சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Friday, April 10, 2020

அமேசான் கிண்டிலில் “கீதை காட்டும் பாதை” வெளியீடு!


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்!


நான் இந்த வலைப்பூவில் இடைவெளிகளில் எழுதிவந்த “கீதை காட்டும் பாதை” அமேசான் கிண்டிலில் மின்னூலாக இன்று வெளியாகியுள்ளது.


ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் அவ்வப்போது தனக்குள்ளே ஒரு குருக்‌ஷேத்திரத்தைக் காண்கிறான். தர்மம்-அதர்மம், நன்மை-தீமை, பலம்-பலவீனம், கட்டுப்பாடு-கிளர்ச்சிகள், அறிவு-அறியாமை, லட்சியம்-அலட்சியம் போன்ற அணிகள் நேரெதிராக நின்று அவனுக்குள்ளே அடிக்கடி போர் புரிந்த வண்ணம் இருக்கின்றன. அவன் அந்தப் போரில் ஒவ்வொரு ஜதையிலும் எதை ஜெயிக்க விடுகிறான் என்பதை வைத்தே அவன் அளக்கப்படுகிறான். அதை வைத்தே அவன் வாழ்க்கையின் தரமும் தீர்மானிக்கப்படுகிறது.  

நாம் அனைவருமே சில சமயங்களில் அர்ஜுனன் நிலைக்கு வந்து விடுகிறோம். வாழ்க்கையில் பிரச்னைகள் பூதாகரமாக நம் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்கையில் தெளிவாகவும், விரைவாகவும், உறுதியாகவும் செயல்பட வேண்டியிருக்கும் கட்டத்தில் குழப்பம், பயம், துக்கம், செயலின்மை, விரக்தி ஆகியவற்றின் பிடியில் கட்டுண்டு நிற்க நேர்கிறது. எளிய தேவைகள், எளிமையான வாழ்க்கை என்றிருந்த நம் முன்னோர்களை விட அதிகமாக ஏராளமான தேவைகளை ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையை சிக்கலாக்கி வைத்திருக்கும் நாம் அவ்வப்போது அந்த குழப்ப நிலைக்கு வந்து விடுகிறோம். மேற்கொண்டு செல்லும் வழியறியாது தடுமாறி நிற்கிற அது போன்ற தருணங்களில் எல்லாம் அணையா விளக்காக ஒளிரும் கீதை நமக்கு தெளிவான வழியைக் காட்டுகிறது.

கீதோபதேசம் அர்ஜுனனுக்கு மட்டுமல்லாமல் யாரெல்லாம் அதை ஆழ்ந்து படிக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் வழிகாட்டக்கூடியது. மகாத்மா காந்தி அதை மிக அழகாகக் கூறியுள்ளார்: “கீதை சூத்திரங்கள் அடங்கிய நூல் அல்ல. அது கவிதை உருவான மகத்தான நூல். நீங்கள் அதை எந்த அளவுக்கு ஆழ்ந்து பரிசீலனை செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதிலிருந்து அற்புதமான அர்த்தங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். காலம் செல்லச் செல்ல அதில் உள்ள முக்கிய வார்த்தைகள் புதிய விரிவான அர்த்தங்களுடன் திகழ்கின்றன.....என்னைப் பொறுத்த மட்டில் எனது நடத்தையை உருவாக்கும் தவறாத ஒரு வழிகாட்டியாக கீதை அமைந்தது. அது தினந்தோறும் என் சந்தேகங்களைத் தீர்க்கும் ஒரு அகராதியாக அமைந்தது. எனக்கு கஷ்டங்களும், சோதனைகளும் ஏற்பட்ட போது அதிலிருந்து விடுதலை பெற நான் இந்த அகராதியையே நாடினேன்”.


காந்தியடிகள் சொன்னது போல் கீதோபதேசம் அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ உள்ளங்களில் இருள் மண்டிய போதெல்லாம் ஞான விளக்கேற்றி வைத்திருக்கிறது. பண்டிதன் முதல் பாமரன் வரை, அரசன் முதல் அன்றாடங்காய்ச்சி வரை இந்த ஞானாக்னியில் தங்கள் துக்கங்களையும், அறியாமையையும் பொசுக்கி பலனடந்து இருக்கிறார்கள்.  இன்று நமக்கும் கீதோபதேசம் எவ்வாறு பொருந்துகிறது, கீதையின் ஞானம் எப்படி நமக்கு போக வேண்டிய பாதையை வெளிச்சமிட்டுக் காண்பிக்கிறது என்கிற நோக்கையே இந்தத் தொடரில் பிரதானப்படுத்தி இருக்கிறேன். எனவே இதில் கீதையின் முழு உரையையும் அப்படியே தராமல் முக்கியமான அனைத்துச் சுலோகங்களையும் சொல்லி அதற்கான விளக்கங்களை என் அறிவுக்கு எட்டிய அளவில் விவரித்திருக்கிறேன். எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வாழ்வியல் உண்மைகளை அழகாகக் கூறும் பகவத் கீதையின் முக்கிய சாராம்சத்தை உதாரணங்களுடனும், விஞ்ஞான உண்மைகளுடனும், மற்ற அறிஞர்கள் கருத்துடனும் இணைத்து விளக்க முற்பட்டுள்ளேன்.

இதை எந்திரத்தனமாய் படித்துக் கொண்டே போவதை விட சிறிது நேர வாசிப்புக்குப் பின் அது குறித்து சிந்தியுங்கள். முக்கியமாக படிப்பினூடே உங்கள் வாழ்க்கைக்கு உதவுகிற  சிந்தனைகள், மாற்றி யோசிக்கத் தூண்டும் மெய்ஞான உண்மைகள், ஆமாயில்ல என்று பிரமிக்க வைக்கும் பொறி தட்டும் சத்தியங்கள் படிக்க நேர்ந்தால் கண்களை மூடிக் கொண்டு மனதில் சிறிது நேரமாவது அதை ஊறப்போடுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு எப்படிப் பயன்படுத்த முடியும் என்று யோசியுங்கள். இந்த நூல் உங்களுக்குப் பயன்படுவது அந்த வகையிலேயே முழுமையாக இருக்கும். பின் மறுபடி தொடருங்கள்

ஒவ்வொரு முறை படிக்கும் போதும் பகவத் கீதை புதுப்புது ஆழங்களை உணர்த்திய வண்ணம் இருப்பதை அடியேன் பலமுறை உணர்ந்திருக்கிறேன். நமது ஞானமும், பக்குவமும், விரிவடைய விரிவடைய பகவத் கீதை புதுப்புது அர்த்தங்களுடன் மெய்ஞான இரகசியங்களை வெளிப்படுத்துகிறது. அதனால் இது ஒரு முறை படித்து விட்டு மூடிவைத்து விடக்கூடிய நூல் அல்ல.
               
சந்தேகமும், குழப்பமும், துக்கமும் நிரம்பியிருந்த அர்ஜுனன் இந்த பகவத்கீதையைக் கேட்டு முடிவில் என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவும், உறுதியும் பெற்றான். அதே போல வாழ்க்கையில் எந்த நேரத்தில் குழப்பமும், சந்தேகமும், துக்கமும் நம்மை ஆட்கொண்டாலும் தெளிவுக்கும், நம்பிக்கைக்கும் ஆறுதலுக்கும் நாம் ஒவ்வொரு முறையும் இந்தப் பகவத் கீதையை நாடுவோமாக! அந்த நேரங்களில் முழு கீதையையும் மறுபடி நாம் படிக்க வேண்டுமென்பதில்லை. பகவான் ஸ்ரீகிருஷ்ணரை வேண்டிக் கொண்டு ஏதோ ஒருசில பக்கங்களைத் தேர்ந்தெடுத்துப் படித்தால் நம் அப்போதைய நிலைமைக்கான உபதேசம் கண்டிப்பாக நமக்குக் கிடைக்கும் என்பதையும், இறைவனால் வழிநடத்தப்படுவோம் என்பதையும் நான் என்  சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்!

நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதே எந்தவொரு உபதேசத்தின் நோக்கமும் பயனும் ஆகும். மகத்தானதொரு புனிதநூலின் மெய்ஞான உண்மைகளை எனக்குப் புரிந்த அளவு நானும் எழுத வேண்டும் என்ற உந்துதலில் உருவான இந்த  நூல்  படிப்பவர்கள் மனதிலும் வாழ்விலும் மாற்றங்களைச் சிறிதேனும் ஏற்படுத்தினால் எழுதிய பயன் கிடைத்ததாய் பெருமகிழ்ச்சி அடைவேன்.

நூலை அமேசானில் வாங்கிப் படிக்க லிங்க் -

அன்புடன்

என்.கணேசன்

1 comment:

  1. தாங்கள் கூறிய அனைத்தும் உண்மைதான் ஐயா...

    இந்து நூல் அடுத்த அடுத்த முறை படிக்கும் போது புது புது ஆழமான உண்மைகளை உணர்த்துகிறது‌..

    மேலும்...நாம் பிரச்சனை சமயங்களில் இதை திறந்தால் கண்டிப்பாக இதில் வழியும் இருக்கிறது...

    நூலுக்கு நன்றிகள்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    ReplyDelete