ப்ளாவட்ஸ்கீ அம்மையாருடன் நெருங்கிப் பழகிய கனவான் ஒருவர் அவரது காலஞ்சென்ற பாட்டியின்
புகைப்படம் தங்கள் குடும்பத்தில் ஒன்று கூட இல்லை என்று கூறி, அவரது படம் ஒன்றை வரவழைத்துத் தரும்படி ப்ளாவட்ஸ்கீ அம்மையாரைக் கேட்டுக் கொண்டார். ஆரம்பத்தில் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஆனால் பாட்டியின் மீது பேரன்பு வைத்திருந்த அந்தப் பேரன் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரை
விடாமல் நச்சரித்துக் கொண்டேயிருந்தார். அந்தக் கனவானின் பாட்டியை ப்ளாவட்ஸ்கீ
அம்மையார் பார்த்ததும் இல்லை என்பதால் அவரால் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை
போலும் என்று உடன் இருந்த கர்னல் ஓல்காட் எண்ணினார். ஆனால் அந்தக் கனவான்
ப்ளாவட்ஸ்கீ அம்மையாரை விடுவதாயில்லை. தொடர்ந்து தன் வேண்டுகோளைச் சொல்லி வற்புறுத்திக்
கொண்டே இருந்தார்.
ஒரு கட்டத்தில் சலிப்படைந்த ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஒரு வெள்ளைத் தாளை எடுத்துக்
கொண்டு ஜன்னலருகே சென்று அந்தத் தாளை ஜன்னல் கண்ணாடியில் வைத்து இரண்டு கைகளாலும் அழுத்திப்
பிடித்தபடி நின்றார். அந்தக் கனவானும், கர்னல் ஓல்காட்டும்
ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தபடி
அமர்ந்திருந்தார்கள். சிறிது நேரம் கழித்து அந்தக் காகிதத்தை அந்தக்
கனவானிடம் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் நீட்டினார். அந்தக் காகிதத்தில்
பென்சிலால் வரையப்பட்ட ஒரு மூதாட்டியின் ஓவியம் இருந்தது. தலைமுடி கருத்து, முகமெல்லாம் சுருக்கம் விழுந்து, மூக்கு பெரிதாக இருந்த அந்த ஓவியம் தன்
பாட்டியின் தத்ரூபமான படம் தான் என்று அந்தக் கனவான் அதிசயித்துச் சொன்னார். அவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஒரு முறையும் பார்த்திராத, பல காலத்திற்கு முன்பு
இறந்திருந்த அந்த மூதாட்டியின் படத்தை அந்த வெள்ளைக் காகிதத்தில் வரவழைப்பது எப்படி
சாத்தியமானது? அதைச் சாதித்துக் காட்டியது ப்ளாவட்ஸ்கீ அம்மையார்
முன்பொரு முறை சொல்லியிருந்த யக்ஷினி வித்தையா, ஜான் கிங் ஆவியா, இல்லை ஏவல் சக்தியா என்பதை கர்னல் ஓல்காட்டால் யூகிக்க முடியவில்லை..
அந்த நிகழ்வுக்குப் பின்பு வேறுசில சக்தியாளர்களும் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்குப்
பழக்கமானார்கள். அப்படிப் பழக்கமானவர்களில் வேறொரு இத்தாலியக்
கலைஞரும் இருந்தார். அவர் இயற்கையின் சக்திகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வர முடிந்தவராகத் தன்னைச் சொல்லிக் கொண்டார். அவருடைய சக்தியை நேரடியாகக்
காணும் வாய்ப்பு கர்னல் ஓல்காட்டுக்கு 1875ஆம் ஆண்டின் ஒரு நாள்
மாலையில் கிடைத்தது.
அந்தச் சமயத்தில் வானம்
மேகங்கள் இல்லாமல் நிர்மலமாக தூய நீலத்தில் இருந்தது.
முழுநிலவு வானத்தில் தோன்றி இருந்தது. மழை வருவதற்கு
வாய்ப்பே சிறிதும் இல்லாத அந்தச் சூழ்நிலையில் மழையை வரவழைத்துக் காட்டுவதாக அந்த இத்தாலியக்
கலைஞர் அவர்களிடம் சவால் விட்டார். அமானுஷ்ய சக்திகள் ஏராளமாக இருப்பது போலவே அவற்றை அடையும் விதங்களும், அவற்றை வெளிப்படுத்தும் விதங்களும் பலவாறாக இருக்கின்றன என்பதால் அவர் தன் சக்தியை
எப்படி வெளிப்படுத்துகிறார் என்று அறிய ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் ஆவலாக இருந்தார்கள். வீட்டின் மொட்டை மாடிக்கு
அந்த இத்தாலியக் கலைஞர் அவர்கள் இருவரையும் அழைத்துப் போனார். இருவரில் கர்னல் ஓல்காட் தான் என்ன நடக்கப் போகிறது, எப்படி நடக்கப் போகிறது
என்பதை அறிய மிக அதிக ஆவலோடு இருந்தார்.
அந்த இத்தாலியக் கலைஞர் கர்னல் ஓல்காட்டிடம் “என்ன நடந்தாலும் அமைதியாக
இருக்க வேண்டும், சத்தம் செய்யக் கூடாது” என்று எச்சரிக்கை விடுத்து விட்டுத் தன் கோட் பாக்கெட்டிலிருந்து பத்து அங்குல
நீளமும் ஆறு அங்குல அகலமும் கொண்ட ஒரு அட்டையை எடுத்தார். அந்த அட்டையில் பல
நிறங்களில் பல சதுரங்கள் வரையப்பட்டிருந்தன. ஒவ்வொரு சதுரத்திலும்
சில கணிதக் குறியீடுகள் இருந்தன. அந்த அட்டையை வாங்கி அந்தக் கணிதக் குறியீடுகளை
ஆராய்ந்து பார்க்க கர்னல் ஓல்காட்டுக்கு ஆர்வமாக இருந்த போதிலும் அந்த இத்தாலியக் கலைஞர்
அந்த அட்டையை அவர் கையில் தர மறுத்து அந்த அட்டையை நிலாவை நோக்கி நீட்டி அதை உற்றுப்
பார்த்துத் தன் கவனத்தைக் குவித்தபடி சிலையாக நின்றார். கர்னல் ஓல்காட் அவருக்கு
மிக அருகிலேயே நின்றிருந்ததால் அவர் உடல் இறுகி நிற்பதை உணர முடிந்தது.
சிறிது நேரத்தில் வானில் கரும்புகை உருவாக ஆரம்பித்தது.
பின் அந்தக் கரும்புகையே கருப்பு மேகங்களாக
மாறி வானத்தில் படர ஆரம்பித்தது. அந்த அதிசயத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கர்னல்
ஓல்காட் தன்னையும் மீறிச் சத்தமாகத் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். அந்த இத்தாலியக் கலைஞர் கர்னல் ஓல்காட்டை இரும்புப் பிடியாகப் பிடித்து அமைதி
காக்கும்படி சைகை செய்தார். வானில் அந்தக் கருமேகங்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. அவை வானில் மழைமேகங்களாக
மாறி சிறிது நேரத்திலேயே நன்றாக மழை அந்தப் பகுதியில் பொழிய ஆரம்பித்தது. மொட்டை மாடியில் நனையாமல் இருக்க அவர்கள் மூவரும் ஒதுங்க வேண்டி வந்தது.
அந்த நேரத்தில் இடி இடிக்கவில்லை. மின்னல் வரவில்லை. விடாமல் கால் மணி நேரம் நல்ல மழை பொழிந்தது. மழை நின்றவுடன் அந்த இத்தாலியக் கலைஞர் சென்று
விட்டார்.
கர்னல் ஓல்காட்டும் சில அடிகள் தள்ளி இருந்த தன் குடியிருப்புக்குச் செல்ல வெளியே
வந்தார். வெளியே தரை இப்போதும் ஈரமாய் இருந்தது நடந்ததெல்லாம்
கற்பனை அல்ல என்பதை உறுதிப்படுத்தியது. அவர் மீண்டும் அந்த இத்தாலியக் கலைஞரைச் சந்தித்த போது அந்த மழைப்
பொழிவு சம்பவத்தின் பின்னுள்ள உண்மையைப் பற்றிக் கேட்டார்.
அந்த இத்தாலியக் கலைஞர் சொன்னார். “மனிதன் தன்னிடமிருக்கும்
தெய்வீகத் தன்மையை உண்மையாகவே உணரும் போது அவனுடைய ஆற்றல்கள் அனைத்தும் பலமடங்காகப்
பெருகுகின்றன. அவனிடமிருக்கும் அந்தத் தெய்வீகத்தன்மை ஆழப்படும்
போது அவன் மகாசக்திப் பிரவாகமாகிறான். அந்தச் சமயத்தில் அவன் தன்னிகரில்லாச்
சக்தியாக மாறி விடுகிறான். அவனிடம் எல்லா இயற்கைச் சக்திகளும் கூட அடங்கிப்
போய் அவன் விருப்பத்திற்கேற்ப வளைந்து கொடுக்கின்றன”
அவர் பொதுவான விளக்கம் தந்தாரேயொழிய அவர் கையில் இருந்த அட்டை, அந்த அட்டையில் எழுதப்பட்டிருந்த கணிதக்குறியீடுகள் பற்றி எல்லாம் விளக்கம் தரவில்லை. அந்த ரகசிய முறையைப் பற்றியும் சொல்லி விடவில்லை.
உண்மையாக ஆன்மிகப்பயணத்தில் ஈடுபடும் ஒவ்வொருவனும் தன்னுடைய சில காலப் பயணத்திற்குப்
பின் சில சக்திகளின் அறிமுகம் பெறுகிறான். முறையாகச் சாதகம்
செய்தால், பயிற்சிகளை மேற்கொண்டால் அந்தச் சக்திகளை அவன்
தன்வசப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் அந்தச் சக்திகள் பெறுவதாலேயே அவன் உண்மையான
ஆன்மிகவாதி, ஞானி என்றெல்லாம் யாராவது முடிவுக்கு வருவது
முட்டாள்தனமாகவே இருக்கும்.
இராமகிருஷ்ண பரமஹம்சரின் பிரதான சீடர்களாக இருந்த பிரம்மானந்தரும், விவேகானந்தரும் தங்கள் ஆரம்ப கால ஆன்மிக அனுபவங்களில் மகாசக்திகள் சிலவற்றைக்
காண நேர்ந்து பிரமித்து உற்சாகமாக இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் வந்து சொன்ன போது அந்தச்
சக்திகளில் கவனத்தைச் செலுத்தாமல் கடந்து செல்லுமாறு அவர் அறிவுரை சொன்னார். அந்தச் சக்திகளிலேயே தங்கி விடுபவன் ஆன்மிகத்தையும், ஆண்டவனையும் தவற விட்டு
விடுகிறான் என்பதே அவர் அவர்களுக்குச் சொன்ன எச்சரிக்கையாக இருந்தது. பிரம்மானந்தரும், விவேகானந்தரும் அந்த அறிவுரையை மனதில் இருத்திக்
கொண்டு ஆன்மிகப் பயணத்தை மேற்கொண்டதாலேயே பிற்காலத்தில் அவர்களால் ஆன்மிக உச்சங்களை
அடைய முடிந்தது. அவர்களால் மனிதகுலம் ஞானமார்க்கத்தில் பலன்
பெற முடிந்தது.
இதை இங்கே நினைவுபடுத்தக் காரணம் இருக்கிறது. கர்னல் ஓல்காட் அந்த
இத்தாலியக் கலைஞரிடம் ஆன்மிகப் பக்குவம் இல்லாத தன்மையை பின்னர் காண நேர்ந்தது. அபூர்வ சக்திகள் பெறுவதாலேயே ஒருவர் ஆன்மிகப் பக்குவமும், ஞானமும் பெற்று விடுகிறார் என்று அர்த்தமல்ல என்பதை கர்னல் ஓல்காட் புரிந்து கொண்டார்.
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி 30.04.2019
ஆபூர்வ சக்திகளுக்கும்... ஞானத்திற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை... அருமையான உதாரணம்
ReplyDelete