அருணாச்சலம் நன்றியுடன் பரசுராமனை நினைத்துப்
புன்னகைத்தார். ஷ்ரவன் அந்த நிஜ யோகியைப் பற்றிச் சொன்னதும் அவரை நிறைய யோசிக்க
வைத்தது. எல்லா அற்புதங்களிலும் மிகப்பெரிய அற்புதம் எல்லா நேரங்களிலும்
குறை காணாமல் நிறைவாக வாழ முடிவது தான் என்று தோன்றியது. சேரியில்
கயிற்றுக் கட்டிலிலும், யோகாலயத்தில் சொகுசு சோபாவிலும் ஒரே மனநிலையில், பாதிக்கப்படாமல்
உட்கார முடிந்த அந்த யோகி அவரைப் பிரமிக்க வைத்தார். அந்த யோகியைத்
தோட்டக்காரனாகப் பார்க்கும் இந்த உலகம் ஒரு மோசக்காரனை யோகியாய் பார்க்கிறது, நம்புகிறது. வேடிக்கையாக
இருந்தாலும் இதில் ஒரு உண்மை தெளிவாகத் தெரிந்தது. ’நடிப்பவனை
உயர்த்தியும், நடிக்காதவனைச் சாதாரணமாகவும் பார்ப்பது தான் உலகத்தின் இயல்பு.’
அருணாச்சலம் ஷ்ரவனிடம் கேட்டார். “இனி என்ன
செய்யலாம் என்று நினைக்கிறாய் ஷ்ரவன்?”
ஷ்ரவன் சொன்னான். “சைத்ராவைக்
கொன்றதற்கு நம்மிடம் சாட்சிகள் இல்லை. அவர்கள் கோவிட்டை
நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு தப்பித்து விட்டார்கள். ஆனால் சந்திரமோகனைக்
கொன்றதற்கு அவர்களைத் தண்டிக்க முடியும். பிணம் இன்னும் யோகாலயத்தில்
தான் இருக்கிறது. எங்கே புதைத்து வைத்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.”
ராகவன் கேட்டார். “அது சந்திரமோகனுடையது
என்பது நம் அனுமானம் தானே ஷ்ரவன். அது வேறு யாருடையதாகவும் இருக்கலாம் அல்லவா?”
“அவர்கள்
வாரத்திற்கு இரண்டு கொலைகள் செய்பவர்களாக இல்லாத வரையில், அங்கு கொன்று
புதைக்கப்பட்டது சந்திரமோகனாகத் தான் இருக்க வேண்டும்.” என்று சொன்ன
ஷ்ரவன் அருணாச்சலத்திடம் சொன்னான். “அவர்களைப் பகைத்துக்
கொள்ளாமல் இந்தக் கொலையை விசாரிக்க நீங்களாக எந்த ஏற்பாடும் செய்ய முடியாது. ஆனால் இந்தக்
கொலை பற்றிய விவரம் சமூக வலைத்தளங்களில் வைரலானால், விசாரணை
நடத்த வேண்டிய கட்டாயத்திலிருந்து நீங்கள் தப்பிக்கவும் முடியாது இல்லையா சார். அவர்களும்
உங்களைத் தவறு சொல்ல முடியாது.”
அருணாச்சலம் புன்னகைத்தார். இந்த இளைஞன்
எல்லாவற்றையும் நன்றாக யோசித்து வைத்திருக்கிறான்.
அடுத்த சில மணி நேரங்களில் “யோகாலயத்தில்
கொலை” என்ற ஒரு ’ஆடியோ’ (ஒலிபதிவு) சமூக வலைத்தளங்களில்
வைரல் ஆக ஆரம்பித்தது. அந்த ஒலிப்பதிவில் நடுங்கிக் கொண்டே ஒரு உணர்ச்சிகரமாய் ஒரு
பெண் பேசியிருந்தாள்.
“நான் யோகாலயத்தில்
துறவியாக இருக்கும் ஒரு பெண். இப்போது என் உயிருக்கு இங்கே ஆபத்து உருவாகியிருக்கிறது. இந்த ஆடியோ
உங்கள் எல்லாரையும் வந்து சேரும் போது நான் கொல்லப்பட்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் நான்
இறந்தாலும், ஒரு உண்மையை உலகம் அறிய வேண்டும் என்ற ஆவலில் என் மனசாட்சியில்
இது வரை உறுத்திக் கொண்டிருந்ததை நான் இப்போது இறக்கி வைக்கிறேன். சில மாதங்களுக்கு
முன் யோகாலயத்தின் பின்பகுதி கடைசியில், வெளிநாட்டுத் துறவிகள்
வசிக்கும் பகுதிக்கு எதிரில் உள்ள காலி இடத்தில், ஒருவர் உயிரோடு புதைக்கப்பட்டார். அதை நானும், சைத்ரானந்தா
என்ற இன்னொரு பெண் துறவியும் பார்த்து விட்டோம். சைத்ரானந்தா
பார்த்து விட்டதைக் கண்டு பிடித்த கொலைகாரர்கள் அவரை அடைத்து வைத்து சித்திரவதை செய்தார்கள். அவரைக்
காப்பாற்ற நான் அவருடைய தந்தைக்கு “உங்கள் மகள் உயிருக்கு
ஆபத்து. காப்பாற்றுங்கள்” என்று ரகசியமாக
ஒரு மொட்டைக்கடிதம் எழுதிப் போட்டேன். ஆனால் உண்மையை வெளியே
சொன்னால் சைத்ரானந்தாவுடைய தந்தை மற்றும் தாத்தாவை கொன்று விடுவோம் என்று அவரை மிரட்டி
குடும்பத்தாரைச் சந்திக்கவும் விடாமல் தடுத்து விட்டார்கள். கோவிட்
வந்த சமயம் கோவிட்டால் இறந்து போனதாகச் சொல்லி, அவரைக்
கொன்றும் விட்டார்கள். யோகாலயாவில் நடந்த அந்தக் கொலையை நானும் பார்த்திருப்பது
இப்போது அவர்களுக்குத் தெரிந்து விட்டது. நான் என்னேரமும்
கொல்லப்படும் அபாயம் உள்ளது. தயவு செய்து என்னைக் காப்பாற்றுங்கள். ஒருவேளை
நான் கொல்லப்பட்டிருந்தால் குற்றவாளிகளைத் தண்டியுங்கள். இல்லா விட்டால்
கொல்லப்பட்ட எங்களுடைய ஆத்மாக்கள் சாந்தியடையாது.”
நடந்த கொலைகளைச் செய்தது யார் என்று
அறியும் ஆர்வம் சமூகத்தில் பலரிடமும் இருந்தாலும், நடக்கப்
போகும் கொலையைத் தவிர்த்து காப்பாற்றும் துடிப்பு கிட்டத்தட்ட எல்லோரிடமும் ஏற்பட்டு
விடுவது இயற்கை. இதைக் கணக்கிட்டு தான் ஷ்ரவன் பழைய கொலைகளைத் தெரிவிப்பதோடு
நின்று விடாமல், கொலையைப் பார்த்தவள் கொல்லப்படவிருக்கிறாள் என்ற ரீதியில்
அந்த ஒலிப்பதிவை வைரல் ஆக்கினான். அவன் எதிர்பார்த்தது போல, குரல் நடுங்கி
உயிருக்குப் பயந்து பேசிய பெண்ணைக் காப்பாற்றும் துடிப்பு இளகிய மனம் படைத்த பலருக்கும்
ஏற்பட்டது. பலரும் அதை மீண்டும் பரப்பினார்கள். அபிப்பிராயங்கள்
சொன்னார்கள். சமூக வலைத்தளங்களில் அந்த ஒலிப்பதிவு பேசப்பட்டது. பலரும்
பழைய சைத்ரானந்தா வழக்கை நினைவு கூர்ந்து மீண்டும் பேச ஆரம்பித்தார்கள்.
யோகாலயத்தின் முன்னால், ஊடகங்கள்
குவிய ஆரம்பித்தன. “கொல்லாதே, கொல்லாதே பெண் துறவிகளைக்
கொல்லாதே” என்று பெண்ணுரிமை அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் கூடி கோஷம்
எழுப்பினார்கள். பத்திரிக்கைக்
காரர்கள், தொலைக்காட்சிகள்,
ஊடகங்கள், அரசியல் கட்சிக்காரர்கள், சீர்திருத்தவாதிகள், பொழுது போகாதவர்கள் என யோகாலயத்தின்
முன் எல்லோரும் குவிய ஆரம்பித்தார்கள்.
சைத்ரா விஷயத்தில் அலட்டிக் கொள்ளாமல்
இருந்த யோகாலயத்தால் இப்போதும் அப்படி இருக்க முடியவில்லை. சாதாரணமாக எதற்கும் அசராத
பாண்டியன் தற்போது நடப்பதில் அதிர்ந்து போனார். பிரம்மானந்தா
திகைப்புடன் பாண்டியனைக் கேட்டார். “அந்த ஆடியோல பேசியிருக்கறது
யார்?”
“நம்ம துறவிகள் யாரோட குரலும் இல்லை யோகிஜி” என்றார் பாண்டியன்.
பிரம்மானந்தா குழப்பத்தோடு பாண்டியனைப்
பார்த்தார். பாண்டியன் சொன்னார். “யாரோ திட்டமிட்டு
இதைச் செய்யறாங்க யோகிஜி. யார்னு சரியாய் தெரியலை.”
“இன்னும்
எவனும் பணம் கேட்டு வரலையா?” பிரம்மானந்தா கேட்டார்.
பாண்டியன் சொன்னார். “இல்லை. அப்படி
பணம் கேட்கறவனாய் இருந்தால் இது வைரல் ஆகியிருக்காது யோகிஜி. நமக்கு
மட்டும் அனுப்பி “பணம் கொடு, இல்லாட்டி வைரல்
ஆக்கிடுவேன்”னு சொல்லியிருப்பாங்க. இதுல பணம்
உத்தேசம் மாதிரி தெரியலை. இது வைரல் ஆகணும்னே யாரோ திட்டம் போட்டு செஞ்சிருக்காங்க.”
சைத்ரா கோவிட்டில் இறந்த போது, இரண்டு
ஊடகங்கள் சந்தேகப்பட்டு ’நாங்கள் இதைப் பெரிதுபடுத்துவோம். வேண்டாம்
என்றால் பணம் கொடுங்கள்” என்று வந்தார்கள். அவர்கள்
பெரிதுபடுத்தினாலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைமை இருந்த போதும், தேவையில்லாமல்
மீண்டும் அது அதிகம் பேசப்பட வேண்டாம் என்று பாண்டியன் பணம் கொடுத்திருந்தார். சமூக, மத ஊடகங்கள் மகா உத்தமர்கள்
போல் பொது வாழ்வில் நடித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு பணம் சம்பாதிப்பது தவிர வேறு
எந்த நோக்கமும் கிடையாது. உண்மைக்காக உயிரையும் கொடுப்பதாய் சொல்லிக்
கொள்பவர்கள் பலரும் பணத்துக்காக எதையும் தருவார்களே ஒழிய உண்மைக்காக எதுவும் செய்ய
சிரமப்பட மாட்டார்கள். தாங்களும்
அப்படியே என்பதால் பாண்டியனுக்கு அதில் புகார் எதுவும் இல்லை. நேர்மை, உண்மை, நியாயத்துக்காகப் பாடுபடும் பைத்தியக்காரர்கள்
தான் அவருக்கு பிரச்சினையாய் தெரிந்தார்கள். அந்தப் பைத்தியக்காரர்கள்,
அவர்களும் வாழ மாட்டார்கள், அடுத்தவனையும் வாழ
மாட்டார்கள். அப்படி ஒரு பைத்தியம் தான் இப்போது இதையெல்லாம்
செய்து கொண்டிருக்கிறது. அந்தப் பைத்தியத்திற்கு அந்த கொலைத்
தகவல் எப்படி சரியாகத் தெரிந்திருக்கிறது என்பது தான் இப்போதைய பெரிய கேள்வி.
யோசித்த போது இங்கு இருக்கும் கருப்பு ஆடு மறுபடி காயை நகர்த்தி இருக்கிறது
என்பது அவருக்குப் புரிந்தது.

நடிப்பவனை உயர்த்தியும், நடிக்காதவனைச் சாதாரணமாகவும் பார்ப்பது தான் உலகத்தின் இயல்பு.’ - marches current politics senario very well. TVK vs NTK.
ReplyDeleteThe obvious thing is going to happen now. Very difficult for the bad group to escape. Thanks
ReplyDelete"நடிப்பவனை உயர்த்தியும், நடிக்காதவனைச் சாதாரணமாகவும் பார்ப்பது தான் உலகத்தின் இயல்பு" - உண்மை. நன்றி
ReplyDeleteசந்திரமோகன் உடல் கிடைத்தாலும்...
ReplyDelete"அவர் உச்சகட்ட தியானத்தின் போது முக்தி அடைந்து விட்டார்.,அவர் சக்தி வெளியே செல்லாமல் இருக்க,இங்கு புதைத்துள்ளோம்" என பிரம்மானந்தா கதை விடுவாரே?
Now there's no escape for the wrong doers. Story nearing the climax phase. Thanks.
ReplyDelete156 அத்தியாயத்தின் பார்க்க/திறக்க முடியவில்லை.
ReplyDeleteI couldn't rectify the error. Use main blog link https://enganeshan.blogspot.com/ and read.
Deletecan u re upload sir, its possible?
Deleteவணக்கம் ஐயா, தங்களின் இன்றைய யோகி அத்தியாயம் திறக்க முடியவில்லை (18.05.2026)
ReplyDeletehttps://enganeshan.blogspot.com/
DeleteGo to the blog directly and read.
Not able to open or read Yogi 156. Pls do something
ReplyDeletehttps://enganeshan.blogspot.com/
DeleteGo to the blog directly and read.
யோகி 156 மறுபடியும் தற்போது பதித்திருக்கிறேன்.
ReplyDelete