மகத அரசவையின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் எப்போதும் அதிகம்
பேசுபவரும், முடிவுகள் எடுப்பவரும் ராக்ஷசர் தான். அவர்களில் அதிகம் வாயே திறக்காதவர்
ராஜ குரு. அவர் பேசும்படியான விஷயங்கள் பெரும்பாலும் எதுவும் இருக்காது. ஏதாவது யாகங்கள்,
சடங்குகள் நடக்க வேண்டியிருந்தால் மட்டுமே அவர் பேசுவார். மற்றபடி அவர் ஒரு பொம்மை
போல் உட்கார்ந்து செல்லக்கூடியவரே. ஆனால் முதல் முறையாக அவர் ஆலோசனைக்கூட்டத்தின் ஆரம்பத்திலேயே
வாயைக் கனைத்துக் கொண்ட போது தனநந்தன் உட்பட அனைவரும் அவரை வியப்போடு பார்த்தார்கள்.
அவர் சொன்னார்.
“மன்னா, நீ சீக்கிரம் சுகேஷைப் பட்டத்து இளவரசனாக அறிவித்து விட வேண்டும். அவனும் அதற்கான
வயதை எட்டி விட்டான். இதை நீ இனியும் தள்ளிப் போடுவது நல்லதல்ல.”
தனநந்தன் தலையசைத்தான்.
அவன் மூத்த மனைவி அமிதநிதாவும் சில நாட்களாக அவனிடம் இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். மகள்
திருமணத்திற்கு அடுத்தபடியாக அவள் அதிகம் பேசுவது இதைத்தான். ராஜகுருவே அவன் மனைவி
சொல்லித் தான் இந்தப் பேச்சை இன்று எடுத்திருக்கிறார் என்று அறியாத அவன் சொன்னான்.
“நல்லதொரு முகூர்த்த நாளைப் பார்த்துச் சொல்லுங்கள் குருவே. அறிவித்து விழாவை ஏற்பாடு
செய்து விடுவோம்.”
”இரண்டு நாட்களில்
சொல்கிறேன்” என்று ராஜகுரு சொன்னார். இனி நீங்கள் என்ன வேண்டுமோ பேசிக் கொள்ளுங்கள்
என்று சொல்லும் விதமாகத் தன் இருக்கையில் சாய்ந்து கொண்டார்.
ராக்ஷசர் சொன்னார்.
“பட்டத்து இளவரசராக அறிவித்து விட்டால் அவரை நாம் நம் ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கு
பெறச் செய்யலாம். இனி அவரும் ஆட்சி, நிர்வாக விஷயங்களில் ஈடுபடுவது நல்லது.”
வரருசி சொன்னார்.
“கூடவே இளவரசரின் கல்வி ஞானத்தையும் அதிகப்படுத்திக் கொள்வது நல்லது. நியாயமாக நாம்
பெரிய கல்விக்கூடங்களுக்கு அவரை அனுப்பியிருக்க வேண்டும்….”
தனநந்தன் புன்னகைத்தான்.
அவன் மூத்த மகன் சுகேஷும் அவனைப் போலவே கல்வியில் சற்றுப் பின் தங்கியவன் தான். இதைச் சொன்னால் மகன் எப்படி முகம் சுளிப்பான் என்று
எண்ணியவனாய் வேடிக்கையாகச் சொன்னான். “அமைச்சரே. பெரிய கல்விக்கூடங்களில் கல்வியை விட
அதிகமாக தேவையற்றவையே சொல்லித் தரப்படுகின்றன என்பதைத் தான் நாம் பார்க்கிறோமே. நீங்கள்
படித்த பிரசித்தி பெற்ற தட்சசீலக் கல்விக்கூடத்திலேயே மாணவர்கள் கல்வியை விட அதிகமாக
புரட்சியை அல்லவா கற்றிருக்கிறார்கள்.”
தனநந்தன் சாணக்கியர்
பெயரைச் சொல்லாமல் புரட்சியைப் பற்றி மட்டும் சொன்னதை ராக்ஷசர் கவனித்தார். வரருசியோ தான் படித்த கல்விக்கூடத்தை மன்னன் குறைவாகச்
சொன்னதில் வருத்தமடைந்தார். மெல்லச் சொன்னார்.
“நான் படித்த காலத்தில் அப்படி இருக்கவில்லை அரசே”
தனநந்தன் தன் பலத்த
சந்தேகத்தைக் கேட்டான். “பின் நிகழ்காலத்தில் மட்டும் அதை எப்படி அந்தக் கல்விக்கூடம்
அனுமதிக்கிறது. கல்விக்கூடத்திற்கு அனுப்புவது கல்வி கற்கவா, புரட்சி செய்யவா? எல்லோருக்கும்
என்ன கர்மம், என்ன தர்மம் என்றெல்லாம் போதிக்கிற ஆசிரியர்கள் தங்கள் கடமையையும், தர்மத்தையும்
மறந்து விட்டு புரட்சியைக் கற்றுத் தரலாமா? மாணவர்களின் பெற்றோர்கள், கல்விக்கூட நிர்வாக
அறிஞர்கள் எல்லாம் எப்படி இதை அனுமதிக்கிறார்கள்?”
இப்போதும் அவன்
கேட்க வருவது சாணக்கியரின் செயல்களை எப்படி அனுமதிக்கிறார்கள் என்பதைத் தான் என்று
புரிந்து கொண்ட வரருசி விளக்கினார். “பாடப்பிரிவுகளில் அரசியல், ராஜநீதி
போன்றவையும் கற்பிக்கப்படுகிறது அரசே. அதை மாணவர்களைப் படிப்பித்து
நடைமுறைக்கும் மெல்ல மெல்ல விஷ்ணுகுப்தர் ஒருவர் தான் இழுத்து விடுகிறார்
என்று கேள்விப்பட்டேன். மற்ற ஆசிரியர்கள் அதைச் செய்வதில்லை. அப்படிப்
புரட்சியில் ஈடுபடும் மாணவர்களும் தங்கள்
சுய விருப்பத்தால் தான் அதில் ஈடுபடுவதால் கல்விக்கூட நிர்வாகம் அதைப் பெரிதுபடுத்தவில்லை
போல் தெரிகிறது.. ஆனால் இப்போது விஷ்ணுகுப்தர் தட்சசீல
கல்விக்கூடத்தில் ஆசிரியர் பணியில் இல்லை என்று கேள்விப்பட்டேன். புரட்சி
வேலைகளில் ஈடுபட்ட மாணவர்களும் அவரோடு கல்விக்கூடத்திலிருந்து வெளியேறி விட்டார்களாம்.”
தனநந்தன் முகம்
சுளித்தபடி சொன்னான். “இதெல்லாம் தண்டிக்க வேண்டிய குற்றங்கள். இவற்றை அனுமதிப்பது
தவறான முன்னுதாரணமாகப் போய்விடும். ஒரு ஆசிரியருக்கு அவ்வளவு அதிகாரமும், சுதந்திரமும்
தந்திருப்பதே தவறு.”
வரருசி மெல்லச்
சொன்னார். ”ஆச்சாரியர் பொருளாதாரம் அரசியல் மட்டுமல்லாமல் மாந்திரீகம்,
ஏவல் சக்திகள் போன்றவற்றிலும் தேர்ச்சி பெற்றவர் என்று நான் கேள்விப்பட்டேன்.
அவருடைய வெற்றிகளுக்கு அதுவும் காரணம் என்று சிலர் சொல்கிறார்கள்.
அது எந்த அளவு உண்மையென்று தெரியவில்லை. ஆனால் அவர் மீது எந்த
நடவடிக்கையும் கல்விக்கூடத்தில் எடுக்காமல் இருக்க அது காரணமாக இருக்கலாம்.”
சாணக்கின் மகன் விட்டு வைத்திருக்கும் வித்தை எதாவது இருக்கிறதா
என்று எண்ணி தனநந்தன் வயிறெரிந்தான்.
பேச்சு
போகும் போக்கை விரும்பாத ராக்ஷசர் நிர்வாக விஷயங்களைப் பேச ஆரம்பித்தார்.
சுதானு கோபத்துடன் தாரிணியிடம் வந்து சொன்னான். “பட்டத்து இளவரசர் அறிவிப்பு குறித்த பேச்சு அடிபட ஆரம்பித்து விட்டது பார்த்தீர்களா தாயே”
தாரிணி
சொன்னாள். “என் காதிலும் அது விழுந்தது சுதானு.
ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படும் நிலையில் நானில்லை”
சுதானுவின் கோபம் இரட்டிப்பாகியது. “ஏன் தாயே?”
“அன்று மகாவிஷ்ணு கோயிலில் நாம் பார்த்த மகான் என்ன சொன்னார் நினைவிருக்கிறதா?
இத்தனைக்கும் அவர் நமக்கு வேண்டப்பட்டவர் அல்ல. அதைச் சொன்னதற்கு நம்மிடமிருந்து பரிசு எதுவும் கூட அவர் வாங்கவில்லை.
ஞானதிருஷ்டியில் பார்த்துச் சொல்லி விட்டு மாயமாய் மறைவது போல் போய்
விட்டார். மகான்கள் வாக்கு பொய்யாகாது மகனே”
சுதானுவின் கோபம் தணிந்தது. அந்த ஆள் மகான் என்பதில் அவனுக்குச் சந்தேகம்
இல்லை. அவன் தாய் சொல்வது போல் பழுத்த கிழமான அவர் ஆதாயத்திற்காகச்
சொல்லவில்லை. அதை எதிர்பார்த்து ஒரு கணம் நிற்கக்கூட இல்லை.
மகாவிஷ்ணு கோவிலுக்கு ஒன்பது சனிக்கிழமைகள் செல்வது என்று அவர்கள் நினைத்திருந்தது
அந்தப் பூஜாரிக்குக் கூடத் தெரியாது. அப்படியிருக்கையில் ஞானதிருஷ்டி
அல்லாமல் வேறு வழியில் அவர் அறிய
வாய்ப்பேயில்லை. எத்தனை தெளிவாக அவன் வேண்டுதல் நிறைவேறும் என்று சொல்லி இனி எட்டு சனிக்கிழமைகளும்
தொடர்ந்து வழிபடுங்கள் என்றும் சொன்னார். அடுத்ததாக
அவர் சொன்ன இன்னொரு விஷயம் தான் புதிராக இருக்கிறது.
அவர் சொன்னதை அவன் மீண்டும் நினைவுபடுத்திக்
கொண்டான். “வெளியே எதிரிகள் முற்றுகையிட்டிருக்கும் காலத்தில் உள்ளே
உனக்குள்ள தடையை நீ நீக்கி விட்டால் உன் ஆசை நிறைவேறுவது உறுதி. அது வரை
பொறுத்திரு”
அந்த மகான் எதை முற்றுகையிடுவது பற்றிக் குறிப்பிடுகிறார் என்றும் அவனுக்கு விளங்கவில்லை. அவர் சொல்வது அரண்மனையையா,, பாடலிபுத்திரத்தையா, இல்லை வேறு எதையாவதையா என்று தெரியவில்லை. அதை யோசித்து ஒரு நாளெல்லாம் குழம்பிய அவன் மீண்டும் அவரைச் சந்தித்து விளக்கம் கேட்க வேண்டும் என்றெண்ணி தன் காவலர்களை விட்டு அவரைத் தேடச் சொன்னான். யாருக்கும் அவரைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. எந்தக் கோயில்களிலும் அருகில் உள்ள யாத்திரைத் தலங்களிலும் யாரும் அவரைப் பார்த்திருக்கவில்லை என்பது தெரிந்தது. யாரோ ஒருவர் மட்டும் பாடலிபுத்திர பயணியர் விடுதிக்கு அருகே பார்த்ததாகச் சொன்னார்கள். ஆனால் விடுதியில் விசாரித்த போதும் அப்படி யாரும் அங்கே தங்கவில்லை என்று சொன்னார்கள்.
அதை அவன் தாரிணியிடம்
தெரிவித்த போது அவள் “மகான்கள் அற்புதங்களை நடத்த
முடிந்தவர்கள். அவர்கள் பலர் பார்க்க எங்கும் தங்கவோ,
பயணம் செய்யவோ வேண்டியதில்லை மகனே. தேவைப்படும்
போது மட்டுமே அவர்கள் பிறர் கண்களுக்குக் காட்சியளிப்பார்கள். மற்ற நேரங்களில் அருவமாக இருக்க முடிந்தவர்கள் என்று என் தாயார் சொல்லியிருக்கிறார்.
அப்படிப்பட்ட ஒருவரை நாம் நம் கண்களால் காண முடிந்ததே பாக்கியம்.
அவர் வாயால் அருள்வாக்கு ஒன்றைக் கேட்க முடிந்தது அதைவிடப் பெரிய பாக்கியம்”
என்று சொன்னாள்.
அதையெல்லாம் நினைத்துப் பார்க்கையில் சுதானுவின் கோபம் தணிந்தது. அவன் தாயிடம் சொன்னான். “ஆனாலும் அதிக கால தாமதம் செய்யாமல் தந்தையிடம்
பேசுவது நல்லது அம்மா. அவர் சுகேஷை பட்டத்து
இளவரசனாக அறிவித்து விட்டால் பிறகு அதை மாற்றுவதை அவரும் தர்மசங்கடமாக உணர்வார்.”
தாரிணி சொன்னாள்.
“நான் கண்டிப்பாகப் பேசுகிறேன். இது விஷயமாக ஒரு
தீர்மானத்தை எட்டும் வரை நீ அவரிடம் அனாவசிய வாக்குவாதம் செய்யாமல் இரு.”
(தொடரும்)
என்.கணேசன்
சாணக்கியர் மாந்திரீகத்தில் தேர்ச்சிப் பெற்றதாக பலர் சொல்கிறார்கள்... அவற்றை பற்றி ஏதாவது ஒரு பகுதியில் விளக்கம் வந்தால் நன்றாக இருக்கும்...
ReplyDelete