சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 11, 2019

சத்ரபதி 98


ன்னல் பெயர்க்கப்படும் சத்தத்தில் கண்விழித்த தாதிப்பெண் எச்சரிக்கையடைந்து வேகமாகச் சென்று உறக்கத்திலிருந்த  செயிஷ்டகானை எழுப்பினாள். “பிரபு…. பிரபு… ஆபத்து… ஆபத்து”

ஆழ்ந்த உறக்கத்திலிருந்து செயிஷ்டகான் பாதி உறக்கம் கலைந்து எரிச்சலுடன் கேட்டான். “என்ன ஆபத்து?”

“எங்கள் அறை ஜன்னலை யாரோ பெயர்த்துக் கொண்டிருக்கிறார்கள்?” என்று பதற்றத்துடன் அவள் சொன்னாள்.

நள்ளிரவு வேளையில் ஜன்னல் பெயர்க்கப்படுகிறது என்று கேள்விப்பட்டவுடன் முழுத்தூக்கமும் கலைந்த செயிஷ்டகான் சிவாஜியைத் தவிர வேறு யாரும் இந்த அளவு தைரியமாக இந்தச் செயலில் ஈடுபட முடியாது என்று உணர்ந்து பீதியடைந்தான். அவன் காதில் தாதியர் அறை ஜன்னல் பெயர்ந்து விழும் சத்தமும் கேட்டது. மாயாவி என்றும் மலை எலி என்றும் பலரும் அவனை வர்ணித்தது மிகச்சரியே என்று நினைத்த செயிஷ்டகான் தான் உயிர் பிழைப்பதைத் தவிர அப்போதைக்கு வேறெந்த சிந்தனையும் இல்லாமல் அவசர அவசரமாக ஆடையை அணிந்து கொண்டு, தன்  தன் அறை ஜன்னல் வழியே தப்பிக்க முயன்றான்.

தாதியர் அறையிலிருந்து வேகமாக செயிஷ்டகான் அறைக்குள் நுழைந்த சிவாஜி செயிஷ்டகான் ஜன்னல் வழியாகத் தப்பிக்க முயல்வதைக் கண்டான். அவன் வீசிய குறுவாள் செயிஷ்டகானின் ஒரு கையின் பெருவிரலைத் துண்டித்து விழுந்தது. சைத்தானையே நேரில் பார்த்ததைப் போல் அவனைப் பார்த்துப் பதறிய செயிஷ்டகான் வலியால் அலறித் துடித்து ஜன்னலுக்கு வெளியே விழுந்தான். ஜன்னலுக்கு வெளியே விழுந்த செயிஷ்டகானை இரண்டு தாதியர்கள் மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்றார்கள்.

சிவாஜியும் அவன் வீரர்களும் செயிஷ்டகானைப் பின் தொடர அடி எடுத்து வைத்த போது, சத்தங்கள் கேட்டு ஒரு பாதுகாவலனுடனும் சில வீரர்களுடனும் தந்தையின் அறைக்குள் செயிஷ்டகானின் மகன் வேகமாக நுழைந்தான். அவனுடைய பாதுகாவலன் சிவாஜியைத் தாக்கப் பாய்ந்து சிவாஜியின் வாளால் வெட்டப்பட்டு, பாய்ந்த வேகத்திலேயே உயிரிழந்து விழுந்தான்.

சிவாஜி இயங்குகிற வேகத்தைப் பார்த்து பிரமித்த செயிஷ்டகானின் மகன் கூடுமான வரை தன் வீரர்களுடன் சேர்ந்து போரிட்டான். ஆனால் சிறிதே நேரத்தில் அவனும் அவன் வீரர்களும் மடிந்து விழுந்தார்கள். சிவாஜியின் வீரர்களில் ஒருவன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். செயிஷ்டகானைப் போலவே தோற்றமளித்த ஒருவன் சற்று தூரத்தில் ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டு தன் குறுவாளைக் குறி பார்த்து வீசினான். குறுவாள் ஓடிக் கொண்டிருந்தவன் உயிரைப் பறித்தது. அவன் குப்புற விழுந்து இறந்தான்.

குறுவாள் வீசிய வீரன் “மன்னரே செயிஷ்டகான் மடிந்தான்” என்று உற்சாகமாகக் கத்தினான். அதன் பின் அங்கிருப்பது ஆபத்து என்றுணர்ந்த சிவாஜி யேசாஜி கங்கைப் பார்த்து சைகை செய்து விட்டு மற்றவர்களுடன், வந்த வழியே தப்பிச் சென்றான். சலசலப்புகள் கேட்டு அரண்மனையின் பின்பகுதிக்கு ஓடி வந்த சில முகலாய வீரர்களை எளிதாக வீழ்த்தி விட்டு அவர்கள் அரண்மனையை விட்டு வேகமாக வெளியேறினார்கள். முன்பே செயிஷ்டகானின் மராட்டிய வீரர்களாகவும், கைதிகளாகவும் வேடமிட்டு பூனாவிற்குள் நுழைந்திருந்த சிவாஜியின்  படைப்பிரிவு சிறிது தூரத்தில் தயாராகக் காத்திருந்து அவர்களுடன் இணைந்து கொண்டது. துரத்தி வந்த சில முகலாய வீர்ர்கள் மிகக்குறுகிய காலத்திலேயே உயிரிழந்தார்கள். 


யேசாஜி கங்க் செயிஷ்டகானின் ஜன்னல் வழியாகக் குதித்து ஓடி அரண்மனையில் மத்தளம் கொட்டுபவர்கள் தங்கியிருந்த அறையை அடைந்தான். “மூடர்களே எழுந்திருங்கள்” என்று அவன் கர்ஜித்தான்.

அந்தக் கர்ஜனையில் பயந்தெழுந்த மத்தளக்காரர்களிடம் யேசாஜி கங்க் மறுபடியும் கத்தினான். “பிரபு செயிஷ்டகானின் புகழ் பாடி மத்தளங்களை அடியுங்கள். சொல்லியனுப்பி எத்தனை நேரம் ஆயிற்று. இன்னும் என்ன உறக்கம்?”

அரைத்தூக்கத்தில் விழித்தெழுந்த மத்தளக்காரர்களுக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. ஏதோ வெற்றிச் செய்தி கிட்டியிருக்கிறது போல் இருக்கிறது அதனால் தான் பிரபு செயிஷ்டகானின் புகழ்பாடி மத்தளங்களை அடிக்க உத்தரவாகியிருக்கிறது என்று எண்ணியவர்களாக மத்தளங்கள் அடிக்க ஆரம்பித்தார்கள்.

அரண்மனையில் அந்த நள்ளிரவில் என்ன நடக்கிறது என்று பலருக்கும் புரியாத குழப்பம் நிலவியது. ஒரு பக்கம் பலரும் ஓடுகிறார்கள், சண்டையிடுகிறார்கள். இன்னொரு பக்கம் வெற்றி வாகை சூடுகையில் அடிக்கப்படுவது போல மத்தளங்கள் அடிக்கப்படுகின்றன.

இந்தக் களேபரத்தில் தாதிகள் சில வீரர்களை அழைத்து விஷயத்தைச் சொல்லி செயிஷ்டகானைப் பாதுகாப்பாகத் தப்பிக்க வைக்க ஏற்பாடுகள் செய்தார்கள். வீரர்கள் சூழத் தப்பித்துச் சென்று கொண்டிருந்த செயிஷ்டகானின் காதுகளில் அந்த மத்தளச் சத்தங்கள் நாராசமாக ஒலித்தன. பெருவிரல் துண்டிக்கப்பட்டதில் கடுமையான வலியை உணர்ந்து கொண்டிருந்த அவன், அந்த மத்தளச் சத்தங்களால் கடும் மன உளைச்சலையும் உணர்ந்தான். பாதுகாப்பான ஓரிடம் போய்ச் சேர்வதற்குள் மறுபடி அந்தச் சைத்தான் சிவாஜி எங்கிருந்தாவது பாய்ந்து வந்து தாக்கவும் கூடும் என்ற கிலியும் அவனை ஆட்டிப் படைத்தது.

சிவாஜியும் அவன் வீரர்களும் சிங்கக்கோட்டையை நோக்கிச் செல்ல, மாந்தோப்புகளில் பதுங்கியிருந்த அவன் வீரர்கள் உடன் சேர்ந்து கொண்டார்கள். மத்தளங்கள் அடிக்க ஏற்பாடு செய்து விட்டு வந்த யேசாஜி கங்கும் அவர்களுடன் விரைவில் வந்து சேர்ந்து கொண்டான்.

சிங்கக்கோட்டைக்குச் செல்லும் வழிக்கு நேர் எதிரான கட்ராஜ் காட் மலைப்பகுதியில் காத்திருந்த சிவாஜியின் வீரர்கள் நள்ளிரவில் மத்தளச் சத்தங்கள் கேட்டவுடன் தங்களுக்கு முன்பே ஆணையிட்டிருந்தப்படி தீப்பந்தங்களைப் பற்ற வைத்தார்கள். முன்கூட்டியே தயாராக வைத்திருந்த வெடிகள் வெடிக்கப்பட்டன. போர் அறிவிக்கும் ஒலிக்கருவிகள் ஒலிக்கப்பட்டன. அந்த மலையே பிரகாசிக்கும்படி வெளிச்சமும், அந்தப்பகுதியே அதிரும்படி சத்தமும் இருந்தன.

முகலாயர் படைகள் ஒரு நிதானத்துக்கு வந்து,  என்ன நடக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டு சிவாஜியைத் தாக்கத் தயாரான போது அந்த மலையில் ஜொலித்த ஒளியும், அதிரடி சத்தங்களும் அப்பகுதி போருக்குத் தயாரானது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டிருந்தன. சிவாஜி அங்கு தான் சென்றிருக்க வேண்டும், அதனால் தான் அந்த ஏற்பாடுகள் என்று எண்ணிய முகலாயப்படைகள் அங்கு நோக்கி விரைந்து செல்ல ஆரம்பித்தன. 

அந்த நாள் விடிந்த போது சிவாஜி சிங்கக் கோட்டைக்குத் தன் ஆட்களுடன் பாதுகாப்புடன் போய்ச் சேர்ந்திருந்தான். முகலாயப் படைகள் தீப்பந்தங்கள் எரிந்து முடிந்த கட்ராஜ் காட் மலைக்குச் சென்று ஏமாற்றத்துடன் அந்த வெற்று மலையைப் பார்த்தார்கள்.


செயிஷ்டகான் ஆத்திரத்தில் இருந்தான். பூனாவிற்கு வெளியே பாதுகாப்பாக ஒரு இடத்தில் முகாம் இட்டுத் தங்கியிருந்த அவன் தன் வாழ்நாளில் இது வரை உணராத அவமானத்தை உணர்ந்தான். அவன் மகன் இறந்த செய்தியும் அவன் மனதை வாட்டி வதைத்தது. சர்வ வல்லமையுள்ள முகலாயப்படையின் தலைவன் என்று இறுமாந்திருந்த அவனை, சிவாஜி என்ற மலைக்குரங்கு ஒரே இரவில் திக்குமுக்காடச் செய்து விட்டது. இத்தனையும் நடக்கையில் அவன் ஆட்களே வெற்றிமுரசு கொட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். கடுங்கோபத்துடன் அவன் அந்த மத்தளக்காரர்களை அழைத்து வரக்கட்டளையிட்டான்.

மத்தளக்காரர்கள் வந்து சேர்ந்த சமயத்தில் ஜோத்பூர் மகாராஜாவான ஜஸ்வந்த்சிங்கும் அங்கு வந்து சேர்ந்தான். நீண்ட காலமாக ஜோத்பூர் அரசர்கள் முகலாயர்கள் பக்கமாகவே இருந்து வந்தனர். செயிஷ்டகானை சிவாஜியை எதிர்க்க அனுப்பிய பிறகு ஔரங்கசீப், ராஜா ஜஸ்வந்த் சிங்குக்கு செயிஷ்டகானுக்கு எல்லா உதவிகளையும் செய்யக் கட்டளையிட்டிருந்தான். அதை ஏற்று அவ்வப்போது பூனா வந்து போய்க் கொண்டிருந்த ராஜா ஜஸ்வந்த் சிங், இந்த நேரத்தில் வந்து  குழப்பத்துடன் “என்ன நடந்தது?” என்று கேட்டான்.

அப்போதைய சூழ்நிலையில் அனைவர் மீதும் அடங்காத கோபத்தில் இருந்த செயிஷ்டகான் ”தாங்கள் இன்னும் சக்ரவர்த்தியின் சேவகத்தில் தான் இருக்கிறீர்களா?” என்று காரமாகக் கேட்டான்.

“அதிலென்ன சந்தேகம்?” என்று குழப்பம் தீராமல் பதில் அளித்த ராஜா ஜஸ்வந்த் சிங்குக்குப் பதிலெதுவும் சொல்லாமல் மத்தளக்காரர்களிடம் செயிஷ்டகான் கேட்டான். “நேற்று நள்ளிரவு திடீரென்று நீங்கள் மத்தளம் கொட்டக் காரணம் என்ன?”

மத்தளக்காரர்களின் தலைவன் பணிவுடன் குனிந்து “தங்களிடமிருந்து உத்திரவு வந்ததால் தான் அடித்தோம் பிரபு”

செயிஷ்டகானுக்கு பூனாவின் அரண்மனையே சூனியம் வைக்கப்பட்டிருக்கும் இடம் போலத் தோன்றியது. என்னென்னவோ எதிர்பாராததெல்லாம் எதிர்பார்க்காத நேரங்களில் நடக்கின்றது. ”எதிரி அரண்மனைக்குள் புகுந்து என் மகனைக் கொன்று என் விரலை வெட்டி நான் உயிர்பிழைத்திருக்கும் வேளையில் அதைக் கொண்டாட மத்தளம் கொட்டச் சொல்லி நான் உங்களுக்கு உத்திரவு பிறப்பித்திருக்கிறேனா. நல்ல கதை இது” என்று கடுங்கோபத்தில் அவன் சொன்ன போது ராஜா ஜஸ்வந்த் சிங்குக்கு அவனையும் மீறி ஒரு புன்னகை வந்து போனது.


செயிஷ்டகான் அவனைச் சந்தேகத்துடன் பார்த்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

4 comments:

  1. Super sir. Felt like seeing a movie. Action, thrilling, tension, comedy all packed in this episode.

    ReplyDelete
  2. சிவாஜி தீட்டிய திட்டமும்... அதனை செயல்படுத்திய விதமும் அற்புதமாக இருந்தது... ஆனால்,செயின்ட்கான் தப்பித்தது தான் ஏமாற்றம் அளிக்கிறது...
    இனி,செயின்ட்கானின் கோபம் எந்த முறையில் வெளிபடப் போகிறதோ..?

    ReplyDelete
  3. இனி, ராஜா ஜஸ்வந்த் சிங்குக்கு சங்கு ஊதப்படுமோ...?

    ReplyDelete
  4. ராஜா ஜஸ்வாந்த் சிங்குக்கு என்னுடைய அட்வான்ஸ் அஞ்சலிகள்

    ReplyDelete