க்யான் சந்த் காணாமல் போனதைக் கேள்விப்பட்டவுடன் நரேந்திரன்
அதிர்ந்து போனான். “எப்போ? எப்படி?”
“நேத்து
ராத்திரி அவன் வீட்டுக்குப் போய்ச் சேர்ற வரைக்கும் என் கண்காணிப்புலயே தான் சார் அவன்
இருந்தான். அவன் வீட்டுக்குப்
போனது பத்து மணிக்கு. பதினோரு மணி வரைக்கும் அவன் வீட்டுகிட்ட தான் நான் இருந்தேன். காலையில
அஞ்சரைக்கு மறுபடி அவன் வீட்டுகிட்ட போயிட்டேன். சுமார்
ஏழு மணிக்கு அவன் மனைவி வெளியில வந்து ரெண்டு பக்கமும் பாத்துகிட்டிருந்தா. பக்கத்து
வீட்டுக்காரர் கேட்டப்ப க்யான்சந்தைக் காணோம். எங்கே போனார்னு
தெரியலன்னு சொன்னது கேட்டுச்சு. அப்பவும் அவள் அவன் எங்கேயோ போயிருக்கிறான், வருவான்னு
நினைச்ச மாதிரி தான் இருந்துச்சு. பத்து மணிக்கு மேல தான் பயப்பட ஆரம்பிச்சா. அவளும்
அவ பையனும் போலீஸ்ல பதினோரு மணிக்குப் புகார் குடுத்திருக்காங்க. இப்ப வீட்ல
அவங்க உறவுகளும், நண்பர்களும் வந்து குவிஞ்சிருக்காங்க. ஆளுக்கொரு
பக்கம் தேடிகிட்டுமிருக்காங்க....”
நரேந்திரன் இதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த வழக்கில்
வேறு இரண்டு பேர் ஏற்கெனவே காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களைக்
கடத்திக் கொண்டு போய் வைத்திருப்பது அவன் தான். அவனாகவே
அதற்கு முழுப் பொறுப்பேற்றுக் கொண்டு துணிச்சலுடன் செய்து முடித்திருந்தான். நாளை அது
ஒரு பிரச்சினையானாலும் ரா உளவுத்துறை தங்களுக்குத் தெரிந்து நடந்ததல்ல என்று கைகழுவி
விடும் என்று ஏற்கெனவே ரா தலைவர் அவனிடம் எச்சரித்திருந்தார். ஒரு அரசாங்க
நிறுவனம் கண்டிப்பாக இதற்குப் பொறுப்பேற்க முடியாது என்பதை அவனும் அறிவான். ஆனால் நேர்வழியில்
சில விஷயங்களைச் சாதிக்க முடியாது என்று தான் அவன் அந்த நடவடிக்கையை எடுத்திருந்தான்.
அவன் எதிரிகள் அவன் வழியிலேயே அடுத்த
முக்கியமான சாட்சியைக் கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்பது இப்போது அவனுக்குப்
புரிந்தது. ஏனென்றால் க்யான் சந்த் தானாக ஓடியொளியும் ரகம் அல்ல. அப்படி
ஓடி ஒளிவது அவன் நோக்கமாய் இருந்திருந்தால் அவன் குடும்பத்திற்காவது ரகசியமாய் தெரிவித்து
விட்டுத் தான் அவன் தலைமறைவாயிருப்பான். குடும்பம் இந்த
அளவு பதறியிருக்காது...
நரேந்திரனுக்கு இதைச் செய்திருப்பது
எந்த எதிரி என்று தான் தெளிவாய்த் தெரியவில்லை. ஜனார்தன்
த்ரிவேதியா இல்லை அஜீம் அகமதா?
கொடிவேரி நீர்வீழ்ச்சியில் தீபக்கும், தீபக்கின்
நான்கு நண்பர்களும் ஆசைதீரக் குளித்துக் கொண்டிருந்தார்கள். அன்று விடுமுறை
தினம் அல்ல என்பதால் பெரிய கூட்டம் இருக்கவில்லை. அங்கே அவர்கள்
ஐந்து பேர்களைத் தவிர வேறு ஏழெட்டு பேர் தான் இருந்தார்கள். குளித்துக்
கொண்டிருக்கையில் திடீரென்று காலம் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றது போல் தீபக் உணர்ந்தான். அப்போது
அவனும் அவன் நண்பர்களும் அங்கு குளித்துக் கொண்டிருந்த மற்ற ஏழெட்டு பேரும் அவன் காட்சியிலும்
கருத்திலுமிருந்து மறைந்து போனார்கள். அதற்குப் பதிலாக
இன்னொரு காட்சி அதே இடத்தில் தெரிந்தது. நீர்வீழ்ச்சியில்
வேறு மூன்று இளைஞர்கள் குளித்துக் கொண்டிருப்பது போல் மங்கலாகத் தெரிந்தது. தீபக் திகைத்தான். அந்த மூன்று
இளைஞர்களையும் அவன் கூர்ந்து பார்த்தாலும் நீர்வீழ்ச்சியினூடே அவர்கள் மூவர் முகங்களையும்
அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. சில வினாடிகள் தெரிந்த
அந்தக் காட்சி பின் மறைந்தது. குளித்துக் கொண்டிருக்கையிலேயே அவனுக்கு குப்பென்று வியர்த்தது
போலிருந்தது. ஏன் இந்தக் காட்சி வருகிறது? யாரந்த
மூவர்?
நல்ல வேளையாக நண்பர்களும் குளியலை அனுபவித்துக்
கொண்டிருந்ததால் அவன் வித்தியாசமாக நடந்து கொண்டிருந்தாலும் அதை அவர்கள் கவனித்திருக்க
வாய்ப்பில்லை. அந்தக்
காட்சிக்குப் பிறகு தீபக் வேறெதாவது இப்படி வித்தியாசமாக நடக்கிறதா என்று மிகவும் கவனமாக
இருந்தான். சுற்றிலும் கேட்கும் உற்சாகக் கூச்சல்களும், நீர்வீழ்ச்சியின்
சத்தமும் எங்கோ கேட்பது போல் இருந்தது. அவன் கவனமெல்லாம்
சற்று முன் பார்த்த காட்சியிலேயே இருந்தது. அவர்களைப்
போலத் தான் அந்த மூன்று இளைஞர்களும் சந்தோஷமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக்
காட்சியில் அந்த மூவரைத் தவிர வேறு யாருமே இருக்கவில்லை.
அதன் பின் குளித்த குளியலில் தீபக்கின்
கவனம் பாதி தான் இருந்தது. மாலை நான்கரை மணிக்கு அங்கிருந்து கிளம்பினார்கள். நண்பர்களுடன்
பேசிக் கொண்டே காரையோட்டிக் கொண்டு வந்ததில் தீபக் மெள்ள அந்தக் காட்சியை மறந்து போனான். காரில்
சத்தமாக ஒலித்த பாடல்களும் நண்பர்கள் கூடப் பாடியதும் இயல்பான உற்சாக மனநிலையை ஏற்படுத்தி
விட்டிருந்தது. கார் சத்தியமங்கலத்தை நெருங்கியது.
திடீரென்று அருகில் அமர்ந்திருந்த நண்பன்
கேட்டான். “ஏண்டா, மெயின் ரோட்டுல இருந்து காரைத் திருப்பிட்டே?”
அப்போது தான் தீபக் பிரதான சாலையிலிருந்து
காரை ஒரு குறுக்குத் தெருவிற்குத் திருப்பியிருப்பதை உணர்ந்து அவனே திகைத்துப் போனான். ‘என்ன ஆயிற்று
எனக்கு?’
அசட்டுப் புன்னகை ஒன்றைப் பூத்தபடியே
தீபக் சொன்னான். “தெரியலடா. பாடிகிட்டே வந்ததில
எதோ ஒரு யோசனையில திருப்பிட்டேன்னு நினைக்கிறேன்.”
அருகிலிருந்த நண்பன் சொன்னான். “சரி விடு. அடுத்த
கட்ல திரும்பி மெய்ன் ரோடுக்கு ஜாயின் பண்ணிட்டா போச்சு”
தீபக் தலையசைத்தான். ஏன் இப்படி
ஆகியது என்று யோசித்தபடியே தீபக் காரை ஓட்டினான். அப்போது
தான் நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது தெரிந்த காட்சியும் சேர்ந்து குழப்பியது.
திடீர் என்று ஒரு வீட்டின் முன் கார்
நின்று விட்டது. “என்னடா ஆச்சு?” பின் சீட்டிலிருந்த
நண்பன் ஒருவன் கேட்டான்.
தீபக் குழப்பத்துடன் சொன்னான். “என்னன்னே
தெரியலடா” இன்று ஏனோ நடப்பது எதுவும் சரியில்லை என்று எண்ணியபடியே அவன்
கார் நின்ற இடத்திலிருந்த அந்த வீட்டைப் பார்த்தான். அது ஒரு
சிறிய பழைய வீடு. வெளி கேட்டுக்கும் வீட்டு வாசலுக்கும் இடையில் நிறைய காலி இடம் இருந்தது. காலி இடத்தில்
ஒரு கயிற்றுக் கட்டில் இருந்தது.
தீபக்கும் அவன் நண்பர்களும் பல விதங்களில்
காரைச் சோதித்துப் பார்த்து விட்டார்கள். காரில் எந்த விதத்திலும்
பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் காரைக்
கிளப்ப முடியவில்லை. தீபக்கின்
ஒரு நண்பன் சொன்னான். “பக்கத்துல கார் மெக்கானிக் யாராவது இருக்கானான்னு விசாரிக்கலாண்டா”
அப்போது தான் ஒரு முதிய தம்பதி அந்த
வீட்டுக் கேட்டை நெருங்கினார்கள். தீபக் அந்த முதியவரிடம் கேட்டான். “தாத்தா
பக்கத்துல கார் மெக்கானிக் யாராவது இருக்காங்களா?”
“இந்தத்
தெருக்கோடில ஒரு கார் மெக்கானிக் ஷாப் இருக்குப்பா” என்று பரந்தாமன்
கை காட்ட தீபக்கின் ஒரு நண்பன் அந்தத் திசையில் ஓடினான்.
“என்ன பிரச்சினை?” பரந்தாமன்
தீபக்கிடம் கேட்டார்.
“தெரியல
தாத்தா. கார்ல வந்துட்டிருந்தோம். திடீர்னு
கார் இங்கே நின்னுடுச்சு...”
பரந்தாமனும், அலமேலுவும்
தீபக்கைக் கூர்ந்து பார்த்தார்கள். அவன் பேசும் விதத்தில், முக்கியமாக
பேசும் போது கைகளை அசைத்த விதத்தில் அவர்கள் மகன் மாதவனை நினைவுபடுத்தினான். அவர்கள்
அங்கேயே நின்றார்கள். தீபக்குக்குத் தாகமாக இருந்தது. கார் ஜன்னல்
வழியே உள்ளே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தான். அது காலியாய்
இருந்தது.
அதைக் கவனித்த அலமேலு கேட்டாள். “தண்ணி வேணுமாப்பா?”
அன்பான புன்னகையுடன் கேட்ட அந்தப் பாட்டியிடம்
தீபக் ”ஆமாம் பாட்டி” என்றான்.
”வா தர்றேன்” என்று சொல்லி
அலமேலு உள்ளே போக தீபக் அவள் பின்னாலேயே போனான். அவனுக்கேனோ
அந்தப் பாட்டியை மிகவும் பிடித்து விட்டது. பரந்தாமனும்
உள்ளே போனார்.
தண்ணீர் தருவதற்குள் பரஸ்பரம் விசாரித்துக்
கொண்டார்கள். டாக்டருக்குப் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் அவர்கள், அந்தப்
பையனின் பெயர் தீபக், எல்லாரும் கோயமுத்தூரில் வசிப்பவர்கள், கொடிவேரி
நீர்வீழ்ச்சிக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து கொண்டிருப்பவர்கள் என்பதை அவர்கள்
தெரிந்து கொள்ள, தீபக்கும் அந்த முதிய தம்பதி தனியாக வசிக்கிறார்கள் என்றும்
அவர்களது ஒரே மகன் ஒரு விபத்தில் பல வருடங்களுக்கு முன் காலமாகி இருந்தான் என்பதைத்
தெரிந்து கொண்டான். தனிமையில் மகன் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த முதியோர்
இருவரையும் பார்க்கையில் பாவமாக இருந்தது.
அலமேலு கேட்டாள். “டீ சாப்டறீங்களா?”
தீபக்குக்கு அந்த வேளையில் டீ கிடைத்தால்
நன்றாக இருக்கும் என்று தோன்றினாலும் முன்பின் தெரியாத அந்த முதியோரைத் தொந்திரவு செய்வது
மரியாதையல்ல என்று தோன்ற “அதெல்லாம் வேண்டாம் பாட்டி.” என்றான்.
“ஏன்?” என்று அலமேலு
கேட்க தீபக் சொன்னான். “இப்ப மெக்கானிக் வந்துடுவான் பாட்டி. வண்டி ரெடியாயிடும்.”
“அதுக்குள்ளே
டீ பண்ணிடுவேன். எல்லாரும் டீ குடிப்பீங்க இல்லியா?”
தீபக் அந்தப் பாட்டியின் அன்பில் நெகிழ்ந்தவனாய்
சொன்னான். “குடிப்போம். ஆனா சும்மா உங்களுக்கு
எதுக்கு பாட்டி தொந்தரவு.”
“தொந்தரவெல்லாம்
இல்ல. நீங்கல்லாம் எங்க பேரன்கள் மாதிரி” என்றபடியே
அலமேலு சமையலறைக்கு
விரைந்தாள்.
தீபக் அங்கே சுவரில் பெரிதாக மாட்டி
இருந்த அந்த முதியவர்களின் மகன் புகைப்படத்தைப் பார்த்தான். உற்சாகமும், சந்தோஷமும்
நிறைந்ததாக அவர்கள் மகன் முகம் இருந்தது. அந்தப் புகைப்படத்தில்
இருந்த ஏதோ ஒன்று மிகவும் பரிச்சயமானதாகத் தோன்றியது. அது என்ன
என்று தீபக்கால் யூகிக்க முடியவில்லை.
(தொடரும்)
என்.கணேசன்
இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்-
https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV
சாணக்கியன் இரண்டு பாகங்களும் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அச்சகம் சந்திக்கும் எதிர்பாராத சூழல் காரணமாக மேலும் ஒரு வாரம் தாமதமாகும் போல் தெரிகிறது. வெளியானவுடன் அதை அறிவிக்கிறேன்.
அன்புடன்
என்.கணேசன்
Very interesting episode, amazing writing as usual Sir!
ReplyDeleteMoving into thrilling phase. Enemies are also active. Someway Madhavan and Madhavan's friends are also connected. How? Eagerly waiting for the next episodes.
ReplyDeleteEagerly waiting for next episode sir
ReplyDeleteஒருவேளை தீபக் மாதவனின் மகனாக இருப்பானோ...? பழைய சஸ்பென்ஸ் உடைந்தால் தான் தெரியும்....
ReplyDelete