சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 1, 2018

இருவேறு உலகம் – 72

                                                      
செந்தில்நாதனை அவர் முன்பு அழைத்த வழியிலேயே உதய் அழைத்தான். அவனது அடியாள் முத்து போனில் இருந்து அவருக்குக் கீழ் வேலை பார்க்கும் போலீகாரரின் செல் போனிற்குப் போன் செய்து அவரிடம் பேசினான்.

“சார் ஒரு சின்ன உதவி. க்ரிஷ் உங்க கிட்ட தனியா பேசணும்கிறான். மத்த யாருக்கும் தெரிய வேண்டாம்னு நினைக்கிறான்….”

“உங்க கிட்ட நான் ஏதாவது சொல்லிடுவேனான்னு பயந்து இப்போதைக்கு என்னை 24 மணி நேரமும் கண்காணிக்க ஏற்பாடு பண்ணிருக்காங்க. உங்க வீட்டையும் அப்படி தான் கண்காணிச்சுட்டிருப்பாங்கன்னு தோணுது…..”

உதய் யோசித்து விட்டுச் சொன்னான். ”என் ஆளுகள்ள ஒருத்தன் க்ரிஷ் மாதிரி ஒல்லியா தான் இருப்பான். மத்த ஆளுக கூட சேர்ந்து க்ரிஷ் அந்த ஒல்லியான ஆளா ராத்திரி வெளியே போறது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல…. என் ஆளுகளைக் கண்காணிப்பாங்கன்னு தோணல. அப்படியே பின் தொடர்ந்தாலும் டிமிக்கி குடுத்துட்டு தப்பிச்சுடுவானுக”

செந்தில்நாதன் சொன்னார். “அப்படின்னா ஒன்னு செய்யச் சொல்லுங்க. என் வீட்டுக்கு நேர் பின்னாடி என் நண்பன் வீடு தான் இருக்கு. அவங்க ஊருக்குப் போயிருக்காங்க. வீட்டு சாவி என் கிட்ட தான் இருக்கு. எங்க பின்னாடி தெருவுல 47வது நம்பர் வீடு. வீட்டுக்கு முன்னாடி டொயோட்டா கார் நின்னுட்டிருக்கும். ராத்திரி பத்து மணிக்கு மேல அங்க வந்துடச் சொல்லுங்க. நானும் சுவர் ஏறிக்குதிச்சு அங்க போயிடறேன்….”

உதய் சந்தோஷப்பட்டான். “சூப்பர்….. க்ரிஷ் அங்கே ராத்திரி பத்தரை மணி சுமாருக்கு வந்துடுவான்.”


திட்டப்படியே க்ரிஷ் செந்தில்நாதனை பத்தரை மணிக்கு அவரது பின் வீட்டில் சந்தித்தான். அடியாட்களோடு ஒருவனாக அவன் வெளியேறியதை யாரும் கவனித்த மாதிரி தெரியவில்லை. செந்தில்நாதன் தெருவிற்குப் பின்தெரு கண்காணிப்பில்லாமல் இருந்ததால் க்ரிஷ் அந்தத் தெருவின் 47 ஆம் எண் வீட்டை அடைவதில் பிரச்னை இருக்கவில்லை. அதே போல் செந்தில்நாதன் வீட்டைத் தூரத்தில் இருந்து கண்காணித்து வந்தவனுக்கு அவர் ரகசியமாய் பின் சுவர் ஏறிக்குதித்துப் பின் வீட்டுக்குப் போனதும் தெரியவில்லை.

க்ரிஷ் முதலிலேயே செந்தில்நாதனிடம் தான் காணாமல் போன போது நடந்தவற்றை சில வலுவான காரணங்களுக்காகச் சொல்ல முடியாமல் இருப்பதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். தனக்கு இப்போது ஒரு ரகசிய எதிரி இருப்பதாகச் சொல்லிவிட்டுச் சொன்னான். “சார் எனக்கு எதிரி அபூர்வசக்திகள் பலதும் பெற்றவன்கிற தகவல் தெரியும். அவன் தன்னைப் பற்றி எல்லாரும் தெரிஞ்சுக்கறதை விரும்பறதில்லைங்கறதால தன்னைப் பத்தி யாருக்கும் தெரியாத மாதிரியே இயங்கிட்டு வர்றாங்கறதும் தெரியும். இது தவிர வேற ஒன்னுமே தெரியாது. அபூர்வ சக்திகளே இல்லாம இருந்தாலும் இருக்கற மாதிரி நடிக்கற ஆள்கள் அதிகமிருக்கிற உலகத்துல இவன் மாதிரி சக்திகள் இருந்தும் வெளிக்காட்டாத ஆள் இருக்கிறது விதிவிலக்கு. இப்படிப்பட்ட ஆட்கள் நிறைய இருக்க முடியாது. அதுவும் உச்ச சக்திகள் இருக்கற ஆட்கள் கண்டிப்பா அதிகம் இருக்க முடியாது. அவன் விளம்பரப்படுத்திக்காட்டியும் அவன் அடைஞ்ச சக்திகள் பத்தி யாருக்குத் தெரியுதோ இல்லையோ கண்டிப்பா சொல்லிக் கொடுத்த குருவுக்குத் தெரியும் தானே. அந்தக் கோணத்துல யோசிச்சு அப்படிச் சொல்லிக்குடுக்க முடிஞ்ச குருக்கள் அஞ்சு பேரைக் கண்டுபிடிச்சிருக்கேன். அவங்க யாராவாது அவனை அடையாளம் காட்டுவாங்களான்னு பார்க்கணும்….. அதுக்கு உங்க உதவி வேணும்.”

செந்தில்நாதன் அவன் சொன்னதைப் புரிந்து கொள்ள சிறிது நேரம் எடுத்துக் கொண்டார். அவன் மாஸ்டர் வீட்டில் இருந்து குறிப்பெடுத்து வந்த தாளை வாங்கி யோசனையோடு பார்த்தார். “இந்த ஐந்து இடங்கள்ல ஒன்னு மட்டும் தான் தமிழ்நாடு. மத்த இடம் எல்லாமே வடநாட்டுல தான் இருக்கு”

“உங்களுக்கு ஹிந்தியும் நல்லா வரும். நிறைய பரிட்சைகளும் பாஸ் பண்ணிருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன்…..”

செந்தில்நாதன் தன் சந்தேகத்தைக் கேட்டார். “அவன் நம்ம நாட்டு குருவிடம் தான் படிச்சான்னு எப்படிச் சொல்ல முடியும். மத்த நாடுகள்லயும் இந்த மாதிரி வித்தைகள் தெரிஞ்சவங்க இருக்கறதா சொல்றாங்களே”

க்ரிஷ் சொன்னான். “நான் அந்தக் கோணத்துலயும் யோசிச்சேன். அவன் மத்தவங்க கிட்டயும் படிச்சிருக்க வாய்ப்பிருக்கு. சொல்லப் போனா அவன் ஒரு குருவுக்கும் மேல பல குருக்கள் கிட்ட படிச்சிருப்பான்னே தோணுது. ஆனா அந்தக் குருக்கள்ல ஒருத்தராவது நம்ம நாட்டு ஆளாய் இருப்பார்னு தோணுது சார். இல்லாட்டியும் இந்தக் குருக்கள்ல ஒருத்தர் ரெண்டு பேராவது அவனைப் பத்திக் கேள்விப்படாமல் இருக்க வழியில்ல சார். இப்படிப்பட்ட ஆளுமைய எல்லா இடங்கள்லயும் மறைச்சு வச்சிருக்க வழியில்லை….”

அவர் யோசித்தார். க்ரிஷ் சொன்னான். “நீங்க ஒரு மாசம் லீவு போட்டு போகலாம் சார். கேட்டா தீர்த்த யாத்திரை போறதா சொல்லலாம். உங்களுக்கு இந்த டிரான்ஸ்பர் பிடிக்கலை அதான் கோவிச்சுகிட்டு லீவு போட்டுட்டு விரக்தில கோயில் குளம்னு போறதா நினைச்சுடுவாங்க.”

அவன் எல்லாவற்றையும் யோசித்து வைத்திருந்தது அவருக்குப் பிடித்திருந்தது. அவருக்கு இந்த வேலையில் விடுப்பு எடுப்பதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. ஏனென்றால் அவர் அங்கே கூடுதல் ஆள். ஐந்தாவது சக்கரம். கழன்று கொண்டாலும் யாருக்கும் பாதிப்பில்லை.

“உங்க செலவு எல்லாத்தையும் கவனிச்சுக்கறதா அண்ணன் சொன்னான்….” என்பதையும் க்ரிஷ் சொன்னான்.

அவர் புன்னகைத்தபடியே சம்மதித்தார். மாணிக்கம் கோஷ்டிக்கு அவர் உதயிடம் ஏதாவது சொல்லி விடுவாரோ என்றும் வேறு பிரச்னை ஏதாவது கிளப்பி விடுவாரோ என்றும் தான் பயமே தவிர விடுப்பில் வெளியூர், வெளி மாநிலம் என்று போய் விட்டால் நிம்மதி தான் அடைவார்கள். அதுவும் யாத்திரை என்றால் சந்தேகமும் வராது…..


லெக்சாண்டிரியா நகரம் அனலாய் சுட்டது. நகர வீதிகள் தூசியும், இரைச்சலுமாக இருந்தன. மர்ம மனிதன் குறுந்தாடி, கண்ணாடி, வெள்ளை ஆடையுடன் அரபு மனிதனாகவே மாறியிருந்தான். அங்கு தங்க நடுத்தர ஓட்டலை அவன் தேர்ந்தெடுத்திருந்தான். யாரும் சந்தேகப்படாதபடி கூட்டத்தோடு கூட்டமாய் கலந்திருக்க விரும்பிய அவன் தன் தனிப்பட்ட சௌகரியங்களுக்கு அதிக முக்கியத்துவம்  கொடுத்ததில்லை. அவன் நினைத்திருந்தால் அங்குள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலையே கூட விலைக்கு உடனடியாக வாங்க முடியும் என்பதை அவன் உடை, பாவனை, தங்கியிருந்த இடம், செலவு செய்யும் விதம் வைத்து யாருமே அறிய முடியாது.

ஓட்டல் அறையில் அரை மணி நேரம் மட்டும் ஓய்வு எடுத்தவன் குளித்து உடை மாற்றி விட்டுக் கிளம்பினான். ஒரு டாக்சியில் இருபது கிலோமீட்டர் பயணித்தவன் ஓரிடத்தில் இறங்கி பத்து நிமிடம் நடந்து ஒரு பழங்கால வீட்டை அடைந்தான். அவன் அழைப்பு மணி அடித்துப் பொறுமையாக மூன்று நிமிடங்கள் காத்திருந்தான். ஒரு மூதாட்டி மெல்ல வந்து கதவைத் திறந்தாள்.

அவளிடம் நேற்று போனில் தெரிவித்த பெயரையே சொல்லி வணக்கம் தெரிவித்தான். அவள் தலையசைத்து விட்டு உள்ளே அழைத்துச் சென்றாள். வீடு குப்பையாகக் கிடந்தது. ஒரு கருப்பு நிற பூனைக்குட்டி சோபாவில் அமர்ந்திருந்தபடி மர்ம மனிதனை சலனமில்லாமல் பார்த்தது. அங்கிருந்த பழைய மர மேஜைக்கு இரண்டு புறமும் ஒவ்வொரு நாற்காலி இருந்தன. ஒன்றில் கஷ்டப்பட்டு சரிந்து அமர்ந்த மூதாட்டி எதிர்ப்புறம் அவனை உட்காரச் சொன்னாள். மர்ம மனிதன் உட்கார்ந்தான்.

அவள் கையை நீட்டினாள். மர்ம மனிதன் அந்தக் காளிகோயில் குறியீட்டு வரைபடத்தை நீட்டினான். அதை அலட்சியமாய் மேஜையில் வைத்து விட்டு மறுபடியும் மூதாட்டி கையை நீட்டினாள். அப்போது தான் புரிந்தது போலக் காட்டிக்  கொண்டு மர்ம மனிதன் எகிப்திய பவுண்டுகளை எண்ணி 5000 தந்தான். அதை வாங்கிக் கவனமாய் எண்ணியவள் திருப்தியுடன்  மேஜை ஓரத்தில் இருந்த இரும்பு டப்பாவில் வைத்து இறுக்க மூடினாள். பின் மெல்ல அந்த வரைபடக் காகிதத்தைக் கையில் எடுத்தவள் அந்த வரைபடத்தைச் சரியாகப் பார்க்கக்கூட இல்லை. அதைக் கையில் பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்…..

மர்ம மனிதன் அவளைப் பல காலமாய் அறிவான். மிக முக்கியமான தகவல்களைப் பெற அவன் அவளிடம் இது வரை ஐந்து முறை மூன்று வேடங்களில் வந்திருக்கிறான். அவள் ஒரு முறை கூட அவனை உற்றுப் பார்த்ததோ, அனாவசியக் கேள்வி கேட்டதோ கிடையாது. பணத்தில் மட்டும் கறாராக இருப்பாள். கண்களை மூடிக் கொண்டு கால் மணி முதல் அரை மணி வரை இருப்பவள் பின் அவன் தரும் பொருளை வைத்து அது சம்பந்தமான ரகசியங்களைத் துல்லியமாகச் சொல்வாள். ஒரு முறை கூட அவள் சரியாகக் கண்டுபிடித்துச் சொல்லத் தவறியது கிடையாது.

இன்று கடிகாரம் அரை மணி நேரத்தையும் தாண்டியது. அவள் கண்களை மூடியபடியே இருந்தாள். மர்ம மனிதன்  இனம் தெரியாத பதற்றத்தை உணர ஆரம்பித்தான்….

(தொடரும்)  
என்.கணேசன் 

7 comments:

  1. Very interesting development. We are also tense like marma manithan.

    ReplyDelete
  2. செந்தில்நாதன் யாத்திரையும்....
    மர்ம மனிதனின் வரைபடமும்....
    புதிய திருப்பம்....
    இந்த நாவல் எந்த திசைல...போகும்னே... புரிந்துகொள்ள முடியவில்லை,...

    ReplyDelete
  3. old lady has gone?

    ReplyDelete
  4. டென்ஸன் உச்சத்தில்

    ReplyDelete