சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, November 11, 2021

இல்லுமினாட்டி 128


ஜிப்ஸி வந்தவுடன் விஸ்வம் அந்த இரகசியச் சுவடியில் இருந்த வாசகங்களை அவனிடம் தெரிவித்தான். சுவாரசியத்துடன் அவன் அவற்றைக் கேட்டுக் கொண்டானே ஒழிய அது குறித்து கருத்து எதுவும் சொல்லவில்லை. விஸ்வம் சிறிது பொறுத்துப் பார்த்து விட்டுக் கேட்டான். “நீ என்ன நினைக்கிறாய்?”

இந்த முறை உனக்குச் சாதகமாகத் தான் எழுதப்பட்டிருக்கிறது என்பது சந்தோஷமான விஷயம்

விஸ்வம் சொன்னான். “சென்ற முறை எழுதப்பட்டிருந்ததும் எனக்குச் சாதகமாகத் தான் இருந்ததாக நான் நினைத்தேன்...”

ஜிப்ஸி புன்னகைத்தான். “சென்ற முறை இமயத்தின் தெற்கிலிருந்து வருபவன் என்று சொன்னதால் அதில் க்ரிஷும் பொருந்தினான். ஆனால் இந்த முறை மறுபிறவி மனிதன் என்று சொன்னது உன்னைத் தவிர வேறு யாருக்கும் பொருந்தாது. அதனால் நீ சந்தேகப்பட வேண்டியதில்லை...”

விஸ்வம்பெருவிழியில் பெரும் சக்தி  பெறுவான்என்ற வாசகம் எதைச் சொல்கிறது என்று கேட்க நினைத்தான். பின் அந்த எண்ணத்தைக் கைவிட்டான். ’அதிமுக்கியத் தேவை என்றால், வேறு வழியே இல்லை என்றால்,  கேட்க வேண்டும். மற்றதை எல்லாம் இவனிடமே ஆனாலும் கேட்கக்கூடாது. நானாகத் தான் கண்டுபிடிக்க வேண்டும்.  பல சமயங்களில் உதவி செய்ய ஆட்கள் இருப்பதே நம் ஆற்றலைக் குறைத்து விடுகிறது...’ என்று நினைத்துக் கொண்ட அவன் ஜிப்ஸியிடம் கேட்டான். “நண்பா. நான் நாளை வாஷிங்டன் செல்கிறேனே. நீ அங்கே எங்கே காணக் கிடைப்பாய்

நீ ஓட்டல் போய்ச் சேரும் போது நான் அங்கிருப்பேன்...” என்று ஜிப்ஸி சொன்னான். அப்போதும் எப்படி வந்து சேர்வேன் என்று அவன் சொல்லவில்லை.

விஸ்வம் கேட்டான். “க்ரிஷின் வேற்றுக்கிரகவாசி நண்பன் அவனை அமேசான் காடுகளுக்கு இரண்டு நிமிடங்களில் கொண்டு போய்ச் சேர்த்த மாதிரி நீயும் என்னை ஏன் வாஷிங்டன் ஏன் கொண்டு போய் விட்டிருக்கக் கூடாது

ஜிப்ஸி புன்னகைத்தான். அவனை அடையாளம் கண்டுபிடித்து விட்டதை விஸ்வம் நேரடியாகச் சொல்லாமல் இப்படிக் கேட்டதை அவன் ரசித்த மாதிரி இருந்தது. அவன் புன்னகை மாறாமல் சொன்னான். “க்ரிஷ் உயிருக்கு ஆபத்து வந்த போது சாதாரணமாய் பயணம் செய்ய முடியாத நிலைமையில் தான் அப்படி அந்த நண்பன் அழைத்துப் போனான்....”

விஸ்வமும் புன்னகைத்தபடி கேட்டான். “அப்படியானால் என் உயிருக்கும் ஆபத்து என்று வந்தால் நீயும் என்னைக் காப்பாற்ற அழைத்துப் போயிருப்பாயா?”

ஆமென்று ஜிப்ஸி தலையசைத்தான். விஸ்வம் சொன்னான். ”ஆனால் அவன் நண்பன் சரியானபடி அறிமுகப்படுத்திக் கொண்டு தான் அவனிடம் நட்பானான். நீ உன்னைச் சரியாக அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. எனக்கு உன்னைப் பற்றி யூகங்கள் தான் இருக்கிறதே ஒழிய வேறு விவரங்களோ, உன் நோக்கமோ இன்னும் தெளிவாகத் தெரியவில்லை...”

ஜிப்ஸி சொன்னான். “சில நாட்கள் பொறு. உனக்கு எல்லாமே தெரியவரும்...” சொன்னவன் இனி அங்கிருந்தால் அடுத்து ஏதாவது விஸ்வம் கேட்கக்கூடும் என்று நினைத்தவன் போலநாளை நம் பயணத்திற்குக் காரில் பெட்ரோல் போட்டுக் கொண்டு வருகிறேன்என்று சொல்லி அங்கிருந்து போய் விட்டான். விடை தெரியாத கேள்விகளைச் சகிக்க முடியாத  விஸ்வம் அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான். மறுபடி அந்தச் சுவடியின் வாசகங்களை வரிக்கு வரி நினைவுக்கு அவன் கொண்டு வந்தான்.  முடிவை விதி அவ்விருவர் மூலம் முடிவு செய்யும் என்று எழுதியிருந்ததில் மனம் தங்கி அதிருப்தி அடைந்தது. கடைசியிலும் முடிவு செய்வது விதி தானா?  வாங் வே அந்த வாசகங்களைச் சொன்ன போது ஏற்பட்டிருந்த உற்சாகம் இப்போது அவனுக்குக் குறைய ஆரம்பித்தது.

இந்த சர்ச்சுக்கு வந்த போது விதியே இங்கே இழுத்து வந்திருப்பதாக ஜிப்ஸி சொன்ன போது அவன் சொன்னது அவன் அந்தராத்மாவின் குரலாக இருந்தது. ”நான் இழுக்கிற இடத்திற்கு விதி வந்து சேர வேண்டும் என்று நினைக்கிறவன் நான்... என் வாழ்க்கைக்கான பொறுப்பை விதிவசம் ஒப்படைக்க எனக்கு விருப்பம் இல்லை

அதைக் கேட்டு ஜிப்ஸி சொன்னது இப்போதும் அவனுக்கு வார்த்தைக்கு வார்த்தை நினைவிருக்கிறது. “நம் விருப்பப்படியே எல்லாம் நடந்து விடுவதில்லை. வாழ்க்கை என்பதே விதியும், நாமும் சேர்ந்து விளையாடுகிற ஒரு ஆட்டம் தான். பாதி விதி ஆடுகிறது. மீதி நாம் ஆடுகிறோம். இதில் தவிர்க்க முடியாத அம்சம் ஒருவர் விட்ட இடத்தில் தான் இன்னொருவர் தொடர வேண்டி இருக்கிறது என்பது தான். அதனால் வாழ்க்கை முழுவதுமே விதி ஆடி விடுவதில்லை ஒரு காயை நகர்த்தி விட்டு நீ ஆடவும் வாய்ப்பு தருகிறது. நீ தீர்மானித்து ஆடி முடித்த பின் அதுவும் சிலதைத் தீர்மானிக்கும். அதை நீ மறுக்க முடியாது  

இப்போது அவன் ஆடி முடித்த பிறகு விதியும் ஆடுமா? அது எப்படிக் காய்களை நகர்த்தும்? விதி முடிவு செய்வது இவர்களிருவர் என்று இந்த ஜிப்ஸியையும் சேர்த்திருக்கிறதே? இவன் கடைசியில் விஸ்வத்துக்குப் பதிலாகத் திடீரென்று காய்களை நகர்த்தி விடமாட்டான் அல்லவா? இந்த சர்ச்சுக்கு வந்த போதுஅபாயம்என்று ஒரு பறவை தன் மொழியில் கிறீச்சிட்டதும் நினைவுக்கு வர பழைய உற்சாகம் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்தது.

மனம் தான் எத்தனை விசித்திரமானது என்று விஸ்வம் வியந்தான். சூழல் எதுவும் மாறாமலேயே, பார்க்கின்ற கோணங்கள் மாறும் போது கூட எல்லாமே மாறிப் போகிறது. சந்தோஷம் போய் சந்தேகம் வந்து விடுகிறது. தனி ஒருவனாய் அவன் நின்று எல்லாவற்றையும் தீர்மானிக்க முடியும் போது மட்டுமே அதை அவன் வெற்றியாக உணர முடியும். அந்த ஒரு நாளை அவன் சீக்கிரம் அடைவான். அதற்காக அவன் எதையும் செய்வான்...


ர்னீலியஸ் பல நாட்கள் கழித்து அமைதியை உணர்ந்தார். இனி இறந்தாலும் பரவாயில்லை என்று நினைத்தார். அவருடைய கடமையை அவர் செய்து முடித்து விட்டார். அவர் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் பழி வராமல் அவர் காத்துக் கொண்டு விட்டார். இல்லுமினாட்டி மீதியைப் பார்த்துக் கொள்ளும்.  அழைப்பு மணி அடித்தது. அவர் சென்று கதவைத் திறந்த போது ஒரு கன்னியாஸ்திரி நின்று கொண்டிருந்தார்.

வணக்கம் ஐயா. நாங்கள் ஏழைக் குழந்தைகளுக்காக ஒரு பின் தங்கிய பகுதியில் ஒரு நூலகம் துவங்குவதாக உள்ளோம். தாங்கள் அந்த நூலகத்திற்கு ஏதாவது ஒரு நூலையாவது நன்கொடையாகத் தர முடிந்தால் உதவியாக இருக்கும்

கர்னீலியஸ் உதவ முடிந்த கோரிக்கையை எடுத்துக் கொண்டு அந்தக் கன்னியாஸ்திரி வந்ததில் மிக மகிழ்ச்சியடைந்தார். அவரிடம் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. சில புத்தகங்களை அவர் திரும்பப் படிக்கப் போவதில்லை. அவற்றை நன்கொடையாகத் தந்தால் அந்த ஏழைக் குழந்தைகளுக்காவது உதவியாக இருக்கும். அந்த கன்னியாஸ்திரி கையில் இருந்த பெரிய பையில் சில புத்தகங்கள் தான் இருப்பதைப் பார்த்தார். ”உள்ளே வாருங்கள். அமருங்கள்.” என்று அவர் சொல்ல அந்தக் கன்னியாஸ்திரி நன்றி சொல்லி உள்ளே வந்தமர்ந்தார்.

கர்னீலியஸ் தன்னுடைய அறைக்குப் போய் புத்தக அலமாரிகளில் இருந்த எண்ணற்ற புத்தகங்களில் இருந்து சில புத்தகங்களைத் தேடி எடுக்க ஆரம்பித்தார். அந்த சமயத்தில் அவர் வீட்டு வாசலில் ஒரு இளைஞன் வந்து நின்றான். கன்னியாஸ்திரி அவர் போயிருந்த அறையைச் சைகையால் அந்த இளைஞனுக்குக் காட்டினாள்.

அவன் வேகமாக உள்ளே வந்து அவருடைய அறைக்கு அருகே இருந்த அறைக்குள் சத்தமில்லாமல் புகுந்து கொண்டான். ஐந்து நிமிடம் கழித்து கர்னீலியஸ் மெல்ல அறையிலிருந்து பத்து புத்தகங்களுடன் வெளியே வந்தார். 

கன்னியாஸ்திரி அவர் அத்தனை புத்தகங்கள் நன்கொடையாகத் தருவார் என்று எதிர்பார்க்காத பாவனையையும், நன்றியையும் முகத்தில் காட்டினாள். “மிக்க நன்றி ஐயாஎன்று வாங்கிப் பையில் அடுக்கி வைத்தாள்.

(தொடரும்)
என்.கணேசன்



6 comments:

  1. Tension is building. They are going to kill Cornelius I think.

    ReplyDelete
  2. சூழல் எதுவும் மாறாமலேயே, பார்க்கின்ற கோணங்கள் மாறும் போது கூட எல்லாமே மாறிப் போகிறது. சந்தோஷம் போய் சந்தேகம் வந்து விடுகிறது
    - அருமை

    ReplyDelete
    Replies
    1. Yes, very interesting viewpoint!

      Delete
  3. Solomon pola thappu senji sethu ponaalum parava illa..,

    But Cornelius entha thappum pannaama avaroda vaazhkai mudiyarthu yethukka mudila sir..

    ReplyDelete
  4. Cornelius murder will create new suspicions at Girish side?!

    ReplyDelete
  5. மனம் பார்க்கின்ற கோணம்‌ மாறும் போது எல்லாமே மாறுகிறது.... அருமை🙏🙏🙏

    எதிரி கர்னிலியஸ் வீட்டுக்கு வரும் போது தொடரும் போட்டுட்டிங்க... அப்ப அங்க ஏதோ வித்தியாசமாக நடக்கப்போகிறது...என்று நினைக்கிறேன்....

    ReplyDelete