க்ளைக்டஸ் பாடலிபுத்திரத்திலிருந்து உடனடியாகக் கிளம்பி விட்டிருந்தான். ஆம்பி குமாரன் அந்த அளவு வெளிப்படையாகத் தன் நிலையை அறிவித்த பிறகும் அங்கு தங்கியிருப்பதற்கு அவனது தன்மானம் இடம் தரவில்லை. அவன் உடனடியாகக் கிளம்ப இன்னொரு காரணம் ஆம்பி குமாரனுக்கு ஒரு பாடம் சீக்கிரமே புகட்ட வேண்டும் என்பது தான். செல்யூகஸிடம் ஆம்பி குமாரனின் அகங்கார நிலையைத் தெரியப்படுத்தி, யவனர் வலிமையை உடனடியாக நிரூபிக்க உடனடியாக ஆவன வேண்டும் என்று க்ளைக்டஸ் ஆசைப்பட்டான். சென்ற முறை பாபிலோன் சென்ற போது எங்கேயும் அதிகம் தங்காமல் சென்றது போல் இந்த முறையும் அவன் செல்ல விரும்பினாலும் வழியில் பாக்ட்ரியாவில் சசிகுப்தனைச் சந்தித்து அவன் நிலை என்ன என்று தெரிந்து கொண்டு போவது நல்லதென்று தோன்றியது. அதையும் சேர்த்து செல்யூகஸிடம் சொல்லலாம்.
சசிகுப்தன் க்ளைக்டஸை
இன்முகமாக வரவேற்று உபசரித்தான். ஆம்பி குமாரனின் அலட்சியம் ஏற்படுத்திய புண்ணுக்கு
சசிகுப்தனின் உபசரிப்பு மருந்து தடவியது போல் க்ளைக்டஸ் உணர்ந்தான்.
“என்ன க்ளைக்டஸ்
மாசிடோனியாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறாயா? எதாவது விசேஷத் தகவல் இருக்கிறதா? ஆம்பி
குமாரன் எப்படியிருக்கிறான்?”
க்ளைக்டஸ் இப்போது
இப்பகுதிகள் அனைத்தும் செல்யூகஸின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டன என்ற தகவலைச்
சுருக்கமாகச் சொல்லி ஆம்பி குமாரன் எப்படியெல்லாம்
மாறி விட்டான் என்பதை விரிவாகத் தெரிவித்தான். சசிகுப்தன் ஒருசில தகவல்களை முன்பே பெற்றிருந்தான்
என்றாலும் முழுவதுமாக நிலவரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டி அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்
கொண்டான்.
அது சசிகுப்தன்
தங்கள் பக்கம் தான் இருக்கிறான் என்ற அபிப்பிராயத்தை க்ளைக்டஸிடம் ஏற்படுத்தியது. யூடெமஸ்
ஏதோ சதி செய்யத் திட்டமிட்டு இருக்கிறான் என்ற செய்தியை புருஷோத்தமனிடம் முன்கூட்டியே
அறிவித்து எச்சரித்தவன் சசிகுப்தன் என்பதை க்ளைக்டஸ் அறிந்திருக்கவில்லை.
சசிகுப்தன் அவனிடம்
ரகசியமாகக் கேட்டான். “யூடெமஸுடன் நீயும் அல்லவா இருந்தாய்? அவன் புருஷோத்தமனைக் கொன்றது
உண்மை தானா?”
க்ளைக்டஸ் இந்த
தர்மசங்கடமான கேள்வியை எதிர்பார்க்கவில்லை. “என் கவனத்துக்கு வருகிற மாதிரி யூடெமஸ்
எதுவும் செய்யவில்லை. எனக்குத் தெரியாமல் எதாவது செய்திருக்கலாம். அது எனக்குத் தெரியாது”
என்று சொல்லி சமாளித்தான்.
புத்திசாலியான சசிகுப்தன்
உண்மையைத் தெளிவாக யூகித்தாலும் ஒன்றும் தெரியாதவன் போலவே காட்டிக் கொண்டு அடுத்த கேள்வியைக்
கேட்டான். “ஆம்பி குமாரன் உன்னிடம் பேசியதைப் பார்த்தால் அவசியப்பட்டால் சந்திரகுப்தன்
உதவியைக் கூடப் பெற்றுக் கொள்ள அவன் தயாராக இருப்பது போல் அல்லவா தெரிகிறது?”
“ஆமாம். அதைத் தான்
என்னால் தாங்க முடியவில்லை. சசிகுப்தரே நான் வெளிப்படையாகக் கேட்பதற்கு என்னை நீங்கள்
மன்னிக்க வேண்டும். உங்கள் நிலை என்ன?”
சசிகுப்தன் அவன்
சொல்லப் போகும் பதில் க்ளைக்டஸ் மூலம் செல்யூகஸை
எட்டும் என்பதைப் புரிந்து கொண்டதால் ”என் நிலை பழைய நிலை தான் க்ளைக்டஸ். அலெக்ஸாண்டர்
என்னிடம் நடந்து கொண்டபடியே பின் வருபவர்களும் நடந்து கொள்ளும் வரை நான் உங்கள் பக்கம்
தான்” என்று தெரிவித்தான். இல்லாவிட்டாலும் யவனர்களுக்கு எதிராக வேறொருவர் உதவியை எதிர்பார்க்க
முடிந்த மேலான நிலையில் அவன் இல்லை. இந்த மலைப்பகுதியில் உதவிக்கு வர அவனுக்கு யாரும்
அருகில் இல்லை.
சசிகுப்தன் சூசகமாக
ஒரு நிபந்தனையை உள்ளே புகுத்திச் சொன்னாலும் “நான் உங்கள் பக்கம் தான்” என்று அவன்
சொன்ன கடைசி வார்த்தைகளில் க்ளைக்டஸ் திருப்தி அடைந்தான். அவன் சசிகுப்தனிடம் சொன்னான்.
“நான் ஆம்பி குமாரனைப் பற்றிச் சொல்வதைக் கேட்டு தளபதி செல்யூகஸ் எந்த அளவு கோபமடைகிறார்
என்று தெரியவில்லை. பாபிலோனில் அவர் வேலைகள் ஓரளவு முடிந்து விட்டால் உடனடியாகக் கிளம்பி
விடுவார் என்று நான் நினைக்கிறேன்.”
பாக்ட்ரியாவில்
ஒரு இரவைக் கழித்து விட்டு மறுநாள் காலையிலேயே க்ளைக்டஸ் கிளம்பி விட்டான். சில நாட்களில்
அவன் பாபிலோனை அடைந்தான். ஆனால் அங்கு சென்று சேர்ந்தவுடனேயே செல்யூகஸை அவன் சந்திக்க
முடியவில்லை. அந்தச் சந்திப்புக்காக அவன் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி வந்தது. யாரோ
சிலருடன் செல்யூகஸ் தீவிர ஆலோசனையில் இருப்பதாக செல்யூகஸின் காவலன் சொன்னான். மிக முக்கியமான
தகவலை காந்தாரத்திலிருந்து கொண்டு வந்திருப்பதாய் க்ளைக்டஸ் சொன்னதை அந்தக் காவலன்
ஒரு பொருட்டாய் நினைத்ததாய் க்ளைக்டஸுக்குத் தோன்றவில்லை. அதனாலேயே உள்ளே போய் அவன்
செல்யூகஸிடம் சொல்லி இருக்கவும் வாய்ப்பில்லை. அங்கு வந்த ஓரிருவர் அவனுக்குத் தெரிந்தவர்களாய்
இருந்தார்கள். அவர்களிடம் பேசிச் சிறிது பொழுதை க்ளைக்டஸ் கழித்தான்.
நீண்ட நேரம் கழித்து
உள்ளேயிருந்தவர்கள் சென்ற பின் தான் க்ளைக்டஸ் செல்யூகஸைச் சந்திக்க முடிந்தது. உள்ளே
சென்ற போது செல்யூகஸ் வேறு ஏதோ யோசனையில் இருப்பது தெரிந்தது. பின் அதிலிருந்து விடுபட்டு
செல்யூகஸ் வியப்புடன் கேட்டான். “ஏன் இவ்வளவு சீக்கிரமே மீண்டும் வந்திருக்கிறாய்?
ஏதாவது முக்கியத் தகவலா?”
க்ளைக்டஸ் குமுறலுடன்
அனைத்தையும் சொன்னான். ஆம்பி குமாரனின் அகங்கார வார்த்தைகள் செல்யூகஸையும் முகம் கருக்கச்
செய்தாலும் செல்யூகஸ் க்ளைக்டஸ் எதிர்பார்த்தது போல உடனடியாகப் பொங்கி எழவில்லை. படைகளைக்
கூட்டிக் கொண்டு கிளம்ப முற்படவில்லை.
செல்யூகஸ் களைப்புடன்
சொன்னான். “க்ளைக்டஸ். ஆம்பி குமாரனை அடக்கி அவன் நிலையை அவனுக்கு உணர்த்துவது நமக்குப்
பெரிய விஷயம் அல்ல. ஆனால் நான் உடனடியாக இங்கிருந்து கிளம்ப முடியாத நிலையில் இருக்கிறேன்.
சில நாட்களில் இங்கு முடியும் என்று நான் நினைத்திருந்த வேலைகள் அப்படி முடிவதாகத்
தோன்றவில்லை. மாசிடோனியாவில் சிலர் செய்யும்
சதியின் காரணமாக பாபிலோன் என் கையை விட்டு நழுவி விடும் போலத் தெரிகிறது. இந்த நிலைமையில்
நான் இங்கிருந்து இப்போது கிளம்பினால் எதிரிகளுக்கு பாபிலோனை நானாகவே விட்டுக் கொடுத்தது
போல் ஆகி விடும். நான் திரும்பி வருவதற்குள் பாபிலோனில் தங்கள் நிலைமையை எதிரிகள் ஸ்திரப்படுத்திக்
கொண்டு விடும் சிக்கல் இருக்கிறது.”
க்ளைக்டஸ் கவலையுடன்
கேட்டான். “இங்கு நிலைமை சீராக எத்தனை காலம் ஆகும்?”
செல்யூகஸ் சொன்னான்.
“தெரியவில்லை. எதிரிகள் என்ன செய்வார்கள், எப்போது இயங்குவார்கள் என்பதைப் பொருத்தது
அது. அதற்காக நான் கவனமாக நான் காத்திருக்க வேண்டியிருக்கிறது...”
காத்திருப்பது எல்லோருக்கும்
எளிதான செயல் அல்ல. அதிலும் அவசரப்படும் மனநிலை உள்ளவர்களுக்குக் காத்திருப்பது ஒரு
சித்திரவதையே. செல்யூகஸ் தன் எதிரிகளைச் சமாளிக்கக் காத்திருக்கையில், க்ளைக்டஸ் ஒவ்வொரு
நாளும் நரக வேதனையை உணர்ந்தான். ஆம்பி குமாரனுக்குப் பாடம் புகட்ட காலம் அதிகமாகிக் கொண்டே போவதை அவனால் சகிக்க முடியவில்லை.
மேலும் அவன் காந்தாரத்தில் யவன அதிகாரியாக அதிகாரத்துடன் வளைய வந்தது போல் இங்கு அவனால்
எதுவும் செய்ய முடியவில்லை. அதிகாரப் பதவிகளை இங்கு ஏற்கெனவே மற்ற யவனர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள்.
அதனால் மீதமுள்ள கும்பலில் ஒருவனாக அவன் வாழ
வேண்டி வந்தது அவனுக்குக் கௌரவக் குறைவாகத் தோன்றியது.
சில
சமயங்களில் அவசரப்பட்டு அவனாக ஆம்பி குமாரனிடம் கடுமையாகப் பேசியிருக்க வேண்டாம் என்று
அவனுக்குத் தோன்றியது. செல்யூகஸாக அங்கு வந்து சேரும் வரை அவன் அங்கேயே கௌரவமாக எதையும்
கண்டும் காணாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. ஆம்பி குமாரனாக அவனைத் துரத்தவில்லையே. க்ளைக்டஸ்
பெருமூச்சு விட்டான்.
காலம்
ஒவ்வொரு நாளாக மெள்ள நகர்ந்து பின் மாதங்களாகவும் நகர ஆரம்பித்த போது க்ளைக்டஸ் விரக்தியின்
எல்லைக்கே போய் விட்டான்.
அதே
சமயத்தில் சந்திரகுப்தனும் சாணக்கியரும் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். தனநந்தனின்
செல்வத்தின் உதவியால் அவர்களது திட்டத்தின் அடுத்த பகுதிக்கான செயல்கள் வெற்றிகரமாக
நடக்க ஆரம்பித்தன.
(தொடரும்)
என்.கணேசன்
எதுவும் நிரந்தரமாக இருந்து விடுவதில்லை... எல்லாம் மாற்றத்திற்கு உட்பட்டது... என்பதற்கு "யவன அதிகாரம், சாணக்கியர் எழுச்சி, ஆம்பிக்குமாரின் மாற்றம்... "இவையெல்லாம் சிறந்த உதாரணம்....
ReplyDelete