நண்பரின்
புன்னகையிலேயே அவர் அந்தச் சாத்தியக்கூறை யூகித்து விட்டார் என்று புரிந்து கொண்ட வாங்
வே புன்னகையுடன் சொன்னார். “நீ நினைப்பதே தான்”.
அகிடோ அரிமா சிரித்துக்
கொண்டே சொன்னார் “ஆனால் அது எப்படி சாத்தியமாகும் என்று நீங்கள் சொல்லவில்லையே”
வாங் வே தன் பதிலை
விரிவாகவே சொன்னார். “இல்லுமினாட்டியின் தலைவரைக் கொல்ல முடியும் என்றோ, அந்தப் பதவியிலிருந்து
நீக்க முடியும் என்று யோசிக்கக்கூட தைரியம் நிறைய வேண்டும். இது வரை இல்லுமினாட்டி
வரலாற்றில் எந்த இல்லுமினாட்டி தலைவரும் கொல்லப்பட்டதில்லை. அதற்கான முயற்சி எடுக்கப்பட்டதற்கான
தகவல்கள் கூட இல்லை. அப்படி இருக்கையில் அதை நினைக்கவும், திட்டமிடவும் கூட ஒருவன்
கிளம்பியிருக்கிறான் என்றால் அது விஸ்வம் தான். அவனிடம் இருக்கும் சக்திகளை எல்லாம்
யோசித்து இல்லுமினாட்டியும் கூடப் பயந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி இருக்கிறது,
பாதுகாவலன் ஒருவனைப் புதிதாக வரவழைத்தும் இருக்கிறது... ஆக விஸ்வம் இந்தத் திட்டமிடும்
விதத்திலேயே சரித்திரம் படைத்து விட்டான். அவன் வெற்றி பெற்று விட்டால் உடனடியாக என்ன
ஆகும் என்று நினைக்கிறாய்?”
அகிடோ அரிமாவுக்கு
உடனடியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. “என்ன
ஆகும்?” என்று கேட்டார்.
“இது வரை எத்தனையோ
உலகத் தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உடனடியாக அந்தப் பாதுகாவலர்கள் செய்வதென்ன?”
“கொன்றவனைச் சுட்டுக்
கொன்று விடுவது தான் நடந்திருக்கிறது...”
வாங் வே திருப்தியாகப்
புன்னகைத்தார். “ஒருவேளை அப்படி ஆனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த மாதிரி ஆகிவிடும்.
தலைவரும் காலி. விஸ்வமும் காலி என்றால் தலைமைப்பதவி காலியாகி விடும். தகுந்த ஆள் போட்டியில்
தேர்ந்தெடுக்கப்பட்டு வந்து விடலாம்...”
அகிடோ அரிமா சொன்னார்.
“சில சமயங்களில் கொன்றவன் தப்பித்துப் போய் விடும் சாத்தியமும் இருக்கிறது.... விஸ்வம்
போன்ற ஒரு ஆள் மாட்டிக் கொள்வான் என்று தோன்றவில்லை”
வாங் வே சொன்னார்.
“கிழவரைப் பாதுகாக்க அமானுஷ்யன் என்று ஒருவன் வந்திருக்கிறான். அவன் கிழவரைக் காப்பாற்ற
முடியா விட்டாலும் அவரைக் கொன்றவனைத் தப்பிக்க விடுவான் என்று தோன்றவில்லை. அவனைக்
காற்றின் வேகத்தில் நகரக்கூடியவன் என்று பலரும் சொல்கிறார்கள்.”
அகிடோ அரிமா சொன்னார்.
“விஸ்வமும் அப்படித்தான் என்கிறார்கள்”
வாங் வே சொன்னார்.
“உண்மை. அப்படி விஸ்வம் தப்பித்து விட்டாலும் நல்லது தான். தலைவர் பதவிக்குத் தேர்தல்
வரும். முந்தைய தலைவரைக் கொன்றவர் தேர்தலில் நின்றால் எந்த இல்லுமினாட்டியாவது அவருக்கு
ஓட்டு போடுவானா என்பது சந்தேகமே. தலைவரைக் கொன்ற விஸ்வம் தலைவராவது சாத்தியமல்ல”
அகிடோ அரிமா சொன்னார்.
“கொன்றது அவன் என்ற சந்தேகம் வராதபடி அவன் எல்லாவற்றையும் செய்தால் ஒழிய...”
வாங் வே புன்னகைத்தார்.
“ஆமாம். ஆனால் கொன்றது யார் என்று வெளிப்படையாகத் தெரியும் வரை சந்தேகம் அவன் மீதே
இருக்கும்”
அகிடோ அரிமா தலையசைத்தார்.
அதுவும் உண்மை தான்.
வாங் வே தொடர்ந்தார்.
“அப்படியும் ஏதாவது திட்டம் வைத்திருந்து எல்லோரையும் ஏமாற்றி அவன் தலைவன் ஆனால், அவனுக்கு
ஆதரவாக இருந்த ஒரே ஒருவன் என்ற வகையில் உபதலைவர் பதவி எனக்குக் கிடைப்பது உறுதி. அதற்காகத்
தான் அவனுடன் தொடர்பு கொண்டு வருகிறேன்”
அகிடோ அரிமா சொன்னார்.
“அந்த அமானுஷ்யன், க்ரிஷ் எல்லாருமாகச் சேர்ந்து தலைவரைக் காப்பாற்றி, விஸ்வத்தைக்
கொன்று விட்டால்...? க்ரிஷ் பார்த்தால் சாதாரணமாகத் தான் தெரிகிறான். ஆனால் தேவைப்படும்
போது ஏதாவது மேஜிக் செய்து விடுகிறான். அதனால்
தான் சொல்கிறேன்...”
வாங் வே அந்த சாத்தியத்தையே
ரசிக்கவில்லை. ஆனால் நண்பர் சுட்டிக் காட்டியது போல் அப்படி நடக்கவும் வாய்ப்பிருக்கிறது
என்பதை மறுக்க முடியாமல் தலையாட்டிய அவர் ”அப்படி நடந்தால் கூட நமக்கு நஷ்டமில்லை.
நம்மைப் பொறுத்த வரை முந்தைய நிலவரம் தான்” என்றார்.
“விஸ்வத்துடன் நீங்கள்
தொடர்பில் இருந்ததற்கு ஆதாரம் எதுவும் கிடைக்காத வரையில்....” அகிடோ அரிமா சுட்டிக்
காட்டினார்.
வாங் வே அதை ஆமோதித்துத்
தலையாட்டினார். “அதை நான் உணர்ந்திருக்கிறேன் நண்பனே. அதில் நான் மிகவும் எச்சரிக்கையாகவும்
இருக்கப் போகிறேன்...”
அகிடோ அரிமா சொன்னார்.
“ஆனால் விஸ்வம் உங்களை அதிக எச்சரிக்கையோடு இருக்க விடுவதாக இல்லை நண்பரே. அவன் கடிதத்தில்
மதில் மேல் பூனையாக இருப்பதானால் உங்கள் உறவே வேண்டாம் என்று சொல்லி இருக்கிறான் நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்...”
வாங் வே சொன்னார்.
“உண்மை தான். நானும் அவனுக்கு ஏதாவது வகையில் உதவவே நினைக்கிறேன். அவன் ஜெயித்தாலும்
கூட அதையும் நான் அனுகூலமாகவே நினைக்கிறேன்... எர்னெஸ்டோ போனால் போதும் என்று எனக்கு
ஆகிவிட்டது நண்பனே. இவர் இந்தப் போக்கிலேயே போனால் இந்த இயக்கத்தையே அழித்து விடுவார்
என்றே நினைக்கிறேன். பழைய, உறுதியான ஆளாக அவர் இப்போது இல்லை. மென்மையாக மாறிக் கொண்டு
வருகிறார். அவருடைய சமீபத்திய சில முடிவுகள் நம்மை பலவீனமாக்கும் விதமாகவே இருக்கின்றன.
நீ தனிப்பட்ட முறையில் சொல். நீ இந்த மென்மையான போக்கு இல்லுமினாட்டியின் வளர்ச்சிக்கு
உதவும் என்று நினைக்கிறாயா?”
அகிடோ அரிமா சொன்னார்.
“நானும் உதவாது என்றே நினைக்கிறேன். நம்மைப் போல் பலரும் நினைக்கிறார்கள் என்றும் எனக்குத்
தெரியும். ஆனால் அவர் அந்தப் பதவியில் இருக்கும் வரை அவரை யார் அசைக்க முடியும் நண்பரே?”
”அப்படி அசைக்க
முடிந்த ஒரே ஒருவனாக விஸ்வத்தை நான் பார்ப்பதால் தான் அவனுக்கு உதவ நினைக்கிறேன் நண்பா.
நீ சொன்னது போல் இதில் ஆபத்து இருப்பது உண்மை தான். ஆனால் மாற்றம் வேண்டுமென்றால் நாம்
எதாவது செய்தாக வேண்டும். தானாக எதுவும் மாறி விடுவதில்லை...”
”ஆனால் அவன் உங்களை
நேரில் சந்தித்துப் பேசக் கூப்பிடுகிறானே. நீங்கள் நேரில் வேறெதாவது சாக்குச் சொல்லிப்
போனால் கூட அவர்கள் சந்தேகத்துடன் பார்ப்பார்களே.. என்ன செய்யப் போகிறீர்கள்?”
“நவீன தொழில் நுட்பம்
தான் வளர்ந்திருக்கிறதே. அதன் மூலமாக நேரில் பார்த்துப் பேசிக் கொள்ள வேண்டியது தான்”
அகிடோ அரிமா திருப்தியுடன்
தலையசைத்தார். பின் நண்பருக்கு இன்னொரு அறிவுரையும் சொன்னார். “நண்பரே. எந்தக் காரணத்தைக்
கொண்டும் அவன் எர்னெஸ்டோவைக் கொல்ல உதவி கேட்டால் மட்டும் மறுத்து விடுங்கள். கண்டுபிடிக்கப்பட்டால்
அது பேராபத்து. நம் உளவுத் துறை அதை மட்டும் மேற்போக்காகக் கண்டிப்பாக விட்டுவிடாது.
மற்ற வகைகளில் மறைமுகமாக எந்த உதவி வேண்டுமானாலும்
செய்யுங்கள்.”
வாங் வே அதை ஏற்றுக்
கொண்டார். பின் நண்பனைக் கலந்தாலோசித்து அவர் விஸ்வத்துக்குக் கடிதம் எழுதினார்.
“அன்பு நண்பரே.
தங்கள் கடிதம் கிடைத்தது.
மிக்க மகிழ்ச்சி. தாங்கள் கூறுவதை நானும் ஏற்றுக் கொள்கிறேன்.
இனி நேரில் பேசிக்
கொள்வது தான் சரி என்றாலும் நான் நேரில் அங்கே வந்தால் பல கேள்விகள் எழும். பாதுகாப்பு
என்ற பெயரில் பலர் என் பின்னால் வருவார்கள். அவர்களில் யாராவது ஒருவன் வேண்டுமென்றோ,
அறியாமலேயோ எதையாவது வெளியே சொல்லி விடக்கூடும். இந்தப் பிரச்னைகள் எல்லாம் தவிர்க்க
நாம் ஸ்கைப் மூலம் பேசிக் கொள்ளலாம் என்று நான் நினைக்கிறேன். நம் கருத்துப் பரிமாற்றங்களுக்கு
எத்தனை குறைவான ஆட்களை நாம் பயன்படுத்துகிறோமோ
அத்தனை நல்லது என்று நினைக்கிறேன். உங்கள் கருத்தும் அதுவாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.
நீங்கள் உங்கள் வசதிப்பட்ட நேரத்தை கடிதம் மூலம் தெரிவித்தால், இந்தக் கடிதம் கொண்டு
வருபவர் மூலமாகவே நாம் ஸ்கைப் மூலம் பேசிக் கொள்வோம். நன்றி.
தங்கள்
உண்மை நண்பன்”
இக்கடிதத்தை சாலமனுக்கு
அனுப்பி வைத்த வாங் வே, முகம் பார்த்துப் பேசுகையில் விஸ்வம் என்னவெல்லாம் சொல்லக்கூடும்,
அதற்கு எப்படி எல்லாம் பேச வேண்டும் என்று நண்பனுடன் ஒத்திகை செய்து கொள்ள ஆரம்பித்தார்.
அகிடோ அரிமாவை விஸ்வமாக்கி
பேசவிட்டு வாங் வே அதற்கு பதில் சொல்ல முயற்சி செய்தார். சில நேரங்களில் அவருக்கே என்ன
பதில் சொல்வதென்று தெரியாதபடி கூட அகிடோ அரிமா கேள்விகள் கேட்டார். இது ஒத்திகை என்பதால்
பதிலை யோசிக்க அவருக்கு அவகாசம் கிடைத்தது. ஐந்து மணி நேர ஒத்திகைக்குப் பின் வாங்
வே விஸ்வத்திடம் பேச முழுமையாகத் தயாரானார்.
(தொடரும்)
என்.கணேசன்
இல்லுமினாட்டி புத்தகம் எப்போது முழுவதுமாக வெளியிடப்படும் ஐயா..?
ReplyDeleteஇல்லுமினாட்டி புத்தகம் சென்ற வருடமே வெளிவந்து விட்டது. வாங்குவதானால் பதிப்பாளரை 9600123146 எண்ணில் நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.
DeleteWang way is oversmart. Can he cheat both Viswam & Illuminati? Eagerly waiting.
ReplyDeleteவாங் வே விஸ்த்தை பயன்படுத்திக் கொள்ள போகிறாரா? இல்லை விஸ்வம் வாங் வேயை பயன்படுத்திக் கொள்ளப் போகிறானா??
ReplyDelete