சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 28, 2021

யாரோ ஒருவன்? 38


தன்லால் அந்தக் கிராமத்தான் அறிவுரையை அப்படியே பின்பற்றினான். அவன் இயல்பான முகபாவனையே அலட்சியம் தான். அந்த அலட்சிய முகபாவனையுடன் அந்த மனுவை வாங்கிக் கொண்டு லேசாகத் தலையசைத்து விட்டு உள்ளே போவதற்கு முன் யதேச்சையாகத் திரும்புபவன் போலத் திரும்பினான். அந்தக் கிராமத்தான் சொன்னது போல் அந்தப் பைக் தடியன் இப்போதும் சற்று தொலைவில் நின்று கொண்டு அவர்களையே கவனித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அதைக் கவனித்தது போல் காட்டிக் கொள்ளாமல் மதன்லால் உள்ளே போனான்.

சல்யூட் அடித்து வணங்கிய கான்ஸ்டபிளையும், கைகட்டி பவ்யமாக வணங்கி நின்ற பழைய குற்றவாளி ஒருவனையும் கண்டுகொள்ளாமல் தனதறைக்குள் நுழைந்து அமர்ந்தவன் கையிலிருந்த மனுவைப் பிரித்தான். தெளிவான கையெழுத்தில் எந்த விதமான கூடுதல் மரியாதையோ அடைமொழியோ இல்லாமல் எழுதப்பட்டிருந்ததைப் படித்தான்.

மதன்லால்,

நமக்குப் பிரச்சினை ஏற்படுத்துகிறவர்களைச் சமயோசிதமாக அப்புறப்படுத்தினால் ஒழிய நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது. அந்த மனிதர்கள் அதிகாரத்தில் இருப்பார்களேயானால் அதை நன்றாக யோசித்து, பின்னாலும் சிக்கிக் கொள்ளாதபடி, மிகவும் கவனமாகத் தான் கையாள வேண்டியிருக்கிறது. நான் யாரைச் சொல்கிறேன் என்பது உனக்குப் புரிந்திருக்கும். அது குறித்துப் பேச நாம் சந்திக்க வேண்டும். வரும் புதன் இரவு ஒரு மணிக்கு ஓட்டல் கங்கோத்ரியில் அறை எண் 101ல் என்னைச் சந்திக்க வா.

உன் வீட்டை வேவு பார்க்கிறவர்கள் அந்த வேலையை இரவு பன்னிரண்டு மணியில் இருந்து காலை நான்கு மணி வரை செய்வதில்லை. அதனால் அந்த இடைப்பட்ட நேரத்தில் மட்டுமே அந்த உளவாளிகளால் கவனிக்கப்படாமல் நாம் சந்திக்க முடியும். இதைக் குறித்து யாரிடமும் எதுவும் சொல்லாதே. வீட்டில் கூட அதுபற்றிய பேச்சு வேண்டாம். அது உளவாளிகளுக்குக் கண்டிப்பாக எட்டும் அபாயம் இருக்கிறது. எல்லாவற்றையும் காரியத்தால் பேசுவதே புத்திசாலித்தனம். அதைச் செய்வோம். பிறகு உலகம் அறியட்டும்.

படித்து விட்டு இந்தக் கடிதத்தை உடனடியாகக் கிழித்து விடு.

AA”

மதன்லால் கான்ஸ்டபிளை அழைத்து வெளியே நிற்கும் அந்தக் கிராமத்தானை உள்ளே அழைத்து வரச் சொன்னான். வெளியே கண்காணிக்கும் உளவாளிக்கும் மனு சம்பந்தமாக அந்தக் கிராமத்தானை அவன் அழைத்துப் பேசுவதாகத் தான் தோன்றும் என்று மதன்லால் நினைத்தான். ஆனால் கான்ஸ்டபிள் சென்று தேடிய போது அந்தக் கிராமத்தான் போய்விட்டிருந்தான்.

மதன்லால் யோசித்தான். இந்தக் கடிதத்தை எந்த அளவு நம்பலாம் என்பது அவனுக்குக் குழப்பமாகத் தான் இருந்தது. AA என்பது அஜீம் அகமதாக இருக்கலாம் என்று தோன்றினாலும் உறுதியாக நம்ப முடியவில்லை. ஓட்டல் கங்கோத்ரி சிம்லாவில் இருக்கும் ஒரு மலிவான லாட்ஜ். சீசன் சமயத்தில் மட்டும் அதிலும் அறைகள் கிடைப்பது கஷ்டம் என்றாலும் சீசன் அல்லாத சமயத்தில் பேரம் பேசி மிக மலிவில் அறைகளை வாடிக்கையாளர்கள் பெறுவது உண்டு. அஜீம் அகமது அது போன்ற ஒரு ஓட்டலில் ஏன் வந்து தங்க வேண்டும்? அஜீம் அகமது அவனே வருவானா, இல்லை அவன் ஆட்களை அனுப்புவானா? இல்லை இது அவன் எதிரிகள் விரிக்கும் வலையா? என்று யோசித்தபடியே மதன்லால் கடிதத்தைக் கிழித்துப் போட்டான்.

அன்று இரவு வரை அவன் மற்ற வேலைகளில் ஈடுபட்டாலும் பின்னணியில் மனம் இதே சிந்தனைகளில் யோசித்த வண்ணம் இருந்தது. இன்று திங்கட்கிழமை. இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன.... அன்றிரவு அவன் வீட்டுக்குக் கிளம்பிய போது பின் தொடரக் காத்திருந்தவன் பைக் தடியன் அல்ல, வேறு ஒரு ஆள். அந்த ஆள் தூரத்தில் இருந்தே அவனைப் பின் தொடர்ந்தான்.   இப்படி ஆட்கள் மாறி மாறி தான் அவனைக் கண்காணிக்கிறார்கள். எல்லாமே கோமாளித்தனமாய் அவனுக்குத் தோன்றியது.

மதன்லால் வீட்டுக்குப் போன பிறகு இரவு பத்து மணிக்கு வீட்டு ஜன்னல்கள் வழியே வெளியே ரகசியமாய் நோட்டமிட்டான். இரண்டு ஆள் கவனிக்க முடிந்த தொலைவில் நின்றிருப்பது தெரிந்தது. பதினொன்றே முக்காலுக்குப் பார்த்த போது ஒருவன் மட்டும் நின்றிருந்தான். பன்னிரண்டரைக்குப் பார்த்த போது யாரும் தெரியவில்லை. மறுபடி ஒன்றே முக்கால், மூன்றரை மணிக்குப் பார்த்த போதும் கண்காணிப்பவர்கள் யாரும் தெருவில் தெரியவில்லை.  நான்கரை மணிக்குப் பார்த்த போது ஒரு ஆள் வீட்டைக் கண்காணித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.  ஆறு மணிக்குப் பார்த்த போது இரண்டு பேர் இருந்தார்கள். அந்தக் கடிதத்தில் சொல்லியிருப்பது போல இரவு பன்னிரண்டு மணியிலிருந்து நான்கு மணி வரை கண்காணிக்க யாருமில்லை என்பது சரியாகத் தான் இருக்கிறது...

மறுநாள் தனக்கு வேண்டிய ஆள் ஒருவனிடம் ஓட்டல் கங்கோத்ரிக்குச் சென்று ரகசியமாய் விசாரித்து வரச் சொன்னான். அறை எண் 101 ஆல்பர்ட் அலெக்சாண்டர் என்ற பெயரில் புதன் மாலையிலிருந்து வியாழன் மாலை வரை பதிவு செய்யப்பட்டிருப்பதாய் அந்த ஆள் வந்து சொன்னான். அதுவும் AA என்பதற்குப் பொருத்தமாய் தான் இருக்கிறது... அங்கு வரும் ஆள் வேறு ஆளாகவே இருக்கலாமோ என்கிற சந்தேகம் வந்தது. இப்படி வேறு பெயரில் அல்லாமல் அஜீம் அகமது சொந்தப் பெயரிலா வந்து தங்குவான் என்று எண்ணிக் கொண்டான். அந்த ஓட்டலில் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கவில்லை என்பதை அவனுடைய ஆளும் உறுதிப்படுத்தினான்.  அஜீம் அகமது அந்த ஓட்டலைத் தேர்ந்தெடுக்க அதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்மற்ற வசதியான பெரிய ஓட்டல்களில் எல்லாம் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அஜீம் அகமது அது போன்ற ஓட்டல்களில் வந்து தங்குவதை விரும்ப மாட்டான்..

இப்படியெல்லாம் யோசித்து புதன் கிழமை நள்ளிரவில் கங்கோத்ரி ஓட்டலுக்குச் சென்று அறை எண் 101ல் வந்திருப்பவனைச் சந்திப்பதென்று மதன்லால் தீர்மானித்தான்.


வேலாயுதம் அந்த மில் அதிபரின் அறுவையான பேச்சுக்களைக் கஷ்டப்பட்டு சகித்துக் கொண்டிருந்தார்.  நாகராஜ் பற்றியும் அவன் வடநாட்டு ஆசிரமம் பற்றியும் முழுமையாக விசாரித்து விட்டுப் போக தான் அவர் வந்திருக்கிறார். ஏதோ ஒரு வேலையாக அந்தப் பக்கம் வந்ததாகவும், இவ்வளவு தூரம் வந்த பிறகு மில் அதிபரைச் சந்தித்து விட்டே போக வேண்டும் என்று தனக்குத் தோன்றியதாகவும் சொல்லி வந்தவர் அரை மணி நேரமாக அந்த மில் அதிபரின் பேச்சுக்குத் தலையசைத்தும், புன்னகைத்தும், சிரித்தும் சலித்துப் போய் விட்டார். ஆனால் வந்தவுடன் நாகராஜ் பற்றி விசாரித்தால் அதற்கென்றே வந்தது போல ஆகி விடும். மில் அதிபருக்கு அந்த எண்ணம் வராமல் பார்த்துக் கொள்ளத் தான் இந்த அரை மணி நேரப் பொறுமை...

இனியும் தாங்க முடியாது என்று தோன்றவே பேச்சில் ஒருசில வினாடிகள் இடைவெளி வருவதற்காகக் காத்திருந்து வேலாயுதம் மெல்ல இடைமறித்தார். “அன்னைக்கு எங்கள் பக்கத்து வீடு வரை வந்துட்டு எங்க வீட்டுக்கு வராமல் போய்ட்டது எனக்குப் பெரிய வருத்தம் தான். அந்த அளவு நாங்க அன்னியமாய்ப் போய்ட்டமா?”

மில் அதிபருக்கு உடனடியாக நினைவு எதுவும் வரவில்லை. “உங்க பக்கத்து வீட்டுக்கா? நானா?” என்றபடி திருதிருவென்று முழித்தார். பின் நினைவுக்கு வந்தவராக முகம் மலர்ந்து சொன்னார். “நாகராஜ் மகராஜ் வீட்டுக்கு வந்ததைச் சொல்றீங்களா? மகான்கள் தரிசனம் முடிச்சுட்டு நேரா வீட்டுக்குத் தான் திரும்பிப் போகணும்கிறது பல காலமாய் சொல்லப்படுகிற விதிமுறை. ஏன்னா அப்ப தான் அந்தப் புண்ணியமும், அந்தத் தெய்வீக அலைகளும் முழுசா வீடு வந்து சேரும்னு சொல்வாங்க. அதனால தான் நான் அப்ப உங்க வீட்டுக்கு வரலை. தப்பா நினைச்சுக்காதீங்க. உங்க வீட்டுக்குன்னே ஒரு தடவை வந்துட்டா போச்சு...”

அவர் தங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்ற ஆசை துளியும் இல்லாத வேலாயுதம் அது பற்றிப் பேசாமல் வசதியாக பேச்சை நாகராஜ் பக்கம் திருப்பினார். “அந்த நாகராஜ் ஒரு மகானா? பார்த்தால் சாதாரணமாய் அல்லவா தெரியறான்.... என்ன சொல்றீங்க?” என்று மிக ஆச்சரியத்துடன் கேட்டார்.

அவரை அவன் இவன்னு சொல்லாதீங்க. அது பெரிய அபசாரம்....” என்று மில் அதிபர் வேலாயுதத்துக்கு அறிவுறுத்தினார். ”மகான்கள் தோற்றத்துக்கு எந்த மதிப்பும் தர்றதில்லை. தோற்றத்துக்கு மதிப்புக் கொடுக்கறவன் மகானுமல்ல.”

இவ்வளவு உயர்வாய் நீங்க சொல்றீங்க. ஆனால் அவரைப் பார்த்தால் அப்படி ஒன்னும் தெரியலையே. அவரைப் பத்தி விரிவாய் தான் சொல்லுங்களேன். உங்களுக்கு அவரை எத்தனை காலமாய் தெரியும்? அவர் பூர்வீகம் தான் என்ன?” என்று வேலாயுதம் கேட்டு விட்டு பரபரப்புடன் பதிலை எதிர்பார்த்தார்.



(தொடரும்)
என்.கணேசன்   

4 comments:

  1. Like Madanlal and Velayudham we are also waiting for the next. A very different and unpredictable novel. Mondays and Thursdays are very important to your readers specially the evening times.

    ReplyDelete
  2. Going great. But suspense is still kept.

    ReplyDelete
  3. நரேந்திரனின் ஆட்கள் இவ்வளவு கவனக்குறைவாக இருக்க மாட்டார்கள்.... இது மதன்லாலுக்கு விரிக்கும் வலையாகவே இருக்கும்.....

    ReplyDelete