என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Thursday, May 14, 2026

சதுரங்கம் 18


ர்ஜுன் ஞானமூர்த்தியைக் கேட்டான். “அரசியல்ல நீங்க அவருக்கு ஆலோசனை சொல்லறதுண்டா?”

 

ஞானமூர்த்தி சொன்னார். “சில சமயங்கள்ல சொல்றதுண்டு. அது நானுன்னு இல்லை. அம்மாவும், ராஜாராமும் கூட சொல்றதுண்டு. சிலதை அவர் கேட்பார். சிலதைக் கேட்க மாட்டார்.”

 

எந்த மாதிரி விஷயங்களைக் கேட்க மாட்டார்?”

 

ஞானமூர்த்தி புன்னகையுடன் சொன்னார். “அவர் கட்சிக்காகவும், மக்களுக்காகவும் தன்னோட சொத்தையெல்லாம் விற்று உதவினார். அது அவரோட நல்ல மனசைக் காட்டுதுன்னாலும், ஒரு தலைவராய் அவர் அதைச் செய்யறது சரியல்லன்னு நாங்க மூனு பேருமே அவர் கிட்ட சொல்வோம். அப்படி அவர் சொந்தக் காசைக் கொடுக்கிறது ஒரு நிரந்தரத் தீர்வு ஆக முடியாதுன்னு நான் எப்பவுமே அவர் கிட்ட வாதாடுவேன். அப்படி நம் சொந்தப் பணத்தைக் கொடுத்து எத்தனை பேருக்கு உதவ முடியும்? நல்ல தலைவராய் இருந்து மக்கள் வரிப்பணம் மக்களுக்கு முழுசாய், சரியாய் போய்ச் சேர என்ன செய்யணுமோ அதைச் செய்தாலே போதும், மக்கள் பெருவாரியாய் பலன் அடைவாங்கன்னு நான் சொல்வேன். அதை அவர் மறுக்கலை. எதிர்க்கட்சித் தலைவராகவும், முதலமைச்சராகவும் அந்த மாதிரி நல்ல திட்டங்கள் வெளிவர கடுமையாய் உழைச்சிருக்கார். ஆனால் அது கூடவே தன் காசைச் செலவு செய்யறதையும் அவர் நிறுத்தலைபட்ஜெட்டுல எல்லா நல்லதுக்கும் நிதி ஒதுக்க முடியாது. சிலராவது நான் தர்ற காசால பலன் அடையட்டுமேன்னு சொல்லித் தன் பணத்தையும் வாரிக் கொடுத்தார்.”

 

அர்ஜுனுக்கு அதைக் கேட்கையில் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. தாத்தா வாசுதேவனை குடும்பத்தினர் பார்வையில் வித்தியாசமாகப் பார்க்க முடிவது அர்ஜுனுக்கு சுவாரசியமாகவும் இருந்தது. தமிழகம் போற்றும் அந்தப் பெருந்தலைவரை இப்போது தான் எலும்பும் சதையும் கொண்ட மனிதராக அர்ஜுனால் உணர முடிந்தது.

 

அடுத்ததாக, முதல்வராக வாசுதேவன் ஆற்றிய மகத்தான பணிகளைப் பற்றியும், அந்த நாட்களில் அவர் எடுத்த முக்கிய முடிவுகளின் பின்னணி விவரங்களையும் அர்ஜுன் கேட்க ஆரம்பித்தான். பல விஷயங்களை அவர் தெளிவாக விளக்கினார். 

 

நீண்ட நேரக் கேள்வி பதில்களுக்குப் பின், அந்தப் பேட்டியைப் பிரசுரிக்கத் தரும் முன் தன்னிடம் காட்டும்படி ஞானமூர்த்தி சொன்னார். சரியென்று சொல்லி விட்டுத் தனதறைக்குத் திரும்பிய அர்ஜுனைப் பின் தொடர்ந்து வந்த நித்யா சொன்னாள். “நீதிமான் கூடக் காதல்ல எவ்வளவு விவரமாய் இருந்திருக்கார் பார்த்தியா?”

 

அர்ஜுன் சொன்னான். “அவர் அம்மாவைக் காதலிச்சதா சொல்லவே இல்லையே. பிடிச்சுருந்ததால கல்யாணம் செய்துக்கறதுல உறுதியாய் இருந்ததாய் தானே சொன்னார்...”

 

ஆமா, அவர் மகன் கிட்ட காதலைப் பற்றி இதைவிட எப்படி விளக்கமாய்ச் சொல்ல முடியும். வயசுக்கேற்ற மாதிரி கொஞ்சம் யோசி.”

 

பானுமதி நித்யாவை அழைப்பது கேட்டது. “அம்மா மற்றதை எல்லாம் மறந்தாலும் எனக்கு வேலை சொல்றதை மட்டும் மறக்கறதேயில்லை. அடுத்த ஜென்மத்துலயாவது ஆம்பிளையா பிறக்கணும். வீட்டு வேலைல இருந்து தப்பிச்சுக்கலாம்.” என்று சலித்துக் கொண்டே செல்லும் தங்கையைப் புன்னகையுடன் பார்த்தான் அர்ஜுன்.

 

அப்பா அம்மாவைத் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததைக் காதல் என்று எடுத்துக் கொள்ள அவனால் முடியவில்லை. அவர்கள் இருவரின் இயல்புமே காதல் உணர்வுக்கு ஒத்து வரக்கூடியதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஒருவேளை, இளமைக் காலத்தில் அவர்கள் இருவரும் வேறு மாதிரி இருந்திருக்கக்கூடுமோ?  இருக்கலாம்.

 

அப்பாவாவது எப்போதாவது தன் இளமைக்கால நிகழ்வுகளை அவனுடனும், நித்யாவுடனும் பகிர்ந்து கொள்வதுண்டு. ஆனால் அம்மா எப்போதும் தன் பழைய நினைவுகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டதில்லை. எதையுமே துருவிக் கேட்காமல் திருப்தி அடையாத நித்யா ஒருமுறை அம்மாவிடம் அதைக் கேட்கப் போய் கண்கலங்கிய அம்மா பதில் சொல்லாமல் அறைக்குப் போய் கதவைத் தாளிட்டுக் கொண்டது இப்போதும் அர்ஜுனுக்கு நினைவிருக்கிறது.  சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்த அம்மா இளமையில் நிறைய கஷ்டப்பட்டிருக்க வேண்டும் என்றும், இளமைக்கால நிகழ்வுகளைக் கேட்பது அவளுடைய மனக்காயங்களைப் புதுப்பிப்பதாக இருக்கிறது என்றும் புரிந்து கொண்ட நித்யாவும் அதற்குப் பின் மறந்தும் அது பற்றி அம்மாவிடம் எதுவும் கேட்பதோ, பேசுவதோ இல்லை. அதனால் அம்மாவின் திருமணத்திற்கு முந்தைய வரலாறு அவர்கள் இருவரும் அறியாதது. அப்பாவும் அம்மாவும் எப்படி சந்தித்துக் கொண்டார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. அப்பாவும் அது பற்றிப் பேசினது கிடையாது.

 

அர்ஜுனுக்கு அம்மாவைப் பற்றி நினைக்கையில் இப்போது இரக்கம் தோன்றியது. அவள் பெற்றோரை இழந்து எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறாளோ? அதே இரக்கம் தான் அப்பாவுக்கும் வந்திருக்க வேண்டும் என்று அர்ஜுன் எண்ணிக் கொண்டான். கிட்டத்தட்ட அவருடைய நிலைமையும் அப்படித் தான் இருந்தது. ஆனால் அவருக்கு வாசுதேவன் என்ற தங்கமான வளர்ப்புத் தந்தை கிடைத்தார். அதன் மூலம் அன்பும், பாசமும் கிடைத்தன. நன்றாகக் கல்வி கற்க முடிந்தது. படிப்படியாக வாழ்வில் முன்னேற முடிந்தது.

 

ஆனால் அம்மாவின் விதி அப்படி இருந்திருக்கவில்லை. எட்டாம் வகுப்போடு கல்வி நின்று போய் பின் என்னென்னவெல்லாம் கஷ்டப்பட்டாளோ?  அந்த மனச்சுமையின் காரணமாகத் தான் அவள் இப்போதும் யாருடனும் அதிகம் நெருங்கிப்பழக முடியாதவளாக இருக்கிறாள் என்பதை அவனால் இப்போது புரிந்து கொள்ள முடிந்தது. சிறு வயதின் காயங்களின் வலியை அவனும் நன்றாக அறிவான். அம்மா அவளுடைய காயங்களின் காரணமாக விலகி வாழ்ந்து அவனையும் நிறைய காயப்படுத்தியிருக்கிறாள்.

 

அவனுக்கு நினவு தெரிந்த நாளிலிருந்து அவள் அவனுக்கு நெருக்கமாக இருந்தது அவன் நோய்வாய்ப்பட்டிருந்த காலங்களில் மட்டுமே. அவன் நோய் தீர்ந்து குணமாகும் வரை அவனுடனேயே இருக்கும் அவள், அவன் நலமடைய ஆரம்பித்த பின் பழையபடி விலகி விடுவாள். அதனாலேயே அவன் சிறுவயதில் அடிக்கடி நோய்வாய்ப்படுவதை, வளர்ந்த பிறகு உணர்ந்திருக்கிறான்.  ஒரு உளவியல் புத்தகத்தில் விவரித்திருந்த ஒரு உதாரணம் கிட்டத்தட்ட அவனுடைய உதாரணம் போலவே இருந்திருக்கிறது. பெற்றோரின் கவனம் நோய்வாய்ப்படும் காலங்களில் மட்டுமே கிடைக்கின்றது என்ற நிலைமையில் இருக்கும் இளம்பெண் ஒருத்தி அடிக்கடி நோய்வாய்ப்படுவது பற்றி அந்த நூலில் சொல்லப்பட்டு இருந்தது. தானும் அது போல் தான் நோய்வாய்ப்படுகிறோம் என்பதை உணர்ந்து அர்ஜுன் பின் மாறியிருக்கிறான். அவனுக்கு ஒரு புத்தகம் உதவியிருக்கிறது. ஆனால் கல்வியறிவு இல்லாத அம்மாவுக்கு அது போன்ற உதவி கிடைக்க வாய்ப்பில்லை. மனம் விட்டுப் பேசி அறிந்தவர்களிடமிருந்து உதவி பெறும் நிலைமையிலும் அவள் இல்லை. இதை எல்லாம் நினைத்து அவன் தான் மாறியது போலவே அம்மாவையும் மாற்ற வேண்டும் என்று உறுதியாக நினைத்துக் கொண்டான்.

 

சில சமயங்களில் முக்கியமான நபர்களிடம் தகவலுக்காகவோ, பேட்டிக்காகவோ போகும் போது எளிதில் அவர்களை நிருபர்கள் அணுகி விட முடியாது. ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படாமல், சளைக்காமல் முயன்று தான் அவன் வெற்றி பெற்றிருக்கிறான். அம்மாவிடம் மட்டும் ஏன் அதே முயற்சியை எடுக்காமல் அவளைப் போலவே ஒதுங்கினோம் என்று அவன் இப்போது யோசிக்கிறான்

 

அவன் உடனே எழுந்து அமைதியாக சமையலறைக்குப் போனான். அம்மாவும், நித்யாவும் வேலை செய்து கொண்டிருந்தார்கள். பானுமதிஎன்ன?” என்பது போல மகனைப் பார்த்தாள்.

 

அர்ஜுன் அவள் கண்களை நேராகப் பார்த்து சொன்னான். “தாத்தா பற்றி நான் உன் கிட்டயும் பேட்டி எடுக்கணும்மா.”

 

பானுமதி தடுமாறினாள். அவன் இப்படி அவளிடம் கண்களைப் பார்த்துப் பேசியதில்லை.  அவளும் அவனிடம் அப்படிச் செய்யாததால், அவனும் சிறுவயதிலிருந்தே அதைத் தவிர்த்து வந்தான். முதல் முறையாக அவன் அப்படிப் பார்த்ததே அவளுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அதை எல்லாம் மறைத்துக் கொண்டு வழக்கமாய் அவனிடம் காட்டும் வெறுமையைக் காட்டிச் சொன்னாள். எனக்கு பேட்டியெல்லாம் தரத் தெரியாது.”

 

பேசத் தெரியுமில்லை? கேட்டதுக்குப் பதில் சொல்லு போதும்..” அவன் அமைதியாகச் சொல்ல நித்யா அவனைசபாஷ்என்பது போல் பார்த்தாள்.

 

பானுமதி மகன் பிடிவாதமாகச் சொன்னதை ரசிக்கவில்லை. அண்ணனின் பேச்சை ரசித்து, பார்வையாலேயே ஊக்குவிக்கும் மகளை அவள் முறைத்தாள். நித்யா அதைக் கண்டுகொள்ளவில்லை.

 

அதுவும் எனக்கு சரியா சொல்லத் தெரியாது. எனக்கு படிப்பறிவு கிடையாதுடா.” என்று பானுமதி படபடப்பாகச் சொன்னாள். மகன் சரிசமமாய் உறுதியோடு நின்று பேசிய போது அவளால் அமைதியையோ, வெறுமையையோ காட்ட முடியவில்லை.

 

அர்ஜுன் கேட்டான்.  உன் பிள்ளை கிட்ட பேச படிப்பறிவு என்னத்துக்கு?”


(தொடரும்)

என்.கணேசன்

 

6 comments:

  1. Sir, Yogi 156 episode link not working. Could you pls fix it

    ReplyDelete
    Replies
    1. I couldn't rectify the error. Use main blog link https://enganeshan.blogspot.com/ and read.

      Delete
    2. Web version is working sir, Thanks

      Delete
  2. யோகி 156 மறுபடியும் தற்போது பதித்திருக்கிறேன்.

    ReplyDelete