சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 10, 2022

இல்லுமினாட்டி 145

(சாணக்கியன் நாவல் இன்று மாலைக்குள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதால் காலையிலேயே இல்லுமினாட்டியை அப்டேட் செய்துள்ளேன். சாணக்கியன் கிடைத்தவுடன் அறிவிக்கிறேன். - என்.கணேசன்) 


க்ஷய் கேட்டான். “அதே அளவு ஆபத்து உனக்குமல்லவா இருக்கிறது?”

க்ரிஷ் சொன்னான். “என் தீர்மானங்களின் விளைவை நான் அனுபவிப்பது சரி. அடுத்தவர்களைச் சிக்க வைப்பது சரியல்ல.”

உன்னோடு வருவதென்பது நான் எடுத்த தீர்மானம். அதனால் அதன் விளைவுகளை நான் அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன்

க்ரிஷ் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தான்.  உங்களை அழைத்து வந்தது தலைவர் பாதுகாப்புக்கு. நீங்கள் அவரைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். அது போதும்..”

எர்னெஸ்டோ சொன்னார். “எனக்கு இந்த பங்களாவுக்குள் இருக்கும் வரை எந்தக் கூடுதல் பாதுகாப்பும் தேவையில்லை... நீ தனியாகப் போவதானால் போகவே வேண்டாம்.”

ஆனாலும் க்ரிஷ் தர்மசங்கடத்துடன் அக்ஷயைப் பார்த்தான். அவன் போய்த் திரும்பி வருவது அவனுக்கே நிச்சயமில்லை. அப்படி இருக்கையில் இன்னொருவன் உயிரைப் பணயம் வைப்பது நியாயமாகத் தோன்றவில்லை. அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அக்ஷய் சொன்னான். “உன் நண்பன் அளவுக்கு நான் நிறைய சக்திகள் இல்லாதவனாக இருக்கலாம். ஆனால் என்னால் என்னையும் உன்னையும் ஓரளவாவது பாதுகாக்க முடியும் என்று நம்புகிறேன்.”

இம்மானுவலுக்கு இருவர் போவதும் பிடிக்கவில்லை. “விஸ்வம் மட்டுமல்ல அவன் கூட்டாளியும் இருக்கிறான் என்பதை நீங்கள் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். அவன் எதையெல்லாம் செய்வான் என்பது நமக்கு இன்னும் தெரியவில்லை.”

அவன் சொன்னது க்ரிஷின் தீர்மானத்தை மாற்றவில்லை. அதனால் அக்ஷயும் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. எர்னெஸ்டோ நீண்ட யோசனைக்குப் பிறகு அவர்கள் இருவரும் செல்ல அனுமதி தந்துவிட்டுச் சொன்னார். “எதாவது பெரிய ஆபத்து என்றால் இம்மானுவலை அழையுங்கள். அல்லது திரும்பி வந்து விடுங்கள். நாம் வேறு வழியை யோசிப்போம். வீரம் என்ற பெயரில் நீங்கள் பலிக்கடாவாகக் கூடாது.”


ஜிப்ஸி மெல்ல பாதாள அறைக்குச் சென்று பார்த்தான். அங்கே வழக்கமான கும்மிருட்டு இல்லாமல் மெலிதான் ஒளி படர்ந்திருந்தது. ஒளி எங்கேயிருந்து வருகிறது என்று ஜிப்ஸி பார்த்தான். அந்த ஒளி சுவரில் பெரிதாக வரையப்பட்டிருந்த பிரமிடுக்குள் இருந்த பெரிய கண்ணிலிருந்து கிளம்பி விஸ்வத்தின் மேல் விழுந்து கொண்டிருந்தது. இல்லுமினாட்டியின் அனைத்தும் பார்க்கும் விழி அப்படி மின்னுவது நல்ல அறிகுறியாக ஜிப்ஸிக்குத் தெரியவில்லை. இமயமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட அந்தச் சின்னம் இதற்கு முன்பு மின்னி விஸ்வத்தைக் கவிழ்த்ததை அவனும் எண்ணிப் பார்த்தான். இந்த உலகின் எத்தனையோ விசித்திரங்களையும், அற்புதங்களையும் ஆராய வந்தவனுக்கு இன்னும் சில விஷயங்கள் பிடிபடாமல் தான் இருக்கின்றன. அவற்றில் ஒன்று இந்தச் சின்னம்... இந்தச் சர்ச்சில் பிரதானமாக இங்கே ஒளிரும் இந்தச் சின்னம் மேலேயும் ஓவியங்களிலிருந்து சில சமயம் ஒளிர்வதை அவன் கவனித்ததுண்டு. அவை ஒளிரும் போதெல்லாம் சில சக்தியலைகள் வீச்சுக்கள் வெளிப்படுகின்றன. இவற்றை விட மேலான சக்திகள் கூட அவனுக்கு அத்துப்படி. ஆனால் இந்த அலைவீச்சுக்கள்  கொஞ்சம் புதிராகவே இருக்கின்றன.... ஜிப்ஸி சத்தமில்லாமல் மறுபடி மேலே வந்தான்.


ஜிப்ஸி தொலைதூரக் கிரகம் ஒன்றின் விஞ்ஞானி. அங்குள்ள ஜீவராசிகள் மனித இனத்தை விடப் பலமடங்கு அறிவிலும், அறிவியல் முன்னேற்றத்திலும் முன்னேறியவர்கள். அங்கிருந்து அவன் இந்த பூமிக்கு ஆராய்ச்சிக்கு வந்த நோக்கம் மனித இனத்தின் அறிவு, மனப்போக்கு, அறிவியல் வளர்ச்சி, உலகத்தின் இயற்கை வளங்கள் ஆகியவற்றை ஆராய்வதும் அவனுடைய கிரகத்தின் வளர்ச்சிக்குத் தேவையானவை அல்லது உதவக்கூடியவை இங்கிருந்தால் அவற்றையும் ஆராய்வது தான்.

அவன் இங்கு வந்த பார்த்த போது பொதுவாகவே மனிதர்கள் அறிவைக் குறைந்த அளவு வாழ்க்கைக்குப் பயன்படுத்துபவர்களாக இருந்தார்கள். பூமியில் சுற்றுச்சூழல் மாசு அதிகமாக இருந்தது. இயற்கையை அலட்சியம் செய்யும் போக்கு அதிகமாக இருந்தது. சூழ்ந்து கொண்டிருக்கும் அழிவை நிறுத்த அவர்கள் எந்தப் பெரிய முயற்சியும் எடுக்காமலேயே இருந்தார்கள். மனிதர்கள் எதைப் பற்றியும் முழுவதாக அறியும் ஆர்வத்தை விடச் சிறிது தெரிந்து கொண்டு அதைப் பற்றி நிறைய பேசும் ஆர்வம் அதிகமுள்ளவர்களாக இருந்தார்கள். எதையும் அரைகுறையாய்த் தெரிந்து கொண்டு நிறைய பேசுவார்கள். ஆனால் முடிவை எட்டுவதோ அதன்படி நடந்து கொள்வதோ அவர்கள் வழக்கத்தில் இருக்கவில்லை.

பூமியில் புதுப் புது நோய்கள் பெருகிக் கொண்டிருந்தன.  அதற்குத் தனித்தனி மருந்துகள் கண்டுபிடித்துக் கொண்டிருந்தார்கள். மூல காரணத்தையே கவனித்து அழிக்கும் அடிப்படை அறிவு அவர்களுக்கு இருக்கவில்லை. இயற்கையின் சீற்றங்கள் எல்லை மீறி அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தன. அவர்கள் அப்படி வந்து கஷ்டப்படும் போது ஏதாவது தீர்வு கண்டேயாக வேண்டும் என்பார்கள். அது நின்று இயல்பு நிலை திரும்பும் போது அதைச் சுத்தமாக மறந்து விடுவார்கள். ஆள்பவர்கள் பணம் சேர்த்துக் கொண்டேயிருந்தார்கள். மக்கள் அவ்வப்போது விமர்சனங்கள் செய்தும். மீதி நேரங்களில் பொழுதுபோக்குகளில் ஈடுபட்டும் வாழ்ந்து மடிந்து கொண்டு இருந்தார்கள். இப்படி ஒன்றிரண்டு விஷயங்களில் தான் என்றில்லாமல் பல விஷயங்களில் இருந்தார்கள்... யாருமே எல்லாவற்றுக்கும் மூலமான வேர்க் காரணங்களை ஆராயவோ, சரிசெய்யவோ ஆர்வம் காட்டவில்லை. ஒவ்வொரு பிரச்சினையிலும் விளைவை நிறுத்த முயன்ற மனித இனம், காரணத்தையே அகற்றும் அறிவோ, துடிப்போ இல்லாமல் இருந்தது. அவர்கள் நிரந்தரமான உயர்வுக்கும் சிறப்பிற்குமான அறிவுபூர்வமான வாழ்க்கை முறைகளைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனாலும் தங்களை உயர்வான அறிவுஜீவிகளாகவே நினைத்தார்கள். எல்லோரும் தனித்தனியாக லாபமடைய ஆசைப்பட்டார்களே ஒழிய ஒட்டுமொத்தமான உயர்வுக்கு முயலும் போக்கு அவர்களிடம் இல்லை. இதெல்லாம் ஜிப்ஸிக்கு வேடிக்கையாகவே இருந்தது.

இதே போக்கில் போனால் இந்த உலகம் இனி ஒரு ஆயிரம் ஆண்டுகளைக் கூடத் தாண்டாது. அதற்குள் முழுவதுமாக அழிந்து விடும். அப்படி எல்லா இயற்கை வளங்களையும் அழித்து விட்டு மனித இனம் அழிந்தால் இந்த உலகத்தில் உபயோகமானது எதுவும் மிஞ்சாது. அவன் கிரகத்திற்குத் தேவையான, பயன்படக்கூடிய நிறைய வளங்கள் இந்தப் பூமியில் இருந்தன என்பதை ஆராய்ந்து கண்டுபிடித்திருந்தான். இந்த முட்டாள் மனித இனம் அதை அழித்து விட்டுத் தாங்கள் அழிவதற்கு முன் தங்களையே அழித்துக் கொண்டால் அந்த வளங்களாவது மிஞ்சும். அவனுடைய கிரகத்தின் சீதோஷ்ண நிலை கிட்டத் தட்ட இந்த பூமியின் சீதோஷ்ண நிலை போலத்தான் இருந்தது.  இந்தப் பூமியை அவர்கள் பல விதங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படிக் கணக்குப் போட்ட வேற்றுக்கிரக ஆராய்ச்சியாளனான ஜிப்ஸி தன் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக மனித இனம் சீக்கிரமாகவே அழிவதற்கு வழிகளை ஆராய்ந்தான்.

அவனுடைய ஆராய்ச்சியில் உலக நிகழ்வுகளை நிர்ணயிக்கும் இல்லுமினாட்டி அமைப்பு சிக்கியது. இது போன்ற அமைப்பு உலகைக் காக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். இப்போதைக்கு அதுவும் உலகப் போக்கின்படியே இருந்தது. அறிவு, அதிகாரம், வலிமை என்ற மூன்றுக்கே முக்கியத்துவம் தந்து இயங்கியும், உலகை இயக்கியும் இருந்த இந்த அமைப்புக்கு ஒரு ஆபத்தானவன் தலைவனானால் பூமியின் அழிவைத் துரிதப்படுத்தலாம் என்பதை ஜிப்ஸி உணர்ந்தான். இல்லுமினாட்டியில் பூமியைக் காப்பாற்றக்கூடிய ஆட்கள் இல்லாவிட்டாலும் அதை வேகமாக அழிக்கக்கூடியவர்களும் இருக்கவில்லை.  மெல்ல மெல்ல அழிக்கும் போக்கே அதில் உள்ளவர்களிடம் கண்ட ஜிப்ஸி தன் ஆராய்ச்சியின் முக்கிய பகுதியாக வேகமாக அழிக்க முடிந்த ஆபத்தானவனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டான்.

அவனுடைய மேலான சக்திகளை வைத்து அதற்கேற்றவனாகத் தேடி விஸ்வத்தைக் கண்டுபிடித்தான். பட்டை தீட்டாத வைரமாக மங்கி இருந்த விஸ்வத்தின் மனதில் ஒரு அக்னியைப் பற்ற வைத்தான். அந்த அக்னி ஜிப்ஸி எதிர்பார்த்தது போலவே எரிமலையாகவே மாற ஆரம்பித்தது.

அப்போது இன்னொரு வலிமையான கிரகத்திலிருந்து, ஜிப்ஸியின் இன ஜீவராசிகளை விடப் பல மடங்கு முன்னேறியிருந்த, க்ரிஷின் பிற்கால நண்பனான வேற்றுக்கிரகவாசி வந்தான்.  அவனும் ஆராய்ச்சிக்காகவே தான் அங்கு வந்தவன் என்றாலும் அவனுக்கு இந்தப் பூமி மக்கள் மீது ஏனோ பரிவு இருந்தது. அவன் ஜிப்ஸியின் திட்டத்தைக் கண்டுபிடித்துக் கண்டித்தான்.

ஜிப்ஸி சொன்னான். “இந்த மனித இனம் வேகமாக அழிந்து கொண்டு தான் இருக்கிறது. ஒழுங்கீனம், அறிவீனம் இரண்டும் கொண்ட இனம் அழிவது நிச்சயம் தானே. அதை நான் துரிதப்படுத்துகிறேன். அவ்வளவு தான்.”

க்ரிஷின் வேற்றுக்கிரகவாசி நண்பன் சொன்னான். “உங்கள் இனத்தை ஒப்பிட்டுப் பார்க்கையில் இவர்கள் குறைந்தவர்களாக இருக்கலாம். அதற்காக இப்படி நீ செய்வது சரியல்ல. ஆராய்ச்சிக்குப் போகும் இடங்களை எல்லாம் அழித்து விட்டு வருவது உனக்கு அறிவும், ஒழுங்குமாகத் தெரிகிறதா? உன் கிரகத்திற்கு  நான் வந்து அப்படிச் செய்தால் அதை நீ ஏற்றுக் கொள்வாயா?”

ஜிப்ஸி இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று திகைத்தான். ஆனால் அவனை மறுப்பதோ, பகைப்பதோ ஆபத்து என்று எண்ணியவனாகச் சொன்னான். “மன்னிக்கவும். நான் அந்த வகையில் சிந்திக்கவில்லை. ஆனால் நான் ஒரு ப்ரோகிராம் போட்டு ஆரம்பித்து வைத்தாகி விட்டது... அதைத் திருத்த வழியில்லை

சரி இதோடு நிறுத்திக் கொள். வேறு எந்த முயற்சியும் நீ எடுக்கக்கூடாது...” என்றான். சொன்னவன் ஜிப்ஸியின் திட்டத்துக்கு எதிராக உலகத்தை அழிவிலிருந்து காப்பாற்றக்கூடிய ஒரு மனிதனாக க்ரிஷைக் கண்டுபிடித்து அவனிடம் உலகத்திற்கு வரவிருக்கும் ஆபத்தைச் சொன்னான். அவன் க்ரிஷின் உயிரைக் காப்பாற்ற உதவி செய்ததால் அதே போல் விஸ்வத்தின் உயிரைக் காக்க மட்டும் ஜிப்ஸியும் ஏதாவது உதவி செய்யலாம் என்றும் அதற்கு மேல் இயற்கையாக இங்கு எது நடக்கிறதோ நடக்கட்டும் என்றும் வேற்றுக்கிரகவாசிகள் நாம் இடையில் புகுந்து செயல்படுவது சரியல்ல என்றும் சொல்லி ஜிப்ஸியை எச்சரித்து விட்டுப் போனான்.  

அதன் பிறகு ஜிப்ஸியைக் குழப்பும் பல நிகழ்வுகள் இங்கே நடந்தன.

(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV

5 comments:

  1. Gypsy's findings about this earth is 100% accurate. I appreciate your insights placed in these interesting novels appropriately. Congrats for the release of chanakyan novel.

    ReplyDelete
  2. This has now become one of my fav episodes.I liked the the way u depicted mentality / reality of the present world from the eyes of gypsy. We indeed focus more on the outcomes /consequences rather trying to find the root of any problem. Also we do strive for individual profits than for a collective empowerment. Our sixth sense doesn't make us any better than other earthly species. Thank you for all brilliant work .

    ReplyDelete
  3. Brilliant episode. Hatsoff!

    ReplyDelete
  4. ஓஹோ... அதான் இரண்டு வேற்றுகிரகவாசிகளும் எந்த பெரிய உதவியும் செய்யாமல்...!யோசனை மட்டும் கூறுகிறார்களோ...?
    எப்படி பார்த்தாலும் விஸ்வம் பூமியை சார்ந்தவன்‌‌... அந்த இலுமினாட்டி சின்னம் உலக நன்மையையே விரும்பும்...விஸ்வத்துக்கு நல்ல சிந்தனையை ஏற்படுத்தும்....என நினைக்கிறேன்....

    ReplyDelete