க்ரிஷுக்கும் இந்த இல்லுமினாட்டி சின்னத்துக்கும் ஏதோ ஒரு ரகசியத்
தொடர்பு இருப்பதாக விஸ்வத்துக்குத் தோன்றியது. அவன் எங்கே
பேசினாலும் மிளிர்கிறதே...
விஸ்வம் சொன்னான். “உன் பேச்சுத்திறமை
என்னை வியக்க வைக்கிறது க்ரிஷ். நான் அடுத்தபடியாக சிந்துவையும் உன் குடும்பத்தையும் கண்டிப்பாகத்
தீர்த்துக்கட்டுவேன் என்று தெரிந்து பயந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காக என்னை மாற்றி
விட நீ எவ்வளவு சிரமப்படுகிறாய். உன் தீவிர முயற்சியைப் பாராட்டுகிறேன்.”
க்ரிஷ் மனதைக் கல்லாக்கிக்
கொண்டு சொன்னான். “அவர்களைக் கொன்று தான் உன் ஆத்திரமும்
வெறுப்பும் அடங்குமானால் அதைச் செய். என் உயிர் போவதை விட அது கொடுமை தான். ஆனால் பரவாயில்லை. அதையும்
என் விதியாக ஏற்றுக் கொள்கிறேன் நண்பனே. நான் நேசிக்கும்
என் குடும்பத்தை இழந்து நான் வாழ முடியாது. அதன் பின்
நான் உயிர்வாழ விரும்ப மாட்டேன். அதனால் என்னையும் கொன்று விடு. அதையும்
நான் தடுக்க மாட்டேன். ஆனால் அதை எல்லாம் செய்து விட்டு நீ நான் சொன்னதைச் சிந்தித்து
முடிவெடுப்பாய் என்று மட்டும் எனக்கு வாக்கு கொடு போதும்... உலகம் அழிவதைக்
கூட நான் பெரிதாக நினைக்கவில்லை. என்றாவது
ஒரு நாள் அழியும் உலகம் சிறிது சீக்கிரம் அழிவதால் கதறியழ ஒன்றும் இல்லை. எனக்கு அதையெல்லாம் விடக் கொடுமையாகத் தோன்றுவது மனித இனத்துக்கே
உதாரணம் காட்ட முடிந்த அளவு அறிவும், அக்னியும், கட்டுப்பாடும்
உழைப்பும் இருக்கும் நீ அத்தனைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக யாராலும் சாதிக்க முடியாத
ஒன்றைச் செய்து ஜொலிக்காமல் நாசமாய் போவது தான்....
என் நண்பன் வித்யாதர் அப்படி ஆனதையே என்னால் சகிக்க முடியவில்லை. உன்னைப்
போல் எல்லா உச்சங்களுக்கும் போக முடிந்த ஒரு மனிதன் ஒரு கோமாளியாய், ஒரு பூஜ்ஜியமாய்ப்
போவதை என்னால் தாங்க முடியவில்லை நண்பனே.”
க்ரிஷ் சொன்னதில்
அக்ஷய் மட்டுமல்லாமல் விஸ்வமும் திகைத்தான். இருவரும்
அந்த நேரத்தில் ஒரேபோல் எண்ணினார்கள். “இவனால் மட்டுமே
இப்படி யோசிக்கவும் சொல்லவும் முடியும்.” விஸ்வம் அந்த எண்ணத்தில்
தங்காமல் வேகமாக வெளியே வந்து சொன்னான். “நீ சொல்வதைப் போல்
நான் மாறினாலும் பூஜ்ஜியமாகத் தான் இருப்பேன் க்ரிஷ். பழைய இலட்சியங்கள்
எல்லாம் போய் விட்டால் என்னிடம் பூஜ்ஜியம் அல்லவா மிஞ்சும்?”
ஜிப்ஸி விஸ்வத்தின்
குரலில் மென்மை தென்பட ஆரம்பிப்பதைக் கவனித்தான். க்ரிஷ்
பேசியது விஸ்வத்தை லேசாக அசைத்திருப்பது அவனுக்குத் தெரிந்தது. இதைத் தொடர
விட்டால் ஆபத்து என்று நினைத்த ஜிப்ஸி சொன்னான். “சரியாகப் புரிந்து கொண்டாய் விஸ்வம். உன்னைப்
பூஜ்ஜியமாக்குவது தான் அவன் குறிக்கோள். உன்னை ஆரம்பத்தில் கொன்றார்கள். நீ
இன்னொரு உடலுக்கு வந்த பின்னும் உன்னை விடவில்லை. மீண்டும் உன்னைக் கொல்ல முயன்றார்கள்.
உன்னை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி நீ
உன் இலட்சியக் கனவை நிரந்தரமாகவே நிறைவேறாதபடி செய்து விட்டார்கள். அது மட்டுமல்லாமல்
உன் கனவே தவறென்று இவன் சொல்கிறான். அவர்கள் உன்னை நடத்திய விதத்தையும், இத்தனை அவமானத்தையும்
தாங்கிக் கொண்டு அவர்களைத் திருப்பித் தாக்காமல் பொறுமையான ஏமாளியாக மாறி ஓடிவிடு என்று
சொல்வதற்காகத் தான் அவன் விவரமாக இங்கே வந்து மனமுருகப் பேசி
நாடகமாடுகிறான். அதற்கு ஏற்ற மாதிரி இந்த இல்லுமினாட்டி
சின்னமும் முன்பு செய்த சதியையே இப்போதும் செய்கிறது என்பதையும் நீ கவனி. இவனிடம்
மறுபடி ஏமாந்து விடாதே”
மனித
மனம் விசித்திரமானது. இரண்டு எதிர்ப்பட்ட நிலைகளில் மாறி மாறித் தங்கும் போது அன்பையும்,
நன்மையையும் மேலே கொண்டு வருவதற்கு முயற்சிகள் அதிகம் தேவைப்படுகின்றன. ஆனால் வெறுப்பையும்,
கோபத்தையும் ஏற்படுத்த சிறிய உந்துதல்களே போதுமானதாக இருக்கின்றன. அந்த வகையில் விஸ்வம்
ஜிப்ஸியின் வார்த்தைகளால் பழைய அவமானங்கள் அத்தனையையும் உடனே மொத்தமாக உணர்ந்தான்.
ஜிப்ஸி சொன்னபடி அவன் மறுபடி ஏமாறத் தயாராயில்லை.
சமீபத்தில் கூடுதலாகவும் பெற்றிருந்த சக்திகள் அத்தனையும் குவித்து இருவர் மீது ஒரே
சமயத்தில் தாவத் தயாரானான். அவன் இரண்டு கைகளிலும் குவித்த சக்திகளில் இரண்டு கைகளும்
இரும்பு போல் உறுதியாயின. இடது கையால் க்ரிஷைத்
தாக்கி காயப்படுத்தவும், வலது கையால் அக்ஷயைத் தாக்கிக் கொன்று விடவும் எண்ணினான்.
அக்ஷயைக் கொன்ற பின் மற்றவர்களைக் கொல்வது சுலபம்...
இல்லுமினாட்டி
சின்னங்கள் ஒளிர்ந்தபடி இருந்ததால் க்ரிஷ் விஸ்வத்தைத் தெளிவாகவே பார்க்க முடிந்திருந்தது.
அவனுள் குவியும் சக்திகளையும் க்ரிஷ் கவனித்தான். அதில் அபாயத்தை உணர்ந்த அவனுக்கு
அதை அக்ஷயிடம் சொல்லுமளவு நேரமிருக்கவில்லை. அக்ஷயை எச்சரிக்கும் வகையில் மெல்லத்
தொட்டான். அக்ஷயும் விஸ்வத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். விஸ்வத்தின்
முகம் இறுக்கமாகவே இருந்தது. அவன் கைகள் மட்டும் இறுகுவதைக் கவனித்தான். க்ரிஷ் அவனை
எச்சரிக்கும் விதமாகத் தொடவே விஸ்வத்தின் கைகள் இறுகுவது தாக்குவதற்குத் தான் என்றும்
க்ரிஷ் கூடுதலாக ஏதாவது கவனித்திருப்பான் என்பதையும் உடனே உணர்ந்தான்.
அக்ஷய்
மைக்ரோவினாடியில் இயங்கினான். விஸ்வம் அவர்களைத் தாக்கப் பாய்ந்த அதே கணம் அக்ஷய்
ஒரு கையால் க்ரிஷை அந்தப் பக்கமாகத் தள்ளிவிட்டு அடுத்த கணம் இன்னொரு பக்கம் தாவிச்
சில அடிகள் தள்ளி நின்றான். தன்
இரு கைகளுக்கும் இருவரும் அகப்படாத திகைப்பில் விஸ்வம் நின்ற அந்தக் கணம், தள்ளிக்
குதித்திருந்த இடத்திலிருந்து மீண்டும் பழைய இடத்திற்குத் தாவி வந்த அக்ஷய் விஸ்வத்தின்
இரு தோள்களிலும் தன் இரு கைகளால் வேகமாக என்னவோ செய்தான். அடுத்த கணம் விஸ்வம் தோளிலிருந்து
கால்கள் வரை அசைக்க முடியாமல் சிலையாக நின்றான். விஸ்வம் முதலில் கூவ நினைத்தான். இப்போதைக்கு
அவனால் அது மட்டுமே முடியும். பின் அவமான உணர்வால் உந்தப்பட்டு அதைக்கூடச் செய்யாமல்
இறுகிய முகத்துடன் சிலை போல் நின்றான்.
விழுந்த இடத்திலிருந்து மெல்ல எழுந்த க்ரிஷுக்கு
விஸ்வத்தின் பாய்ச்சலும், அக்ஷயின் இரு தாவல்களும் பார்க்க ஏதோ சீனத் திரைப்படத்தில்
வரும் காட்சிகள் போல் இருந்தது. அக்ஷய் க்ரிஷிடம் சொன்னான். “என்ன சொல்ல வேண்டுமோ
சொல்லி முடி. உன் நண்பனுக்குக் காது கேட்பதில் பிரச்னை எதுவும் இல்லை”
ஜிப்ஸி அவர்களைத் தாக்க நெருங்கி இருந்தான்.
விஸ்வத்தின் உயிருக்கு ஆபத்து என்றால் அக்ஷயைக் கண்டிப்பாகத் தாக்கி இருப்பான். அக்ஷய்
அப்படிச் சொன்ன பின் அதற்குத் தேவையும் வழியும் இல்லாமல் போனது. பின் மெல்ல சில அடிகள்
விலகி நின்றான்.
க்ரிஷ் விஸ்வத்தின்
அருகே வந்து விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து சொன்னான். “நண்பனே நான் ஆத்மார்த்தமாகச் சொல்கிறேன்.
நான் என் தனிப்பட்ட லாபநஷ்டங்களைக் கணக்குப் பார்த்தோ, இல்லுமினாட்டியில் லாப நஷ்டங்களை
எண்ணிப் பார்த்தோ உன்னிடம் பேச வரவில்லை. மானுடத்தின் ஒரு மகத்தான உதாரண புருஷனாய்
மாற முடிந்தவன் நீ என்பதை நூறு சத்வீதம் நம்புவதாலேயே, எனக்கு ஆபத்து நேரலாம் என்ற நிலையிருக்கும் போதும் உன்னிடம் பேச வந்திருக்கிறேன்....
நீ பூஜ்ஜியமாகி விடுவாய் என்றாயே. மைனஸில் இருப்பதை
விடப் பூஜ்ஜியம் மேல் தான். மைனஸில் இருப்பவன் ப்ளஸிற்கு வர வேண்டும் என்றால் பூஜ்ஜியத்தைக் கடந்தே போக வேண்டும். அதனால்
இது கூட வளர்ச்சி என்று எடுத்துக் கொள்... உன் இந்த நண்பன் சொன்னபடி இங்கே
உனக்கெதிராக யாரும் சதி செய்யவில்லை. இப்போது இந்தச் சின்னம் ஒளிர்ந்து யாரை
வசியம் செய்யப் போகிறது? அன்றாவது அந்தச் சின்னம் ஒளிர்ந்தது இல்லுமினாட்டி உறுப்பினர்களை
என் பக்கம் சாய்க்க என்று நீ நினைக்க வழி இருந்தது. இன்று அப்படி
இல்லையே. இது இல்லுமினாட்டியின் சின்னம் ஆனது பிற்காலத்தில் தான். ஆரம்பத்தில்
இருந்தே இது ஞானத்தின் சின்னம் விஸ்வம். எல்லாம் பார்க்கும்
விழி காலங்கள் கடந்து அனைத்தையும் அறிய முடிந்த ஞானமாகவும், மௌன சாட்சியாகவும்
தான் இருக்கிறது...”
விஸ்வம்
அப்போது அடைந்திருந்த ஆத்திரத்தையும் அவமான உணர்வையும் மீறி க்ரிஷ் சொன்னதை ஆமோதிக்கும்
வகையில் அவன் மனத்திரையில் கதேயின் கவிதை "Here eyes do regard you "In eternity's stillness; "இங்கே கண்கள் உன்னைக் கணக்கிடுவது நித்தியத்தின் பேரமைதியில்”) என்ற வரி தனியாய் மிளிர்ந்தது. அந்தக் கவிதை சொன்ன கணம் இது தானோ? அதனால்
தான் இத்தனை கண்கள் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனவோ?
க்ரிஷ் மனமுருகச் சொன்னான்.
“நண்பனே. உலகத்தில் இதுவரை வாழ்ந்த எந்த மனிதனுக்கும் உனக்கு அளிக்கப்பட்டு இருக்கும்
வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வாழ்க்கையைக் கடைசி கணத்தில் திருத்தி எழுத
யாருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இறைவன் உனக்கு மட்டும் அந்த வாய்ப்பு தந்திருக்கிறான்.
உன்னைப் போன்ற ஒரு அற்புத சிருஷ்டியைப் படைத்து விட்டு அது பாழாய்ப் போவதைப் பார்க்க
அவனுக்கே பொறுக்கவில்லை போல் இருக்கிறது. அதனால் தான் உனக்கு மட்டும் அவன் இன்னொரு
வாய்ப்பைத் தந்திருக்கிறான். கூடுவிட்டு கூடு பாயும் வித்தை நீ கற்றிருந்த கலையாக இருக்கலாம்.
ஆனால் உன் முயற்சியில் ஒரு வினாடி தவறியிருந்தாலும் அது வெற்றி பெற்றிருக்க வழியில்லை
என்பதே உண்மை. அதனால் நீ சாதித்தாய் என்பதோடு இறைவன் அதை அனுமதித்திருக்கிறான் என்பதையும்
சேர்த்தே நான் பார்க்கிறேன். இறைவன் உனக்கு மட்டுமே அளித்திருக்கும் இந்தச் சிறப்புச்
சலுகையைத் தயவு செய்து நீ பயன்படுத்திக்
கொள். புதிதாய் வாழ்க்கையை ஆரம்பி. இந்தப் புதிய உடலில் போதையின் தாக்கத்திலிருந்து
நான்கே மாதத்தில் வெளிவரவும் பழையபடி சக்திகள் பெறவும் முடிந்த உனக்கு இனி புதிய பாதையில்
உன் தகுதிக்கும் திறமைக்கும் பெருமை சேர்க்கிற எத்தனையோ சாதிக்க முடியும். சரியாகத்
தீர்மானி நண்பா. உன் தீர்மானத்தில் நான் உன் விதியை மட்டும் பார்க்கவில்லை. மனித இனத்தின் விதியையும் சேர்த்தே பார்க்கிறேன்…”
(அடுத்த
வியாழன் முடியும்)
என்.கணேசன்
இந்த நாவலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -
(அல்லது)
என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம்.
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
கிரிஷின் ஆத்மார்த்தமான பேச்சும்...அக்ஷயின் ஆக்ஷனும் அருமை... ஆனால்,நாவல் அடுத்த வாரத்துடன் முடிவடைவது தான் கவலை அளிக்கிறது....
ReplyDeleteவிஸ்வத்தை போன்ற ஒரு திறமைசாலி நன்மையின் பக்கம் இருந்து செயல்பட ஆரம்பித்தால், உலகம் சொர்க்கமாகும்...
ReplyDeleteநன்றி சார்
ReplyDeleteகிரிஷின் பேச்சினால் ஜிப்ஸையும் மீறி விஷ்வம் நல்லவனாக மாறிவிடுவானோ? எப்படியோ கதை விருவிருப்பாக உள்ளது.
ReplyDeleteஇல்லுமினாட்டி இரண்டாம் பாகம் வர வாய்ப்புள்ளதா ?????
ReplyDeleteஇல்லை.
Deleteரொம்ப பிடித்த ஹீரோ அமானுஷ்யன்.. இப்போது க்ரீஷூம்... இப்படி ஒரு படைப்பு,கதாபாத்திரங்கள், சத்தியமான வார்த்தைகள்....வாழ்த்துக்கள் ஆசிரியரே
ReplyDeleteஅமானுஷ்யன் சிறு வயதிலிருந்து கற்றது , கல்யாணம் முடிந்ததும் நடந்தது,.... அப்படி அந்த வாழ்க்கையை கதை வடிவில் எழுத வேண்டுகோள் வைக்கிறேன் ஆசிரியரே
ReplyDelete