ஜனார்தன் த்ரிவேதி தன் மருமகனையும், மதன்லாலையும்
தனித்தனியாக சந்தித்துப் பேசுவதே நல்லதென்று நினைத்தார். அவருக்கும்
மதன்லாலுக்கும் மட்டும் தெரிந்த சில விஷயங்கள் இருந்தன. அவர் அதை
சஞ்சயிடம் சொன்னதில்லை. அதே போல அவரும் சஞ்சயும் மட்டுமே அறிந்த விஷயங்கள் சில இருந்தன. அவை மதன்லால்
அறிய வாய்ப்பில்லை. பழுத்த அரசியல்வாதியான அவருக்கு அனைத்தும் அனைவருக்கும் தெரிவது
ஆபத்தான விஷயம் என்பது அனுபவத்தில் உணர்ந்த பேருண்மையாக இருந்தது. அஜீம் அகமதும் அவரிடம் போனில் பேசிய போது அவர்கள் இருவரையும்
தனித்தனியாக சந்தித்து நடந்த விஷயங்களைத் தெரிந்து கொள்வது நல்லதென்று சொன்னான். இரண்டு
பேரும் தனித்தனியாக என்ன சொல்கிறார்கள் என்பதை குறித்து வைத்துக் கொண்டு பின் இரண்டையும்
சேர்த்துப் பார்த்து உண்மையை உள்ளபடி அறிவது சரியாக இருக்கும் என்று அவன் சொன்னான். இருவர்
சொல்வதிலும் ஏதாவது வித்தியாசங்கள் இருந்தால் அதைப் பின்னர் தெளிவுபடுத்திக் கொள்வது
சரியாக இருக்கும் என்பது அவனுடைய அபிப்பிராயமாக இருந்தது.
அதனால் ஆஸ்பத்திரிக்குச் சென்ற அவர்
முதலில் தன் மருமகனைச் சந்தித்தார். சஞ்சய் ஷர்மா அவரைப்
பார்த்ததும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதான். “மாமா உங்கள்
மருமகனுக்கு ஏற்பட்ட கொடுமையைப் பார்த்தீங்களா? நான் உயிரோடு
உங்களைப் பார்ப்பேன்கிற நம்பிக்கையைக் கூட இழந்து விட்டிருந்தேன் மாமா….”
ஜனார்தன் த்ரிவேதி மெலிந்து மிக பலவீனமான
நிலையில் இருக்கும் அவர் மருமகன் அழுததும் கண்கலங்கினார். அவன் கையைப்
பிடித்துக் கொண்டு அவனுக்குத் தைரியம் சொன்னார். “அழாதே. உங்களைத்
தான் நாங்க மீட்டு விட்டோமே. இனி உங்களை எவனும் எதுவும் பண்ண முடியாது. உன்னைக்
கடத்தினது யார்? நரேந்திரன் தானே?”
சஞ்சய் ஷர்மா கோபம் கொந்தளித்தபடிச்
சொன்னான். “ஆமா
மாமா. அந்த நாய்
தான் என்னையும் மதன்லாலையும் கடத்தினான். இரும்புச் சங்கிலியால
எங்களைக் கட்டிப் போட்டுருந்தான் மாமா”
ஜனார்தன் த்ரிவேதிக்கும் கோபம் அதிகரித்தது. “ஆரம்பத்துல
இருந்து சொல். உன்னை அவன் எப்படி கடத்தினான்?”
“அவன் தினமும்
மூனு வேளையும் ஒவ்வொரு சப்பாத்தி தான் மாமா சாப்பிடக் கொடுத்தான். அதுவும்
வறண்ட சப்பாத்தி மாமா. அந்தச் சப்பாத்திய என் வீட்டு நாய் கூடச் சாப்பிடாது மாமா. ஆனா பசிக்கொடுமைல
நான் சாப்டிருக்கேன் மாமா. அவன கண்டிப்பா நீங்க சும்மா விடக்கூடாது மாமா.”
“கண்டிப்பா
அவன சும்மா விடப்போறதில்லை சஞ்சய் கவலைப்படாதே. அவன் உன்னை
எப்படி கடத்தினான்னு சொல்”
”என்னை அவன்
கடத்தலை மாமா. ஒரு ட்ரக் டிரைவரும் வேற ஆள்களும் சேர்ந்து தான் கடத்தினாங்க. அவனுகள
கண்டுபிடிக்கணும் மாமா”
ஜனார்தன் த்ரிவேதி மருமகனைக் கூர்ந்து
பார்த்தபடி கேட்டார். “நீ இப்ப தானே உன்னைக் கடத்தினது நரேந்திரன்னு சொன்னாய்?”
“ஆமா மாமா
அவங்கப்பாவ யார் கொன்னாங்க எப்படிக் கொன்னாங்கன்னு அவனுக்குத் தெரியணுமாம். சொன்னா
தான் சப்பாத்தி தருவானாம். மேல ஐஸ் தண்ணிய ஊத்த மாட்டானாம். எப்படியிருக்கு
அவன் மிரட்டல்? அவனையும் கடத்தி அப்படியே செய்யணும் மாமா. அவனுக்கு
நாம அந்தச் சப்பாத்தியக்கூடத் தரக்கூடாது மாமா. ஐஸ் தண்ணிய
ஊத்தறேன்னு பயப்படுத்தக்கூடாது. ஒன்னுமே பேசாம அவன் மேல ஊத்திடணும். ஜன்னி வந்து
சாகட்டும் அந்த நாய். அப்பா எப்படிச் செத்தாங்கன்னு தெரியணுமாம். இவனும்
செத்துப் போய் நேரடியாவே அவங்கப்பா கிட்ட கேட்டுக்கட்டும்.”
ஜனார்தன் த்ரிவேதி லேசான எரிச்சலுடன்
சொன்னார். “அதெல்லாம் கண்டிப்பா செய்வோம். முதல்ல
உன்னை அவன் எப்படி கடத்தினான்னு விவரமா சொல்லு”
”அவன் முதல்ல
என்னை கடத்தலையே. இப்ப தானே கடத்தினான்.”
ஜனார்தன் த்ரிவேதி பொறுமை இழந்தார். “முட்டாளே
இப்ப தான் அவன் உன்னை எப்படிக் கடத்தினான்னு கேட்டேன்”
“இப்ப தான்
நான் உங்க பாதுகாப்புல இருக்கேனே மாமா. அந்த நாய் என்னை
எப்படி கடத்த முடியும்?”
ஜனார்தன் த்ரிவேதி மருமகன் பழைய உடல்நலத்தில்
இருந்திருந்தால் ஓங்கி அறைந்திருப்பார். அவனைக் கூர்ந்து
பார்த்தார். இவனுக்குப் புத்தி பேதலித்து விட்டதோ?
பழைய கேள்விக்குப் பிறகு வரலாம், இப்போதைக்கு
அவனுக்கு நினைவு வரும் வேறு விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தவராக
அவர் கேட்டார். “உன்னை பாம்பு கடிச்சது எப்படி? பாம்பை
யார் கொண்டு வந்து கடிக்க விட்டாங்க?”
“அந்தத்
தடியனா தான் இருக்கணும். வேற யாரும் அங்கே வர்றதே இல்லையே. ஆனா அவன்
பாம்ப விட்டுட்டு ஒரே ஓட்டமா ஓடிப் போயிட்டான் போல.. அவனையும்
சும்மா விடக்கூடாது மாமா. அவனை வித விதமா சித்திரவதை பண்ணணும்”
“தடியனா? எந்த தடியன்?”
“அதான் சப்பாத்தி
கொண்டு வர்ற தடியன். அவனுக்கு சத்தம் போடக்கூடாதாம். கத்தினா
அடிப்பானாம். அவன் யாரு அப்படிச் சொல்ல?”
ஜனார்தன் த்ரிவேதி கஷ்டப்பட்டு பொறுமை
காத்தார். “நரேந்திரன் உன்னை அந்த ஃபேக்டரிக்குள்ளே வந்து பார்த்தானா?”
“எந்த ஃபேக்டரி?”
ஜனார்தன் த்ரிவேதி பல்லைக் கடித்துக்
கொண்டு கேட்டார். “நீ நரேந்திரன் கிட்ட என்னவெல்லாம் சொல்லியிருக்கே?”
“அவன் கேட்டதுக்கெல்லாம்
பதில் சொல்லியிருக்கேன் அவ்வளவு தான்.”
“சரி நான்
நாளைக்கு வர்றேன். நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ. நாளைக்குப்
பேசலாம்” என்று சொன்ன ஜனார்தன் த்ரிவேதி எழுந்து விட்டார். இனி சிறிது
நேரம் அங்கேயிருந்தால் அவருக்குப் பைத்தியம் பிடித்து விடுவது உறுதி.
அவருக்கு மருமகன் நடவடிக்கையில் நிறைய
வித்தியாசம் தெரிந்தது. அவருடைய மருமகன் கோழையே ஒழிய முட்டாள் அல்ல. ஐபிஎஸ் தேர்வில் நல்ல மதிப்பெண்
வாங்கி வென்றவன். ராவில் அதிகாரியாக சேர்க்கத் தான் அவர் அவனுக்கு உதவியிருக்கிறாரேயொழிய அவன்
ஐபிஎஸ் தேர்வில் வென்றதில் எல்லாம் அவருடைய பங்கு எதுவும் இல்லை. அப்படிப்பட்டவன் இப்போது என்னென்னவோ பேசுகிறான்….
மதன்லாலாவது தெளிவாக எல்லாவற்றையும்
சொல்வான் என்ற எதிர்பார்ப்போடு ஜனார்தன் த்ரிவேதி அவன் இருக்கும் அறைக்குப் போனார். மதன்லால் சஞ்சய் அளவுக்குப் பலவீனமாக இல்லா விட்டாலும் அவனும்
தளர்ந்து தான் காணப்பட்டான்.
“வணக்கம்
தலைவரே” என்று கைகூப்பி மதன்லால் அவரை வரவேற்றான்.
அவன் சஞ்சய் போல தெளிவில்லாமல் பேசவில்லை. அவன் கடும்
கோபத்தோடு சொன்னான். “அவனை நாம சும்மா விடக்கூடாது தலைவரே”
ஜனார்தன் த்ரிவேதி சொன்னார். “அவனை நான்
சும்மா விடப் போவதில்லை. மதன்லால். முதல்ல என்ன நடந்ததுன்னு
சொல்லு”
“அதை என்
வாயால சொல்லவும் கூசுது தலைவரே. இரும்புச் சங்கிலியில கட்டி வெச்சு அந்த தடியன் என்னை எட்டி
உதைச்சான் தலைவரே.”
“யார் நரேந்திரனா?”
”இல்லை தலைவரே. அவனோட ஆளொருத்தன்.”
சஞ்சயும் அந்தத்
தடியனைத் தான் சொல்லியிருக்க வேண்டும் என்று நினைத்தபடி ஜனார்தன் த்ரிவேதி கேட்டார்.
“நரேந்திரன் உன்னை எப்படிக் கடத்தினான். முதல்ல
அதைச் சொல்லு.”
“அஜீம் அகமது
அனுப்பற மாதிரி எனக்கு ஒரு கடிதம் வந்துச்சு. அதை
நம்பி தான் நான் அந்த ஓட்டலுக்குப் போனேன்.
அங்கே மயக்க மருந்து வெச்சிகிட்டு எவனோ காத்திருந்திருக்கான்.
அதை நான் எதிர்பார்க்கல. அதனால தான் ஏமாந்து போயிட்டேன் தலைவரே.
எல்லாருக்கும் சிம்ம சொப்பனமாயிருந்த இந்த மதன்லாலையே ஒருத்தன் இப்படி
தைரியமா மயக்க மருந்து கொடுத்து கடத்த முயற்சி செய்வான்னு யார் நினைச்சு பார்த்திருக்க
முடியும்…”
அவன் தெளிவாகச் சொன்ன விதம் ஜனார்தன்
த்ரிவேதியின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. சஞ்சய் போல இவனுக்கு
மூளை பாதிக்கப்பட்டு விடவில்லை. சஞ்சயும் இவனும் ஒரே இடத்தில் அடைக்கப்பட்டு இருந்ததால்
அவன் தான் பிடிபட்ட கதையை இவனிடம் கண்டிப்பாகச் சொல்லியிருப்பான். அதனால் அவனிடம் கேட்க
வேண்டியதை இவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணியவராக அவர் மெல்லக் கேட்டார்.
“சஞ்சயை அவன் எப்படிக் கடத்தினானாம்?”
(தொடரும்)
என்.கணேசன்
இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -
(அல்லது)
என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம்.
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.
Didn't expect this. Hilarious episode. Super sir.
ReplyDeleteஆரம்பத்துல சஞ்சய் தெளிவா பேசுறத பார்த்து குழம்பிட்டேன்... போக போக தான் தெரியுது... அவனுக்கு தெரிஞ்ச உண்மையை அவனால் சரியா சொல்ல முடியவில்லை....
ReplyDeleteஆனால், மதன் லால் தெளிவா இருக்கான்...இவனுக்கு என்ன பிரச்சனைனு தெரியவில்லை...
இந்த திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை...
96 episode poidichi, but innamum story oda suspense konjam kooda break aagaama poitu iruku,,
ReplyDelete