சிவாஜியின் மிகப்பெரிய பலமே எதிலுமே உள்ள சாதகமான அம்சங்களையும்,
பாதகமான அம்சங்களையும் விருப்பு வெறுப்பில்லாமல் பார்க்க முடிவது தான். அவனுடன் இணைந்திருப்பவர்களுக்கு
அவன் முதலில் சாதகமான அம்சங்களைச் சொல்லி உற்சாகமூட்டுவான். அடுத்ததாக, பாதகமான அம்சங்களைச்
சொல்லும் போது அதைக் கடந்து செல்லும் வழியையும் சேர்த்தே தான் சொல்வான். அப்படி அவனால்
அந்தத் தீர்வு வழிகளைக் கண்டுபிடிக்க முடியாத போது மட்டும் பாதகமான அம்சங்களைச் சொல்லி
அதைப் போக்க என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்பான். சொல்லப்படும் ஆலோசனைகளில் உள்ள
பலம், பலவீனங்களையும் கூர்ந்து உள்வாங்கும் பேரறிவும் அவனுக்கு இருந்தது. அதைச் சுட்டிக்காட்டி
வழிகளை மேம்படுத்தி, ஒழுங்குபடுத்தி முடிவில் ஒரு கச்சிதமான வழியைக் கண்டுபிடிக்காமல்
அவன் ஓய மாட்டான். அதே போல ஒரு திட்டத்தைப் பல கோணங்களில் இருந்து பார்க்கும் அபாரத்
திறமையும் அவனிடம் இருந்தது. அவன் கவனத்திற்கு வராமல் போகிற அம்சங்கள் அபூர்வம்.
இப்போதும்
முதலில் சாதகமான இரண்டு விஷயங்களைச் சொல்லி ஆரம்பித்த அவன் தன் முழுத் திட்டத்தை விவரித்த
போது அவர்கள் பிரமித்துப் போனார்கள். செயிஷ்டகானைத் தாக்கச் செல்வது மட்டுமல்ல, திரும்பி
சிங்கக்கோட்டை வந்து சேரும் விதம் வரை அவன் யோசித்திருந்தான். அதன் பின்னும் என்ன நடக்கலாம்,
அதை எப்படிச் சமாளிக்கலாம் என்றும் கூடத் தன் எண்ணங்களைச் சொன்னான்.
சிவாஜி
முடிவில் சொன்னான். “இதில் நாம் எதிர்பாராத சிலதும் நடக்க வாய்ப்பிருக்கிறது. அதை அப்போது
சந்திப்போம். நம்முடன் அன்னை பவானி இருக்கிறாள். அவள் உத்தரவுக்குப் பின்பே இதில் நான்
இறங்கி இருக்கிறேன். அதனால் இனி யோசிக்க எதுவுமில்லை. எல்லாவற்றையும் அவள் பார்த்துக்
கொள்வாள்”
அவர்களுக்கு
அன்னை பவானியுடன் அவனுக்கிருந்த அளவு இணக்கமோ, அவள் மீது அவனுக்கிருந்த அளவு நம்பிக்கையோ
இல்லை. ஆனால் அவர்களுக்கு அவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அதனால் உற்சாகம்
அடைந்தார்கள்.
சிவாஜியின்
படை பல சிறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. ஒரு பிரிவு மராட்டிய வீரர்கள் உடையிலும்,
இன்னொரு பிரிவு அவர்களால் கைது செய்யப்பட்ட போர் வீரர்கள் உடையிலும் பூனாவின் ஒரு வாசல்
வழியாக உள்ளே நுழைந்தது. அந்தக் காலக்கட்டத்தில் அங்கங்கே சில கிளர்ச்சிகள் நடப்பதும்,
அதை வீரர்கள் அடக்கி கிளர்ச்சியாளர்களைக் கைது செய்து அழைத்து வருவதும் அடிக்கடி காண
முடிந்த காட்சி. அவர்களை முறையாக விசாரித்துச் சிறையில் அடைப்பதற்குச் சில நாட்கள்
ஆகும். அது வரை சிறைப்பிடித்தவர்கள் அவர்களை எங்காவது ஒதுக்குப்புறத்தில் சங்கிலியால்
பிணைத்து வைப்பார்கள். அவர்களைச் சிறையில் அடைக்கும் வரை அவர்களைக் காவலில் வைத்துப்
பராமரிப்பது சிறைப்படுத்திய தலைவனின் பொறுப்பு. அதில் தலையிடும் சிரமத்தை வேறுபல வேலைகள்
மேற்கொண்டிருக்கும் மற்ற படைத்தலைவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள். அதனால் சிவாஜியின்
அந்தப் பிரிவு உள்ளே நுழைந்து ஒதுக்குப்புறமாக ஒதுங்கியது.
சிவாஜி,
தானாஜி மலுசரே, யேசாஜி கங்க் முதலானவர்கள் கொண்ட சிறு பிரிவு மாறுவேடத்தில் கல்யாண
கோஷ்டியாக இன்னொரு வாசல் வழியாக பூனாவினுள் நுழைந்தது. முறையாக அனுமதி வாங்கியிருக்கிறார்களா
என்று சோதித்துப் பார்த்து அவர்கள் வாங்கியிருந்த அனுமதிச்சீட்டு உண்மையானது தான் என்று
ஊர்ஜிதப்படுத்திக் கொண்ட பின் பரிசோதனை அதிகாரிகள் கல்யாண கோஷ்டியை உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.
மாப்பிள்ளையாக அலங்கரித்து ஒரு சிறுவனைக் குதிரையில் அமர்த்திப் பின்னால் ஷெனாய் வாத்தியம்
வாசித்துக் கொண்டும், மாப்பிள்ளை வீட்டார் போல ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் அந்தப்
பிரிவு அவர்களுக்கென்று முன்கூட்டியே ஏற்பாடு செய்து வைக்கப்பட்டிருந்த பெரிய வீடு
ஒன்றை அடைந்தது. அங்கிருந்த அத்தனை வீட்டாரும் அவனுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தவர்கள்
என்பதால் இந்த ஏற்பாடுகளைச் செய்வதில் எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை.
சிங்கக்கோட்டையிலிருந்து வழி நெடுக இருந்த மாந்தோப்புகளில் சிவாஜியின் சில படைகள் மறைந்து நின்று கொண்டன. இன்னொரு சிறிய பிரிவு சிங்கக்கோட்டைக்குச் செல்லும் வழிக்கு நேர் எதிரான கட்ராஜ் காட் மலைப்பகுதியை நோக்கிச் சென்றது. அங்கே மலை மேல் இருந்த மரங்களில் பெரிய பெரிய தீப்பந்தங்கள் தயார் செய்யப்பட்டு மரங்களில் கட்டப்பட்டன. எல்லாம் முடிந்து பெரிய மத்தளங்கள், ஒலி எழுப்பும் கருவிகள், வெடிகள் எல்லாம் வைத்துக் கொண்டு அந்த வீரர்கள் தயாராக இருந்தார்கள்.
சிறுசிறு
பிரிவுகளாகப் பிரிந்து சிவாஜியின் படை உள்ளே நுழைந்திருந்ததால் பூனாவின் பாதுகாப்பு
அதிகாரிகளுக்கு எந்த விதச் சந்தேகமும் எழவில்லை.
உள்ளே நுழைந்திருந்தவர்களும் எந்தச் சந்தேகத்தையும் எழுப்பும் விதத்தில் நடந்து
கொள்ளவில்லை.
அந்த
நாளின் ஆரவாரங்கள் அடங்கி இரவின் அமைதி சூழும் வரை அவர்கள் அமைதியாகக் காத்திருந்தார்கள்.
பின் சிவாஜியும், அவன் நண்பர்களும், உடன் வேறு இருபது தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களும்
லால் மஹாலுக்குக் கிளம்பினார்கள். இருவர், மூவராகப் பேசிக் கொண்டே போவது போலச் சென்றார்கள்.
லால்மஹாலின் வாசலில் பெரிய விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வாசலில் காவலுக்கிருந்த
இரவுக் காவலர்கள் ஓய்வாக பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எதிரிகள் யாரையும் எதிர்பார்க்கவில்லை. அவர்களைத் தாக்கி உள்ளே செல்வது பெரிய விஷயமல்ல
என்ற போதும் அந்தத் தாக்குதலில் எவனாவது ஒருவனாவது கூக்குரலிட்டு மற்றவர்களை எழுப்பி
விடும் அபாயம் இருக்கிறது என்பதால் அவர்கள் தொலைவிலேயே லால்மஹால் வாசலைத் தாண்டிச்
சென்றார்கள்.
அரண்மனையின் பின்னால் மதில் சுவரில் ஏறி சிவாஜி நோட்டமிட்டான். வலது புறமாக ஒரு காவலனும், இடது
புறமாக ஒரு காவலனும் அரண்மனை மதில்சுவரின் உட்பகுதியில் அரண்மனையைச் சுற்றி நிதானமாக
வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாண்டி மறுபக்கம் சென்று
அங்கிருந்து மறுபடி கிளம்பி இதே போல் ரோந்து வந்து கொண்டிருந்தார்கள். இந்த எந்திரத்தனமான
ரோந்தில் இருவருமே ஒருவரை ஒருவர் கடந்து சென்று இரு பக்கங்களிலும் முன்னோக்கி நடக்கும்
போது பின்பக்கம் நடப்பதை அறிய இருவருக்குமே வழியில்லை என்பதையும், இதனால் ஐந்து நிமிடத்திற்கும்
மேல் அரண்மனையின் பின் பக்கம் காவல் இல்லை என்பதையும் கவனித்த சிவாஜி அவர்கள் திரும்பவும்
சுற்றி வந்து ஒருவரைக் கடந்து மற்றவர் சென்று பக்கவாட்டில் நடக்க ஆரம்பிக்கும் வரைக்
காத்திருந்து விட்டு தன் சகாக்களுக்குச் சைகை செய்தான். அவர்கள் அனைவரும் அவனோடு சேர்ந்து
மதில்சுவர் ஏறி சத்தமில்லாமல் உள்ளே குதித்தார்கள்.
மதில்சுவரிலிருந்து
குதித்தவர்கள் அரண்மனையின் பின்பகுதியில் இருந்த சமையலறை ஜன்னல் வழியாக வேக வேகமாக
உள்ளே குதித்தார்கள். ஒரே ஒரு சமையல்காரன் தான் ஏதோ வேலையில் இருந்தான். வேறு இரண்டு
சமையல்காரர்கள் சமையலறை ஓரத்திலேயே உறங்கிக் கொண்டிருந்தார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில்
விழிப்பில் இருந்த சமையல்காரனை வாயைப் பொத்தி கழுத்தைத் திருகி சிவாஜி கொல்ல, வேறு
இருவர் உறக்கத்தில் இருந்த மற்ற இரு சமையல்காரர்களையும் வாயைப் பொத்தி மார்பில் குறுவாளால்
குத்திக் கொன்றார்கள். சத்தமில்லாமல் இது நடந்து கொண்டிருந்த போது ரோந்துக் காவலர்கள்
அரண்மனையின் பின்பக்கத்தை மந்தகதியிலேயே கடந்து கொண்டிருந்தார்கள். இந்த ரோந்தில் இருவரின்
முந்தைய சந்திப்பிலிருந்து இந்தச் சந்திப்புக்குள் சிவாஜியும், அவன் ஆட்களும் சமையலறை
ஜன்னல் வழியாக உள்ளே குதித்துப் போனதற்கான எந்த அறிகுறியும் அவர்களுக்குக் காணக் கிடைக்கவில்லை.
சமையலறையை
அடுத்து தாதிகள் தங்கியிருந்த பெரிய அறை இருந்தது. அதையும் தாண்டித் தான் செயிஷ்டகான்
தங்கியிருந்த அறை இருந்தது. தாதிகள் அறைக்கதவு உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. தனதறைக்கு
அடுத்தாற் போல் இருந்ததால் முன்பே செயிஷ்டகான் பாதுகாப்பு கருதி அந்த அறையின் ஜன்னல்களில்
குறுக்குக் கம்பிகள் பொருத்தியிருந்தான்.
என்ன
செய்வது என்று பார்வையாலேயே யேசாஜி கங்க் கேட்டான். ஏதாவது ஒரு ஜன்னலின் கம்பிகளை அறுப்பதா,
ஜன்னலையே பெயர்த்து விடுவதா என்ற இரண்டில் ஒரு உபாயத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில்
இருந்தார்கள். கம்பிகளை அறுப்பது கிறீச்சிட்ட ஒலியைக் கண்டிப்பாக ஏற்படுத்தும். அதை
விட ஜன்னலைப் பெயர்ப்பது குறைந்த ஒலியையே ஏற்படுத்தும் என்பதால் சிவாஜி ஜன்னலைப் பெயர்க்கலாம்
என்று சைகை செய்தான்.
உள்ளே
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தாதிகளை எழுப்பி விடாதபடி எவ்வளவு தான் முன்னெச்சரிக்கையுடன்
குறைந்த சத்தம் வரும்படி அவர்கள் தங்களிடம் இருந்த உபகரணங்களால் ஜன்னலைச் சுற்றியுள்ள
சுவரை உடைத்தார்கள் என்றாலும், அப்படி உடைத்துக் கொண்டிருக்கையில் ஒரு தாதி அந்தச்
சத்தத்தில் விழித்துக் கொண்டாள்.
(தொடரும்)
என்.கணேசன்
Very interesting. I love Sivaji's courage and brilliance. We need more such heroes in our country.
ReplyDeleteRajarajan story ezhuthunka sir pls
ReplyDeleteyes Rajarajan story or Rajendran story, Thalaiyaalanganathu seruvenra Pandiyan story
ReplyDeleteஅதுக்குள்ள தொடர் முடிந்து விட்டதா..?
ReplyDeleteஒவ்வொரு நிமிடமும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது...அருமை...