பாம்பாட்டி நரேந்திரன் விசாரித்த போது ஒரே ஒரு விஷயத்தைத் தவிர
எல்லாவற்றையும் சொல்லி விட்டான். அவன் சொல்லாமல் விட்ட விஷயம் நாகராஜ் கடைசியாக அவனுக்குச்
சொன்ன அறிவுரை. “உன்கிட்ட இன்னும் கொஞ்சம் திருட்டுத்தனமும், ஏமாத்தற
புத்தியும் இருக்கு. அதை விட்டுடுடறப்ப உன்னைப் பிடிச்சிருக்கற எல்லா பீடையும்
கூட விலகிடும்” என்று நாகராஜ் சொன்னதற்குப் பதிலாக “நீ நல்லவனாகவே
வாழ்ந்துட்டு வா. உன்னைப் பிடிச்சிருக்கிற எல்லா பீடையும் கூட விலகிடும்” என்று அறிவுரை
சொன்னதாகச் சொன்னான்.
அவன் சொன்ன விஷயங்கள் நரேந்திரனைத்
திகைக்க வைத்தன. கற்பனை வளத்தில் அம்புலிமாமா கதைகளை மிஞ்சியபடி இருந்தது
பாம்பாட்டி சொன்ன விசேஷ நாகரத்தினம் பற்றிய தகவல். அவன் திகைப்பும், சந்தேகமும்
அவன் முகத்தில் பிரதிபலித்திருக்க வேண்டும். பாம்பாட்டி
சொன்னான். “படிச்சவங்களுக்கு இதெல்லாம் நம்பக் கஷ்டம் தான் சார்”
நரேந்திரன் சிறிது நேரம் ஒன்றும் சொல்லாமல்
அவனையே கூர்ந்து பார்த்தான். பிறகு கேட்டான். “நீ நாகராஜை
இதுக்கு முன்னால் பார்த்ததே கிடையாதா?”
“இல்லை சார். ஆனா கேள்விப்பட்டிருக்கேன்...”
“என்னவெல்லாம்
கேள்விப்பட்டிருக்கே?”
”மகராஜ்
நாகசக்தி இருக்கிறவர் கடந்த காலம் எதிர் காலம் ரெண்டையும் சொல்லக்கூடியவர், அவரைச்
சந்திக்கறதே கஷ்டம்னெல்லாம் கேள்விப்பட்டிருக்கேன்”
“ஆனா அந்த
வீட்டில் தான் அவர் இருக்கார்னு தெரிஞ்சது அந்தப் பக்கத்து வீட்டுக் கிழவர் சொல்லித்
தானா?”
“ஆமா சார்”
“அந்தக்
கிழவர் உன் கிட்ட வலிய வந்து பேசினது எதுக்குன்னு நினைக்கிறாய்?”
“தெரியலை
சார். ஆனா அந்த ஆள் நல்ல ஆளில்லைன்னு உள்மனசு சொல்லுச்சு”
“நாகராஜ்
மகராஜைப் பத்தி உன் உள்மனசு என்ன சொல்லுது”
“அவர் நல்லவர்னு
தான் தோணுதுங்க சார்”
நரேந்திரன் மனித மனதின் விசித்திரத்தை
எண்ணி வியந்தான். கேள்விகள் கேட்டு பணம் கொடுத்த கிழவரை அவன் நல்ல ஆளில்லை
என்று சொல்கிறான். எதுவும்
தராமல் அறிவுரை மட்டும் தந்த நாகராஜை நல்லவர் என்று சொல்கிறான்....
மீண்டும் அழைத்தால் வரவேண்டும் என்றும், அவன் அழைத்து
விசாரித்ததை யாரிடமும் சொல்லக் கூடாதென்றும் கண்டிப்புடன் சொல்லி பாம்பாட்டியை அனுப்பி
விட்டு நரேந்திரன் யோசித்தான். இந்த நாகசக்தி, நாகரத்தினம் குறித்து
நாதமுனியிடம் கேட்க வேண்டும் என்று முன்பே நினைத்திருந்தது இப்போது அவசியமாகவே தோன்றியது. க்யான்
சந்த் பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. க்யான்
சந்தும் இல்லாத நிலையில் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள மதன்லாலை நெருக்குவதைத் தவிர
வேறு வழியில்லை. சாதாரணமாக வாய் திறக்க மாட்டான் என்றாலும் அவனைப் பேச வைக்க
வேண்டியிருக்கிறது....
அஜீம் அகமதுக்கு க்யான் சந்தைக் கடத்திய செய்தியும், கடத்தி
வைத்திருக்கும் இடம் பற்றிய விவரமும் வந்து சேர்ந்தன. க்யான்
சந்த் போன்ற ஒரு துரும்பைக் கடத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை என்றாலும் கூட நரேந்திரனுக்கு ’நாங்களும்
இருக்கிறோம்’ என்று காட்டும் நோக்கத்துடன் தான் அவன் கடத்த உத்தரவிட்டிருந்தான். அந்த ரா
அதிகாரி எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்டால் கூட அஜீம் அகமதின் நிழலைக்கூட நெருங்க
முடியாது என்பது நிச்சயம். அந்த அளவு தொலைவில் பாதுகாப்பாக இருந்தாலும் கூட சட்டத்தைத்
தன் கையில் எடுத்துக் கொண்டு தன்னிஷ்டத்துக்கு நடந்து கொள்ளும் அந்த ரா அதிகாரியை அஜீம்
அகமதால் அலட்சியப்படுத்த முடியவில்லை. அவனை அடக்கி வைக்க வேண்டும், முடிந்தால் அவன் அப்பனை
அனுப்பிய இடத்திற்கே அனுப்பி வைக்க வேண்டும் என்று அஜீம் அகமதுக்குத் தோன்றியது. அதையும் மற்றவர்கள் மூலம் அல்லாமல் தானே நேரில் போய் செய்ய
வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக எழுந்ததால் இந்தியா செல்வதென்று அஜீம் அகமது முடிவு
செய்தான்.
அன்று மதியம் கிடைக்க வேண்டிய வறண்ட சப்பாத்தி மதன்லாலுக்கு
மட்டும் கிடைக்கவில்லை. சஞ்சய் ஷர்மாவுக்கு மட்டும் சப்பாத்தி, சப்ஜி தட்டைத்
தள்ளி விட்டு வந்த தடியன் மதன்லாலிடம் “க்யான் சந்தும்
இப்ப எங்க கஸ்டடியில தான் இருக்கான். அவன் எல்லா உண்மையும்
கக்கிட்டான்” என்று மட்டும் சொல்லி விட்டுப் போனான்.
மதன்லால் அதிர்ந்து போனான். ஆரம்பத்தில்
சந்தேகப்பட்டாலும், அவனையே கடத்த முடிந்தவர்களுக்கு க்யான் சந்தைப் பேச வைப்பது
முடியாத காரியமல்ல என்று தோன்றியது. க்யான் சந்துக்குப்
பேராசை இருக்கும் அளவுக்கு மனோதைரியம் போதாது... இப்படியெல்லாம்
நடக்கும் என்பதை முன்பே எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று மதன்லால் தன்னையே நொந்து
கொண்டான்.... க்யான் சந்தை நரேந்திரன் பேச வைப்பதற்கு முன் அப்புறப்படுத்தியிருக்க
வேண்டும். அதைச் செய்யாமல் விட்டது முட்டாள்தனம்...
க்யான் சந்த் உண்மையைக் கக்கி விட்டான்
என்பதைக் காரணம் காட்டி, நாயும் சாப்பிடாத வறண்ட ஒரு சப்பாத்தியைத் தர மறுத்து விட்டுப்
போன தடியன் மீது ஆத்திரமாய் அவனுக்கு வந்தது. அதையும்
விட அதிக ஆத்திரம் அந்த வறண்ட சப்பாத்திக்காக ஏங்கிக் கிடக்கும் அவன் வயிற்றின் மீது
வந்தது. என்ன பிழைப்பு இது?
சாயங்காலம் இரண்டு பழைய இரும்பு பக்கெட்கள்
நிறைய ஐஸ்கட்டிகள் கொண்டு வந்து அவனுடைய அறையில் தடியன் வைத்தான்.
இந்த ஐஸ்கட்டிகளைக் காண்பித்து பயமுறுத்தி
சஞ்சயிடம் உண்மைகளை வாங்கிய கதையை அறிந்திருந்தாலும் அதைக் காண்பித்துக் கொள்ளாமல்
மதன்லால் கேட்டான். “என்ன இது?”
“அரை மணி
நேரத்துல சார் உன் கிட்ட பேசுவாரு. நீ உண்மைய சொல்லாட்டி
இதுல உனக்கு அபிசேகம் செய்யச் சொல்லியிருக்காரு”
மதன்லால் தடியனிடம் அலட்சியம் காட்டிச்
சொன்னான். “அவனே எல்லாம் சொன்னதுக்கப்பறம் என் கிட்ட கேட்க என்ன இருக்கு?”
“நீ சொல்றதும், அவன் சொன்னதும்
பொருந்துதான்னு பார்க்கத் தான். ரெண்டு பேர்ல யாராவது மாத்தி சொல்லியிருந்தாலும், எதையாவது
சொல்லாம விட்டிருந்தாலும் சார் அவங்கள நல்லா கவனிச்சுக்க சொல்லிருக்காரு..”
மதன்லால் கேட்டான். “க்யான்சந்தை
எங்க புடிச்சு வெச்சிருக்கீங்க...?”
தடியன் எகத்தாள தொனியில் சொன்னான். ”அதெல்லாம்
அவன் கிட்டயே ஒரு நாள் நீ கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்...”
மதன்லால் மிகுந்த ஆர்வத்தோடு கேட்டான். “எப்போ?”
“நரகத்துல
ரெண்டு பேரும் சந்திக்கறப்ப” என்று சொல்லி விட்டு தடியன் போய் விட்டான்.
இரண்டு நிமிடங்கள் கழித்து சஞ்சய் குரல்
மெலிதாய் கேட்டது. “என்னண்ணா அவன் இப்படி சொல்லிட்டு போறான். உங்க ரெண்டு
பேரையும் தீர்த்துக் கட்டறதா அவனுக முடிவு பண்ணிட்டானுக போல இருக்கே அண்ணா?”
காதுகளில் நாராசமாக விழுந்த வார்த்தைகளை
அலட்சியப்படுத்த முடியாமல் தவித்தாலும் மதன்லால் தன் தவிப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல்
வீரனைப் போல் பேசினான். “மதன்லால் எத்தனையோ பார்த்தவன். இதற்கெல்லாம்
அசந்துட மாட்டான்...”
“அசராம இருக்கறதை
விட சாகாம இருக்கிறது முக்கியம்ணா...” என்று சஞ்சய் அக்கறையோடு
சொன்னது மதன்லாலின் அடிவயிற்றைக் கலக்கியது. கேட்கையில்
எரிச்சலாக இருந்தாலும் அந்த வார்த்தைகளில் இருந்த உண்மையை அவன் உணர்ந்தே இருந்தான். இப்படி
சிறைபிடிக்கும் அளவுக்குத் துணிந்த நரேந்திரன், ஆளை முடித்துக்
கட்டவும் தயங்க மாட்டான் என்பதில் சந்தேகம் தேவையில்லை. தப்பித்துப்
போகும் வரையாவது உயிரோடு இருக்க வேண்டியது முக்கியம்.... இரும்பு பக்கெட்களிலிருந்து வீசிய
குளிர் தூரத்திலிருக்கும் போதே வாட்டியது…
அதை உடம்பில் கொட்டினாலோ ஜன்னி வருவது நிச்சயம். பிறகு காலை
வரை தாக்குப் பிடிப்பது கூடக் கஷ்டம் தான். ஆனால் உண்மையைச் சொன்னாலோ நரேந்திரன் பதிவு
செய்து வைத்துக் கொண்டு அதை அவனுக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆபத்து இருக்கிறது… மதன்லால் ஆழ்ந்து யோசித்தான்.
உண்மையை க்யான்சந்த் சொல்லி விட்ட பிறகு க்யான்சந்த்
சம்பந்தப்பட்ட உண்மையை
மறைப்பதில் அர்த்தமில்லை. ஆனால் க்யான்சந்த் சம்பந்தப்படாத விஷயங்களைச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை.
அந்த உண்மையைக் கூட அவன் தன் மேல் தவறில்லாதபடி சொல்லிக் கொள்ளலாம். க்யான்சந்த் அப்படிச் சொல்லவில்லையே
என்று நரேந்திரன் சொன்னால் க்யான்சந்த் தனக்குச் சாதகமாகச் சொல்லியிருக்கிறான்,
நான் சொல்வது தான் உண்மை என்று சாதிக்கலாம்… ’என்னுடைய
ஒரே தவறு அந்த வழக்கைத் தீவிரமாக விசாரிக்காமல் அவர்கள் சொன்ன தகவலை ஏற்றுக் கொண்டு
ஃபைலை மூடி விட்டேன் என்பது தான். அதுவும் அப்போதிருந்த வேலைப்பளு
காரணமாகச் செய்தது என்று சொல்லி விடலாம்’ அவன் வாழ்நாளெல்லாம்
உண்மைகளை தனக்கேற்ற மாதிரி திரித்து குற்றப்பத்திரிக்கைகளைத் தயாரித்தவன் என்பதால்
அனுபவ குறுக்கு புத்தியால் வந்த இந்த யோசனை சரியாகத் தான் இருப்பதாகத் தோன்றியது.
’நரேந்திரன் சந்தேகப்பட்டாலும் கூட, கண்டிப்பாக
இதில் எந்த ஓட்டையும் கண்டுபிடிக்க முடியாது…’
You describe very well how each person thinks. It creates realistic atmosphere and adds interest to the novel. Good going.
ReplyDeleteநேர்மையற்ற ஒரு காவல்துறை அதிகாரியின் எண்ண ஓட்டம் எப்படி இருக்குமோ..! அது போலவே உள்ளது... மதன்லாலின் எண்ண ஓட்டங்கள்...
ReplyDelete