’வேலைக்காரர்களை
நண்பர்களைப் போல் நடத்தினால் மதிப்பிருக்காது, அவர்கள்
வேலையும் ஒழுங்காகச் செய்ய மாட்டார்கள்’ என்ற அறிவுரையை
அவனுக்கு யாராவது தந்தால் தேவலை என்று வேலாயுதம் நினைத்துக் கொண்டார். இரண்டு
பேரையும் பார்த்தால் சுதர்சன் தான் முதலாளி என்று பார்க்கிறவர்கள் நினைப்பார்கள்...
அந்த மாதிரி தான் அந்த சுதர்சன் தன்னைக் காட்டிக் கொள்கிறான். அது இந்த
முட்டாளுக்குத் தெரிய மாட்டேன்கிறது என்று மனதிற்குள் இகழ்ச்சியாக நினைத்தாலும் பாம்பாட்டி மூலம் எதுவும் பிரச்சினை வந்து விடவில்லை என்பது
நிம்மதியாக இருந்தது.
நேற்று அவர்கள் காலை வாக்கிங் போன போது “குட் மார்னிங்” என்று சத்தமாக
அவர் கூப்பிட்டுச் சொன்னார். சுதர்சனம் வலது கையை மட்டும் உயர்த்தினான். நாகராஜ்
உற்சாகமாக “குட்மார்னிங்” என்று சொன்னாலும்
அவன் நடை வேகம் குறையவில்லை. அவர்கள் இருவரும் சீக்கிரமாகவே கேட்டைத் தாண்டி விட்டார்கள். அவர்கள்
திரும்பி வரும் போது வேலாயுதம் வெளியே நிற்க விடாமல் இயற்கை உபாதைகள் அவரைத் தடுத்தன. அவர் அவசரமாக
முடித்து விட்டு வெளியே வருவதற்குள் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து விட்டிருந்தார்கள். மாலை ஏனோ இருவரும் வாக்கிங் போகவில்லை. அதனால் மாலை அவர் காத்து நின்றது வீணாயிற்று.
இன்று அவர் முன்கூட்டியே கல்யாணை வெளியே
புல்வெளியில் உள்ள நாற்காலியில் உட்காரச் சொல்லியிருந்தார். என்ன ஆனாலும்
சரி நாகராஜிடம் மகனைப் பேச வைத்து விட வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார்.
“கல்யாண், சீக்கிரமா
இந்தப் பக்கம் வந்து நில்லுடா...” என்று அவனுக்கு மட்டும் கேட்குமளவான குரலில் அழைத்தார்.
கல்யாணும் காம்பவுண்ட் சுவர் அருகே
உள்ள செடி ஒன்றை ஆராய்வது போல் வந்து நின்று கொண்டான். அவர்கள்
மூவரும் வீட்டை நெருங்கிய போது வேலாயுதம் சத்தமாக குட்மார்னிங் சொல்லி அவர்கள் கவனத்தை
இந்த வீட்டின் பக்கம் திருப்பினார்.
“குட்மார்னிங்” என்று சிறு
புன்னகையை வெளிப்படுத்திய நாகராஜ் அந்தப் பக்கம் திரும்புவதற்குள், “இவன் என்
மகன் கல்யாண்” என்று மகனை அறிமுகப்படுத்தினார்.
அப்போது தான் அந்தச் செடியிலிருந்து
கவனம் திரும்பியவனைப் போல் காட்டிக் கொண்ட கல்யாண் தந்தை அளவுக்குப் பரபரப்பைக் காட்டாமல் “குட் மார்னிங்” என்று அமைதி
காட்டிச் சொன்னான்.
நாகராஜ் “குட்மார்னிங்” என்று அதே
அமைதியுடன் அவனிடம் சொல்லி விட்டு
நகர முற்பட்ட போது கல்யாண் அவனை நோக்கிக் கைநீட்ட நாகராஜும் நெருங்கி வந்து
கைகுலுக்கினான்.
கல்யாண் அந்த உறுதியான கைகளைக் குலுக்கி
விட்டு தன் தொழில் குறித்த விவரங்களைச் சொன்னான். அவன் அத்தனை
பெரிய கம்பெனியின் எம்.டி என்கிற தகவல் நாகராஜைப் பெரிதாக அசைத்ததாகத் தெரியவில்லை. தலையை மட்டும் அசைத்தான். அவன் தானாகத்
தன்னைப் பற்றி எதுவும் சொல்லிக் கொள்ள முற்படவில்லை.
கல்யாண் தானாக அந்த மில் அதிபரைச் சொல்லி ”அவர் கூட
உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார்” என்று சொல்லிப்
பார்த்தான். அதற்கும் சிறு முறுவலும் தலையசைப்பும் மட்டும் தான் நாகராஜிடமிருந்து
வந்தது.
“நீங்கள்
கோயமுத்தூர் வந்ததும், என் பக்கத்து வீட்டிலேயே தங்கியிருப்பதும் எனக்குப் பெருமையாக
இருக்கிறது. இனிமேல் இங்கே தான் இருப்பீர்களா?” என்று கல்யாண்
கேட்டான்.
“சில நாட்கள்
தான் இருப்பேன். பிறகு போய் விடுவேன். உங்களைச்
சந்தித்ததில் சந்தோஷம்... வரட்டுமா” என்று சொல்லித்
தலையசைத்த நாகராஜ்
போய் விட்டான். அவனைத் தொடர்ந்து சுதர்சனும் போய் விட கல்யாண் தந்தையைப்
பார்த்தான்.
அவர் அதற்குள் அன்று பேசிய விஷயங்கள்
என்ன என்று தெரிந்து கொள்ள தீபக்கை சைகையால் அழைத்துக் கொண்டிருந்தார். “காலேஜுக்கு
நேரமாயிடுச்சு தாத்தா....” என்று தூரத்திலிருந்தே கையசைத்து விட்டு தீபக் வேகமாகப் போய்
விட்டான்.
வேலாயுதம் யோசனையுடன் நின்ற மகனைப்
பார்த்துக் கேட்டார். “நீ என்னடா நினைக்கிறாய்?”
“சீக்கிரம்
போயிடுவேன்னு சொல்றான். சில நாட்கள் தான் இருப்பானாம்...”
“அதுக்குள்ளே
நாம ஏதாவது செய்தாகணும்டா” என்று மகனை அர்த்தத்தோடு வேலாயுதம் பார்த்தார். அவனும் உள்ளூர அந்த அவசரத்தை உணர்ந்தான்.
நரேந்திரன் சரியாக மாலை நான்கு மணிக்கு நாகராஜன் வீட்டுக்கு
வந்து சேர்ந்தான். சந்திக்க அனுமதி தந்திருந்தாலும் நாகராஜன் அவன் கேட்கும்
கேள்விகளுக்கு உண்மையான பதில்களைச் சொல்வானா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் அவனைப்
பற்றி ஒரு முடிவுக்கு வர இந்தச் சந்திப்பு உதவியாக இருக்குமெனத் தோன்றியது.
நாகராஜின் வீட்டு கேட்டைத் திறந்த போது
பக்கத்து வீட்டிலிருந்து ஒரு கிழவர் அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இந்த ஆளைப்
பற்றித் தான் பாம்பாட்டி அவனிடம் சொல்லியிருந்தான், நாதமுனியிடம்
விசேஷ நாகரத்தினம் பற்றிக் கேள்வி கேட்கப் போனதும் இந்த ஆள் தான்...
நரேந்திரன் ஒரு கணம் நின்று அந்த ஆளைக் கூர்ந்து பார்த்தான். அந்தக்
கிழவர் அதை எதிர்பார்த்திருக்கவில்லை போலிருந்தது. அந்தப்
பக்கம் திரும்பிக் கொண்டார்.
புன்னகையுடன் நரேந்திரன் முன்னேறி நாகராஜ்
வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். சுதர்சன் தான் கதவைத்
திறந்தான். கேள்விக்குறியுடன் பார்த்த அவனிடம் தன் விசிட்டிங் கார்டை
நரேந்திரன் நீட்டினான். அதை வாங்கிப்
பார்த்த சுதர்சன் “உட்காருங்க” என்று சொல்லி வரவேற்பறையிலிருந்த
இரண்டு பிரம்பு நாற்காலிகளில் ஒன்றைக் காட்டினான். தலையசைத்த
நரேந்திரன் அந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான். சுதர்சன்
உள்ளே போனான்...
அந்த வரவேற்பறையில் அந்த இரண்டு பிரம்பு
நாற்காலிகளைத் தவிர வேறு எந்தப் பொருளும் இல்லை... இரண்டு
நிமிடங்கள் கழித்து நாகராஜ் வந்தான். அவன் பின்னாலேயே
சுதர்சனும் வந்தான். நாகராஜ்
நரேந்திரனுக்கு முன்னால் இருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்து கொள்ள சுதர்சன் சுவரில்
சாய்ந்தபடி நின்று கொண்டான்.
பொதுவாக இது போன்று விசாரிக்கப் போகும்
சமயங்களில் இப்படி வேறொரு ஆள் நிற்பதை நரேந்திரன் அனுமதிப்பதில்லை. ஆனால் இங்கு
அந்தக் கண்டிப்பைக் காட்ட அவன் விரும்பவில்லை. இங்கு நாகராஜன்
குற்றவாளியும் இல்லை.... அந்த குற்றத்துக்குச் சம்பந்தப்பட்ட ஆளாகவும் இல்லை...
அதனால் அவனிடம் எதுவும் வம்பு வைத்துக் கொள்ள நரேந்திரன் விரும்பவில்லை.
வணக்கம் தெரிவித்து தன்னை நரேந்திரன்
அறிமுகப்படுத்திக் கொள்ள நாகராஜும் அவனைக் கூர்மையாகப்பார்த்தபடி கைகூப்பினான். அவன் முகத்தில்
எந்த உணர்ச்சியும் தெரியவில்லை.
நரேந்திரன் மெல்ல ஆரம்பித்தான். “நான் இருபத்தியிரண்டு
வருஷங்களுக்கு முன்னால மணாலியில் நடந்த ஒரு வெடிகுண்டு விபத்தை விசாரிச்சுகிட்டு இருக்கேன். அந்த வெடிகுண்டு
விபத்துல தான் உங்க நண்பன் மாதவன் இறந்து போனான்...”
நாகராஜ் அமைதியாகக் கேட்டான். ”மாதவன்
என் நண்பன்னு யார் சொன்னது?”
நரேந்திரன் சொன்னான். “நீங்க அப்படித்தான்
சொன்னதா அவனோட பெற்றோர் சொன்னாங்க .... நீங்க உங்களுக்குள்ள
இருந்த ஒரு பழைய டீலிங் பணத்துலயும் ஒரு பெரிய தொகை அனுப்பி வெச்சதா கேள்விப்பட்டேன்...”
You have put thodarum in such a place that I am dying in curiosity to know the rest. Till next Monday I have to wait to know the next.
ReplyDeleteமுக்கியமான ஒரு இடத்துல தொடரும் போட்டுடிங்களே😁😁😁
ReplyDelete