சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, August 19, 2024

யோகி 63

ரசுராமன் சொன்னார். “யோகாலயத்து மண்ணுல வேறயும் ரத்தக்கறைகள் தெரியிது ஷ்ரவன்... கொல்லப்பட்டது சைத்ரா ஒருத்தி மட்டுமில்லைன்னு தெரியிது....”


ஷ்ரவன் அதிர்ந்தான். “வேற யார், ஏன் கொல்லப்பட்டாங்கன்னு எதாவது தகவல் தெரியுதா சுவாமிஜி”


பரசுராமன் ‘இல்லை’ எனத் தலையசைத்து விட்டுச் சொன்னார். ”உனக்கும் அங்கே ஆபத்து அதிகமாய்த் தான் இருக்கும் ஷ்ரவன். நீ ரொம்ப எச்சரிக்கையாய் இருக்கணும்”


ஷ்ரவன் சொன்னான். “கண்டிப்பாய் எச்சரிக்கையாய் இருப்பேன் சுவாமிஜி. எனக்குப் பெரும்பாலும் ஆபத்தான வேலைகள் தான் கிடைக்குது ஆனால் கடவுளோட அருளால இது வரைக்கும் நான் சமாளிச்சிருக்கேன். இனியும் அவர் அருளால என்னால சமாளிக்க முடியும்னு ஒரு தைரியம் இருக்கு சுவாமிஜி..”


பரசுராமனுக்கு அவனுடைய அடக்கமான தைரியம் பிடித்திருந்தது. இளமையிலேயே பெரிய பெரிய வெற்றிகளைப் பெற்ற பலரிடமும் இந்த அடக்கம் இருப்பதில்லை. எல்லாம் தங்களுடைய உழைப்பினாலும், திறமையினாலும் தான் நடக்கின்றன என்று நம்புபவர்களே அதிகம்... ஆனால் மிக ஆபத்தான வேலையில் ஈடுபடப் போகிற அந்த நல்ல இளைஞனுக்கு அவர் ஏதாவது விதத்தில் கூடுதலாக உதவ நினைத்தார். சிறிது நேரம் கண்களை மூடி யோசித்து விட்டு அவர் ஷ்ரவனிடம் சொன்னார். “நான் இன்னைக்கு ஒரு ரகசிய மந்திர உபதேசம் உனக்குச் செய்யறேன். நீ அந்த மந்திரத்தை யாருக்கும் தெரிவிக்கக்கூடாது. அதை 21 நாள் நான் சொல்ற நேரத்துல, சொல்ற எண்ணிக்கைல, நீ ஜெபிச்சுகிட்டே வரணும். அப்பறம் அந்த மந்திரம் உன் வசமாயிடும். யோகாலயத்துல குமரேசனைத் தவிர வேற யாரோடயும் நீ தொடர்பில் இருக்க முடியாதுங்கறதால இது உனக்கு, பல விதங்கள்ல பயன்படும். ஆபத்து சமயத்துல இதை நீ பூரண நம்பிக்கையோட மனசுக்குள்ளே உச்சரிச்சா இது உன்னைக் காப்பாத்தற கவசமாய் இருக்கும். எந்த ஆபத்துல இருந்தும் தப்பிக்கிற ஏதாவது ஒரு வழியை இது  உனக்குக் காட்டும்.”

 

அவன் அவருடைய அன்பிலும் அக்கறையிலும் நெகிழ்ந்து நன்றி சொன்னான்.


அவர் புன்னகையுடன் தொடர்ந்து சொன்னார். “அது மட்டுமில்லை, உனக்கு வேறொரு புது உலகத்தை இது அறிமுகப்படுத்தும்....”


புதிராக அவர் சொல்வது என்ன என்று அவனுக்குப் புரியவில்லை. அவன் அவரைக் கேள்விக்குறியுடன் பார்த்தான். 


அவர் புன்னகை மாறாமல் சொன்னார். “சில மகத்தான விஷயங்களைப் பத்தி முன்கூட்டியே விளக்கறது, வரப் போகிற அனுபவங்களோட மகத்துவத்தைக் குறைச்சுடும். எதையும் அனுபவிக்கறப்ப சொந்தமாய் என்ன  உணர்கிறோம்கிறது ரொம்ப முக்கியம். முன்கூட்டியே கிடைக்கிற விளக்கங்கள், நம் சொந்த அனுபவத்துக்கு சாயம் பூசிடறதுக்கு வாய்ப்பு உண்டு. தானாய் உணர வேண்டியதை, அடுத்தவங்களோட விளக்கப்படி புரிஞ்சுக்கற அபத்தம் நிகழ்ந்துடும்...”


பரசுராமன் சொல்லி விட்டு அவனை யோசிக்க விடாமல் கைகால் அலம்பி வரச் சொன்னார். அவருடைய பூஜையறையில் அவனை ஒரு மரப்பலகையில் அமர வைத்து விநாயகரையும், அவனுடைய குலதெய்வத்தையும், அவனுடைய இஷ்ட தெய்வத்தையும். மனதாரப் பிரார்த்திக்கச் சொன்னார். பின் சரியான முகூர்த்த காலத்தில் அவர் அவன் காதில் மந்திரோபதேசம் செய்தார்.  பின் அங்கேயே அமர்ந்திருந்து 108 முறை அந்த மந்திரத்தை மனதிற்குள் ஆத்மார்த்தமாக ஜபிக்கச் சொன்னார். பின் சந்தியா காலங்கில் அன்று முதல் தொடர்ந்து 21 நாட்கள் அந்த மந்திரத்தை 1008 முறை ஜபிக்கச் சொன்னார். 


அதன் பின் அவர் பூஜை செய்யும் காலம் நெருங்கி விட்டதால் ஷ்ரவன் அங்கு தொடர்ந்து இருக்க முடியவில்லை. அவன் அவர் எப்படி அந்தப் பூஜைகளை செய்கிறார் என்று, கூட இருந்து பார்த்து அந்த முறைகளை அறிந்து கொள்ள ஆசைப்பட்டான் என்றாலும் அவர் அதை அனுமதிக்கவில்லை. அந்தப் பூஜை முறைகள் ரகசியமானவை என்றும், அந்த மார்க்கத்தில் இல்லாதவர்கள் பூஜையின் போது இருக்கக்கூடாது என்றும் சொல்லி விட்டார். அதனால் அவன்  அவரை வணங்கி ஆசிகள் பெற்று கிளம்பினான்.


ஷ்ரவன் கிளம்பியவுடன் பரசுராமன் குளித்து வந்து பூஜையை ஆரம்பித்தார். இன்று இரண்டு மண்டலங்களிலும்  சைத்ராவின் புகைப்படம் இல்லை. சுகுமாரனுக்காகப் போட்ட மண்டலத்தில், மயான காளி சிலைக்கு முன் ஒரு மண்டை ஓடும், பாண்டியனுக்காகப் போட்ட மண்டலத்தில் மயான காளி சிலைக்கு முன் தத்ரூபமான ஒரு ஓநாய் பொம்மையும் வைக்கப்பட்டிருந்தன. பரசுராமனின் மகா உக்ரபூஜை ஆரம்பமானது. 


சுகுமாரனுக்கு இந்த ஆவி சமாச்சாரத்தை, மனைவியுடன் பகிர்ந்து கொள்ளலாமா, வேண்டாமா என்பது குழப்பமாக இருந்தது. சைத்ராவின் ஆவி வந்ததைச் சொன்னால், அப்படி வந்ததன் பின்னணியையும் அவர் மனைவியிடம் தெரிவிக்க வேண்டியிருக்கும். குடும்பத்தினரிடமும் கூட அப்படிச் சில விஷயங்களை வெளிப்படையாகச் சொல்வது  வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கலாம் என்று அவர் மனம் எச்சரித்தது. பாண்டியன் சொல்வது போல வீட்டில் அவருக்கும் டாமிக்கும் மட்டும் தான் ஆவி தெரியுமென்றால், மனைவியிடம் சொல்வது அனாவசியமும் கூட. பாண்டியன் சொன்னது போல், மனைவியிடம் ஏதாவது காரணம் சொல்லி விட்டு, இன்று இரவு டாமியுடன் வெளியே சென்று எங்கேயாவது தங்கி விடுவது தான் நல்லது என்ற முடிவுக்கு அவர் வந்தார். ஒருவேளை அவர் மனைவி, மகள் கண்ணுக்கும் ஆவி தெரிந்தால் பிறகு சொல்லிக் கொள்ளலாம். நாளை பிரம்மானந்தா வந்து அவருடன் கலந்தாலோசித்தால் அவர் கண்டிப்பாய் ஏதாவது ஒரு வழி காட்டுவார். பாண்டியன் சொன்னது போல் இன்று ஒரே ஒரு நாள் தாக்குப்பிடித்தால் போதும்...


ஆனால் டாமியுடன் இன்று இரவு எங்கே போய்த் தங்குவது என்று தான் சுகுமாரனுக்குத் தெரியவில்லை…. லேசாக இருட்ட ஆரம்பித்தது. அவர் மனைவியின் கார் வீட்டுக்குள் நுழையும் சத்தம் கேட்டது.

 

பாண்டியன் ருசித்துச் சாப்பிடுவதற்கு மிகவும் முக்கியத்துவம் தருபவர். அப்படி ருசியான உணவை வயிறாரச் சாப்பிட முடியாதவர்கள் உண்மையில் மிகவும் துர்ப்பாக்கியசாலிகள் என்று நம்புபவர், அப்படிப்பட்டவருக்கு வயிற்றுப் புண் குணமாகும் வரை தினமும் கஞ்சி, பருப்புச் சோறு, தயிர் சோறு, சிறிதும் காரமில்லா ரசம் சோறு மட்டும் சாப்பிட வேண்டும் என்பது பெரிய தண்டனையாகத் தான் தோன்றியது. 


செவென் ஸ்டார்ஸ் மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்துப் பரிசோதித்த டாக்டர் அவரும், சுகுமாரனும் போதையில் எதோ மாற்றிக் குடித்து விட்டிருக்க வேண்டும் என்று சந்தேக பார்வை பார்த்ததை இப்போது நினைத்தாலும் அவருக்கு ஆத்திரமாக இருந்தது. அந்த ஆத்திரத்துக்குக் காரணம் அந்த டாக்டரா, இல்லை அந்த டாக்டர் சந்தேகப்படும் நிலைமைக்குக் கொண்டு வந்த சைத்ராவின் ஆவியா என்பது அவருக்கே விளங்கவில்லை. ஒரே நாளில் இப்படி வயிற்றைப் புண்ணாக்கியது உண்மையில் சைத்ராவின் ஆவியாக இருந்தால் அந்த ஆவியை ஏதாவது வழியில் திரும்பவும் கஷ்டப்படுத்த முடியுமா, அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று அவர் யோசித்துக் கொண்டிருந்தார். ஒருவேளை ஆவியைக் கிளப்பியதில் ஆட்கள் யாராவது பின்னணியில் இருந்தால், அவர்களையும் பழிவாங்க வேண்டும் என்று அவர் மனம் கறுவியது.


நேற்று இரவு வரை ஆவி இருப்பதையே நம்பாமல் இருந்த அவர் இன்று ஆவியைப் பழிவாங்க எண்ணுமளவு மாறியிருப்பது எத்தனை பெரிய மாற்றம்! நாத்திகவாதியான சுகுமாரனோ இன்னும் ஒருபடி மேலே போய் மண்டை ஓடுகளை மாலையாகப் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு தெய்வப் படத்தைத் தனதறையில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு மாறிவிட்டார். அந்தப் புகைப்படமே சற்று பீதியைக் கிளப்பும்படி தான் இருக்கிறது. பயம் அதிகமானால், பகுத்தறிவு மலையேறி விடுகிறது!


பிரம்மானந்தா வந்தவுடன் இதுகுறித்து அவருடன் கலந்தாலோசித்து வேகமாக ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று எண்ணியபடி பாண்டியன் கடிகாரத்தைப் பார்த்தார். மணி 7.25.


அப்போது அவருடைய பணியாள் பயபக்தியுடன் அவர் அறை வாசலில் நின்றான். “ராத்திரி டின்னருக்கு என்ன செஞ்சு அனுப்பட்டும்னு சமையல்காரர் கேட்டார்.” 


“தயிர்சாதம் போதும்.”


சரி என்று சொல்லி விட்டு அவன் போய் விட்டான். அவர் வயிற்றில் எரிச்சலை மெல்ல உணர்ந்தார். இன்று மருந்து சாப்பிட்டு இருக்கிறார். காலையிலிருந்து காரம், புளி தவிர்த்திருக்கிறார். அதனால் இந்த எரிச்சல் வரக் காரணமில்லை…. தீடீரென்று காதில் ஒரு ரீங்காரமும் கேட்க ஆரம்பிக்க பாண்டியன் திகைத்தார். அவர் சுகுமாரன் வீட்டில் இல்லை. யோகாலயத்தில் தான் இருக்கிறார். பத்து மணியுமாகவில்லை. அப்படி இருக்கையில் யோகாலயத்தில் இவ்வளவு சீக்கிரமாகவே ஏன்…? நல்ல வேளை இங்கே மிக அருகில் தோட்டம் எதுவுமில்லை. இருந்திருந்தால் அந்த ஆவி சனியன் இங்கிருக்கும் தோட்டத்திலும் தெரிந்திருக்குமோ என்னவோ?...


இந்தச் சிந்தனையோட்டத்துடன் அவர் ஜன்னலுக்கு வெளியே பார்த்தார். அவர் இருப்பிட வாசலுக்கு முன் ஒரு ஓநாய் அவரையே பார்த்தபடி நின்றிருந்தது. அந்த ஓநாயின் கண்களில் அமானுஷ்யமாய் தீயின் ஜொலிப்பு தெரிந்தது. பாண்டியனுக்கு ஒருகணம் சப்தநாடியும் ஒடுங்கியது.  


(தொடரும்)
என்.கணேசன்




3 comments:

  1. Very thrilling moment...

    ReplyDelete
  2. பாண்டியனுக்கே இந்த நிலைமைனா? சுகுமாரன் நிலை என்னவாகுமோ??
    இந்த இரவு எப்படி தாண்டுவாரோ???

    ReplyDelete
  3. பயம் அதிகமாகிவிட்டால் பகுத்தறிவு மலையேறிவிடுகிறது
    என்கிற வரிகள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் வரிகளாகும்.

    ReplyDelete