இறைவனை உறுதியாகப் பற்றிக் கொண்டவன் அடையும் நன்மைகளை விவரித்த
பகவான் மேலும் கூறுகிறார்:
எல்லாக் கர்மங்களையும்
மனப்பூர்வமாக என்னிடம் அர்ப்பணம் செய்து, அப்படியே (சம)புத்தி
யோகத்தைக் கடைப்பிடித்து, என்னையே அடைக்கலமாகக் கொண்டு, மேலும்
எப்போதும் என்னிடமே உள்ளம் பதித்தவனாக இருப்பாயாக!
அப்படி என்னிடமே
உள்ளம் பதித்தவனாக இருப்பாயானால் நீ எனது அருளால் எல்லா இன்னல்களையும் எளிதாகக் கடந்து
விடுவாய். அகங்காரத்தினால் என்னுடைய சொற்களைக் கேளாவிட்டால் அழிந்து
போவாய்.
இறைவனே அனைத்துமென
அவனை இதயத்தில் நிறுத்தி எல்லாச் செயல்களும் அவன் நிமித்தம் என்றெண்ணி இயங்குபவனுக்கு
இந்த உலகில் முடியாததென்று எதுவுமில்லை. அவன் வழியில் வரும் பிரச்னைகள் பகலவனைக் கண்ட
பனி போல் இல்லாது போகும். தானே பெரிதென்றும்
தன் சிற்றறிவு காட்டும் வழியே சிறந்ததென்றும் இயங்குபவன் அழிந்து போவான்.
பகவத் கீதையை தன்
வாழ்வின் ஒரு பகுதியாகவே ஆக்கிக் கொண்ட காந்தியடிகள் கூறுகிறார். “கடவுளுக்காகவும்,
அவரது திட்டங்களுக்காகவுமே நாம் வாழ்கிறோம் என்று நாம் உண்மையாகக் கூற முடியுமாயின்
பாறை போல் பலத்துடன் இருப்பதை நாம் உணரலாம். அதன் பின் ஒரு தெளிவுடன் நாமிருக்க முடியும்.”
கதிரவன் மறையாத
சாம்ராஜ்ஜியத்தை கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் செய்து துரத்திய மனிதரின் வார்த்தைகள்
அவை என்று நினைவுபடுத்தி இதைப் படிக்கும் போது இறைவன் ஒருவனையே உறுதியாகப் பிடித்துக்
கொண்டு இயங்கி தான் அதைச் சாதித்தார் என்பதைச் சொல்லவும் வேண்டியதில்லை.
இறைவனின் தொடர்பில்
இருக்கும் வரை எதையும் செய்ய முடிந்த மனிதன் இறைவனிடம் இருந்து தொடர்பை நீக்கிக் கொள்ளும்
அக்கணமே பலம் அனைத்தும் இழக்கிறான். அதனாலேயே அவன் தோல்வியும், அழிவும் உறுதியாகிறது
ஸ்ரீகிருஷ்ணர் மேலும்
சொல்கிறார்:
அகங்காரத்தை மேற்கொண்டு, ’நான் போர்
புரிய மாட்டேன்’ என்று நினைப்பாயாகில் அந்த முயற்சியும் வீண் தான். உன் பிறவிக்குணம்
உன்னைப் போர் செய்யத் தூண்டிவிடும்.
குந்தியின் மைந்தனே! அறிவுமயக்கத்தின்
காரணமாக, நீ எந்தச் செயலைச் செய்வதற்கு விரும்பவில்லையோ. அதையும்
உன் இயல்பான கர்மவினையால் கட்டப்பட்டு, உன் வசமிழந்து
செய்யப் போகிறாய்.
யாரும் தங்கள் பிறவிக்
குணத்திலிருந்து எளிதில் மாற முடிவதில்லை. மாவீரனான அர்ஜுனன் வீர்ர்களின் பரம்பரையிலிருந்து
வந்தவன். வீரனாகவே வளர்ந்தவன். அந்த மாவீரம் அவன் இரத்தத்திலேயே ஊறியிருக்கிறது. அப்படிப்பட்டவன்
போரிடாமல் என்றென்றும் இருந்துவிட முடியாது. இந்தப் போரிலிருந்து அவன் விலக நினைக்கும்
காரணமே கூட அவன் குருவும், தாத்தாவும், அவன் அன்புக்குடையோரும் எதிர்ப்படையில் இருப்பது
தான். அது தான் அவன் போர்புரியும் சுதர்மத்தை விட, போரிலிருந்து விலகிப் போகும் துறவு
நல்லது என்று தோன்ற வைக்கிறது. ஒருவேளை அவன் இப்போது போர்புரியாமலிருப்பதாலும் அவன் என்றைக்கும் போர்புரியாமல்
இருந்து விட அவன் இயல்பான குணம் அனுமதிக்கப் போவதில்லை. இந்த உண்மையை பகவான் அவனுக்கு
இடித்துரைக்கிறார்.
அர்ஜுனா! இயந்திரத்தில்
ஏற்றிய பாவைகளைப் போல் பகவான் தன் மாயையால் சகல ஜீவராசிகளின் இதயத்திலும் வீற்றிருக்கிறார்.
பரதகுலத் தோன்றலே! நீ அந்த
பகவானையே சரணடைவாயாக! அவனருளால் நீ உயர்ந்த அமைதியையும், நிலையான
பரமபதத்தையும் அடைவாய்.
ரகசியங்களுக்குள்
ரகசியமான இந்த ஞானத்தைப் பற்றி நான் உனக்கு விளக்கிச் சொன்னேன். இதை முற்றிலும்
ஆராய்ந்து உன் விருப்பப்படி செய்.
மறைபொருளுக்கெல்லாம்
மறைபொருளான என்னுடைய மேலான ரகசிய உரையை உனக்குச் சொல்கிறேன். எனக்கு
நீ உற்ற நண்பனாக இருக்கிறாய். ஆகையால் மேலான நன்மை
பயக்கும் இந்த உரையை உனக்குச் சொல்கிறேன்.
நீ என்னிடமே மனத்தைச்
செலுத்து. என்னிடமே பக்தி கொண்டிரு. என்னையே
வழிபடு. என்னையே வணங்கு. இப்படிச்
செய்வதால் நீ என்னையே அடைவாய். இதையே நான் உனக்கு
உண்மையென உறுதிகூறுகிறேன். நீ எனக்கு அன்பன்.
எல்லாத் தர்மங்களையும்
விட்டு என் ஒருவனையே சரணடைவாயாக! நான் உன்னைச் சகல
பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன். வருத்தப்படாதே!
பொம்மலாட்டத்தில்
ஆடுவது பொம்மைகள் தான் என்றாலும் அத்தனை பொம்மைகளையும் இயக்க வைக்கும் கயிறு வேறொருவனிடம்
இருக்கிறது. இறைவன் ஆட்டுவித்தபடியே அனைவரும் ஆடிக் கொண்டிருக்கிறோம். இன்னொரு விதத்தில்
அனைத்திலும் அந்தர்யாமியாய் இருந்து கொண்டு இறைவனே இந்த மாயா நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறான்.
நடத்துவது அவனென்று உணர்ந்து நம் பங்கு என்னவென்று
தெளிந்து அதைச் செய்ய வேண்டுவதே நம் பணி. அதைவிட அதிகமாக நாம் சிந்திக்கவோ கவலைப்படவோ
அவசியமில்லை.
ஜார்ஜ் ஹெர்பர்ட்
இந்தச் சிந்தனையை அழகாகச் சொல்வார். “என் மன்னரும், கடவுளுமான தாங்கள் எல்லாவற்றிலும்
தங்களையே காண எனக்குக் கற்பியுங்கள். நான் எதைச் செய்தாலும் தங்களுக்காகவே அதைச் செய்ததாக
இருக்க வேண்டும். இந்த விதியைப் பின்பற்றும் ஒரு ஊழியனுக்கு அடிமைத்தனம் கூட ஒரு தெய்வத்தன்மை
பொருந்தியதாகி விடுகிறது. தங்களுடைய சட்டங்களுக்கு உட்பட்டவனாக எண்ணி யார் ஒரு அறையைச்
சுத்தம் செய்கிறானோ அவனது அந்தச் செயலும், அந்த அறையும் புனிதமாகி விடுகின்றன”
இறைவனை உறுதியாகப்
பற்றிக் கொண்டு அவனுடைய கருவியாக இயங்கும் மனிதனுக்குத் தோல்வியில்லை, துக்கமில்லை,
கவலைக்கு அவசியமில்லை, மோட்சம் உறுதி என்றெல்லாம் உணர்த்திவிட்டு இனி ”நீ முடிவெடு”
என்று இறைவன் விலகி நிற்கிறார்.
தமிழில் ”சாமி காட்டுமே
தவிர ஊட்டாது” என்று ஒரு பழமொழி உண்டு. உணவுக்கு வழி காட்டும் இறைவன் தானே சமைத்து
ஊட்டிவிடுவதில்லை. முடிவில் இயங்க வேண்டியது மனிதனே. முதலடி எடுத்து வைக்க வேண்டியவன்
அவனே. அவன் ஒரு அடி எடுத்து வைத்து விட்டால் போதும். மீதியை அந்த இறைசக்தியே பார்த்துக்
கொள்ளும். ஆனால் அந்த முதலடியின் பொறுப்பு என்றும் எப்போதும் தனிமனிதனின் பொறுப்பாகவே
இருக்கிறது.
பாதை நீளும்...
என்.கணேசன்
இறைவனை உறுதியாகப் பற்றிக் கொண்டு அவனுடைய கருவியாக இயங்குவதே ஒரு பெரும் பாக்கியம்....
ReplyDelete