்டும்…..

(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. Shahaji's situation is pathetic. Very realistic portrait of him. Eagerly waiting to know how he manages the situation.

    ReplyDelete
  2. சுஜாதாMarch 19, 2018 at 6:48 PM

    ஜீஜாபாயின் கோணத்தில் இது வரை அவர் கணவரைப் பார்த்த எனக்கு இப்போது அவர் கோணத்திலிருந்தும் பார்க்கும் போது அவர் மேல் ஒரு பச்சாதாபம் வருகிறது. சரித்திர நாயகர்கள் உயிர்ப்புடன் எங்கள் முன். சூப்பர் சார்.

    ReplyDelete
  3. அரசகுமாரர்களின் நிலையைப் பார்க்கும்போது சாதாரண குடிமகன் வாழ்வே பரவாயில்லை என்று தோண்றுகிறது ...

    ReplyDelete
  4. சகாயாத்ரி மலையில் தந்தையும் ,மகனும் மறைவிடத்தில் .....ஒருவரை ஒருவர் அறியாமல்..
    சந்திப்பதற்கான சந்தர்ப்பம் அமையுமா....?
    புத்தி சாதுரியம் உடைய மனைவியை , கணவன்கள் விரும்புவது இல்லை...
    காலம் காலமாக மாறாத எண்ணப்போக்கு....

    ReplyDelete
  5. அருமை....ஐயா....
    ஷாஹாஜி அந்த அரச சிறுவனை எப்படி காப்பாற்றுவார்?
    சிவாஜியை அங்கு கண்பாரா என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete