என்.கணேசனின் நூல்களை வாங்க பதிப்பாளரை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Monday, May 25, 2026

யோகி 157


 முதல்வர் சொன்ன செய்தியைச் சொல்ல பிரம்மானந்தா பாண்டியனை அழைத்தார். பாண்டியன் பிரம்மானந்தாவின் தோற்றத்தைப் பார்த்து அதிர்ந்து போனார். பிரம்மானந்தா சிறுத்து, குறுகிப் போயிருந்தது போல் அவருக்குத் தோன்றியது. ஒரு மனிதர் ஒரே நாளில் இப்படிக் களையிழந்து போக முடியுமா?

 

பிரம்மானந்தா வறண்ட குரலில் சொன்னார். “பாண்டியன், எல்லாம் நம்ம கையை மீறிப் போயிடுச்சு. முதல்வர் போன் பண்ணியிருந்தார்....”

 

பாண்டியன் ஆவலுடன் கேட்டார். “முதல்வர் என்ன சொன்னார் யோகிஜி?”

 

முதல்வர் சொன்னதை அப்படியே பிரம்மானந்தா சொல்ல, பாண்டியனும் அதிர்ச்சி அடைந்தார் என்றாலும், பிரம்மானந்தா அளவுக்குத் தளர்ந்து விடவில்லை. ”பார்க்கலாம் யோகிஜி. அவங்க வரட்டும். அந்த இடம் ரொம்ப விசாலமான இடம். அதுல சரியான இடத்தை அவங்க கண்டுபிடிக்கறது கஷ்டம். நாம ஏதாவது செஞ்சு, கொஞ்சம் தள்ளி தோண்ட வைக்க முடியுமான்னு பார்ப்போம்.”

 

எப்போதும் மனம் தளராத விக்கிரமாதித்தன் என்று பாண்டியனை பிரம்மானந்தா நினைத்துக் கொண்டார். சோகமான புன்னகை அவர் முகத்தில் வந்து போனது. ஆனால் அவருக்கு நம்பிக்கை இல்லை. பொதுவாக இது போன்ற ஒலிப்பதிவுகள் வைரல் ஆவதற்கு முன் விலைபேசப்படும். அதிலும் பேரம் பேசுவது இருக்கும். பேரம் படியாத போது தான் வெளியிடப்படும். பின்பு தான் அது வைரல் ஆகும். ஆனால் இந்த முறை அந்த ஒலிப்பதிவு பலருக்கும் ஒரே நேரத்தில் போய் சேர்ந்து உடனே வைரல் ஆக ஆரம்பித்து இருக்கிறது. யாரோ அவர்களைச் சிக்க வைக்க வேண்டும் என்றே உறுதியாகச் செயல்பட்டது போலவே தோன்றுகிறது. அவர்கள் பெறும் தண்டனை தான் தன்னுடைய லாபம் என்று யாரோ செயல்பட்டு இருப்பது இருவருக்கும் புரிந்திருந்தது. இதைப் பற்றி நேற்றே அவர்கள் பேசியிருந்தார்கள்.

 

பிரம்மானந்தா கேட்டார். “இதுக்கெல்லாம் பின்னால் யார் இருக்கான்னு தெரிஞ்சுதா பாண்டியன்?”

 

சரியாய் தெரியலை யோகிஜி. ஆனால் ஷ்ரவன் மேல கொஞ்சம் சந்தேகமாய் இருக்கு.”

 

அவனைத் தான் ஹைத்ராபாத் போலீஸ் கைது பண்ணி கூட்டிகிட்டு போயிட்டாங்களே.”

 

அதுல தான் சந்தேகம் வருது யோகிஜி. அது சம்பந்தமாய் பத்திரிக்கைகள்ல எந்த செய்தியும் இல்லை. ஹைத்ராபாத் எடிஷன்ல வர்ற எல்லா பத்திரிக்கையும் பார்த்தாச்சு. எதுலயும் ஒரு அமெரிக்கனைக் கொன்ன கதையோ, அவனைக் கொன்னவனைப் புடிச்ச கதையோ இல்லை.”

 

பிரம்மானந்தா திகைப்புடன் பார்த்தார். “அந்த ஹைத்ராபாத் போலீஸோட நம்ம அசிஸ்டெண்ட் கமிஷனரும் வந்ததாய் சொன்னாயே?”

 

ஆமா யோகிஜி. நேத்து அவருக்கும் போன் போட்டு கேட்டேன். அவரும் ஆச்சரியப்படறார்.

 

என்னது, அவரும் ஆச்சரியப்படறாரா?”

 

ஆமாம் ஜீ. தெலுங்கானா போலீஸ்ல இருந்து தான் இவங்களுக்கு தகவல் வந்ததாம். சரியான ரெகார்டோட வந்து தான் தமிழ்நாட்டுப் போலீஸை அவங்க சந்திச்சாங்களாம். இன்னும் எதாவது தகவல் வரவேண்டியிருக்குமோ என்னவோ, அது வந்த பிறகு ஷ்ரவன் கைதான செய்தியை வெளியே விடலாம்னு நினைச்சிருக்கறாங்களோ என்னவோன்னு அவர் சொல்றார்.”

 

பிரம்மானந்தாவின் திகைப்பு கூடியது. ”உண்மைல அவன் யாரு பாண்டியன்?”

 

தெரியலை யோகிஜி.”

 

தேவானந்தகிரியிடம் கேட்டுப் பார்க்கலாமே. எதாவது தெரியவர வாய்ப்பிருக்கே.”

 

நானும் கேட்கலாம்னு நினைச்சு கூப்பிட்டேன். அவர் போனை எடுக்கலை. கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிட்டேன். நியூஸ் எல்லாம் பார்த்துட்டு, நம்ம நம்பரை அவர் ப்ளாக் செஞ்சுட்டார்னு தோணுது.”

 

அந்தத் தகவல் பிரம்மானந்தாவை அறைந்தது. யோசித்தவராக அவர் தன்னுடைய அலைபேசியிலிருந்து தேவானந்தகிரியை அழைத்தார். அழைப்பு செல்லவில்லை. அவருக்கு மிகவும் அவமானமாக இருந்தது. அவர் நம்மிடம் பேச மாட்டாரா என்று ஏங்கும் நிலையில் இருந்த தேவானந்தகிரி போன்ற கீழ்நிலை மனிதர், அவருடனான தொடர்பே ஆபத்து என்று எண்ணி தடை செய்து வைத்திருப்பது எத்தனை பெரிய வீழ்ச்சி.

 

அவர் முகபாவனையைப் பார்த்து பாண்டியன் சொன்னார். “இதுல வருத்தப்பட ஒன்னும் இல்லை யோகிஜி. மனித சுபாவம் இப்படித்தான்.”

 

பாண்டியனின் வார்த்தைகள் அவருக்கு ஆறுதல் அளிக்கவில்லை. பெற்ற பெருமைகளில் பெருமிதம் அடைந்து கர்வம் அடைந்த மனதுக்கு, அலட்சியம், அவமானம் எல்லாம் சகிக்க முடிந்ததல்ல. மனதை அவர் வலிய திசை திருப்பினார். “ஷ்ரவன் யாராகவோ இருந்துகிட்டு போகட்டும். அவனுக்கு எப்படி சந்திரமோகன் கொலை பத்தி தெரிஞ்சுது.”

 

அது தான் குழப்பமாய் இருக்கு. இங்கேயிருக்கிற கருப்பு ஆடு அதைச் சொல்லியிருக்கலாம்…”

 

அது யாருன்னு கண்டுபிடிச்சியா?”

 

இல்லை ஜி. முதலெல்லாம் அதிகமாய் ரெண்டு பேர் மேல சந்தேகம் இருந்துச்சு. அபிநயானந்தா, கவிதானந்தா. ரெண்டு பேரும் சைத்ரானந்தா கூட ஒரே அறையில இருந்தவங்க. அவங்க கிட்ட சைத்ரானந்தா சொல்லி இருக்க வாய்ப்பு இருக்கு. கொஞ்சம் கல்பனானந்தா மேலயும் சந்தேகம் இருந்துச்சு. ஒரு மாசம் அவங்க கூட அவ ஒரே அறையில இருந்துருக்கா. அதிகமாய் வேலை செஞ்சதும் அவங்க மேற்பார்வையில தான். அவங்க கிட்ட அவள் சொல்லி இருக்கவும் வாய்ப்பிருக்கு. இப்ப ஷ்ரவனும் அவங்க மேற்பார்வைல தான் அதிகம் வேலை பார்த்திருக்கான். ஆனால் அவங்க ரெண்டு பேரும் அதிகம் பேசிகிட்டதில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் பேசிகிட்டதே அதையே தான்னால் இத்தனை நாள்ல சொல்ல வாய்ப்பு இருந்திருக்கு. ஷ்ரவனுக்கு அதிகம் பேச வாய்ப்பு இருந்தது முக்தானந்தா கிட்ட தான்.  சித்தானந்தாவும் காய்ச்சல் வந்து ஆஸ்பத்திரியில் இருந்ததால ஷ்ரவனும் அவரும் தான் அந்த அறையில இருந்துருக்காங்க. அவர் அதிகம் பேசாதவர்னாலும் அவன் அவரை பேச வெச்சிருக்கலாம். அவங்க ரெண்டு பேரும் பேசியிருக்கலாம். ராத்திரி நேரங்கள்ல அந்த ஆள் அதிகம் தூங்காதவர். சைத்ரானந்தா பார்த்த மாதிரியே அவரும் சந்திரமோகன் கொலையைப் பார்த்திருக்கலாம். இத்தனை நாள் மௌனமாய் இருந்துட்டு இப்ப ஷ்ரவன் கிட்ட சொல்லி இருக்கலாம்…”

 

பிரம்மானந்தா கேட்டார். “நம்ம சிசிடிவி கேமிரால பார்த்தா முக்தானந்தா அந்தக் கொலையைப் பார்த்தாரான்னு தெரிஞ்சுருக்குமே.”

 

கொலை நடக்கற நேரத்துல எல்லா கேமிராவும் ஆஃப் பண்ணிடறது தான் வழக்கம் யோகிஜி. நாம செய்யற கொலையே கேமிரால பதிவாயிடுச்சுன்னா, நாளைக்கு நம்ம ஆள்களே கூட அதைக் காமிச்சு நம்மள ப்ளாக்மெயில் பண்ற வாய்ப்பிருக்கு. அப்படி நாம ஆஃப் பண்ணினதால தான்  சைத்ரானந்தா மொட்டை மாடிக்குப் போய் பார்த்ததே நமக்குத் தெரியாமல் போச்சு.  அதனால முக்தானந்தா பார்த்திருந்தாலும் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.”

 

பிரம்மானந்தா யோசித்துப் பார்த்தார். ஆனால் எதுவும் பிடிபடவில்லை. பாண்டியன் தொடர்ந்து சொன்னார். “ஷ்ரவனுக்கும் கவிதானந்தா, அபிநயானந்தா இரண்டு பேருக்கும் தொடர்பே இல்லை. அவர்கள் சந்தித்துக் கொண்டது கூட இல்லை. அவனுக்கு தொடர்பு இருந்தது கல்பனானந்தா, முக்தானந்தா இருவருடன் தான். ஆனால் அவர்களுக்குமே கூட சந்திரமோகன் பரிச்சயமில்லாதவன். அப்படி இருக்கையில் கொல்லப்பட்டது சந்திரமோகன் என்று எப்படி அந்த இரண்டாவது ஒலிப்பதிவில் வெளியானது என்பது தான் குழப்பமாய் இருக்கு யோகிஜி. ஷ்ரவன் மூலமாகத் தான் அந்தச் செய்தி வெளியாகியிருக்கிறது என்றால் அவனுக்கு அந்த விசேஷ சக்திகள் மூலம் எதாவது தெரிந்திருக்குமோ என்னவோ? அவனை நாம் பிடித்து வைத்த மறுநாளே கைது செய்ய ஆட்கள் வந்ததும் எனக்கு இயல்பாய் படவில்லை. அதை கல்பனானந்தா, முக்தானந்தா உட்பட யாருமே வெளியே உள்ள ஆட்களுக்குத் தெரிவிக்க வழியில்லை. ஆனாலும் தெரிந்து கொண்டு ஆட்கள் வந்து விட்டார்களா இல்லை, அது நம்ப முடியா விட்டாலும் தற்செயலா? ஒன்றுமே புரியவில்லை.”

 

எதையும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்த புத்திசாலியான பாண்டியனுக்கே ஒன்றும் புரியவில்லை என்பதை பிரம்மானந்தாவுக்கு நம்ப முடியவில்லை. எல்லாமே கச்சிதமாகத் தான் போய்க் கொண்டிருந்தது. சந்திரமோகன் கொலை செய்யப்பட்டதைப் பார்த்த சைத்ராவை அவளுடைய தந்தை, தாத்தா இருவரையும் காட்டி அவர்களால் பயமுறுத்த முடிந்தது. அவர்கள் இருவரையும் சித்திரவதை செய்து சிறிது சிறிதாகக் கொல்வோம் என்று அவளைப் பயமுறுத்தி தான் கோர்ட்டில் அவர்களுக்குச் சாதகமாக அவர்கள் பேச வைத்தார்கள். வேலை முடிந்ததும் கோவிட் காலத்தில் அவளைக் கொன்றும் விட்டார்கள். ஆனால் திடீரென்று காலமோ, கர்மமோ அவர்களுக்கு முற்றிலும் எதிரியாக விஸ்வரூபம் எடுத்து நிற்பதாக அவருக்குத் தோன்றியது.

 

கடைசியில், சந்திரமோகனைக் கொல்லாமல் இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காதோ என்று அவரால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.


(தொடரும்)

என்.கணேசன்


விரைவில் புதிய நாவல் ச(க்)தி வெளியீடு!



   

3 comments:

  1. Congratulations on the about to be released new novel. The cover photo makes me think its a spiritual thriller with some search for some powerful divine object like the one in paraman rahasyam.Thanks

    ReplyDelete
  2. Congratulations sir. Waiting for the release

    ReplyDelete