சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, September 21, 2020

சத்ரபதி 143


கதூர்கான் சக்கரவர்த்தியின் மடல் கிடைத்தவுடன் சூரத்திற்கு வலிமையான படை ஒன்றை அனுப்பி வைத்தான். ராம் நகர் சிவாஜி வசமான பிறகு அவன் எப்போது வேண்டுமானாலும் சூரத்தைத் தாக்கலாம் என்ற சௌகரிய நிலையில் இருக்கிறான். அதனால் சாலேர் கோட்டையில் ஏமாந்தது போல இந்த முறை பகதூர்கான் ஏமாறவோ, அலட்சியமாக இருக்கவோ தயாரில்லை. சாலேர் கோட்டையில் அவர்கள் தோற்றதற்குச் சக்கரவர்த்தி தர்பாரில் மிகக் கேவலமான வார்த்தைகளில் அதிருப்தி தெரிவித்ததாக பகதூர்கானின் தலைநகர் நண்பர்கள் தெரிவித்திருந்தார்கள். அதனால் இனி சர்வ ஜாக்கிரதையாக இருக்க பகதூர்கான் முடிவு செய்திருந்தான்.

ஒரு நாள் ஒரு ஒற்றன் வந்து தகவல் தெரிவித்தான். “தலைவரே! திடீரென்று சிவாஜி பத்தாயிரம் குதிரை வீரர்களுடன் ராஜ்கட்டில் இருந்து கிளம்பி இருக்கிறார்”

பகதூர்கான் அடிவயிற்றில் ஒரு இறுக்கத்தை உணர்ந்தவனாகக் கேட்டான். “எங்கே செல்கிறான்?”

“தெரியவில்லை தலைவரே, படைத்தலைவர்களோ, படைவீரர்களோ கூட அதை அறியவில்லை என்பது தான் நமக்குக் கிடைத்திருக்கிற செய்தி”

பகதூர்கான் கேட்டான். “ஏதாவது அனுமானங்கள்?”

“மராட்டியர்கள் மூலமாக எதையும் யூகிக்க முடியவில்லை தலைவரே. ஆனால் சூரத்தில் இருக்கும் சில செல்வந்தர்கள் நகரை விட்டு அவசரமாக ஓடி விட்டார்கள்”

பகதூர்கான் சந்தேகத்தோடு கேட்டான். “அவர்களுக்கு எப்படித் தெரியும் சிவாஜி அங்கே தான் வருவான் என்று?”

ஒற்றன் சொன்னான். “இரண்டு முறை சூடுபட்டவர்கள் அவர்கள். எங்கேயோ நெருப்பு எரிகிறது என்று கேள்விப்பட்டால் கூட மறுபடி சூடுபட்டு விடுவோமோ என்று பயப்படுகிறார்கள்.”

“நான் தான் பெரிய படையை முன்பே அனுப்பி வைத்திருக்கிறேனே. இனி என்ன பயம்”

“முன்பிரு முறை சூரத் தலைவர் கோட்டைக்குள் ஓடி ஒளிந்து கொண்டதும், நம் படை அவர்களைக் காப்பாற்றத் தவறியதும் தான் அவர்கள் பயத்திற்குக் காரணம்…”

சக்கரவர்த்திக்கு மட்டுமல்லாமல் சாதாரணக் குடிமகனுக்கும் கூட இங்குள்ள படை மீது நம்பிக்கை குறைந்து போனது பகதூர்கானுக்கே அவமானமாகத்தான் இருந்தது. நிலைமையை மாற்ற அவன் எங்கே இருந்து தகவல் வந்தாலும் உடனே அங்கே படையை அனுப்பி வைக்கும் தயார் நிலையில் இருந்தான்.

ஆனால் சிவாஜியோ யாரும் எதிர்பாராதவிதமாக திடீர் என்று கோல்கொண்டா பக்கம் திரும்பிய செய்தி சீக்கிரமே பகதூர்கானுக்கு வந்து சேர்ந்தது. கோல்கொண்டா தலைநகர் எல்லை வாசலில் சிவாஜியின் படை சென்ற போது கோல்கொண்டா சுல்தான் இருபது லட்சம் பணத்தைத் தந்து இனி என்றும் உங்களுக்கு எதிராக இயங்க மாட்டேன் என்ற உறுதிமொழியும் கொடுத்து அனுப்பியதால் சிவாஜி கோல்கொண்டாவைத் தாக்காமல் திரும்பிப் போனதாகச் செய்தி வந்தது. ஆனால் அடுத்ததாக அவன் எங்கே செல்வான் என்ற படபடப்பு பகதூர்கானைத் தொற்றிக் கொண்டது. ”இனி எங்கேயாவது செல்வானா, நிற்பானா, இல்லை திரும்புவானா” என்று பதட்டத்துடனேயே  பகதூர்கான் இருந்தான். சாலேர் கோட்டைப் போர் அனுபவம் சிவாஜி குறித்து எதையும் தீர்மானிக்க விடாமல் அவனைத் தடுத்தது. கடைசியில் வேறெங்கும் செல்லாமல் நேராக  சிவாஜி ராஜ்கட் போய்ச் சேர்ந்தான் என்ற தகவல் கிடைத்த பின் தான் அவன் நிம்மதி அடைந்தான்.

அந்த நிம்மதியே ஒரு கணம் அவனை ஏளனம் செய்வது போல பகதூர்கான் உணர்ந்தான். பிரச்னை படை பலம் அல்ல. படை பலம் என்றைக்குமே முகலாயர்களுக்கு அதிகமாகவே இருந்திருக்கிறது. அவர்களுடைய பிரச்னை சிவாஜி என்ற தனிமனிதன். அவன் அறிவு. அவன் மன உறுதி, அவனுடைய ஆளுமை எல்லாம் தான். எந்த நேரத்தில் அவன் என்ன செய்வான் என்று ஊகிக்க முடியாத நிலைமை தான்….. அவன் முகலாயத் தலைநகரில் இருந்த போதும், தப்பித்துச் சென்று விட்ட பின்பும் முகலாயச் சக்கரவர்த்தியே சரியாக உறங்கவில்லை என்று பகதூர்கான் கேள்விப்பட்டிருக்கிறான். ’சர்வ வல்லமையுள்ள முகலாயச் சக்கரவர்த்திக்கே சவாலாக இருந்த, சவாலாக இப்போதும் இருக்கிற சிவாஜி எனக்குப் பதற்றத்தை ஏற்படுத்துவது பெரிய விஷயமா என்ன?’ என்று தன்னைத்தானே பகதூர்கான் சமாதானப்படுத்திக் கொண்டு மனம் லேசானான்.


சில மாதங்களில் பீஜாப்பூர் சுல்தான் அலி ஆதில்ஷா இறந்து போனான். அவன் மகன் சிக்கந்தர் சிறுவனாக இருந்த படியால் அவனை அரியணையில் அமர வைத்து, காவாஸ்கான் என்ற தளபதி நிர்வாகத்தை நடத்த ஆரம்பித்தான். பெரிய திறமையோ, வீரமோ இல்லா விட்டாலும் காவாஸ்கானுக்கு ஒரு ராஜ்ஜியமே என் அதிகாரத்தில் இருக்கிறது என்ற கர்வம் மட்டும் அதிகமாக இருந்தது. அவன் இதற்கு முன் அலி ஆதில்ஷா செய்து கொண்ட ஒப்பந்தம் எதையும் தொடராதவனாகவும், தன் விருப்பப்படி எல்லாவற்றையும் முடிவு செய்கிறவனாகவும் இருந்தான்.

பீஜாப்பூர் நிலவரத்தைக் கூர்ந்து கவனித்து வந்த சிவாஜி யேசாஜி கங்கையும் தன் படைத்தலைவர்களையும் அழைத்து பீஜாப்பூர் நிலவரத்தை அவர்களிடமும் விளக்கி விட்டுச் சொன்னான்.  “….எங்கே அறிவும் வலிமையும் அதிகம் இல்லாமல் கர்வம் மட்டும் அதிகம் இருக்கிறதோ அங்கே மாபெரும் வீழ்ச்சிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று அர்த்தம். பீஜாப்பூர் சாம்ராஜ்ஜியம் அழியத் தயாராகி விட்டது. அதனால் அடுத்தவர் பறித்துக் கொள்வதற்கு முன் நாம் முன்பு அவர்களிடம் இழந்த முக்கியக் கோட்டையான பன்ஹாலா கோட்டையைக் கைப்பற்றுவது புத்திசாலித்தனம் என்று நினைக்கிறேன்….”

அனைவரும் உற்சாகமானார்கள். சிவாஜி என்ன செய்ய வேண்டும், எப்படித் திட்டமிட வேண்டும், அதை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை விளக்கி அன்னாஜி பண்ட், கொண்டாஜி ஃபர்சந்த் என்ற திறமை வாய்ந்த தளபதிகளின் கீழ் சிறிய படையை அனுப்பினான். தகுந்த ஆயுதங்களுடனும், திறமையான வீரர்களுடனும் கிளம்பிய இரு தளபதிகளும் இரவு நேரங்களில் மட்டுமே பயணித்து பகல் நேரங்களில் மறைவிடங்களில் இளைப்பாறிக் கொண்டு பன்ஹாலா கோட்டைக்கு அருகே உள்ள அடர்ந்த காடான ரத்னகிரி காட்டை அடைந்தார்கள்.  

ரத்னகிரி காட்டில் மறைவில் இருந்தபடியே அவர்கள் பன்ஹாலா கோட்டையை இரண்டு மாதங்கள் கண்காணித்தார்கள். சிவாஜி சொல்லி இருந்தபடியே கோட்டையின் காவல் காக்கும் முறைகள், காவல் வீரர்களின் வேலை நேரங்கள், மாற்று ஏற்பாடுகள் எல்லாவற்றையும் மிகவும் கூர்ந்து கவனித்தார்கள். இரண்டாவது மாத முடிவில் எந்த நேரத்தில் கோட்டையின் எந்தப் பகுதியில் எந்த அளவுக் காவல் இருக்கும், அவர்களிடம் இருக்கும் ஆயுதங்கள் எவை முதலான எல்லாத் தகவல்களும் அவர்களுக்கு அத்துப்படியாகின.

பின் ஒரு நள்ளிரவு கொண்டாஜி ஃபர்சந்தும் அறுபது மாவல் வீரர்களும் பன்ஹாலா கோட்டையை நோக்கிக் கிளம்பினார்கள். இத்தனை நாள் கண்காணிப்பில் பன்ஹாலா கோட்டையின் தென்புறத்தில் காவலின் வலிமை குறைவு என்று அவர்கள் கண்டுபிடித்திருந்தார்கள். அதனால் அவர்கள் நள்ளிரவில் கோட்டையின் தென்பகுதியில் சத்தமில்லாமல் மேலேற ஆரம்பித்தார்கள்.  அவர்கள் அனைவரும் மேலேறிச் சென்றவுடன் முதல் வேலையாக எரிந்து கொண்டிருக்கும் தீப்பந்தங்களை அணைத்து விட்டு ஐந்தாறு பேர் ஊளையிட்டும், ஊதுகுழல் ஊதியும், மத்தளம் அடித்தும் வித விதமான கோரமான சத்தங்களை ஏற்படுத்தினார்கள். கொண்டாஜி ஃபர்சந்தும், மற்றவர்களும் பயங்கரமாய் கோட்டை வீரர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள்.

கோட்டையின் மேல்தளத்தில் ஏற்பட்ட திடீர் இருட்டும், திடீரென்று கேட்க ஆரம்பித்த அமர்க்களமான சத்தங்களும், பயங்கரத் தாக்குதலும் பன்ஹாலா கோட்டை வீரர்களை ஸ்தம்பிக்க வைத்தன. சிவாஜி படையின் கோட்டைத் தாக்குதல்கள் பிரபலமானவை.  வந்திருப்பது அறுபது பேர் என்பது பன்ஹாலா கோட்டை வீரர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனால் சிவாஜியின் பெரும் படை ஒன்று எப்படியோ உள்ளே புகுந்து விட்டது என்ற பயமே அவர்களைத் தொற்றிக் கொண்டது. இந்தக் களேபரத்தில் கொண்டாஜி கோட்டைத் தளபதியைத் தாக்கி அவனுடைய உயிரைப் பறித்தார். மாவல் வீரர்கள் கோட்டைக் கதவுகளைக் கஷ்டப்பட்டு திறந்து விட்டு விட அன்னாஜி    பண்ட் தலைமையில் சிவாஜியின் மீதிப்படை உள்ளே நுழைந்தது. விடிவதற்குள் சிவாஜியின் படை பன்ஹாலா கோட்டையைக் கைப்பற்றி விட்டது.

இரண்டு நாட்களில் பன்ஹாலா கோட்டைக்கு வந்த சிவாஜி அதை வலிமைப்படுத்தும் ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து விட்டே அங்கிருந்து சென்றான். இனி முகலாயர் உட்பட யாரும் அந்தக் கோட்டையை அவர்களிடமிருந்து கைப்பற்றுதல் எளிதல்ல என்ற நிலை உருவாகி விட்டது.

அங்கிருந்து வரும் போது யேசாஜி கங்க் சிவாஜியிடம் சொன்னான். “சிவாஜி. தக்காணத்தில் முகலாயர்களைப் பெருமளவு வென்று விட்டோம். பீஜாப்பூரும், கோல்கொண்டாவும் நம்மைப் பார்த்து நடுங்கும் நிலைமை உருவாகி இருக்கிறது. தக்காணத்தில் நாம் இப்போது தனிப்பெரும் சக்தியாக மாறி இருக்கிறோம். இனியும் நீ முடிசூட்டுவதைத் தாமதப்படுத்துவது சரியல்ல.”

யேசாஜி கங்க் சொல்வது போல, முழுவதுமாக இல்லா விட்டாலும் தக்காணத்தின் தனிப்பெரும் சக்தியாக உருவாகி விட்டோம் என்ற திருப்தி சிவாஜிக்கும் வந்திருந்தது. அவன் சொன்னான். “சரி நண்பா. நல்ல நாள் பார்த்து அதற்கான வேலைகளை ஆரம்பிப்போம்…”

(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. சிவாஜி இன்னும் என்ன... என்ன சாதனைகள் எல்லாம் செய்யப் போகிறானோ... தெரியவில்லை... சிவாஜி எல்லையில்லாத ஆற்றல் அற்புதம் 👌👌👌👌👌

    ReplyDelete