பாண்டியன் பிரம்மானந்தாவின் கார் டிரைவரைத் தனியாக அழைத்து விசாரித்தார். “வர்றப்ப எதாவது பிரச்சினையா?”
”இல்லையே
சார்”
“யோகிஜி
ஏதோ தீவிர யோசனையில் இருக்கற மாதிரி தோணுச்சு. அதனால தான்
கேட்டேன்.”
கார் டிரைவர் சற்று தயங்கி விட்டுச்
சொன்னான். “வர்ற வழியில யாரோ ஒரு வயசானவர் நடந்து போயிட்டிருந்ததைப்
பார்த்து யோகிஜி என் கிட்ட காரை மெள்ள ஓட்டச் சொன்னார். நானும்
மெள்ள ஓட்டினேன். யோகிஜி அந்த வயசானவரையே பார்த்துகிட்டு வந்தார். போகலாம்னு
பிறகு சொன்னார். வந்துட்டோம்.”
பாண்டியன் கேட்டார். “அந்த வயசானவர்
எப்படி இருந்தார்?”
டிரைவர் அவரை விவரித்தான். செருப்பு கூட இல்லாமல் உச்சி வெயிலில் நடந்து சென்று கொண்டிருந்த பெரியவரின் உடைகள் கூட வெளிறிப்போய் இருந்தன என்றான். அதற்கு மேல் வித்தியாசமாக எதையும் அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை.
அந்த முதியவர் பிரம்மானந்தாவுக்கு உறவினராகவோ, முன்பொரு காலத்தில் தனிப்பட்ட
முறையில் பரிச்சயமானவராகவோ இருக்க வேண்டும் என்று பாண்டியன் அனுமானித்தார்.
ஆனால் இது போன்ற ஆட்களை எல்லாம் பிரம்மானந்தா பெரும்பாலும் கண்டு கொள்ளக்கூடியவர்
அல்ல. பழைய உறவு மற்றும் பரிச்சயக்காரர்கள் சாதாரண காரில் எதிரில் வந்தாலே, எந்த உணர்ச்சியும் காட்டாமல், அலட்டிக் கொள்ளாமல் கடந்து
போகக்கூடியவர் அவர். அப்படி இருக்கையில் தெருவில் போகிறவரைப் பார்த்து அதிருப்தியடையக்
காரணமே இல்லை!
கடைசியில் இது இப்போதைக்குத் தீவிரமாய்
யோசிக்கும் அளவுக்கு முக்கியமானதாக இருக்க வழியில்லை என்று பாண்டியனுக்குத் தோன்றியது. அவர் அடுத்து
ஆக வேண்டிய முக்கியமான விஷயங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார்.
ஸ்ரேயாவுக்கு ஷ்ரவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் முரண்பாடுகளின் தொகுப்பாக இருந்தான். முதல்
முதலில் அவனைப் பார்த்த கணம் இப்போதும் அவள் மனதில் பசுமையாக நினைவிருக்கிறது. ஒரு சுகமான தென்றல் முதல்
முறையாக அவளைத் தீண்டியது போன்ற ஒரு இதமான அனுபவம் அது. அவள்
உணர்ந்தது போலவே அவனும் உணர்ந்தான் என்றே அவளுக்கு இப்போதும் தோன்றுகிறது. அழகு, கம்பீரம்,
கண்ணியம், புத்திசாலித்தனம் என எல்லாமே அவனிடத்தில்
இருப்பதாக அவள் நினைத்தாள். மறுநாள் அதிகாலை நடைப்பயிற்சிக்குப்
போன போது அவர்கள் இருவர் மட்டுமே சேர்ந்து நடந்தது கூட மிக இனிமையாக இருந்தது.
ஆனால் அதற்குப் பின் அவனாக அவளிடம் பேச வரவில்லை. மற்றவர்களுடன் பேசினான்.
மற்றவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டான். எல்லோரும்
எனக்கு ஒன்று தான் என்பது போன்ற அணுகுமுறையே அவளுக்கு அப்போதெல்லாம் தெரிந்தது.
தங்கியிருப்பது பக்கத்து அறையில் என்றாலும் வகுப்பு நேரங்களைத் தவிர
மற்ற நேரங்களில் அவனைப் பார்ப்பது மிக அபூர்வமாக இருந்தது. அப்படிப்
பார்க்க நேரும் போது கூட அவன் யாருடனோ பேசிக் கொண்டிருப்பான். அவளைப் பார்த்து நட்பான ஒரு புன்னகை மட்டும் பூத்து, அது விரிவதற்கு முன் அவளைக் கடந்து போவான்.
ஒருவேளை அவள் ஆரம்பத்தில் உணர்ந்த ஒன்று, அவள் மட்டும் உணர்ந்த கற்பனையோ
என்று கூட அவளுக்கு நினைக்கத் தோன்றியது. இல்லாத ஒன்றை அவளுடைய
இளமையும், பெண்மையும் உணர வைத்து விட்டனவோ என்று கூட அவள் சந்தேகப்பட்டாள்.
இனி அவனைச் சந்தித்தால், பொதுவாக அறிந்தவர்களுக்குக்
காட்டும் எதிர்வினையைக் காட்டினால் போதும் என்று முடிவெடுத்து அதைச் செயல்படுத்தவும்
செய்தாள். அதிலும் அவன் பெரிதாகப் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அது அவளுக்கு அவமானமாகவும் இருந்தது. மனம் காயமடைந்தது.
ஆனால் அது ‘நானே என் முட்டாள்தனத்தால் உருவாக்கிக்
கொண்ட காயம்’ என்று தன்னையே அவள் கடுமையாகக் கடிந்து கொண்டாள்.
வகுப்பறையில் சில சமயங்களில் அவன் அந்தத் துறவிகளிடம் கேட்கும் கேள்விகள் தீவிர துறவுமனப்பான்மையினால் கேட்கப்படுபவை என்பது போல் அவளுக்குத் தோன்றும். காதலுக்கும் அவனுக்கும் காத தூரம் என்றே அப்போது சொல்லத் தோன்றும்.
ஆனால் வகுப்பு நடக்கும் போது, பின்னால் அமர்ந்து கொண்டிருக்கும் அவன் சில
சமயங்களில் அவளையே பார்த்துக் கொண்டு இருப்பது போலவும் அவள் உணர்ந்திருக்கிறாள்.
திடீரென்று அவள் திரும்பிப் பார்க்கையில் அனாயாசமாக அவன் பார்வை இடம்
மாறும். அவனுக்கு எதாவது உளவியல் பிரச்சினை இருக்கலாம் என்று
கூட அவளுக்குத் தோன்றியது.
முதல் முதலில் ஒரு பெண் உணரும் ஒரு உன்னத விஷயம் அவள் விஷயத்தில்
கேள்விக்குறியாகவும், கேலிக்கூத்தாகவும் மாறிவிட்டது அவளுக்கு மிக வருத்தமாக இருந்தது. இனி அவனிடம் பட்டும் படாமலும் நடந்து கொண்டு ஒதுங்கி இருப்பது தான்,
மனம் திரும்பத் திரும்ப காயப்படாமல் இருக்க வழி என்று அவள் உறுதியாகத்
தீர்மானித்தாள்.
ஷ்ரவன் அதிகாலை நடைப்பயிற்சிக்காக அறையை விட்டு வெளியே வந்த
போது தான், அன்றும் ஸ்ரேயா அறையை விட்டு வெளியே வந்திருந்தாள். அறையைப்
பூட்டிய அவள் அவனைப் பார்த்து எந்திரத்தனமாகப் புன்னகைத்து விட்டு வேறெந்த சினேகத்தையும்
காட்டாமல் வேகமாகத் தனியாகவே நடந்து போனாள். நேற்று
தேனீர் வேளையில் அவன் எதிரிலேயே நின்று தேனீர் குடித்த போதும், இப்படித்தான்
எந்திரத்தனமாய் புன்னகைத்து வேறொரு இளைஞனிடம் பேச ஆரம்பித்தாள். ஷ்ரவனுக்கு
அவளைக் குறை சொல்ல எதுவுமில்லை. அவன் செய்ததையே அவளும் பதிலுக்குச் செய்கிறாள். அவன் கற்றுக்
கொடுத்ததை அவள் பின்பற்றுகிறாள். ஆனாலும் அவனுக்கு மனம் வலித்தது. அரும்பும்
போதே கருகினாலும் அந்த முதல் காதல், நிரந்தர வடுவாகவாவது
கண்டிப்பாக நினைவில் இருக்கும்...
அவன் ஏன் அப்படி நடந்து கொள்கிறான்
என்பதை அவளுக்குத் தெரிவிக்க வழியில்லை. என்னேரமும் கண்காணிப்பில்
இருக்கும் அவன் அவளைக் காதலிக்க ஆரம்பித்திருக்கிறான் என்ற தகவல் அந்தக் கண்காணிப்பாளர்களுக்குத்
தெரிய வந்து, ஒருவேளை அவன் யாரென்பதும் தெரிந்தால், நாளை அவளுக்கு
எதாவது பெரிய பிரச்சினை வரலாம். எதைச் செய்யவும் தயங்காதவர்கள் அவர்கள்....
அவள் மிக நல்ல பெண். அவன் மனம் வேதனைப்பட்டதை விடப் பல மடங்கு அவள் மனம் வேதனைப்பட்டிருக்கும். அந்த நல்ல
பெண்ணை மன வேதனைக்கு உள்ளாக்கியதில் அவனுக்கு மிக வருத்தமே. ஆனால் அதைக்
கூட அவனால் அவளுக்குத் தெரிவிக்க முடியாது.
அவள் அவனை பைத்தியம் என்றோ, திமிர்
பிடித்தவன் என்றோ முடிவு செய்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று எண்ணியபடியே ஷ்ரவன் நடக்க
ஆரம்பித்தான். அவள் அவர்கள் முன்பு போன வழியில் போகாமல் அதற்கு எதிர் திசையில்
போய்க் கொண்டிருந்தாள். “உன்னுடைய சகவாசமே வேண்டாம்” என்று அவள்
தெரிவிக்கிறாளோ?
ஷ்ரவன் எப்போதும் போகும் திசையிலேயே
நடக்க ஆரம்பித்தான். சிறிது நேரத்தில் யாரோ அவனைப் பின் தொடர்வதை அவன் உணர்ந்தான். அவன் திரும்பிப்
பார்க்கவில்லை. ஒரு வளைவில் திரும்புகையில் பின் தொடரும் நபர், முன்பு
பின்தொடர்ந்த அதே துறவி தான் என்பது தெரிந்தது. அவன் பேசினால்
கேட்கக்கூடிய தொலைவிலேயே அவர் வந்து கொண்டிருந்தார். முன்பாவது
அவன் ஸ்ரேயாவுடன் பேசிக் கொண்டே நடந்து போய்க் கொண்டிருந்தான். அவர்கள்
என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள அத்துறவி பின் தொடர்ந்து வருகிறார்
என்று எடுத்துக் கொள்ளலாம். இப்போது அவனுடனும் யாருமில்லை. நடப்பதும்
யோகாலயத்தின் முன்பகுதியில் தான். ஆனாலும் அந்த மனிதர் ஏன் பின் தொடர்ந்து வருகிறார் என்பது
அவனுக்குப் புரியவில்லை. வேறு சிலரும் அங்கங்கே நடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை
யாரும் பின் தொடரவில்லை.
இந்தக் கேள்விக்கு ஓரிடத்தில் ஷ்ரவனுக்குப்
பதில் கிடைத்தது. ஒரு முதியவர் தனியாகப் போய்க் கொண்டிருந்தாலும் தானாகப் பேசிக்
கொண்டிருப்பது தெரிந்தது. ஆனால் உண்மையில் ப்ளூ டூத் பயன்படுத்தி யாருடனோ அவர் அலைபேசியில்
பேசிக் கொண்டிருந்தார். ஒருவேளை அவனும் அப்படி அலைபேசியில் திடீரென்று பேசக்கூடும், யாரிடமாவது
எதாவது தகவல் தெரிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கிறார்களோ? ஷ்ரவன்
புன்னகைத்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
பிரம்மானந்தா பேச்சுக்கு மயங்கி சைத்ரா போல் ஸ்ரேயாவும் ஆசிரமத்தில் சேர்ந்துக் கொள்ளாமல் ... பார்த்துக்கொள்ளும் பொறுப்பும் ஷர்வனுக்கு உள்ளது...
ReplyDeleteSir, do you have a stall in the upcoming book fair in chennai where we could purchase your books. Thanks.
ReplyDeleteWe are not participating. But our retailers may participate. We'll inform the stall number at the Book Fair time.
DeleteAvailable in Stall No 292 293 (Tamil desam Books)
DeleteShravan நடந்து கொள்வது கரெக்ட். சைதிராவிற்கு நடந்தது நிச்சயம் சிரியாவிற்கு நடக சான்ஸ் உண்டு. ஆனால் ஏதாவது ஒரு வகையில் அதை அவளுக்கு shravan unartha vendum
ReplyDelete