சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, February 3, 2022

இல்லுமினாட்டி 140



ம்மானுவலின் இப்போதைய உத்தரவு ம்யூனிக் விமானநிலையத்திற்கு எட்டிக் கொண்டு இருக்கும் இக்கட்டான நேரத்தில் தான் விஸ்வம் விமானத்தில் இருந்து இறங்கினான். பரிசோதனை வரிசையில் அவன் அமைதியாகப் போய் நின்றான். அந்தக் கணம் வரை டேனியல் என்ற போதை மனிதனை அவர்கள் ம்யூனிக்கிலிருந்து கிளம்பும் விமானங்களில் பயணிப்பவர்களில் தான் தேடிக் கொண்டிருந்தார்கள். ம்யூனிக் வந்து சேரும் விமானப் பயணிகளில் அப்படி அவனை அவர்கள் தேடவில்லை. அதனால் வழக்கமான பரிசோதனைகள் மட்டுமே இருந்தன. போதை மருந்து உட்பட தடை செய்யப்பட்டிருக்கும் பொருள்கள் கடத்தப்பட்டிருக்கிறதா என்ற சோதனை மட்டும் தான் நடைபெற்று வந்தது. விஸ்வத்தையும் பரிசோதனை செய்த அதிகாரிகள் அப்படி எதுவும் அவனிடம் இல்லை என்பதை உறுதி செய்து விட்டு அனுப்பி வைத்தனர். அவன் அவர்களைத் தாண்டி வந்த போது தான் மைக்கேல் விக்டர் விமானநிலையத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தார். இருவர் விழிகளும் சந்தித்தன. விஸ்வம் நட்புடன் புன்னகைக்க அவர் அவனைத் திடீர் என்று அந்த இடத்தில் எதிர்பார்க்காத அதிர்ச்சியில் ஒரு கணம் சிலையாய் நின்றார்.

இங்கிருந்து விஸ்வம் வாஷிங்டன் செல்லும் போது புன்னகையோடு அனுப்பி வைத்த மனிதர் இப்போது புன்னகைக்காமல் அதிர்ச்சியில் உறைந்து நின்றதைப் பார்த்தவுடன் விஸ்வத்துக்குப் புரிந்து விட்டது. விஸ்வத்தை மீண்டும் பார்த்தால் பிடித்துக் கொடுக்கும்படி அவருக்கு உத்தரவு வந்திருக்க வேண்டும். விஸ்வம் ஒரு கணத்தில் அந்த இடத்தை ஆராய்ந்தான். அவனுக்கு வேண்டியிருந்தது சிறிது காலி இடம். ஆட்கள் இல்லாத இடம். எதுவும் தடுக்காமல் அவன் நகர முடிந்த இடம். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் அருகில் இருக்கும் அப்படிப்பட்ட சில அடி இடத்தை நோக்கிப் பாய்ந்தான்.

அவர் உரத்த குரலில் அவனைக் கைகாட்டியபடி கூவினார். “அவனைப் பிடியுங்கள்” ஆனால் அவன் அதற்குள் அவர் கைகாட்டிய இடத்திற்குப் பல அடிகள் தள்ளி  வேறு இடத்தை அடைந்திருந்தான். மைக்கேல் விக்டர் கை காட்டிய இடத்திற்கு அப்போது தான் வந்து சேர்ந்திருந்த ஒரு குண்டான மனிதனைப் பலரும் பாய்ந்து பிடித்தனர். பயந்து நடுங்கிய அந்த ஆளுக்கு என்ன நடக்கிறது ஏன் அவரைப் பிடிக்க அந்த சீருடை அணிந்த அதிகாரி கைகாட்டிக் கூவுகிறார் என்பது புரியவில்லை.

மைக்கேல் விக்டர் திகைத்தார். “இந்த ஆள் அல்ல” என்று கத்தியபடியே அவர் விஸ்வத்தைத் தேடினார். ஆனால் அவன் வளைந்து வளைந்து சென்று வாசலைத் தாண்டிக் கொண்டிருந்தான். மைக்கேல் விக்டர் மின்னல் வேகம் என்பதைப் படித்திருக்கிறாரே ஒழிய இது வரை பார்த்ததில்லை. இப்போது தான் பார்க்கிறார். எப்படி அவன் இத்தனை பேரைத் தாண்டி வாசலை அடைந்து விட்டான் என்று திகைத்தபடியே வாசலைக் காட்டுவதற்குள் விஸ்வம் அங்கிருந்தும் மறைந்து விட்டான். அதற்குள் அவருடைய சக அதிகாரிகள் எல்லாம் ஓடி அருகில் வந்தார்கள். “யாரைப் பிடிக்கச் சொல்கிறீர்கள்?”

மைக்கேல் விக்டருக்கு அவர்களுக்கு விளக்கிச் சொல்லும் நேரத்திற்குள் விஸ்வம் தப்பித்து விடுவான் என்று தெரியும். அதனால் டேனியல் என்று மட்டும் சொல்லிக் கொண்டே அவர் வாசலை நோக்கி ஓடினார். ஆனால் அவர் நுழைவாயிலை அடைவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. பல பேரை இடித்துக் கொண்டும், விலக்கிக் கொண்டும் போக வேண்டியிருந்தது. அவன் எப்படிப் போனானோ!

பலரும் பிடித்துப் பிறகு கைவிட்ட குண்டான ஆள் அதிர்ச்சியில் இருந்து மீண்டு “முட்டாள் முட்டாள்” என்று மைக்கேல் விக்டரைத் திட்டிக் கொண்டே வேகமாக நடந்தார். ஆனால் கால்கள் இப்போதும் அவருக்கு நடுங்கிக் கொண்டு தானிருந்தன.

மைக்கேல் விக்டர் வெளியே போய்ப் பார்த்த போது ஒரு வெள்ளைக் கார் மிக வேகமாக  அவர் கண்களை விட்டு மறைந்து போய்க் கொண்டிருந்தது. அவர் கையை நீட்டிய போது அது காணவில்லை. ஏமாற்றத்துடன் அந்தக் கையால் தலையைப் பிடித்துக் கொண்டார். அவர் வாழ்க்கையில் இப்படி கைக்குக் கிடைக்கவிருந்த ஒருவனை அவர் நழுவ விட்டதில்லை. மாரத்தான் ஓடிக் கொண்டிருந்த அவர் இதயத்துடிப்பை ஆசுவாசப்படுத்துவதற்கு முன் அவர் இம்மானுவலுக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னார்.

இம்மானுவல் திகைப்புடன் கேட்டுக் கொண்டபடி எழுந்து நின்றான்.

எர்னெஸ்டோ கேட்டார். “என்ன விஷயம்?”

”விஸ்வம் வாஷிங்டனிலிருந்து ம்யூனிக் வந்து விட்டான். மைக்கேல் விக்டர் பிடிக்க முயற்சி செய்வதற்குள் தப்பி விட்டான்…”

எர்னெஸ்டோ முணுமுணுத்தார். “சைத்தான்”

இம்மானுவல் மைக்கேல் விக்டரிடம் சொன்னான். “வெளியே இருந்த சிசிடிவி கேமிராவில் அந்தக் கார் நம்பரைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள். எல்லா இடங்களுக்கும் தகவல் சொல்கிறேன். பிடிக்கப் பார்ப்போம்.” அப்படிச் சொன்னாலும் அவனுக்கு அப்படிப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கவில்லை.



ஜிப்ஸி விஸ்வத்தைப் பாராட்டினான். “பரவாயில்லை. நீ சாதித்து விட்டாய்”

விஸ்வம் அதில் பெருமையடைந்து விடவில்லை. அவன் சிறு வருத்தத்துடன் சொன்னான். “சாதிக்க முடிகிறது. ஆனால் முடிந்த உடனே இந்த உடல் மிகவும் களைத்துப் போகிறது. இது சரியான சமநிலைக்கு வர நிறைய நேரம் தேவைப்படுகிறது.”

ஜிப்ஸி சொன்னான். “உன்னைப் போல் ஒவ்வொருவனும் தன்னிடம் எதிர்பார்த்து வாழ்ந்தால் உங்கள் உலகம் எத்தனையோ மடங்கு முன்னேறி விடும்”

விஸ்வம் உலகத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டான். பழைய உடலில் இது போன்ற ஒரு வேலை செய்து விட்டு இயல்பான நிலைமைக்குத் திரும்ப அதிகபட்சமாய் ஒரு நிமிடம் தான் ஆகும். ஆனால் இந்த உடல் அதற்குப் பத்து நிமிடம் வரை எடுத்துக் கொள்கிறது. ஆனால் சிறிது நேர ஓட்டத்திற்குப் பிரச்சினை தருவதில்லை என்பது ஒரு நல்ல விஷயம். இத்தனையும் இந்த ஜிப்ஸியின் உதவி இருப்பதால் தான் சமாளிக்க முடிகிறது. அவன் மட்டும் விஸ்வம் வெளியே ஓடி வரும் போது காரின் கதவையும் திறந்து வைத்துத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கா விட்டால்  இன்னேரம் அவர்களிடம் விஸ்வம் பிடிபட்டிருப்பான்.

ஜிப்ஸி ஆளில்லா இடத்தில் காரை நிறுத்தினான். முன்பே தயாராய்  வைத்திருந்த வேறு நம்பர் ஸ்டிக்கர்களை எடுத்துக் கொண்டு இறங்கி இரண்டு நம்பர் ப்ளேட்கள் மீதும் ஒட்டினான். அவன் ஒட்டிக் கொண்டு இருக்கும் போது விஸ்வம் முன்சீட்டிலிருந்து பின்சீட்டுக்கு வந்து படுத்துக் கொண்டான். பிறகு அவர்கள் கார் மிதமான வேகத்தில் போக ஆரம்பித்தது.  

போகும் போது ஜிப்ஸி சொன்னான். “நண்பா. நான் இன்னும் சில நாட்கள் தான் இருப்பேன். பிறகு போய் விடுவேன்.”

அதைக் கேட்ட விஸ்வத்துக்கு மிகவும் மனக்கஷ்டமாய் இருந்தது. அவன் இது வரை யாரிடமும் இவ்வளவு நெருங்கி இருந்ததில்லை. நெருங்கி இருந்த ஒரே ஒருவனும் சீக்கிரமே போய் விடுவான் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.  “ஏன்” என்று கேட்டான்.

“விருந்தாளிகள் நிரந்தரமாய்த் தங்கி விட முடியாது நண்பா”

“நீ வந்த வேலை முடிந்து விட்டதா?”

“முடியப் போகிறது...”

“அது என்ன வேலை என்பதை இப்போதாவது சொல்வாயா?”

“போவதற்கு முன் கண்டிப்பாகச் சொல்வேன். நண்பா..”

“நான் அடையப்போகும் வெற்றிகளைப் பார்த்து சந்தோஷப்பட நீ ஒருவன் தான் இருக்கிறாய். நீயும் போய் விட்டால் எனக்குச் சந்தோஷத்தில் பங்கு கொள்ளவும் ஆள் இருக்காது நண்பா” விஸ்வம் உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னான். இது போன்ற உணர்வுகள் அவனுக்குப் புதிது. பிரிவு கஷ்டப்படுத்துவதும் அவனுக்குப் புதிது தான். ஆனாலும் முதல் முறையாக அந்த உணர்வுகளை அவன் உணர்ந்தான்.

ஜிப்ஸி சொன்னான். “நீ வெற்றி பெறா விட்டால் இந்த உலகத்தில் யாருமே  வெற்றி பெற முடியாது. நீ பெறப்போகும் வெற்றிகளுக்காக நான் இப்போதே சந்தோஷப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். நான் என் உலகிற்குப் போனாலும் நீ இங்கே வெற்றி மீது வெற்றி பெற்றுக் கொண்டு தான் இருப்பாய் என்பதை உணர்ந்து கொண்டு தான் இருப்பேன்...”

பின் சர்ச் போய்ச் சேரும் வரையில் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ஒரு கனத்த மௌனம் அவர்களுக்குள் நிலவியது.

(தொடரும்)
என்.கணேசன்

5 comments:

  1. Viswam is definitely the most powerful villain you have so far created. I admire him. What next? Eagerly waiting.

    ReplyDelete
  2. 10 நிமிடத்துக்கே விஸ்வத்திற்கு பொறுத்துக்கொள்ள முடியவில்லை.. ஆனால் நாமெல்லாம் தெரிந்தே எவ்ளோ நாட்களை வீணாக்கி கொண்டிருக்கிறோம்..

    Negative role ஐயும் வியந்து பார்க்க வைக்க உங்களால் மட்டும் தான் முடியும் sir..

    இப்படிபட்ட படைப்பை கொடுக்ற உங்களோட mind எவ்ளோ sharp and healthy ஆ இருக்கும் sir..

    Greaaaattttttt sir...

    ReplyDelete
  3. எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும்... விஸ்வம் போல் தான் இருக்க வேண்டும்...
    இந்த இரண்டு தொடர்களிலும் விஸ்வம் தான் கதாநாயகன்...

    ReplyDelete
  4. As gypsy says, viswam is going to win means I expect the success of viswam in part 2 and the end of this novel may lead to beginning of part 3 also. We all will be happy that if it happens to be continued to part 3.

    ReplyDelete