சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, August 4, 2022

சாணக்கியன் 16

ட்சசீல நகரில் பெரியதொரு போர்வையால் தலையையும், உடலையும் மறைத்துக் கொண்டு நள்ளிரவில் நடந்து சென்று கொண்டிருந்த மனிதன் அவ்வப்போது தன்னை யாராவது பின் தொடர்கிறார்களா அல்லது பார்க்கிறார்களா என்பதையும் பார்த்துக் கொண்டான். யாரும் அவனைப் பின் தொடரவில்லை. மாளிகை போல் தோற்றம் அளித்த ஒரு வீட்டினை அவன் நெருங்கிய பின்னும் இருபக்கமும் பார்த்துக் கொண்டான். யாரும் தெரியவில்லை.  நிம்மதி அடைந்தவனாக அந்த வீட்டின் கதவைத் தட்டிய அவன் கதவு திறக்கப்பட பொறுமை இழந்து காத்து நின்றான். கதவு திறக்கப்பட்டவுடன் வேகமாகக் கதவை மூடித் தாளிட்டான்.

 

கதவைத் திறந்து விட்ட அழகு மங்கை கோபத்துடன் முகத்தைத் திருப்பிக் கொண்டதைப் பார்த்தவன் தன் இரண்டு கைகளாலும் அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பிக் கொண்டு கேட்டான். “என் இதய ராணிக்கு ஏன் இன்று என் மேல் கோபம்?”

 

அப்போதும் அவனைப் பார்க்க விரும்பாதவள் போல் கண்களை மூடிக்கொண்ட அந்த மங்கைபேச்சில் இருக்கும் கரிசனமும், அன்பும் நடத்தையில் இல்லையே சேனாதிபதிஎன்றாள்.

 

ஏன் அப்படி கடூரமான வார்த்தைகளைச் சொல்கிறாய் மைனிகா?” என்று சேனாதிபதி சின்ஹரன் கேட்டதற்கு மைனிகாநேரம் என்ன ஆகிறது சேனாதிபதி?”

 

நடுநிசியாகி விட்டது என்பது உண்மை தான் மைனிகா. ஆனால் தாமதத்திற்கான காரணம் என் அலட்சியம் அல்ல. அரசர் என்னையும் அமைச்சரையும் நகர விடாமல் பேசிக் கொண்டே இருந்தார். அரசர் பேசிக் கொண்டிருக்கையில் எழுந்து வர முடியுமா?””

 

மைனிகா இது உண்மை தானா என்பது போல் அவனைச் சந்தேகப்பார்வை பார்த்தாள். ”இது என்ன போர்க்காலமா? உங்களை நடுநிசி வரையில் அமர வைத்து அரசர் ஆலோசனை நடத்திக் கொண்டிருப்பதற்கு?”

 

போர்க்காலம் அல்ல தான். ஆனால் ஆம்பி குமாரன் போரை வரவழைத்து விடுவான் என்று அரசர் பயப்படுகிறார்.”

 

மைனிகா சின்ஹரனை சந்தேகம் தீராமல் இப்போதும் பார்த்துக் கொண்டு நிற்க  சின்ஹரன் அவளைக் கட்டியணைத்துக் கொண்டு சொன்னான். ”இன்னும் என் ராணிக்கு சந்தேகம் தீரவில்லை என்றால் நான் என்ன செய்ய முடியும். முழுவதுமாகச் சொல்கிறேன் கேள். இன்று கேகய நாட்டு தூதர் ஒருவர் அங்கிருந்து அரசருக்குச் செய்தி கொண்டு வந்திருந்தார்....”

 

அவன் சொன்னதை எல்லாம் மிகவும் கவனமாக மைனிகா கேட்டுக் கொண்டாள். ”.... அரசர் தவறை ஒப்புக் கொண்டு கவர்ந்த பசுமாடுகளை அந்தந்த எல்லைப் பகுதிகளிலேயே ஒப்படைப்பதாக நான் கேகய மன்னனுக்கு வாக்களித்திருக்கிறேன். உடனே அதைச் செய்ய ஏற்பாடு செய்.” என்று ஆம்பி குமாரனிடம் சொன்ன போது அவன் கோபத்தோடுஎன் உடலில் உயிர் இருக்கிற வரை நான் சம்மதிக்க மாட்டேன் தந்தையேஎன்று சொல்லி விட்டுப் போய் விட்டான். அரசர் மகனின் போக்குக்கு வருத்தப்பட்டு எங்களிடம் பேசிக் கொண்டே இருந்தார்.... இப்போதெல்லாம் பேச்சைத் தவிர அவரால் வேறெதுவும் செய்ய முடிவதில்லை. பார்க்க மிகவும் பாவமாக இருக்கிறது. ஆனால் நாங்கள் என்ன செய்ய முடியும்? அமைச்சராவது அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். அமைச்சரும் வயதானவர் என்பதால் அரசரைப் புரிந்து கொண்டு ஆறுதல் சொல்வது அவருக்கு எளிதாக முடிகிறது. ஆனால் எனக்கு அதுவும் முடியவில்லை. அதிலும் பயன் எதுவும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. மனமோ ஒரு கட்டத்தில் அங்கிருந்து கிளம்பி முன்பே இங்கே வந்து விட்டது. அதை நீ உணராமல் என்னைத் தவறாக நினைக்கிறாயே என் கண்மணி....”

 

மைனிகா அவன் இதழ்களில் முத்தமிட்டபடியே சொன்னாள். “என்னை மன்னித்து விடுங்கள் சேனாதிபதி. நீங்கள் சொன்ன நேரத்தில் வராதவுடன் நான் அதை அலட்சியமென்று எண்ணி விட்டேன்....”

 

சேனாதிபதி சின்ஹரன் மைனிகாவின் வீட்டிலிருந்து கிளம்பும் போது அதிகாலை நேரமாகி விட்டது. வந்தபடியே போர்வைக்குள் தன்னை மறைத்துக் கொண்டு அங்கிருந்து அவன் வேகமாகச் செல்வதை எதிரே இருந்த ஒரு வைக்கோல்போரின் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டே இருந்த ஒருவன் சிறிது நேரம் பொறுத்து விட்டு வந்து மைனிகாவின் வீட்டுக் கதவைத் தட்டினான்.  

 

அவனும் கதவு திறக்கப்பட்டவுடன் உள்ளே நுழைந்து வேகமாகக் கதவைச் சாத்தித் தாளிட்டு விட்டுக் கேட்டான். “என்ன செய்தி மைனிகா? காந்தார சேனாதிபதி என்ன சொல்கிறான்?”

 

மைனிகாவின் தோற்றமும் தோரணையும் தற்போது முற்றிலும் மாறியிருந்தது. அலங்காரமும், உடைகளில் கவர்ச்சியும், மயக்கும் பார்வையும் இல்லாமல் சாதாரணப் பெண்ணாகக் காட்சியளித்த அவள் சேனாதிபதி சின்ஹரன் சொன்னதையெல்லாம் அந்த மனிதனிடம் அப்படியே தெரிவித்தாள்.

 

அந்த மனிதன் ஆழ்ந்த யோசனையுடன் சொன்னான். “அப்படியானால் காந்தாரத்தின் கிழட்டு அரசர் நம் மன்னருக்கு வாக்களித்திருந்தபடி எந்தப் பிராயச்சித்தமும் நடக்கப் போவதில்லை...”

 

அப்படித்தான் தோன்றுகிறது. வேண்டுமானால் அவரிடமிருந்து நம் மன்னருக்கு வருத்தத்தோடு மன்னிப்புக் கடிதம் வேண்டுமானால் வந்து சேரலாம்.”

 

அந்த மனிதன் முகத்தில் வறண்ட புன்னகை ஒன்று வந்து போனது. “இப்படி நடக்கும் என்பது ஏற்கெனவே எதிர்பார்த்தது தான். காந்தார அரசர் எப்போதோ தன் அதிகாரத்தை இழந்து விட்டார். அந்தக் கிழவர் மகன் செயல்களுக்கு வருத்தப்படுவதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாமல் தவிக்கிறார்... இப்போதெல்லாம் ஆம்பி குமாரன் இங்கே அதிகம் வருவதில்லையா?”

 

மைனிகா அவன் பெயரைக் கேட்டவுடன் முகம் சுளித்தாள். தாசியே ஆனாலும் அவளுக்குக் கூட அவனுடன் இருக்கையில் ஏற்படும் அருவறுப்பைத் தவிர்க்க முடிந்ததில்லை. அவன் தோற்றத்திலும், அவன் ஆண்மையிலும் எந்தக் குறையும் சொல்ல முடியாதென்றாலும்  அவன் வாய் திறந்து பேச ஆரம்பித்தால் ஏற்படும் உணர்வு அருவறுப்பாகவே இருந்தது. பேசுகையில் யாரையாவது இழிவு படுத்துவது போல அவனால் பேசாமல் இருக்கவே முடியாது. மேலும் அவன் அடுத்தவர்கள் உணர்வுகளை என்றுமே புரிந்து கொள்ள முயற்சித்ததும் இல்லை. தன்னைத் தவிர வேறு எதையும் பெரிதாக நினைக்கும் பழக்கம் என்றுமே இல்லாதவன்.... அவள் சொன்னாள். “அவனுடைய அந்தப்புரத்தில் அவனுடைய மனைவிக்குத் தோழியாக ஒரு புதிய பெண் வந்திருப்பதாய் செய்தி வந்திருக்கிறது. இப்போது அவனுடைய முழுக் கவனம் அவள் மீது இருக்கிறதாம்”

 

அந்த மனிதன் சொன்னான். “நல்லது.”

 

மைனிகா கேட்டாள். “அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்பது தூதர் அங்கே போய் காந்தார அரசரின் பதிலைச் சொன்ன பின் தான் முடிவு செய்யப்படுமா?”

 

“இல்லை மைனிகா. இப்படித் தான் நடக்கும் என்பதை கேகய அமைச்சர் இந்திரதத் முன்பே அனுமானித்திருந்தார். ஆனாலும் முறைப்படி நடந்து கொண்டிருக்கிறோம் என்று காட்டுவதற்காகத் தான் அந்தத் தூதரை அனுப்பி இருந்தார். இந்திரதத் முன்பு தட்சசீல கல்விச்சாலையில் படித்தவர். அது காந்தார விஷயத்தில் அவரைச் சிறிது மென்மைப்படுத்தி இருக்கிறது என்று நினைக்கிறேன்... நாம் வரும் பௌர்ணமி அன்று செயல்படப் போகிறோம்....”

 

மைனிகா சொன்னாள். “இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே இருக்கின்றன”

 

“ஆம். அதிக காலம் எடுத்துக் கொள்வதில் அர்த்தமில்லை. நம் திட்டத்தில் உன்னுடைய பங்கு மிக முக்கியமானது.  சேனாதிபதி சின்ஹரனை உன் பொறுப்பில் விடுகிறேன். காந்தார அரசர் பற்றி கவலைப்பட எதுவுமில்லை. ஆம்பிகுமாரன் அந்தப் பெண் இருக்கிற வரை அதற்குத் தயாராக இருப்பானே தவிர போருக்குத் தயாராய் இருக்க மாட்டான். நம் திட்டப்படி எல்லாம் நடக்குமானால் எல்லாம் ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்து விடும். ஆம்பி குமாரனுக்கு ஒரு நல்ல பாடம் புகுத்துவது தான் நம் குறிக்கோள்...  இனி அவன் கேகய நாட்டைக் குறைத்து மதிப்பிட மாட்டான்...”

 

மைனிகா சொன்னாள். “என்னை என் தாய்நாடு நினைவு அதிகம் வாட்டுகிறது. எல்லாம் முடிந்து இங்கிருந்து விடுபட்டால் போதும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டேன்...”

 

அந்த மனிதன் அவளை எச்சரித்தான். ”ஆனால் தாய்நாட்டுக்குப் போகும் அவசரத்தில் பிழைகள் நேர்ந்து விடக்கூடாது மைனிகா. எச்சரிக்கையை நீ குறைத்துக் கொள்ளக் கூடாது. நான் சொன்னது போல் உன் பங்கு மிக முக்கியமானது...”

 

“எனது பங்கை நான் கச்சிதமாக நிறைவேற்றி விடுவேன். கவலைப்படாதே...”

 

“வெற்றி வாகை சூடிய பிறகு சந்திப்போம் மைனிகா. நான் கிளம்புகிறேன்....”

 

அவள் தலையசைக்க அவன் அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.

 

(தொடரும்)

என்.கணேசன்

 

 இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்

அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும். 

2 comments:

  1. It is interesting to know how things were decided in ancient India.

    ReplyDelete
  2. ஒரு நாட்டின் ஆட்சி மாற்றத்தில்... தாசியின் பங்கு முக்கியமானது.... முற்றிலும் உண்மை....

    தாசியுடன் நடக்கும் நிகழ்வுகளை...இவ்வளவு அற்புதமாக... ஐயாவின் எழுத்துக்களில் தற்போது தான் காண்கிறேன்...அருமை...

    ReplyDelete