சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, July 26, 2021

யாரோ ஒருவன்? 42


ரத் தீபக்கின் வரவுக்காகப் பொறுமையில்லாமல் காத்துக் கொண்டிருந்தான். அவனால் உட்கார்ந்திருக்க முடியவில்லை. வெளியே காத்து நிற்கவும் முடியவில்லை. செய்தித்தாள் படிக்க முடியவில்லை. தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பதிலும் கவனம் போகவில்லை. சிறிது நேரம் உட்கார்வது, சிறிது நேரம் வெளியே நிற்பது, சிறிது நேரம் தொலைக்காட்சியில் சேனல்கள் மாற்றுவது, சிறிது நேரம் செய்தித்தாளைப் புரட்டுவது என்று மாறி மாறி ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருந்தான். நேற்று காலை சீக்கிரமாகவே தீபக் நடந்து முடிந்து வந்திருந்தான். நாகராஜ் சொன்னதை சொல்லி முடித்திருந்தான். இன்று ஏனோ இன்னமும் காணோம்...

ரஞ்சனி கேட்டாள். “நீங்க ஏன் இன்னும் வாக்கிங் போகாமலிருக்கீங்க?”

சரத்துக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. எதைச் சொன்னாலும் அடுத்த கேள்வி கண்டிப்பாக எழும். ஆனால் அந்த அடுத்த கேள்விக்குச் சொல்ல அவனிடம் பதில் இல்லை. மெல்லச் சொன்னான். “இதோ கிளம்பிட்டேன்

 நல்ல வேளையாக தீபக் வாசலில் தெரிந்தான்.  ரஞ்சனி மகனிடம் கேட்டாள். “ஏன்டா லேட்

அவளும் மகன் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தாள் போலிருக்கிறது

வாக்கிங் முடிஞ்சு அப்படியே தர்ஷினி வீட்டுக்குப் போயிட்டு வந்தேன். அதான்”  என்றபடி உள்ளே வந்த தீபக் உடனடியாக அம்மாவிடம் சொல்ல ஆரம்பித்தான். “அம்மா இன்னைக்கு அந்த நாகராஜ் அங்கிள் என்ன சொன்னாரு தெரியுமா?... …”

சரத் தீபக் சொன்னதை எல்லாம் இதயம் படபடக்கக் காது கொடுத்து கேட்டான்அவனுக்கு அந்த நாகராஜ் அபாயகரமான ஆசாமியாய் தெரிந்தான். ரஞ்சனி மகன் சொன்னதை எப்படி எடுத்துக் கொள்கிறாள் என்று கூர்ந்து கவனித்தான். அவளும் எதோ அசவுகரியத்தை உணர்ந்தது போல் தெரிந்தாள். அவனுடைய இதயப்படபடப்பு அதிகரித்தது.

ரஞ்சனிக்கு எல்லாமே ஆச்சரியமாகவும் குழப்பமாகவும் இருந்தன. மூன்று நாள் ஒரே கனவு மகனுக்கு வந்ததில் ஆச்சரியம்இனி அந்தக் கனவு வராது என்று நாகராஜ் உறுதியாகச் சொன்னதில் ஆச்சரியம்... “நான் உனக்கு நெருங்கின ஆத்மான்னு தானே சொன்னேன். பின்னே ஏன் அவங்க கிட்ட போய் நீ கேட்டாய்?” என்று கேட்டதில் குழப்பம். இத்தனை சொன்னவன் அந்த ஆத்மா யாருடைய ஆத்மா என்று சொல்லாமல் நிறுத்திக் கொண்டதில் குழப்பம்...

தீபக் சொன்னான். “நான் அந்த நாகராஜ் அங்கிளை விடப் போறதில்லை. நச்சரிச்சாவது எல்லாத்தையும் தெரிஞ்சுக்கப் போறேன்...”

சரத் இதயத்துடிப்பு சம்மட்டி அடிகளாக மாறின. அடிவயிற்றில் என்னவோ செய்ய ஆரம்பித்தது. நல்ல வேளையாக அவன் உட்கார்ந்திருந்ததால் தலை சுற்றி விழவோ, சரியவோ இல்லை. அதன் மூலம் மனைவி, மகன் கவனத்தைக் கவரும் நெருக்கடி நேரவில்லை.

சரி முதல்ல குளிச்சுட்டு வாடா. காலேஜ் இன்னைக்கு இருக்கு. ஞாபகம் இருக்கா இல்லையா?” என்று ரஞ்சனி மகனை விரட்டினாள். தீபக் குளிக்கப் போக ரஞ்சனி சமையலறைக்குப் போனாள். சரத் அறைக்குப் போய் கல்யாணுக்குப் போன் செய்தான். தீபக் சொன்னதை எல்லாம் சரத் சொல்ல, கல்யாண் சந்தேகத்துடன் சொன்னான். “எங்கப்பா கேட்டப்ப தீபக் இதை எல்லாம் சொல்லலையே. இயற்கை பேசறதைக் கேட்கலாம்னு நாகராஜ் சொல்லிட்டதாய் சொன்னானே...”

அது அப்புறம். அதுக்கும் முன்னாடி நடந்தது இது...”

கல்யாண் சொன்னான். “அந்த ஆள் எனக்கென்னவோ கொஞ்சம் வில்லங்கமாய் தான் தெரியறான். எதுக்கும் அவனைப் பத்தி விரிவாய் விசாரிச்சுட்டு வரச் சொல்லியிருக்கேன். நாலஞ்சு நாள்ல அவனோட முழுவிவரங்கள் நமக்குக் கிடைச்சுடும். அப்பறமா நாம யோசிப்போம்


ள்ளிரவில் கிளம்பிப் போன மதன்லால் காலை ஒன்பது மணி வரைக்கும் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. அவனுக்காக டைனிங் டேபிளில் வைத்திருந்த ஐந்து சப்பாத்திகளையும், சப்ஜியையும் ஃபிரிட்ஜுக்குள் அவன் மனைவி எடுத்து வைத்தாள். அதற்கு மேல் அவள் அவனைப் பற்றிக் கவலைப்படவில்லை.  அவன் சொன்ன நேரத்தில் எப்போதும் வருவதில்லை. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அவனுடைய கான்ஸ்டபிள் ஒருவன் போன் செய்தான். “சார் இருக்காருங்களா மேடம்? இன்னமும் ஸ்டேஷனுக்கு வரலை. போனும் கிடைக்கலை…. அதான் உங்களுக்குப் போன் செஞ்சேன்

ராத்திரி போனவர் இன்னும் வீட்டுக்கே வரலைஎன்று தெரிவித்து விட்டு அலைபேசியில் வாட்சப் தகவல்களைப் படிக்க ஆரம்பித்தவள் காலத்தை மறந்து போனாள். பதினோரு மணிக்கு அவள் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. யார் என்று பார்த்தாள். வெறும் எண் தான் தெரிந்தது. “ஹலோ…”

உன் புருஷனை நாங்க புடிச்சு வெச்சிருக்கோம்ரிலீஸ் பண்ணனும்னா ஐம்பது லட்சம் ரூபாய் வேணும்…” என்று ஒரு கரகரத்த குரல் கேட்டது.

அவள் யாரோ தமாஷ் செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டாள்டேய் தமாஷ் செய்ய உனக்கு நானா கிடைச்சேன். அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரியுமா? முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போட்டுடுவார் ஜாக்கிரதை.”

வெளிய இருந்தா செய்வான் தான். ஆனா பாவம் உள்ளே இருக்கானே. என்ன பண்றது?” அந்தக் குரல் கிண்டல் செய்தது.

சரளமாகக் கெட்ட வார்த்தைகளைச் சொல்லித் திட்டிய அவள் வைடா போனைஎன்றாள். அப்போதும் அவள் கணவன் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றவேயில்லை. அவள் கணவனைப் பார்த்துப் பலரும் நடுங்குவதை அவள் பார்த்திருக்கிறாள். அவனையே கடத்தும் தைரியம் யாருக்கு வரும்?

மறுபடியும் வாட்சப்பில் மூழ்கியவளுக்குச் சிறிது நேரம் கழிந்தவுடன் கணவனுக்குப் போன் செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. அலைபேசியில் கணவனை அழைத்த போது ஸ்விட்ச்டு ஆஃப் என்ற தகவல் வந்தது. கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பன்னிரண்டாயிருந்தது. இப்போதும் மதன்லால் வந்திருக்கவில்லை என்பதும், அழைத்த போது வந்த ஸ்விட்ச் ஆஃப் தகவலும் அவன் கடத்தப்பட்டிருப்பது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகத்தை மெள்ள அவள் மனதில் எழுப்ப ஆரம்பித்தது.

மகன்கள் இருவரும் அமெரிக்காவில் உத்தியோகத்தில் இருக்கிறார்கள் என்பதால் அவர்களை உடனடியாக அழைத்துப் பயமுறுத்த அவளுக்கு மனம் வரவில்லை. மெல்ல எழுந்து வெளியே வந்தாள். வெளியே ஒரு உறை விழுந்திருந்தது. அதை எடுத்துப் பார்த்தாள். உள்ளே ஒரு காகிதம் மடித்து வைக்கப்பட்டிருந்தது. அதைப் பிரித்துப் படித்தாள்.

இப்போது நான் சொன்னது உண்மை என்று தெரிய வந்திருக்கும் என்று நினைக்கிறேன். உன் கணவன் உயிரோடு வேண்டுமானால் ஐம்பது லட்சம் ரூபாயை ரொக்கமாகத் தயார் செய்து வை. தர வேண்டிய இடம், முறை குறித்துப் பிறகு தெரிவிக்கிறேன். போலீஸுக்குப் போனால் உன் கணவன் உயிரோடு உனக்குக் கிடைக்க மாட்டான்.”

ஐம்பது லட்சம் ரூபாய் தந்து கணவனை மீட்கும் எண்ணம் கண நேரத்திற்கும் அவளுக்கு வரவில்லை. சற்று முன் அவளை அழைத்துப் பேசிய கான்ஸ்டபிளுக்கு உடனே போன் செய்தாள். அவன் அவளை விட அதிகமாக அதிர்ந்தான். அவனுக்கு அவள் சொன்னதை நம்ப முடியவில்லை. மதன்லாலைப் போன்ற ஒரு சைத்தானை ஒருவன் கடத்திக் கொண்டு போய் பணம் கேட்டு மிரட்ட முடியும் என்பது அவனுக்கு எண்ணிக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாய் இருந்தது. உடனே அவனுக்கு அவள் வாட்சப்பில் அந்தக் கடிதத்தைப் படம் பிடித்து அனுப்பி வைத்தாள். அவன் உடனடியாக மேலதிகாரிகளுக்குப் போன் செய்து தகவலைச் சொன்னான்.

அவள் அந்தக் கான்ஸ்டபிளுக்கு அனுப்பிய அந்த மிரட்டல் கடிதப்படத்தை வேண்டிய சிலருக்கும் அனுப்பி வைத்தாள். அடுத்த ஒரு மணி நேரத்தில் அவள் வீடு நண்பர்கள், உறவுகள், போலீஸ்காரர்களால் நிரம்பி வழிந்தது.

ஒரு போலீஸ் உயரதிகாரி அவளிடம் சொன்னார். “கடத்தல்காரன் போன் செய்தால் முடிந்த வரை அதிக நேரம் பேசுங்கள். பணம் கொடுக்க மறுக்காதீர்கள். பணம் அதிகமானதால் கொடுக்கக் கொஞ்ச நாளாகும் என்று சொல்லுங்கள். மதன்லாலிடம் பேச வேண்டும் என்று சொல்லுங்கள்....”

கடத்தல்காரனின் பேச்சைப் பதிவு செய்ய சகல ஏற்பாடுகளும் செய்திருந்த அவர் அவளுக்கு நிறைய அறிவுரை சொல்லிக் கொண்டே போனார். அவள் கவனமாகக் கேட்டுக் கொண்டாள். அவளும் மற்றவர்களும் கடத்தல்காரனின் அழைப்பிற்காக பரபரப்புடன் காத்திருந்தார்கள். ஆனால் கடத்தல்காரன் அன்று இரவு வரை அவளைத் தொடர்பு கொள்ளவே இல்லை...


(தொடரும்)
என்.கணேசன்



2 comments:

  1. Madanlal is trapped. Who abducted him?

    ReplyDelete
  2. மதன்லாலுக்கு பொருத்தமான மனைவி... தொலைபேசி அழைப்பில் எப்படி சொதப்புகிறாளோ... தெரியவில்லை...

    ReplyDelete