பகவத் கீதையின் கடைசி அத்தியாயமும் பதினெட்டாம் அத்தியாயமுமான
மோட்ச சன்னியாச யோகத்திற்கு நாம் நுழைகிறோம். இந்தக் கடைசி அத்தியாயம் பகவத் கீதை இதுவரை
சொல்லியிருக்கிற அனைத்து முக்கிய உபதேசங்களின் சாராம்சத்தைத் திரட்டித் தொகுத்துத்
தருவதாக இருக்கிறது. இந்த அத்தியாயத்தில் புதிய கருத்துகள் இல்லை என்றாலும் அனைத்தையும்
முக்குணங்களான சாத்வீகம், ராஜஸம், தாமஸம் என்னும் கண்ணாடிகளின் வழியாக ஆராய்ந்து பார்த்துச்
சொல்லும் வேலையை பகவான் இதில் பார்த்திருக்கிறார்.
மோட்ச சன்னியாச
யோகத்தின் துவக்கத்தில் அர்ஜுனன் சன்னியாசம் தியாகம் என்ற சொற்களுக்குத் தனித்தனியாக
உண்மையான பொருள் என்னவென்று அறியவிரும்புகிறான்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர்
கூறுகிறார்:
பலனைக் கோரிச் செய்யும்
கர்மங்களை விட்டுவிடுதல் சன்னியாசம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள். தாம் செய்கின்ற
அனைத்துக் கர்மங்களின் பலன்களைத் துறப்பது தியாகம் என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள்.
சில அறிஞர்கள் கர்மங்கள்
அனைத்தும் குற்றமுடையவை. ஆகவே துறக்கப்பட வேண்டியவை என்று சொல்கிறார்கள். இன்னும்
சிலர் வேள்வி, தானம், தவம் என்கிற கர்மங்கள்
துறக்கத் தகுந்தன அல்ல என்று கூறுகிறார்கள்.
இங்கு சொல்லப்படும்
சன்னியாசத்திற்கும் தியாகத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் மிக சூட்சுமமானது. பலனை
எதிர்பார்த்துச் செய்யும் எல்லாக் கர்மங்களையும் செய்யாமல் விட்டுவிடுவது சன்னியாசம்.
அதாவது பலனுக்காகச் செய்யும் செயல்களை முற்றிலுமாகத்
தவிர்த்துவிடுவது துறவு. துறவில் செய்யப்படும் செயல்கள் இப்படி வடிகட்டப்பட்டு குறைந்து
விடுகின்றன. ஆனால் எல்லாச் செயல்களையும் செய்து கொண்டே இருந்து, அதன் பலன்களை மட்டும்
துறப்பது தியாகம். தியாகத்தில் செயல்கள் துறக்கப்படுவதில்லை. அதன் பலன்கள் மட்டும்
துறக்கப்படுகின்றன. பலன்களில் தனி ஆதாயம் தேடும் போக்கு தியாகம் செய்யப்படுகிறது.
கர்மங்கள் அனைத்தும்
குற்றமுடையவை என்று சில அறிஞர்கள் சொல்வதாக, பகவான் சொல்வது சிலருக்குக் குழப்பமாக
இருக்கலாம். நல்ல கர்மங்கள் எத்தனையோ இருக்கின்றனவே. அதிலும் குற்றம் வர என்னவிருக்கிறது?
எத்தனை உயர்ந்த
நற்காரியங்களாக இருந்தாலும் அதில் சிறிதளவாவது குற்றங்கள் இல்லாமல் போகாது. உதாரணத்திற்கு
விவசாயம் மிக உயர்வானது. அதனால் தான் நம் அனைவருக்கும் உணவே கிடைக்கிறது. உலகம் அனைத்தும்
பலனடைகிறது. இதெல்லாம் உண்மை தான். ஆனால் விவசாயி வயலில் இறங்கி உழும் போது எத்தனையோ
சிற்றுயிர்கள் இறக்கின்றன. நற்பலன்களின் அளவை வைத்துப் பார்க்கும் போது அந்த தீய பலன்களின்
அளவு மிகக் குறைவாக இருந்தாலும் குற்றமேயில்லாத செயல் என்று விவசாயத்தையும் சொல்ல முடியாதல்லவா?
அதே போல் எல்லா நற்செயல்களிலும் தேடிப் பார்த்தால் சிற்சில எதிர்மறை பலன்களும் விளையக்கூடும்.
சில அறிஞர்களோ சாஸ்திரங்கள் சொல்லும் வேள்விகள்,
தானம், தவம் ஆகியவற்றை யாரும் துறக்கக்கூடாது என்று சொல்கிறார்கள். சரி பகவான் என்ன
சொல்கிறார்? பார்ப்போம்.
பரதகுலச் சிரேஷ்டனே! புருஷ சிரேஷ்டனே! அந்தத்
தியாகத்தைப் பற்றிய என்னுடைய முடிவு என்ன என்பதைக் கேள். தியாகம்
மூன்று வகையானது.
வேள்வி, தானம், தவம் ஆகிய
கர்மங்கள் துறக்கத்தக்கனவல்ல. அவை கட்டாயம் செய்யப்பட
வேண்டியவைதான். ஏனென்றால் வேள்வி, தானம், தவம் இம்மூன்றுமே
அறிவுடையவர்களைப் பரிசுத்தப்படுத்தக்கூடியன.
அர்ஜுனா! மேற்கண்ட
கர்மங்களைச் செய்வதானாலும், பற்றுதலையும், பலனையும்
துறந்துவிட்டுச் செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய தீர்மானிக்கப்பட்ட உயர்ந்த கொள்கையாகும்.
விதிக்கப்பட்ட கர்மத்தைத்
துறந்துவிடுவது முறையல்ல. மோகத்தினால் அதை அப்படித் துறப்பது தாமஸ தியாகமாகும்.
ஒரு கர்மம் துக்கத்தைத்
தருமென நினைத்து, உடலை வருத்த வேண்டியிருக்குமோ என்ற பயத்தால் அந்தக் கர்மத்தைச்
செய்யாமல் விட்டால் அது ராஜஸத் தியாகம் ஆகும். அந்தத்
தியாகத்திற்குரிய பலனை அடைய மாட்டான்.
விதிக்கப்பட்ட கர்மத்தைத்
தான் செய்தே தீர வேண்டுமென்ற நினைப்புடன், பற்றுதலையும், பலனையும்
துறந்து செய்யப்பட்டால் அந்தத் தியாகம் சாத்வீகத் தியாகம் என்று கருதப்படும்.
செயல்களை முழுவதுமாகத்
தவிர்ப்பதில் பகவானுக்கும் உடன்பாடில்லை. முக்கியமாக வேள்வி, தவம், தானம் மூன்றுமே
துறக்காமல் செய்யப்பட வேண்டியவை என்கிறார்.
வேள்வி என்பது காலப்போக்கினால்
வழக்கொழிந்து விட்டிருக்கிறது. தவம் என்பது காடுகளுக்குச் சென்று உட்கார்ந்து செய்யப்படும்
பயிற்சியாக இல்லாமல் நம் கவனத்தை நாம் பிறந்ததற்காக இலக்குங்களில் குவிப்பது என்றே
எடுத்துக் கொள்ள வேண்டும். தானமும் முக்கியமானது. இவை ஏன் துறக்காமல் செய்யப்பட வேண்டும்
என்பதற்காக பகவான் கூறும் காரணம் மிக ஆழமானது. அறிவுடைய மனிதர்களைத் தூய்மைப்படுத்த
இவை மிக அவசியம் என்கிறார்.
வீட்டை ஒரு முறை
கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்து விட்டால் பின் எப்போதும் அது சுத்தமாகவே இருக்கும்
என்று சொல்லிவிட முடியுமா? முடியாதல்லவா? தினமும் தூசும், குப்பைகளும் வந்து சேர்ந்து
கொண்டே அல்லவா இருக்கும். அதனால் தானே தினமும் வீட்டைச் சலிக்காமல் சுத்தம் செய்கிறோம்.
அதே போல எத்தனை தான் அறிந்திருந்தாலும் மனிதனின் அறிவையும், மனிதனையும் சுத்தப்படுத்திக்
கொள்ள இவை அவசியம் என்கிறார்.
கர்மங்கள் முக்கியமென்று
முழங்கும் கர்ம யோகியான அவர் தியாகத்தை மூன்று குணாதிசய மனிதர்கள் வகையிலும் பிரித்துச்
சொல்கிறார். விதிக்கப்பட்ட கர்மத்தை செய்தே தீர வேண்டும் என்று உறுதியுடன் விருப்பு
வெறுப்பில்லாமல் செய்து அதன் பலனைத் துறப்பது சாத்வீகத் தியாகம். அந்தக் கர்மத்தைக்
கஷ்டம் என்று நினைத்தோ, சிரமம் என்று நினைத்தோ செய்யாமல் தவிர்ப்பது ராஜஸ தியாகம்.
இந்தக் கணக்கெடுப்பும் இல்லாமல், பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காகச் செய்யாமலிருந்தால்
அது தாமஸ தியாகம்.
செய்ய வேண்டிய செயல்
என்றாகி விட்ட பின் செய்து பலனை மட்டும் தியாகம் செய்வது சாத்வீகம். செயலின் லாப நஷ்டங்களைப்
பார்த்துக் கணக்கிட்டு செயலையே செய்யாமல் விடுவது ராஜஸம். சிந்தனையே செய்யாமல் செயலற்றிருப்பது
தாமஸம். ராஜஸத்திலும், தாமஸத்திலும் செயலின் உயர்வு குறித்து உணர்ந்த உறுதியான நிலைப்பாடு
இல்லை.
மேலும் பகவான் கூறுகிறார்:
சத்துவகுணம் நிறைந்தவனும், மேதாவியும், சந்தேகமற்றவனுமான்
தியாகியானவன் ஒரு கர்மம் நல்லதல்லவென்று அதை வெறுப்பதுமில்லை. ஒரு கர்மம்
நல்லதென்று அதில் நாட்டம் கொள்வதுமில்லை.
உடலைத் தாங்கும்
எவனும் கர்மங்களை அறவே துறந்து விடுவதென்பது முடியாத காரியம். ஆகவே கர்மபலனைத்
துறந்தவனே தியாகி எனப்படுவான்.
கர்மத்தின் பலனைத்
துறக்காத மனிதர்களுக்குக் கர்மத்தினுடைய நல்லதும், தீயதும், மேலும்
இரண்டும் கலந்ததுமான மூன்றுவிதமான பலன்கள் அவர்கள் இறந்தபின் கட்டாயமாகக் கிடைக்கின்றது. ஆனால் கர்ம
பயனைத் துறந்த மனிதர்கள் அத்தகைய பலனை அடைய மாட்டார்கள்.
மனிதனாகப் பிறந்தவன்
செயலற்று இருந்துவிட முடியாது என்பதைத் திரும்பத் திரும்ப கீதை வலியுறுத்தியிருப்பதை
முன்பே பல முறை பார்த்து விட்டோம். இந்தக் கடைசி சுலோகத்தில் கர்மம் செய்பவனுக்கு இறந்த
பின் கட்டாயமாகக் கிடைக்கும் பலன்களைப் பற்றியும் பகவான் சொல்லியிருப்பது பற்றிப் பார்ப்போம்.
மனிதன் தன் செயல்களின்
விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும். இந்தப் பிறவியில் அது தீராவிட்டால் அடுத்த பிறவியிலாவது
அனுபவித்தே தீர்க்க வேண்டிய கடன் அது. பலன்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அது பிடிக்கும்,
இது வேண்டும் என்று எண்ணிச் செய்பவர்கள் இது பிடிக்காது, அது வேண்டாம் என்று செயல்களைச்
செய்யாமல் தட்டிக் கழிப்பதும் உண்டு. இப்படிப் பலன் பார்த்து செயல் புரிபவன், செயலைத்
தவிர்ப்பவன் கணக்கு அனுபவித்தே தீர்க்க முடிந்தது. அதனால் ராஜஸமும், தாமஸமும் இந்தப்
பிறவியிலும், அடுத்த பிறவியிலும் தீர்க்க வேண்டிய கணக்கை, அதே செயல்களைச் சாத்வீக முறையில்
செய்பவன் அனுபவித்துத் தீர்க்க வேண்டியதில்லை. ஏனென்றால் அவன் கணக்குப் பார்த்து வேலை
செய்யவில்லை. தன் தர்மம் என்று எந்தக் கணக்கும் பார்க்காமல் செயல்புரிந்திருக்கிறான்.
எனவே அந்தக் கணக்கை இறைவனும் வைத்துக் கொள்வதில்லை. அதனால் அவன் அதை இப்பிறவியிலோ அடுத்த
பிறவியிலோ அனுபவிக்க வேண்டிய அவசியமில்லாதவனாகிறான். சரிதானே!
பாதை நீளும்...
என்.கணேசன்
பாதை நீளும்...
என்.கணேசன்
ஆழ்மனசக்தி ரகசியங்கள் புதிய பயிற்சி தொடர் பற்றிய அறிவிப்பு தங்களின் படைப்புகளை விரும்புகிறவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteNice sir...waiting for the videos........
ReplyDeleteபலன்கள் பற்றிய விளக்கம் அற்புதம் ஐயா 🙏
ReplyDelete