தீபாவளி நல்வாழ்த்துகள்!
ரஞ்சனி குளிக்கப் போயிருந்தாள். தீபக் கல்லூரிக்குப்
போக உடைமாற்றிக் கொண்டிருந்தான். அவள் அருகில் இல்லாத போது தீபக்கிடம் அவர்களுடைய சற்று முந்தைய
பேச்சின் ஆரம்பத்தைத் தெரிந்து கொள்வது நல்லதென்று சராத்துக்குத் தோன்றியது. சரத் தீபக்கின்
அறைக்குப் போய் சுவாரசியமாய் தோன்றும் கதையைக் கேட்பது போல் கேட்டான். “அந்தப்
பாம்பு மனிதன் என்ன சொல்றான் தீபக்? இன்னைக்கு எதுவும்
அருள்வாக்கு சொல்லலையா?”
தீபக் உடைமாற்றியபடியே சொன்னான். “என் கனவுல
வந்த ஆத்மா ஒரு கவிதைப்பிரியனாம்ப்பா. நாகராஜ் அங்கிளுக்கு
அந்த ஆத்மா யாரோ ஒரு பெண்ணோட கவிதையை ரசிச்சுக் கேட்டுகிட்டிருக்கிற மாதிரி காட்சி
தெரியுதாம்.”
சரத்துக்குத் தலைசுற்றுவது போலிருந்தது. அங்கிருந்த
நாற்காலியை ஆதரவாய்ப் பிடித்துக் கொண்டான்.
தீபக் கண்ணாடியைப் பார்த்து தலைமுடியைக்
கையால் நேர்ப்படுத்திக் கொண்டே புன்னகையோடு சொன்னான். “அம்மாவுக்கும்
அந்த அங்கிள் கிட்ட ஏதோ கேட்கணும்னு ஆர்வமாயிடுச்சு. அவரைச்
சந்திக்கணுமாம்...”
தீபக் திரும்பி அவனைப் பார்த்தபோது
சகல சக்தியையும் திரட்டிக் கொண்டு சரத்தும் புன்னகைத்தான். தீபக்கும்
புன்னகைத்து விட்டுக் கல்லூரிக்குக் கிளம்பினான். “சரிப்பா. நான் கிளம்பறேன்...
நேரமாயிடுச்சு”
அன்று கல்யாண் ஆபிசுக்கு நேரம் கழித்து
தான் வந்தான். அவனிடம் விஷயத்தைச் சொல்லும் வரை சரத்துக்குப் பொறுத்திருக்க
முடியவில்லை. சரத் சொன்னதைக் கேட்டு கல்யாண் திகைத்தான்.
சரத் சொன்னான். “அந்த நாகராஜ்
ஆபத்தான ஆளாய் தெரியறான் கல்யாண். யோசிச்சுப் பார். அவன் வந்த
பிறகு தான் நம்ம ரெண்டு பேருக்குமே அந்த மொட்டைக்கடுதாசி வந்துச்சு. இப்ப என்னடான்னா
தினம் ஒரு விஷயமாய் ஏதோ ஒன்னை தீபக் கிட்ட அவன் சொல்லிகிட்டு வர்றான். எனக்கென்னவோ
அவன் நம்ம கடந்த காலத்தைத் தெரிஞ்சுகிட்டு ப்ளாக்மெயில் பண்ண வந்த மாதிரியே தோணுது’
கல்யாண் சொன்னான். “நினைச்சா
ஒரு நாளைக்கு அவன் எத்தனை லட்சம் வேணும்னாலும் சம்பாதிக்கற நிலைமைல இருக்கான் சரத். அவனா தான்
அஞ்சு லட்சத்தோட நிறுத்தியிருக்கான். அப்படியிருக்கறவனுக்கு
நம்மள ப்ளாக்மெய்ல் பண்ணி என்ன கிடைக்கப் போகுது. யோசிச்சு
பாரு.”
அவன் சொல்வதும் சரத்துக்குச் சரியாகத்தான்
தோன்றியது. கல்யாண் நண்பனை மிக நெருங்கி, தாழ்ந்த
குரலில் சொன்னான். “நீ பயப்படற மாதிரி பழச யாருமே தெரிஞ்சுக்க வழியில்லை. அதுக்கான
எந்தத் தடயமும் இல்லை. போலீஸ் ரிகார்ட்ஸ்ல கூட நமக்குப் பாதகமாய் எதுவுமில்லை. வருஷமும் 22
ஓடிடுச்சு. இத்தனை காலம் கழிச்சு யார் என்ன தெரிஞ்சுக்க முடியும்? அதுக்கு
என்ன ஆதாரம் இருக்கு?”
“நீ சொல்றது
சரி தான். ஆனாலும் ரஞ்சனி நாகராஜ் கிட்ட பேசறதும், அவன் நாம
எதிர்பார்க்காத ஒன்னை அவகிட்ட சொல்றதும் ஆபத்தாய் தான் படுது.”
கல்யாண் சொன்னான். “தீபக் கிட்ட
அதிசயமா நாகராஜ் பேசறான்கிறதுக்காக தீபக்கோட அம்மா கிட்டயும் அவன் பேசுவான்னு சொல்ல
முடியாது. அப்டியும் தீபக் கட்டாயமாய் முயற்சி செஞ்சா நாகராஜ் தீபக்
கிட்ட பேசறதைக் கூட நிறுத்திக்கற ரகமாய் தான் தெரியுது...”
தீபக்குக்கும் அந்தப் பயம் இருந்ததை
ரஞ்சனியிடம் சொல்லியிருந்தது சரத்துக்கு நினைவு வந்து சிறிது நிம்மதியாயிற்று. ஆனாலும்
முயற்சி செய்வதாய் தீபக் சொன்னது தான் கொஞ்சம் நெருடலாக இருந்தது.
சரத் கேட்டான். “அந்த டிடெக்டிவ்
ஏஜென்ஸியோட ரிப்போர்ட் வந்துச்சா?”
கல்யாண் சொன்னான். “நேத்து
தான் வந்துச்சு...” நாகராஜிடம் இருக்கும் நாகரத்தினங்களைப் பற்றிச் சொல்வதைத்
தவிர்த்து மற்ற விஷயங்களை கல்யாண் விவரமாய்ச் சொன்னான். எல்லாவற்றையும்
கேட்டுக் கொண்ட சரத் அங்கலாய்த்தான். “இத்தனை சக்தியும்
செல்வாக்கும் இருக்கிறவன் ஏன் கோயமுத்தூர் வந்திருக்கான், நாம இருக்கிறபக்கமே
குடிவந்திருக்கான்னு தெரிஞ்சிருந்தா நல்லாயிருந்திருக்கும்.”
”அதையே தான்
நானும் நினைச்சேன்... இதுவரைக்கும் சக்திகளிருக்கிறதா சொல்ற எத்தனையோ சாமியார்களைப்
பார்த்திருக்கேன். இவனை மாதிரி யாரும் நாகப்பாம்பு வளர்த்தி சக்தி கிடைச்சதா
கேள்விப்பட்டது கூட இல்லை. அவனாய் தன்னை சாமியாராவும் சொல்லிக்கலை. அவன் ஆசிரமத்துலயும்
அப்படிச் சொல்லலை. ஆனாலும் அவனை அப்படித்தான் அந்த பக்தர்கள் எல்லாம் நடத்தறாங்க. அவன் விஷயத்துல
எல்லாமே குழப்பமாய் தான் இருக்கு”
சில வினாடிகள் இருவரும் மவுனமாக இருந்தார்கள். பின் சரத்
கேட்டான். “நாகராஜ் இப்பவும் பாம்புகளோட தான் வாழ்றானா?”
“அப்படி
தான் தெரியுது. சில நாள் பாம்பு சீறுற சத்தம் கேட்கறதா எங்கப்பா சொல்றார்..”.
பியூன் அறைக்குள் எட்டிப் பார்த்தான். “சார் உங்க
ரெண்டு பேருக்கும் ரிஜிஸ்டர் தபால் வந்திருக்கு”
இருவரும் திகைத்தார்கள். கல்யாண்
தலையசைக்க தபால்காரர் உள்ளே வந்தார். இருவரும் கையெழுத்துப்
போட்டு தபாலைப் பெற்றுக் கொண்டார்கள். அந்தத் தபால்கள்
உளவுத்துறையிலிருந்து வந்திருந்தன. இருவருமே பதற்றத்துடன்
பிரித்துப் படித்தார்கள்.
“அன்புடையீர்,
பல ஆண்டுகளுக்கு முன் மணாலியில் நடந்த
வெடிகுண்டு வெடிப்பு சம்பந்தமாக விசாரிக்க எங்கள் அதிகாரி ஒருவர் வரும் இருபதாம் தேதி
அன்று காலை பதினோரு மணிக்கு இந்த விலாசத்திலேயே தங்களைச் சந்திக்கவிருக்கிறார். அந்த நாளில்
அந்த நேரத்தில் தவறாமல் இருந்து அந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக்
கொள்கிறோம். நன்றி.
இப்படிக்கு
. .. . . ..”
சரத்துக்குக் குப்பென்று வியர்த்தது. அடிவயிற்றில்
கலக்கத்தை உணர்ந்த அவன் சுதாரித்துக் கொள்ள சில நிமிடங்கள் தேவைப்பட்டன. கல்யாணுக்கும் அவன்
உணர்ந்த மனக்கலக்கத்தை மறைத்துக் கொள்ள முடியவில்லை. அவன் காலண்டரைப்
பார்த்தான். நாளை தான் இருபதாம் தேதி. நாளை தான்
விசாரணைக்கு எவனோ ஒரு உளவுத்துறை அதிகாரி வருகிறான்...
“இத்தனை
வருஷம் கழிச்சு ஏன் இப்ப திடீர்னு இந்த விசாரணை கல்யாண்?” சரத் கேட்டான்.
கல்யாண் வறண்ட குரலில் சொன்னான். “தெரியலை. யாராவது
மொட்டைக் கடுதாசி எதாவது போட்டிருக்கலாம்.... நமக்கு
மொட்டைக் கடுதாசி அனுப்பிச்ச ஆளே கூட அதைச் செஞ்சிருக்கலாம்...”
சரத் குரல் நடுங்கக் கேட்டான். “மொட்டைக்
கடுதாசியை எல்லாம் உளவுத்துறைல சீரியஸா எடுத்துக்குவாங்களா..?”
கல்யாண் உடனடியாகப் பதில் சொல்லாமல்
யோசித்தான். யோசிக்க யோசிக்க முன்பே அவன் சரத்திடம் சொன்னபடி பயப்பட வலுவான
காரணங்கள் இல்லை என்று தோன்றியது. அவன் அமைதியாகச் சொன்னான். “இது நாம
நினைக்கிற மாதிரி நம்ம விஷயமாய் விசாரிக்க வர்ற மாதிரி தெரியலை சரத். அந்த சமயத்துல
ஒரு வெடிகுண்டு தீவிரவாதி பத்தின பேச்சு அடிபட்டது உனக்கு ஞாபகம் இருக்கா? அவனுக்காக
தான் இதைப் பத்தி விசாரிக்க வர்றாங்கன்னு நினைக்கிறேன். வந்த ஆள்
எப்படி மாத்தி மாத்திக் கேட்டாலும் கேட்கற கேள்விகளுக்கு நாம ரெண்டு பேரும் அன்னைக்குச்
சொன்னது போல ஒரே மாதிரி பதில் சொல்லணும். அது ரொம்ப முக்கியம். ஒருவிதத்துல
இந்தக் கடிதம் வந்திருக்கறது கூட நல்லது தான். நாம நம்மளைத்
தயார்ப்படுத்திக்க நமக்கு நேரம் கிடைச்சிருக்கு”
சரத் தலையசைத்தான். ஏன் பயப்பட
வேண்டியதில்லை என்பதை கல்யாண் காரணங்களோடு அவனுக்கு விளக்கவும் ஆரம்பித்தான். இருவரில்
சரத் தான் மனதளவில் பலவீனமானவன். அவன் பயந்து போய் உளற ஆரம்பித்துவிடக்கூடாது என்பது கல்யாணுக்கு
மிக முக்கியமாக இருந்தது. கல்யாண் அறிவுபூர்வமாக விளக்க விளக்க சரத் தைரியம் பெற ஆரம்பித்தான். சொல்லப்போனால்
அவன் அந்தப் பாம்பு மனிதனுக்குப் பயப்பட்டது போல போலீஸுக்கோ உளவுத்துறைக்கோ பயப்படவில்லை.
கல்யாண் பேசி முடித்த போது சரத் முழு
தைரியமடைந்திருந்தான். கல்யாண் ஒரு உளவுத்துறை அதிகாரி எப்படியெல்லாம் கேட்கக்கூடும்
என்று யூகித்து மாறி மாறி கேள்விகள் கேட்டு அவன் சொன்ன பதில்களால் திருப்தி அடைந்தான். இனி யார்
வந்து எப்படிக் கேட்டாலும் அவர்களுக்குக் கவலையில்லை.
(தொடரும்)
என்.கணேசன்
Gr8.
ReplyDeleteSuper bonus. Thank you.
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteமிக்க நன்றி ஐயா... தீபாவளி நல்வாழ்த்துக்கள்....
ReplyDeleteசரத் மற்றும் கல்யாண் ஏதோ தவறை செய்துவிட்டு.... இப்போது அதன் விளைவு அவர்களை துரத்தி துரத்தி தாக்குகிறது....
ReplyDeleteHappy diwali
ReplyDeleteதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteHappy Deepavali to Great Ganesan and all readers of this family. Have a happy and healthy life.
ReplyDelete