க்ரிஷ் அன்று மாலை வரை நிறைய யோசித்தான். அவனுக்கு வந்த எச்சரிக்கை உணர்வையும், அதையொட்டி யோசித்ததில் எழுந்த சிந்து
பற்றிய சந்தேகங்களையும் உதயிடம் தெரிவிப்பது தான் சரி என்று அவன் அறிவு சொன்னது. மாலை உதயின் அறைக்குப் போன போது உதய்
சிந்துவிடம் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்தான். உதயின் கண்களில் படாமல் சத்தமில்லாமல் க்ரிஷ் திரும்பி
வந்து விட்டான்.
மாஸ்டர் இந்த
சமயத்தில் இங்கே இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று க்ரிஷ் நினைத்தான். அவன் உணர்வுக்கு அவரிடம் அதிக விளக்கம்
பெற்றிருக்கலாம்; என்ன செய்வது என்று ஆலோசனை பெற்றிருக்கலாம்....
பத்மாவதி அவன்
அறைக்கு வந்து அவனிடம் புன்னகையுடன் சொன்னாள். “எப்பப் போனாலும் அந்தப் பொண்ணு கிட்டயே பேசிகிட்டிருக்கான். நாம போறதைக் கூட கவனிக்க மாட்டேன்கிறான்...”
க்ரிஷும் புன்னகைக்க
முயன்றான். பத்மாவதி உற்சாகத்துடன் சொன்னாள். “நான் ஹரிணிக்குப் போன் செய்து விஷயத்தை அவ கிட்டயும் சொல்லிட்டேன். அவளும் சந்தோஷப்பட்டா. அவளுக்கும் சிந்து போட்டோவை அனுப்பியிருக்கேன். சிந்து அழகாய் இருக்கிறதா ஹரிணியும்
சொன்னா” 
க்ரிஷ் தலையசைத்தான். பத்மாவதி சொன்னாள். “உன் அப்பா வந்தவுடனே அவர் கிட்ட எல்லாத்தையும்
சொல்லி சீக்கிரம் கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணுங்கன்னு சொல்லணும். எதையுமே நாம பத்து தடவை சொல்லணும். அப்படின்னா தான் அவரை நகர்த்த முடியும். அடுத்த முகூர்த்தம் எப்ப இருக்குன்னு
தெரியலை...”
க்ரிஷ் சொன்னான். “அம்மா அவசரப்படாதே. பொறும்மா....”
பத்மாவதி கோபத்துடன்
மகன் வாயை அடைத்தாள். “இன்னும் என்னடா பொறுக்கறது. எதுவுமே காலா காலத்துல ஆனாத் தான் அதுக்கொரு மதிப்பு...”
உதய் மாலை தான்
அவனறைக்கு வந்தான். சிந்து பற்றி தான் அதிகம் பேசினான்.  அர்த்தமில்லாமல் போய்க் கொண்டிருந்த
வாழ்க்கைக்கு இப்போது தான் அர்த்தம் கிடைத்திருப்பதாக உணர்வதாகச் சொன்னான். இப்போது தான் வாழ்க்கையில் ஒரு நிறைவை
உணர்வதாகச் சொன்னான். க்ரிஷால் உதயிடம் எதையும் மனம் விட்டுப் பேச முடியவில்லை. அவனைக் காயப்படுத்தாமல் எதையும் சொல்ல
முடிந்த நிலைமை இல்லை...
வாங் வே விஸ்வத்தின் கடிதத்தைப் படித்துப் பரபரப்படைந்தார். எர்னெஸ்டோ இதை எப்படி
எடுத்துக் கொள்ளப்போகிறார், இது குறித்து அவர் கருத்து (தீர்ப்பு) என்ன என்று அறியப்
பேராவலாக இருந்தார். ஆனால் இந்த முறையும் தனக்கு வந்த கடிதத்தை உறுப்பினர்களுக்குத்
தெரியப்படுத்தியதுடன் தன் கடமை முடிந்து விட்டதாய் எர்னெஸ்டோ இருந்து விட்டார். குறைந்தபட்சம்
தலைமைச் செயற்குழு உறுப்பினர்களுடனாவது அவர் கலந்தாலோசித்திருக்க வேண்டும், அவர்களின்
கருத்தைக் கேட்டிருக்க வேண்டும், தன் மனதில் என்ன இருக்கிறது என்று அவர் மனம் விட்டுப்
பேசி இருக்க வேண்டும். கடிதம் அனுப்பிய பின் ஓரிரண்டு நாட்களில் அதைச் செய்வார் என்று
அவர் எதிர்பார்த்தார். அப்போதே அவர் நண்பரான அகிடோ அரிமா சொல்லியிருந்தார். “கிழவர்
இதற்கெல்லாம் கருத்துச் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார். வேண்டுமானால் பொறுத்திருந்து
பாருங்கள். அவர் அசரவே மாட்டார். மௌனமாகவே இருப்பார். என்ன சொல்கிறீர்கள் என்று தலைமைச்
செயற்குழு உறுப்பினர்கள் மற்ற யாரும் கேட்கப் போவதில்லை. அதனால் ஒன்றும் நடக்கப் போவதில்லை.”
உண்மை. அவரைத் தவிர மீதமிருக்கும் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் யாரும் தாங்களாக
வாயைத் திறந்து இது போன்ற விஷயங்களில் இது வரை பேசியதில்லை. எப்போதாவது யாராவது வாய்
விட்டுத் தாங்களாகவே கருத்துக்கள் சொல்லி இருக்கிறார்கள், கேட்டிருக்கிறார்கள் என்றால்
அது  வாங் வே தான். வாங் வேயும் மிக ஜாக்கிரதையானவர். கிழவரின் சந்தேகப்
பார்வை அவர் மீது பதிந்து விட வாங் வே அனுமதித்ததேயில்லை. அதற்கு முன்பே அவர் இது வரை
நிறுத்திக் கொண்டிருக்கிறார். 
அன்றிரவு அவர் இல்லுமினாட்டியின் உளவுத் துறை உபதலைவர் சாலமனுக்கு ரகசிய போன் செய்து
பேசினார். “இந்தக் கடிதத்தை வைத்து விஸ்வம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டீர்களா?”
“இல்லை. அப்படிக் கண்டுபிடிக்கும் அளவுக்கு விஸ்வமும் அஜாக்கிரதையாய் இல்லை. சம்பந்தமில்லாத
இடத்திலிருந்து தான் தபாலை அனுப்பி இருக்க வேண்டும் என்று இம்மானுவல் நினைக்கிறான்.
எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது. அவன் கூட்டாளி ஒருவனும் கூட இருப்பதால் அவன் எத்தனையோ
தூரம் வந்து கூட தபாலை அனுப்பி இருக்கலாம்”
“அந்தக் கூட்டாளி குறித்த விவரங்கள் எதையாவது இம்மானுவலிடம் இருந்து தெரிந்து கொள்ள
முடிந்ததா?”
“இல்லை இம்மானுவல் அதுவிஷயமாக வாயையே திறக்க மாட்டேன்கிறான். நான் இரண்டு தடவை
அந்தக் கூட்டாளி சம்பந்தமாக அவனிடம் பேசிப் பார்த்தேன். ஆனால் அவன் ஒன்றுமே தெரியாத
பாவனையைத் தான் காட்டுகிறான். நானும் நேரடியாக அந்தக் கூட்டாளி சம்பந்தமான ஃபைலைக்
காட்டி இதெல்லாம் என்ன என்று கேட்க முடியாத நிலைமையில் இருக்கிறேன்.”
வாங் வேக்கு ஆத்திரமாக வந்தது. “கிழவர் தனக்குச் சரிசமமான ஆளைத் தான் உளவுத்துறைக்குத்
தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்”
சாலமன் அந்தக் கருத்துக்குப் பதிலேதும் சொல்லவில்லை. வாங் வே கேட்டார். “வேறு எதாவது
தகவல்?”
“அந்த அமானுஷ்யன் நாளை ஜெர்மனி போய் சேர்கிறான்.”
அந்த அமானுஷ்யனின் கதையை ஒரு நாவலின் சுவாரசியத்தோடு படித்திருந்த வாங் வேக்கு
அவனை ஒரு முறை நேரில் பார்க்க ஆவலாய் இருந்தது. ஆனால் உடனடியாக ஜெர்மனி போய் அவனையும்,
கிழவரையும் சந்திக்க அவரிடம் போதுமான வேறு காரணங்கள் இல்லை.   காரணங்கள்
கிடைக்கும் வரை அவர் காத்திருந்தே ஆக வேண்டும். ஆனால் அவருக்குக் காத்திருப்பது தான்
கஷ்டமாக இருந்தது. இல்லுமினாட்டியில் என்னென்னவோ நடக்கிறது. எல்லாம் ஏதோ மாற்றம் நடக்கவிருப்பதன்
அறிகுறிகளாகத் தெரிகின்றன. அப்படி மாற்றம் எதாவது வராதா, அதைத் தனக்குச் சாதகமாகப்
பயன்படுத்திக்கொள்ள முடியாதா என்று காத்திருக்கும் அவருக்கு எதுவும் அவர் எதிர்பார்க்கும்
அளவுக்குப் பூதாகரமாக எழாதது ஏமாற்றமாக இருந்தது. 
சிறிது யோசித்து விட்டுச் சும்மா இருக்க முடியாமல் கிழவரிடம் விஸ்வத்தின் கடிதம்
குறித்துப் பேசிப் பார்க்கலாமா என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. தலைமைக்குழு உறுப்பினரான
அவருக்கு அதுகுறித்துத்
தலைவரிடம் பேசும் அதிகாரம் உண்டு. விஸ்வத்தின் கடிதம் குறித்துக் கேட்பதனாலேயே அவர்
மேல் கிழவர் சந்தேகப்படக் காரணம் இல்லை. அகிடோ அரிமா சொன்னது போல எல்லோரும் வாயை மூடிக்
கொண்டு இருந்தால் எதுவும் நடக்காது…
இந்த
எண்ணம் மனதில் எழுந்து வலுப்பட்டவுடன் வாங் வே எர்னெஸ்டோவுக்குப் போன் செய்தார். உதவியாளனிடம்
கேட்டார். ”தலைவர் பிசியா”
“ஒரு
நிமிடம்…” என்றவன் இரண்டு நிமிடங்கள் கழித்து தலைவருக்கு இணைப்பைத் தந்தான். “ஹலோ”
என்று எர்னெஸ்டோவின் குரல் கேட்டது.
“வணக்கம்
தலைவரே வாங் வே பேசுகிறேன்…. ஒன்றுமில்லை…. இரண்டு நாள் முன்பு விஸ்வத்தின் கடிதம்
கிடைத்தது. அது குறித்து நாம் என்ன முடிவு எடுப்பது என்று யோசித்தேன். ஒன்றும் விளங்கவில்லை.
உடலைப் பொருத்த வரை அவன் டேனியல். மனதைப் பொருத்த வரை அவன் விஸ்வம். நாம் அவனை உறுப்பினராக
எடுத்துக் கொள்ள முடியுமா? இதை எப்படி அணுகுவது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை.
அவனுக்குப் பதில் எதாவது தரவேண்டுமா? அதை உங்களிடம் கேட்கலாம் என்று தான் போன் செய்தேன்…”
எர்னெஸ்டோ
சொன்னார். “நேரில் அவன் வந்திருந்தால் நேரிலேயே அவனுக்கு ஏதாவது பதில் சொல்ல நாம் யோசித்திருக்கலாம்.
தபாலில் அவன் எதையோ எழுதியிருக்கிறான். தபாலில் வந்ததற்குப் பதில் தபால் எதாவது அனுப்பலாம்
என்றால் அவன் இருக்கும் விலாசத்தை நமக்குத் தெரிவிக்கவில்லை. அதனால் இப்போதைக்கு நாம்
செய்வதற்கு ஒன்றுமில்லை. பொறுத்திருப்போம். ஒருநாள் அவன் கண்டிப்பாக நேரில் வரலாம்.
அப்போது யோசிப்போம்”
எர்னெஸ்டோ
பேச்சை முடித்துக் கொண்டார். வாங் வே பெருமூச்சு விட்டார்.
(தொடரும்)
என்.கணேசன்

I feel pity for Krish. How he is going to tell Uday? Ernesto is cool and perfect leader.
ReplyDeleteInteresting...... but epi short uh irukku.
ReplyDeleteஎர்னஸ்டோ விவரம் தான் ஒன்றுமே வெளியில் காட்டாமல் காய் நகர்த்துகிறார்....
ReplyDelete