“நம்
கோட்டைக்கு அருகே சிவாஜி தங்கியிருக்கிறான் தலைவரே” என்று தலைமை அதிகாரி வந்து சொன்ன
போது கோவல்கர் சாவந்த் நெஞ்சை ஏதோ அடைப்பது போல உணர்ந்தான். சிவாஜி என்ற பெயர் அந்த
அளவு அச்சத்தை அவன் மனதில் உண்டாக்கி இருந்தது…..
“அவன்
பிடித்த கோட்டைகள் அளவு நம் கோட்டை பெரியதோ, முக்கியத்துவம் வாய்ந்ததோ இல்லையே…” என்று
பலவீனமாகச் சொன்னான். அவன் குரல் அவனுக்கே கிணற்றிலிருந்து கேட்பது போலத் தான் இருந்தது.
“அவன்
நம் கோட்டையைப் பிடிக்க வரவில்லை தலைவரே. ஹரிஹரேஸ்வரர் கோயில் வந்து வணங்கியவன் போகும்
வழியில் இளைப்பாறுகிறான் அவ்வளவு தான்…”
கோவல்கர்
சாவந்தின் இதயத்தில் ஏறியிருந்த இமயம் இறங்கியது. நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
தலைமை
அதிகாரி தொடர்ந்து சொன்னார். “நானும் அந்தச் சமயத்தில் தான் அந்தக் கோயிலிற்குச் சென்றிருந்தேன்.
அப்போது சிவாஜியின் நண்பன் யேசாஜி கங்க் அறிமுகம் ஆனான். அவன் உங்களிடம் உள்ள பவானியின்
வீரவாள் பற்றிக் கேட்டான். சிவாஜி அன்னை பவானியின் பரம பக்தன் என்று சொன்னான்…..”
மறுபடி
கோவல்கர் சாவந்தின் மனதில் கவலை புகுந்தது. ”அந்த வாளுக்காக அவன் கோட்டையை ஆக்கிரமிக்க
வருவானோ?” என்று தலைமை அதிகாரியிடம் கேட்டான்.
”நானும்
அப்படியே சிறிது பயப்பட்டேன். ஆனால் சிவாஜி அப்படி வரமாட்டான். வற்புறுத்தவும் மாட்டான்
என்று யேசாஜி கங்க் சொன்னான்.”
மறுபடி
நிம்மதியடைந்த கோவல்கர் சாவந்திடம் தலைமை அதிகாரி சொன்னார். “தலைவரே. இப்போது இந்தப்
பிராந்தியத்தில் சிவாஜியே தலையாய சக்தியாக இருக்கிறான். மக்களின் ஆதரவும் அவனுக்குப்
பெருக ஆரம்பித்திருக்கிறது. அவனுக்கு நாமும் நம் கோட்டையும் ஒரு பொருட்டே அல்லாமல்
இருக்கலாம். ஆனால் நமக்கு அவனைப் போன்ற ஒரு வீரனுடன் நட்பும், இணக்கமும் இருப்பது மிகச்
சிறந்த பலமாக இருக்கும். அவன் ஆதரவு நமக்கு இருக்கிறது என்றால் நம்மிடம் யாரும் வம்பு
வைத்துக் கொள்ள மாட்டார்கள்…..”
கோவல்கர்
சாவந்த் கேட்டான். “என்ன சொல்ல வருகிறீர்கள்?”
“உங்களுக்கு
அந்த வீரவாள் விலை உயர்ந்த ஒரு குடும்பச் சொத்து அவ்வளவு தான். சிவாஜிக்கு அது அவன்
வணங்கும் தெய்வத்தின் ஆயுதம். அவனுக்கு அதை நீங்களாகவே சென்று பரிசளித்தால் வாழ்நாள்
முழுவதும் அவன் அதை மறக்க மாட்டான். அவனுக்குத் தற்போது கல்யாண் நிதியும் கிடைத்திருக்கிறது.
உங்களுக்கு அதன் மதிப்பை விட அதிகமாகவே அவன் திரும்பப் பரிசளிக்கும் வாய்ப்பும் இருக்கிறது…”
கோவல்கர்
சாவந்த் யோசித்தான். சிவாஜியைப் போன்ற மாவீரனின் நட்பு நிரந்தரமாகவே கிடைக்கும் என்றால்,
அவனிடம் பல உதவிகளை அதன் மூலம் பெற முடியும் என்றால் அந்த வீரவாளைத் தந்து விடுவது
அவனுக்குப் பெரிய இழப்பாகத் தெரியவில்லை…..
அடுத்த
ஒரு மணி நேரத்தில் அவன் சிவாஜி முன் இருந்தான். பெரும் மரியாதையுடன் வணக்கம் தெரிவித்து
விட்டு அந்த வீரவாளை வெள்ளித் தாம்பாளத்தில் வைத்து சிவாஜியிடம் நீட்டியபடி சொன்னான்.
“தாங்கள் பவானி மாதாவின் பக்தன் என்று கேள்விப்பட்டேன். அதனால் எங்கள் குடும்பச் சொத்தாக
பல தலைமுறைகள் பாதுகாத்து வந்த பவானி மாதாவின் வீரவாளைத் தங்களுக்குப் பரிசாகத் தர
விரும்புகிறேன். தயவு செய்து இதைப் பெற்றுக் கொண்டு அடியேனை கௌரவிக்க வேண்டும்….”
கைப்பிடியில்
நவரத்தினங்கள் பதித்த அந்த நீண்ட வீரவாளைப் பார்க்கையில் இனம் புரியாத சிலிர்ப்பை சிவாஜி
உணர்ந்தான். அன்னை பவானியே அந்த வீரவாளை அவனுக்குத் தர கோவல்கர் சாவந்திற்கு உத்தரவிட்டிருப்பது
போல் அவனுக்குத் தோன்றியது. உணர்ச்சிப் பெருக்கில் கண்களில் நீர் திரையிட சிவாஜி அந்த
வாளைத் தொட்டு வணங்கி விட்டு அதை வாங்கிக் கொண்டு சொன்னான். “சகோதரரே. கோட்டைகள் பல
அடைந்த போதும் அடையாத ஒரு பேரானந்தத்தை அன்னையின் இந்த வீரவாளைப் பெறுகையில் நான் உணர்கிறேன்.
என் வாழ்நாள் உள்ள வரை உங்களது இந்தப் பெருந்தன்மையை நான் மறக்க மாட்டேன்……”
யேசாஜி
கங்க் நண்பனின் உணர்ச்சிப் பெருக்கைக் கண்டு மனம் நெகிழ்ந்தான். நண்பனுக்குத் தெரியாமல்
அந்த அதிகாரியின் காதில் சில வார்த்தைகளைப் போட்டு வைத்தது மிக நல்லதாகவே போயிற்று
என்று மகிழ்ந்தான்.
சிவாஜி
கோவல்கர் சாவந்துக்கு அந்த வீர வாளின் இருமடங்கு மதிப்பிற்குப் பொன்னும் பொருளும் பரிசளித்தான்.
“இந்த வீரவாளுக்கு என் அத்தனை செல்வத்தையும் நான் தந்தாலும் அது ஈடாகாது சகோதரரே. ஆனால்
என் அன்பின் அடையாளமாக நான் தரும் இந்தச் சிறுபரிசுகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.”
கோவல்கர்
சாவந்த் பெருமகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவித்து விட்டு சிறிது அளவளாவி விட்டு மகிழ்ச்சியுடன்
திரும்பினான். சிவாஜியோ அந்த வீரவாளுடன் அன்னை பவானியின் பரிபூரண ஆசிர்வாதம் வந்து
சேர்ந்தது போல் பேரானந்தத்தில் மூழ்கினான்.
ஆதில்ஷா சிவாஜியின் பதிலில் கடுங்கோபம் கொண்டார். இது வரை
அவன் கடிதங்களில் தெரிந்த தொனி வேறு இப்போது தெரியும் தொனி வேறு. பெயருக்குத் தான்
பெருவணக்கத்துடன் சிவாஜி கடிதத்தை ஆரம்பித்திருந்தானேயொழிய மீதியில் சமமானவர்களிடம்
பேசுவது போலவே தன் பக்கத்து நியாயத்தைத் தெரிவித்திருந்ததை அவர் கவனிக்கத் தவறவில்லை.
பீஜாப்பூருக்கு நேரில் வரச் சொன்னால் ‘நான் கைப்பற்றிய பகுதிகளுக்கு நானே தலைவன் என்று
அறிவித்தால் தான் வருவேன்’ என்று நிபந்தனை விதிக்கிறானே இந்தப் பொடியன் என்று அவருக்கு
ஆத்திரம் வந்தது.
அடுத்ததாக
வந்த ஷாஹாஜியின் கடிதமும் அவர் ஆத்திரத்தைக் குறைக்கவில்லை. ஷாஹாஜியும் முதல் பத்து
வரிகளில் அவருக்கு பெருவணக்கம் தெரிவித்து விட்டு சிவாஜி அவருக்கு எழுதிய பதிலையும்
தெரிவித்து விட்டு எழுதியிருந்தார். “அரசே. அவன் என் பிள்ளையாக இருந்தாலும் என் சொற்படி
நடக்க மறுக்கிறான். அவனை விட்டு நான் தொலைவிலேயே இருந்தது தவறு என்று நான் இப்போது
உணர்கிறேன். ஆனாலும் கடந்த காலத்தைச் சரிசெய்யும் வல்லமையோ, இப்போது அவனைத் திருத்தும்
வழியோ அறியாமல் நான் தவிக்கின்றேன். வேறு வழி தெரியாததால், ஒரு படையை அனுப்பி என் மகனை
அடக்கிப் பணிய வைக்கும்படி தங்களிடம் விண்ணப்பித்துக் கொள்கின்றேன்….”
ஷாஹாஜியின்
கடிதம் மகனை அடக்க முடியாத ஒரு தந்தையின் யதார்த்த நிலையாக ஆதில்ஷா உணர்வதற்கு முன்
ஷாஹாஜியின் எதிரியாக ஆதில்ஷா மனதில் முன்பு நஞ்சை விதைத்தவன் கடகடவென்று சிரித்தான்.
“மன்னா
ஷாஹாஜியும் அவர் மகனும் சேர்ந்து நன்றாக நாடகம் ஆடுகிறார்கள். மகனை மறைமுகமாக இயக்கி விட்டு நம்மிடம் ஷாஹாஜி முடிந்தால்
அவனை அடக்கு என்று விண்ணப்பம் என்கிற பெயரில் சவாலைத்தான் முன் வைக்கிறார். சகாயாத்ரி
மலைத்தொடரில் என்னேரமும் சென்று ஒளிந்து கொள்ளும் சௌகரியத்தில் தான் சிவாஜி இருக்கிறான்.
சகாயாத்ரி மலைத்தொடர் அவர்களுக்கு வீட்டைப் போல். அதன் மூலை முடுக்குகளை அவர்கள் நன்றாக
அறிவார்கள். ஷாஹாஜி அங்கு பதுங்கியிருந்த போது முகலாயச் சக்கரவர்த்தியால் கூட ஷாஹாஜியைக்
கைது செய்ய முடியவில்லை என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்படி பாதுகாப்பான சூழலில்
மகன் உள்ளதால் தான் ஷாஹாஜிக்கு உங்களுக்கே சவால் விடும் துணிச்சல் வந்திருக்கிறது……”
ஆத்திரத்தில்
இருந்த ஆதில்ஷா இதைக்கேட்டு மேலும் ஆத்திரமானார். “நான் என் நண்பனைப் போலத் தான் ஷாஹாஜியை
நினைத்திருந்தேன். அந்த மரியாதையையே அவருக்கு என்றும் தந்துமிருக்கிறேன். அப்படி இருக்கையில்
அவர் இப்படி துரோகம் செய்வார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை…. இனி என்ன செய்யலாம்?
“ஷாஹாஜி
சொன்னது போல் அவனிருக்கும் இடம் சென்று சிவாஜியைக் கைது செய்ய முடியாது மன்னா. சிவாஜி
பீஜாப்பூர் வந்தால் மட்டுமே நம்மால் அவனைக் கைது செய்ய முடியும். அவனை அடக்க ஒரே வழி
ஷாஹாஜியைக் கைது செய்வது தான். அவரைப் பணயக்கைதியாக வைத்தால் சிவாஜி பிடித்த கோட்டைகளை
ஒப்படைக்கவும் செய்வான். தந்தையைக் காப்பாற்ற வேறு வழியில்லாமல் இங்கு வந்து சரணடையவும்
செய்வான்”
ஆதில்ஷாவுக்கு
அந்த ஆலோசனை சரியென்றே தோன்றியது.
(தொடரும்)
என்.கணேசன்
என்ன சார் வரலாற்று நாவலிலும் கூட இந்த மாதிரி பதட்டமான இடத்துல தொடரும் போடறீங்களே நியாயமா? ஷாஹாஜிக்கு வரும் ஆபத்தை சிவாஜி எப்படி சமாளிப்பான்னு வரும் திங்கட்கிழமை வரை டென்ஷனோடு காத்திருக்க வேண்டுமா
ReplyDeleteVery interesting ji.
ReplyDeleteDear Sir
ReplyDeleteசாஹித்ரி மலை or
சகாயாத்ரி
which is correct ?
சாஹ்யாத்ரி என்பதே சரி. ஆனால் தமிழில் சஹாயாத்ரி அல்லது சகாயாத்ரி என்றே அதிகம் சொல்லப்படுகிறது.
Deleteசிவாஜி தன் தந்தையை பணயக்கைதியா பிடித்து வைத்தால்...எந்த கோட்டையையும் ஒப்படைக்க மாட்டான்...
ReplyDeleteஆதில்ஷா... சிவாஜியின் தாயை பிடித்து வைத்தால் வாய்ப்பு இருக்கிறது...