சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, February 11, 2019

சத்ரபதி – 59


ந்திராராவ் மோரிடம் சிவாஜியின் தூதுவர்கள் இருவர் வந்திருப்பதாக வீரர்கள் தெரிவித்த போது அவன் தன் சகோதரனிடம் சிவாஜியைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்தான். காத்திருக்கச் சொல் என்று கட்டளையிட்டு வீரர்களை அனுப்பி விட்டுச் சிரித்துக் கொண்டே சந்திராராவ் மோர் தன் தம்பியிடம் சொன்னான். “சைத்தானைப் பற்றி நினைக்கும் போதே அது எதிரில் வந்து நிற்கும் என்று சொல்வார்கள். இந்தச் சைத்தான் ஆட்கள் அனுப்பியிருக்கிறது பாரேன்…..”

அண்ணனின் நகைச்சுவை உணர்வுக்குத் தம்பி குலுங்கிச் சிரித்தான். “உண்மை அண்ணா. அவனே நேரில் வந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். நாம் அன்று போட்டத் திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம்.”

“ஆயுள் கெட்டியானதால் ஏதோ வேலை நினைவு வந்து அன்று அவன் போய் விட்டான்….”

“நம் மீது சந்தேகம் வந்து கூட அவன் ஓடியிருக்கலாமோ என்ற சந்தேகம் எனக்கு இன்னும் இருக்கிறது”

“அப்படிச் சந்தேகம் வந்து அன்று ஓடியிருந்தால் இன்று ஆள் அனுப்பியிருக்க மாட்டான். சரி வா என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்” என்று சொன்ன சந்திராராவ் மோர் வந்தவர்களைச் சந்திக்கத் தம்பியுடன் சென்றான்.

அவனை மிகுந்த மரியாதையுடன் வணங்கி விட்டு சிவாஜியின் ஆட்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். “அரசே! நான் ரகுநாத் பல்லாள். இது சம்பாஜி காவ்ஜி. எங்களை ஒரு மிக முக்கிய விஷயமாக மன்னர் சிவாஜி அனுப்பியிருக்கிறார்”

சந்திராராவ் மோர் ஏளனமாக “சிவாஜி எப்போது மன்னன் ஆனான்? பக்கத்தில் இருக்கும் எனக்கு இது தெரியவில்லையே” என்று கேட்டு சந்திராராவ் மோர் வெடிச்சிரிப்புச் சிரிக்க அவன் தம்பியும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டான்.

ரகுநாத் பல்லாள் பதில் எதுவும் சொல்லாமல் சந்திராராவ் மோரின் வெடிச்சிரிப்பு முடியும் வரை காத்திருந்து விட்டு  தன் சகாவைப் பார்த்தான். சம்பாஜி காவ்ஜி உடனே சந்திராராவ் மோரைத் தலைவணங்கி விட்டுச் சென்று பலருடன் வந்தான். ஒவ்வொருவர் கையிலும் பெரியத் தாம்பாளத்தட்டுகள் இருந்தன. ஒரு தட்டில் மாங்கனிகள், இன்னொரு தட்டில் வாழைக்கனிகள், மூன்று தட்டுகளில் வித விதமான புஷ்பங்கள், இரு தட்டுகளில் இனிப்பு பதார்த்தங்கள், இரண்டு தட்டுகளில் பட்டுத்துணிகள், ஒரு தட்டில் தங்கக் காசுகள், இன்னொரு தட்டில் வெள்ளிக் காசுகள் இருந்தன. ஒவ்வொருவரும் அந்தத் தாம்பாளத்தட்டுகளை சந்திராராவ் மோர் முன் வைத்து விட்டு தலை வணங்கி விட்டு வெளியேறி விட ரகுநாத் பல்லாளும், சம்பாஜி காவ்ஜியும் மட்டும் அங்கிருந்தார்கள். சம்பாஜி காவ்ஜி சொன்னான். “இதையெல்லாம் மன்னர் சிவாஜி அன்புடன் அனுப்பி வைத்திருக்கிறார். தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் மன்னா”

சென்ற முறை சிவாஜி வந்த போது இந்த அளவு பொருட்கள் கொண்டு வந்திருக்கவில்லை. ’இப்போது இத்தனை அனுப்பி அவன் தன் பக்கம் என்னை இழுத்துக் கொள்ளப் பார்க்கிறான். முட்டாள்’ என்று நினைத்துக் கொண்ட சந்திராராவ் மோர் “உங்கள் ’மன்னர்’ சிவாஜி இப்படி என் மீது அன்பு மழை பொழிந்து இத்தனை பொருட்கள் அனுப்பக் காரணம் என்ன என்று நான் அறியலாமா?” என்று ஏளனமாகக் கேட்டான்.

அவன் தம்பி தன் பங்குக்குத் தானும் ஒரு கேள்வி கேட்டான். “சென்ற முறை நேரில் வந்த ‘மன்னர்’ இந்த  முறை நேரில் வராமல் உங்களை ஏன் அனுப்பினார்”

இருவருக்குமாய் சேர்ந்து ரகுநாத் பல்லாள் சொன்னான். “சுபகாரியம் பேசும் போது வெறும் கையுடன் வருவது சரியல்ல. அதுவும் இந்த விஷயத்தை அவர் நேரில் வந்து பேசுவதும் முறையல்ல. அதனால் அவர் வராமல் எங்களை அனுப்பி இருக்கிறார் அரசே”

“என்ன சுபகாரியம்?” சந்திராராவ் மோர் குழப்பத்துடன் கேட்டான்.

“தங்கள் மகளைத் தன் வாழ்க்கைத் துணையாய் மணமுடிக்க சம்மதம் கேட்டு சிவாஜி எங்களை அனுப்பியிருக்கிறார் அரசே” சம்பாஜி காவ்ஜி சொன்னான்.

சந்திராராவ் மோரின் மகள் மிக அழகானவள். அதனால் அவள் அழகில் மயங்கிய சிவாஜி சந்திராராவின் மருமகனாக ஆனால் ஜாவ்லி பிரதேசத்தின் நட்பையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என்று எண்ணி ஒரே கல்லில் இரண்டு மாங்கனி பெறும் பேராசையில் இப்போது ஆள் அனுப்பி இருக்கிறான் என்று நினைக்கையில் சந்திராராவ் மோருக்கு சிவாஜியின் விடாமுயற்சியைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தகுதி இருக்கிறதோ இல்லையோ விடாமல் முயற்சி செய்கிறான் பாவம்!

சந்திராராவ் மோருக்கு எல்லாமே நகைச்சுவையாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. இதைப் பற்றிப் பேசி மகிழ்ந்து இன்றைய பொழுதை சிரித்துக் கழிக்கலாம் என்று எண்ணியவனாக “திருமணம் என்பது யோசித்துச் செய்ய வேண்டிய ஒன்று. நீங்கள் இளைப்பாறுங்கள். பின்பு பேசலாம்” என்று சொல்லி வீரர்களை அழைத்து அவர்கள் இருவரும் தங்க விருந்தினர் அறையை ஏற்பாடு செய்து தரக் கட்டளையிட்டுச் சென்றான்.

விருந்தினர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரகுநாத் பல்லாளும், சம்பாஜி காவ்ஜியும் போகும் வழியெல்லாம் கூர்ந்து பார்த்துக் கொண்டே போனார்கள். சிவாஜி மாளிகையின் அமைப்பையும், பாதுகாப்பு அம்சங்களையும் பற்றிச் சொன்னதெல்லாம் மிகச்சரியாகவே இருந்தன. வீரர்கள் சென்றவுடன் அவர்கள் இளைப்பாறி விடவில்லை. சாளரத்தின் வழியாக வெளி நிலவரத்தை ஆராய்ந்தார்கள். அவர்களுடன் தாம்பாளத்தட்டுகளுடன் சேவகர்களாய் வந்த வீரர்கள் தொலைவில் தெரிந்த கூடாரத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.  அவர்களது குதிரைகளும் கூடாரத்துக்கு அருகிலிருந்த லாயத்திலேயே கட்டப்பட்டு இருப்பதையும் கண்டு திருப்தியடைந்த சம்பாஜி காவ்ஜி தூரத்தில் தெரிந்த அவர்களது வீரன் ஒருவனைப் பார்த்துக் கையசைத்தான். அவனும் பதிலுக்குக் கையசைத்தான். அவர்களுக்கும் இவர்கள் இருக்கும் இடத்தைத் தெரிவித்தாகி விட்டது….

சந்திராராவ் மோர் இரவு நேரத்தில் அவர்கள் இருவரையும் கூப்பிட்டனுப்பினான். இருவரும் சென்ற போது அறைக்கு வெளியே காவலர்கள் யாரும் இல்லை என்பதைக் கண்டார்கள். தொலைவில் ஒரு சேவகன் அரைத்தூக்கத்தில் இருந்தான்.  அறையினுள்ளே சந்திராராவும், அவன் சகோதரனும் மது அருந்திக் கொண்டிருந்தார்கள். சந்திராராவ் மோர் நகைச்சுவை உணர்வில் இருந்தான். ”வாருங்கள் மன்னர் சிவாஜியின் தூதுவர்களே!”

இருவரும்  அவனையும் அவன் சகோதரனையும் வணங்கி விட்டு எதிரில் அமர்ந்தார்கள். சந்திராராவ் மோர் மெல்ல ஆரம்பித்தான். “சிவாஜி சொல்லி அனுப்பியதை நான் யோசித்தேன். அனுப்பியிருந்த பரிசுப் பொருள்களிலேயே அவனுடைய ஆர்வம் தெரிகிறது. அவன் சொன்னதையும் மறுக்க மனம் வரவில்லை….”

அவர்கள் முகத்தில் ஆர்வம் தெரிந்தது. உள்ளுக்குள் நகைத்துக் கொண்ட சந்திராராவ் மோர் தொடர்ந்து சொன்னான். ”சிவாஜியின் உயரம் சற்றுக் குறைவு தான் என்றாலும் என் மகளும் அதிக உயரம் இல்லை. அதனால் அது பெரிய பிரச்சினை இல்லை. அந்தஸ்து தான் பெரிய தடையாகத் தெரிகிறது…”.

சொல்லி விட்டு அவர்களை அவன் கூர்ந்து பார்த்தான். அவன் எதிர்பார்த்த ஏமாற்றமோ, வருத்தமோ அவர்கள் முகத்தில் தெரியாதது அவனுக்கு வருத்தமாக இருந்தது. ரகுநாத் பல்லாள் அமைதியாகச் சொன்னான். ”அது ஒரு பெரிய விஷயமல்ல அரசே. சிவாஜியின் அதிகாரத்திற்கு உட்பட்ட இடங்கள் அளவுக்கு நீங்கள் ஆளும் பகுதிகள் இல்லை என்பது உண்மை. அவரிடம் இருக்கும் அளவு கோட்டைகளும் உங்களிடம் இல்லை. அதுவும் உண்மையே. ஆனால் மனிதர்களுக்குத் தரும் மதிப்பை சிவாஜி உடைமைகளுக்குத் தருவதில்லை. அதனால் தான் அவராகவே சம்பந்தம் பேச எங்களை அனுப்பியிருக்கிறார். அது குறித்து நீங்கள் குறை உணர வேண்டியதில்லை”

சந்திராராவ் மோரின் போதை அந்த வார்த்தைகளில் ஒரேயடியாகக் காணாமல் போயிற்று.  எனக்கு சிவாஜி சமமானவன் இல்லை என்று நான் சொன்னால் அவனுக்கு நான் சமமானவன் இல்லை என்று சொல்வதாக இந்த மூடன் எடுத்துக் கொள்கிறானே. என்ன திமிர். சிவாஜி கூட இவ்வளவு திமிராகப் பேசவில்லையே. ஒரு கோப்பை முழுவதும் மதுவை நிரப்பிக் குடித்து விட்டு அவன் தன் தம்பியைப் பார்த்தான்.

தம்பி ரகுநாத் பல்லாளிடம் சொன்னான். “மூடனே. அரசர் சொல்வது சிவாஜி அவருக்குச் சரிசமமானவன் அல்ல என்ற பொருளில்……”

ரகுநாத் பல்லாள் முகத்தில் பெருங்குழப்பம் தெரிந்தது. “அதை எப்படிச் சொல்கிறீர்கள் என்பது என் சிறுமதிக்கு எட்டவில்லை பிரபு. விளக்கிச் சொல்லுங்களேன்….”

“நாங்கள் பரம்பரை பரம்பரையாக மன்னர்கள். எங்கள் தந்தை மன்னர். என் பாட்டன் மன்னர்….” என்று சொல்லி விட்டு ‘புரிகிறதா?’ என்பது போல் அவன் ரகுநாத் பல்லாளைப் பார்த்தான்.

ஆனால் ரகுநாத் பல்லாளோ  இன்னும் புரியாதவனாய் “உங்கள் முப்பாட்டன்?” என்று கேட்டான்.

“அவர் பீஜாப்பூர் சமஸ்தானத்தில் படைத்தலைவராய் இருந்தார். அவர் ஒரு போரில் காட்டிய வீரத்திற்குப் பரிசாக ஜாவ்லி அவருக்கு ஆட்சி புரியக் கிடைத்தது….”

“ஓ! தானமாகக் கிடைத்த பூமியை நீங்கள் பரம்பரை பரம்பரையாக ஆள்கிறீர்கள்! அப்படி சிவாஜியின் முப்பாட்டனுக்கு எந்தத் தானமும் கிடைக்கவில்லை என்று சொல்ல வருகிறீர்களா?”

சந்திராராவ் மோர் கடுங்சினம் தாங்காமல் உடல் நடுங்கினான். “மூடனே…. மூர்க்கனே” என்று கூவினான்.


ரகுநாத் பல்லாள் எழுந்து நின்று கைகூப்பினான். “மன்னியுங்கள் மன்னா. புரிந்து கொள்வதற்காக நான் கேட்டது உங்களை இவ்வளவு கோபமூட்டும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை….”

(தொடரும்)
என்.கணேசன்

4 comments:

  1. சிவாஜி...ஏதேனும் சூழ்ச்சி செய்யவான் என எதிர்பார்த்தேன்... திடீரென மருமகனாகி நட்பை பலப்படுத்த திட்டமிட்டுவிட்டானா...????

    சிவாஜியின் தூதுவர்களின் பேச்சு சாமார்த்தியம் அபாரம்....

    ReplyDelete
  2. அருமை - தூதுவர்களாய் சென்ற வீரர்களின் சொல்லால் தகிக்க வைத்து மோதி விளையாடட்டும் - சத்ரபதி அருமை

    ReplyDelete
  3. Ragunath vacchi senjingg Chandra :) HA ha ha

    ReplyDelete
  4. ரகுநாத் பல்லாளும், சம்பாஜி காவ்ஜியும் சந்திராராவ் மோரை பேசியே ஹார்ட் அட்டாக் வர வைத்து விடுவார்கள்

    ReplyDelete