சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, July 15, 2021

இல்லுமினாட்டி 111



விஸ்வத்தின் கூட்டாளியாக இருக்கிற அந்த அன்னிய சக்தியின் உத்தேசம் துல்லியமாக என்னவென்று தெரியா விட்டாலும் அது நல்ல உத்தேசம் அல்ல என்பது விஸ்வத்துக்கு அது உதவும் விதத்திலிருந்தே தெரிகின்றது என்று எண்ணிய க்ரிஷ் தன் வேற்றுக்கிரகவாசி நண்பனையும், விஸ்வத்தின் நண்பனையும் ஒப்பிட்டுப் பார்த்தான். எத்தனையோ வித்தியாசங்கள்...

ஒரு உருவத்துடன் வந்து பேச வேண்டுமா என்று க்ரிஷிடம் கேட்ட வேற்றுக்கிரகவாசி நண்பன் க்ரிஷ் தேவையில்லை என்றவுடன் உணர்வு மூலமாகவே பிறகு அவனிடம் தொடர்பு கொண்டான். போக்குவரத்துக்கும் இந்த உலகத்தில் பயன்படுத்தும் வாகனம் எதுவும் அவன் பயன்படுத்தவில்லை. ஆனால் விஸ்வத்தின் நண்பன் ஒரு உருவம் எடுத்துத் தான் அவனுடன் பழகுவதாகத் தெரிகிறது. அவனை ம்யூனிக் நகர மருத்துவமனையிலிருந்து அழைத்துப் போக ஒரு காரில் வந்திருக்கிறான். இதை எண்ணிப் பார்க்கையில் ஒரு உண்மை அவன் மனதிற்குப் புலப்பட்டது. அதை அவர்களிடம் சொன்னான். “அந்தக் கூட்டாளி ஒரு உருவம் எடுத்து தான் அவனிடம் பழகி வருவது போலத் தெரிகிறது. அதே போல் ஒரு மனிதனாகத் தான் அவனுடன் பழகுகிறதென்பது அது கார் உபயோகிப்பதிலிருந்து தெரிகிறது. அதனால் விஸ்வம் அந்தக் கூட்டாளியை ஒரு சக மனிதனாகவே நினைத்து வர வாய்ப்பிருக்கிறது....”

எர்னெஸ்டோ கேட்டார். “அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?”

அதற்குக் காரணத்தையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. எல்லாமே அந்தக் கூட்டாளியின் உத்தேசத்தைச் சுற்றியே இருக்கின்றன. அந்த நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் மற்றதைப் புரிந்து கொள்ள வழியில்லை.

எர்னெஸ்டோ க்ரிஷிடம் சொன்னார். “ஆனால் உனக்கு உன் ஏலியன் நண்பன் உதவிய மாதிரி தானுக்கும் அவனுடைய ஏலியன் நண்பன் உதவியிருக்கிறான். நீ கடுமையான விஷமுள்ள பாம்பு கடித்து சாகப்போகும் போது உன்னை அமேசான் காடுகள் வரைத் தூக்கிச் சென்று மூலிகைகள் கொடுத்துக் காப்பாற்றியிருக்கிறான்.  அதே போல் தான் விஸ்வம் இறந்தவுடன் அவன் நண்பன் ஏதோ வூடு ஆவி இசை எழுப்பி டேனியல் உடலை அடையாளம் காட்டிக் காப்பாற்றி இருக்கிறான். இரண்டு பேர் விஷயத்திலும் அவர்கள் தங்கள் விசேஷ சக்திகளால் நேரடியாகக் காப்பாற்றவில்லை. இந்த உலகத்தில் இருக்கும் விஷயங்களை வைத்தே காப்பாற்றியிருக்கிறார்கள்...”

க்ரிஷ் சொன்னான். “உண்மை தான். ஆனால் என் விஷயத்தில் என் பங்கு எதுவுமே இல்லை. நான் மயங்கி விழுந்த பிறகு எல்லாமே என் வேற்றுக்கிரகவாசி நண்பன் தான் செய்தான். விஸ்வம் விஷயத்தில் அந்தக் கூட்டாளி அந்த அளவுக்கு உதவி செய்ய வேண்டியிருக்கவில்லை. வூடு இசையை அந்த போதை மனிதன் உடல் அருகே இசைத்தது மட்டும் தான் அவன் செய்தது. விஸ்வம் தான் தன் விசேஷ சக்திகளைக் கடைசி கணத்தில் கூட பயன்படுத்தி கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருக்கிறான்....”  

எர்னெஸ்டோ க்ரிஷிடம் சொன்னார். “உன் ஏலியன் நண்பன் இந்த உலகில் உன் ஒருவனைத் தான் தேர்ந்தெடுத்து தொடர்பு கொண்டிருக்கிறான். அவன் நண்பனும் அவன் ஒருவனைத் தான் தேர்ந்தெடுத்து தொடர்பு கொண்டிருப்பது போல் தெரிகிறது. ஆனால் உன் வேற்றுக்கிரகவாசி நண்பன் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதோ அழிப்பதோ உங்கள் பாடு என்று பொறுப்பையும் சுதந்திரத்தையும் மனிதர்கள் தலையிலேயே போட்டு விட்டு, திரும்பி வரும் போது இருந்தால் பார்ப்போம் என்று போய் விட்டான். ஆனால் அந்த அளவு பற்று விலகினவனாக விஸ்வத்தின் கூட்டாளி இல்லை. கடைசிவரை எதையோ சாதித்து விட்டுப் போவதற்காக இன்னும் இங்கேயே இருக்கிறான் போலிருக்கிறது

அக்ஷய் ஆழ்ந்து யோசித்துக் கொண்டிருப்பதைக் கவனித்த இம்மானுவல் அவனிடம் கேட்டான். “நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள்?”

விஸ்வத்தின் கூட்டாளி அவ்வப்போது உருவம் எடுக்கிறான். அவ்வப்போது அந்த உருவத்தைக் கலைத்துக் கொள்கிறான் என்று தோன்றுகிறது.  உதாரணத்திற்கு நான் ம்யூனிக் வரும் நாள் அவன் விமான நிலையத்திற்குள் நுழைந்தது கேமிராக்களில் பதிவாகி இருக்கிறது. என்னை அவன் மொபைல் கேமிராவில் படம் எடுத்திருக்கிறான். பின் மாயமாகி விட்டிருக்கிறான். எந்த கேமிராவிலும் அவன் வெளியே போனது பதிவாகவில்லை. குள்ளமாக இருந்ததால் மற்றவர்களுக்கு நடுவே சேர்ந்து நடந்து வெளியேறியிருக்கலாம் என்றாலும் வெளியே போன பின்னாவது அவன் வெளிப்பட்டிருக்க வேண்டும். வெளி கேமிராக்களிலும் அவன் அகப்படவில்லை. அவனைப் பார்த்தவர்களும் யாரும் இல்லை....”

உண்மை. இம்மானுவல் அவன் புகைப்படத்தை வெளியேயும் ஒவ்வொரு ஆளிடமும்  காட்டியிருக்கிறான். ஒருவரும் அவனைப் பிறகு பார்க்கவில்லை.

க்ரிஷ் சற்று யோசித்து விட்டுச் சொன்னான். “என் வேற்றுக்கிரகவாசி நண்பன் உருவம் எதுவும் எடுக்காமல் இயல்பு நிலையிலேயே இருந்தான். அதனால் அவன் சக்தி அலைவரிசைகள் சீராகவும் கண்டுபிடிக்க முடிந்த நிலையிலும் இருந்தன. விஸ்வத்தின் கூட்டாளி அடிக்கடி உருவங்கள் எடுப்பதும் கலைப்பதுமாக இருப்பது கூட அவன் அலைவரிசைகள் குழப்பமாகவும், கலைத்து விடப்பட்டவை மாதிரியும் தோன்றுவதற்குக் காரணமாக இருக்கலாம். அதனால் தான் வேண்டும் வேண்டுமென்று இரண்டையும் மாறி மாறி அவன் அடிக்கடி செய்கிறான் என்று நினைக்கிறேன்...”

இம்மானுவலும் எர்னெஸ்டோவும் இந்த அலைவரிசை விஷயங்களில் அதிகப் பரிச்சயம் இல்லாதவர்கள். எனவே அவர்களுக்கு அதில் கருத்து சொல்ல எதுவும் இருக்கவில்லை. ஆனால் அக்ஷய் க்ரிஷ் அளவுக்கு ஆராய்ச்சி ஞானம் இல்லாவிட்டாலும் ஓரளவு அந்த விஷயங்களில் அனுபவம் உள்ளவன். அவன்இருக்கலாம்என்றான்.

க்ரிஷ் சொன்னான். “அக்‌ஷய் வந்த போது ம்யூனிக் விமானநிலையத்தில் அந்தக் குறிப்பிட்ட கண்காணிப்பு காமிராவை ஏன் விஸ்வத்தின் கூட்டாளி பழுதாக்கினான், நாம் எதைப் பார்த்துவிடக்கூடாது என்று எண்ணினான் என்று கண்டுபிடித்தால் நாம் ஓரளவு தெளிவு பெற்று விடலாம் என்று நினைக்கிறேன்”


சாலமன் இணைப்பை ஏற்படுத்தி வாங் வேயை லேப்டாப் திரையில் பார்த்த பின் லேப்டாப்பை விஸ்வத்தின் பக்கம் தள்ளி விட்டு எழுந்து கொண்டார். இரண்டு மரபெஞ்சுகள் தள்ளிப் போய் அவர் அமர்ந்து கொண்டார்.

விஸ்வம் வாங் வேக்கு வணக்கம் சொன்னான். வாங் வே எத்தனை தான் தன்னைத் தயார்ப்படுத்தியிருந்தாலும் விஸ்வத்தை டேனியலின் உடலில் நேரடியாகத் திரையில் பார்க்கும் போது தன்னையறியாமல் ஒருவித படபடப்பை உணர்ந்தார். அவரும்வணக்கம்என்றார்.

விஸ்வம் அதிகம் உபசரிப்பு வார்த்தைகளில் நம்பிக்கை இல்லாதவன் என்பதால் உடனடியாக விஷயத்துக்கு வந்தான். “இப்போதைக்கு நம் குறிக்கோளுக்கு எதிராகத் தலைமை இருக்கிறது. அந்தத் தடையை நீக்கினால் ஒழிய நாம் நினைத்ததை நடத்த முடியாது. அந்தத் தடையை நீக்க உங்களால் என்ன உதவி செய்ய முடியும்?”

வாங் வே இந்தக் கேள்வியை விஸ்வத்திடமிருந்து கண்டிப்பாக எதிர்பார்த்தார் என்றாலும் அவனுடைய முதல் கேள்வியாகவே இது இருக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவர் கவனமாகச் சொன்னார். “தகவல்கள் ஏதாவது இந்த விஷயத்தில் என்னால் தர முடியுமே ஒழிய மற்றபடி நேரடியாக இதில் என்னால் பங்கு கொள்ள முடியாது நண்பரே. காரணம் நான் சாதாரண உறுப்பினராக மட்டும் இல்லாமல் அதற்கு மேலான ஒரு பொறுப்பிலும் இருப்பதால் என்னைச் சுற்றியும் எப்போதும்  இயக்கத்தின் காவலர்கள் பாதுகாவல் என்ற பெயரில் இருக்கிறார்கள். என்னுடைய ஒவ்வொரு செய்கையும் அவர்களால் கண்காணிக்கப்பட்டே இருக்கும் என்பதால் நேரடியாக நான் பங்கு கொள்வது உங்களுக்கு உபகாரத்திற்குப் பதில் உபத்திரமாகவே முடியும்...”

அவர் சொன்னது உண்மை என்பதை உணர்ந்திருந்தாலும் விஸ்வம் அதை வாய்விட்டு அங்கீகரிக்கவில்லை. “சரி வீட்டில் அவருக்கு இப்போதைய பாதுகாப்பு எப்படி இருக்கிறது?” என்று விஸ்வம் கேட்டான்.

வாங் வே சொன்னார். “அதை என்னைவிட என் நண்பர் உங்களுக்கு விளக்கமாகச் சொல்வார்.”

விஸ்வம் சாலமனைப் பார்த்தான். சாலமன் எழுந்து அருகில் வந்து எர்னெஸ்டோவுக்குத் தற்போது இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சொன்னார். பல அடுக்குப் பாதுகாப்பை மீறி யாரும் உள்ளே நுழைவது சுலபம் அல்ல என்பது விஸ்வத்துக்குத் தெளிவாகத் தெரிந்தது. விஸ்வம் கேட்டான். “பாதுகாப்புக்குப் புதிதாக ஒருவனை வரவழைத்திருக்கிறார்களே அவன் எங்கே இருக்கிறான்.”

அவன் தலைவர் அறைக்குத் தொட்ட அறையிலேயே தங்கியிருக்கிறான். சிறு சத்தம் தலைவர் அறையிலிருந்து வித்தியாசமாகக் கேட்டாலும் அடுத்த சில வினாடிகளில் தலைவரின் அறையில் இருப்பான். அந்த அளவு அவன் காதுகள் சூட்சுமமானவை. அவன் நகரும் வேகமும் அதற்கேற்ற மாதிரி அதிக வேகமானது

சில நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என்று கேள்விப்பட்டேன். அடுத்தபடியாக அவர் பங்கு கொள்ளும் பொது நிகழ்ச்சி என்ன?”

சாலமன் ஒன்றும் சொல்லாமல் மௌனம் சாதித்தார். இந்தத் தகவலைச் சொல்வதா வேண்டாமா என்று அவர் யோசித்து விட்டு லேப்டாப்பைப் பார்த்தார். விஸ்வமும் லேப்டாப் திரையில் வாங் வேயைப் பார்த்தான்.

  
(தொடரும்)
என்.கணேசன்   






4 comments:

  1. அந்த காமிராவை பாழுதிக்கியது ஏன்? என்பதை கணிக்க முடியவில்லை... சீக்கிரம் இம்மானுவல் கண்டறிந்து... சஸ்பெனஸை உடைக்க வேண்டும்...

    ReplyDelete
  2. sabash. sariyana potti. sema.

    ReplyDelete
  3. வணக்கம்.
    நான் இராம். கதிர்வேல்.
    இந்த நாவல் மிக மிக விறுவிறுப்பாக செல்க்கிறது. ...
    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ..
    நன்றிகள் பற்பல.....

    ReplyDelete
  4. ஆரம்பம் முதல் மிகவும் அற்புதமான உள்ளது. ...
    நன்றி.

    ReplyDelete