மாணிக்கமும், சங்கரமணியும் ஒருவரை
ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மாணிக்கம் அமைதியாக மனோகரிடம் சொன்னார். “ஹரிணியும்
க்ரிஷும் காதலிக்கிறாங்க போல தெரியிது”
“உங்க மகனும் ஹரிணியைக் காதலிக்கிறானே?”
மனோகர் சொல்ல மாணிக்கம் வருத்தத்துடன் தலையசைத்தாலும் ஒன்றும் சொல்லவில்லை.
மனோகர் சொன்னான். “ஹரிணியோட அம்மா
கிரிஜாக்கு க்ரிஷை விட உங்க மகன் மேல் தான் நல்ல அபிப்பிராயம். இப்போ நீங்க முதலமைச்சர்.
நீங்க போய் பொண்ணு கேட்டா அந்த அம்மாவுக்கு மறுக்க முடியாது”
எல்லாமே தெரிந்து வைத்திருக்கிறானே
என்று வியந்த சங்கரமணி சொன்னார். “ஆனா மணீஷ் கல்யாணம் பண்ணிக்கப் போறது அந்தம்மாவை
அல்லவே. அந்தப் பொண்ணு ஒத்துக்கணுமே”
மனோகர் அந்த நகைச்சுவையை ரசிக்காமல்
அவர் பக்கம் திரும்பாமல் மாணிக்கத்திடமே பேசினான். “நடுத்தர குடும்பங்கள்ல தான் இப்பவும்
பாசம், கவுரவம், விட்டுக்கொடுக்கிற தன்மை எல்லாம் இருக்கு. அந்தம்மாவுக்கு ஹரிணி ஒரே
பொண்ணு. அந்தம்மா உறுதியா சொன்னா அந்தப் பொண்ணு கேட்டுக்க வாய்ப்பிருக்கு. உங்க மகனும்
அவளோட நண்பன் தான்….. பிடிக்காதவன் அல்ல…..”
நண்பன் என்கிற ஸ்தானத்திலிருந்து
காதலன் என்கிற ஸ்தானத்திற்கான உயரம் சிலர் விஷயத்தில் சிறிதாக இருக்கலாம். சிலர் விஷயத்தில்
தாண்ட முடியாத உயரமாகவும் இருக்கலாம். இந்த இரண்டாம் ரகத்தில் தாண்ட முயற்சி செய்வது
நண்பன் என்ற ஸ்தானத்தையும் தவற வைத்து விடலாம். அப்படி அதையும் இழக்க மணீஷ் தயாராக
இருப்பான் என்று மாணிக்கத்துக்குத் தோன்றவில்லை.
மனோகர் எழுந்தான். “எதற்கும்
முயற்சி செய்து பாருங்கள். அவசரம்….”
அவசரம் என்றால் உத்தரவு என்று
அர்த்தம். மாணிக்கம் தலையசைத்தார். அவன் போய் விட்டான். சங்கரமணி கேட்டார். “இவனுக்கென்ன
மணீஷ் மேல இப்படி திடீர் அக்கறை?”
“அவன் கவனம் எல்லாம் க்ரிஷ் தான்.
க்ரிஷ் கிட்ட இருந்து ஹரிணியை விலக்கணும்னு ஏனோ நினைக்கிறான். அவ்வளவு தான்…..”
சங்கரமணி சொன்னார். “அவன் சொன்னபடி
நடந்தா உன் பையன் சந்தோஷமா இருப்பான்…… இப்ப அவன் முகத்தைப் பார்க்கவே சகிக்கலை…..”
க்ரிஷ் ஹரிணி கைவிரலில் மோதிரம்
போடுவது போல் காட்சியைக் கற்பனை செய்து அனுப்பினான். அவன் அனுப்பும் தகவலைப் பெறுவதில்
கோட்டை விட்டு விடக்கூடாது என்று தீர்மானமாக அமைதியாகக் காத்திருந்த ஹரிணி க்ரிஷ் கையைப்
பிடித்து விரலைத் தடவுவது போல் மட்டுமே உணர்ந்தாள். உண்மையில் அவன் அனுப்பிய முழுக்காட்சியைச்
சொன்ன போது அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை….. “க்ரிஷ் முக்கால் வாசி எனக்கு
வந்து சேர்ந்திடுச்சேடா… நாம இந்த பரிசோதனைல ஜெயிச்சோட்டோம்…... இதுக்கு நீ காரணமா,
நான் காரணமா?”
“ரெண்டு பேருமே…. நமக்குள்ளே
இருக்கும் அலைவரிசைகள் தடைப்படாமல் இருக்கு போல…..” என்றான் க்ரிஷ். கூடவே சொன்னான்.
“ஆனா இது போதாது. நாம ஃபீல் பண்ற விஷயத்தை சரியா ஃபீல் பண்றோம். ஆனா அனுப்பற தகவலை
சரியா வாங்கிக்கலை. உன் திருக்குறள் எனக்கு வந்து சேரலை…… என் மோதிரம் உனக்கு வந்து
சேரலை…..”
“உண்மை தான். ஆனா ஆரம்பத்துக்கு
நாம நிறையவே முன்னேறிட்டோம்…. சரி நானும் வேற சில சமூக சேவகர்களும் சேர்ந்து நாளைக்கு ஒரு முதியோர் இல்லத்துல ஒரு சிறப்பு நிகழ்ச்சி
வச்சிருக்கோம். முழு நாள் அங்கேயே இருக்க வேண்டி வரும்…. நாளை மறுநாள் நீ அமெரிக்கா
போறாய். அதனால நீ வந்தவுடனே நம்ம பரிசோதனையைத் தொடருவோம்…. ஜாக்கிரதையாய் போய்ட்டு
வாடா…..”
க்ரிஷ் அன்றிரவும் மறு நாள் முழுவதும்
ஸ்டீபன் தாம்சனின் எழுத்துகளைப் படித்துக் கொண்டிருந்தான். அவரைச் சந்திக்கும் முன்
அவர் துறையில் எதிரிக்கு ஆர்வம் ஏற்படுத்திய அம்சங்கள், அந்த நூலைத் தவிர வேறு என்னவெல்லாம்
என்பதை யூகிக்க முயன்றான். அவரைச் சந்தித்துப் பேசும் முன் அவற்றை அவன் தெளிவாக அறிந்திருந்தால்
நல்லது என்று தோன்றியது. ஆனால் உளவியலில் ஸ்டீபன் தாம்சன் கிட்டத்தட்ட எல்லா முக்கியங்களையும்
தொட்டிருந்ததால் படிக்கவும், தெரிந்து கொள்ளவும் ஏராளமாக இருந்தன. அவருடைய ஆளுமை அவனைப்
பிரமிக்க வைத்தது…. இதில் எதில் எல்லாம் எதிரிக்கும் ஈடுபாடு இருந்திருக்க முடியும்
என்று யோசித்துப் பார்த்தான்……
மாணிக்கம் மணீஷிடம் மனோகர் சொன்னதைத்
தெரிவித்த போது அவனுடைய வெறுமையான முகத்தில் எந்த மின்னலும் வெட்டவில்லை. “அப்பா ஹரிணி யார் பேச்சையும் கேட்கற ரகம் இல்லை.
அவள் மனதுக்குத் தோணினதைத் தான் செய்வாள்…” என்று சலிப்பான குரலில் சொன்னான்.
“ஆனாலும் முயற்சி செஞ்சு பார்க்க
அவன் சொல்றான்…..”
“ஆனா எனக்குத் தெரிஞ்சு முயற்சி
செய்யற மாதிரி சொல்லாதீங்க. அவ என்னை நட்பு லிஸ்டில் இருந்தும் எடுத்துடுவாள்”
“புரியுது” என்று சுருக்கமாகச்
சொல்லி மகன் அறையில் இருந்து வெளியே வந்த மாணிக்கத்திற்கு மனம் வலித்தது. க்ரிஷ் உயிரோடு
திரும்பி வந்த நாளில் இருந்து ஒரு முறை கூட அவர் மகன் புன்னகைக்கவில்லை….. சிரிக்கவில்லை…..
எதையும் ரசிக்கவில்லை….. உயிரோடு பிணமாக உலா வருகிறான்……
எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல்
முதலமைச்சர் கார் வீட்டு வாசலில் நின்ற போது கிரிஜாவுக்கு பரபரப்பு தாங்கவில்லை. ஹரிணி
ஏதோ முதியோர் இல்லம் போயிருக்கிறாள்….. அவரை எப்படி வரவேற்பது, உபசரிப்பது என்று அவளுக்குத்
தெரியவில்லை. அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து எட்டிப்பார்த்த தலைகளைப் பார்த்த போது
பெருமிதம் தாங்கவில்லை.
“வாங்க…. வாங்க…… உட்காருங்க……”
என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்றாள். மாணிக்கத்துடன் சங்கரமணி மட்டுமே உள்ளே நுழைந்தார்.
காவல் அதிகாரிகள் மரியாதையாக வாசலுக்கு வெளியே நின்று கொண்டார்கள்.
மாணிக்கமும் சங்கரமணியும் சோபாவில்
அமர்ந்து கொண்டார்கள். கிரிஜாவுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. “ஹரிணி வெளியே
போயிருக்கா…..” என்று சொன்னாள்.
“பரவாயில்லை. நல்லது தான். நான்
இங்கே வந்தது மணீஷுக்கும் தெரியாது” என்று மாணிக்கம் சொன்னார்.
என்ன சொல்ல வருகிறார் என்று தெரியாமல்
கிரிஜா குழப்பத்துடன் பார்த்த போது மாணிக்கம் சங்கரமணியைக் காட்டி சொன்னார். “என் மாமா
ரொம்ப நாளா மணீஷுக்கு கல்யாணம் செய்து வைன்னு சொல்லிகிட்டிருக்கார். இப்ப எனக்கும்
தோண ஆரம்பிச்சிருக்கு. நல்ல பொண்ணா பார்க்கணும்னு யோசிச்சப்ப எனக்கு ஹரிணி தான் ஞாபகத்துக்கு
வந்தாள்…..”
முதலமைச்சர் வீட்டு சம்பந்தம்
தேடி வருகிறது என்று நினைக்கையில் கிரிஜாவுக்குப் பெருமை தாங்க முடியவில்லை. அதே வேளையில்
ஹரிணி ஒத்துக் கொள்ள மாட்டாள் என்பதிலும் அவளுக்குச் சந்தேகம் இல்லை. ஏக காலத்தில்
சந்தோஷமாகவும், வருத்தமாகவும் அவள் உணர்ந்தாள்.
அதைக் கவனித்தாலும் காட்டிக்
கொள்ளாமல் மாணிக்கம் தொடர்ந்தார். “அவங்க ரெண்டு பேரும் இப்ப நல்ல ஃப்ரண்ட்ஸா இருக்காங்க.
அவங்க நட்புல தர்மசங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்னு நினைக்கிறேன். உங்க பொண்ணு கிட்ட
பேசிப் பாருங்க. நானும் என் பையன் கிட்ட பேசிப் பார்க்கிறேன். அவங்களுக்கு உடன்பாடு
இல்லைன்னா விட்டுடுவோம்…. ஓகேன்னா கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்வோம்…..”
அவர் முடித்தவுடன் சங்கரமணி மருமகனிடம்
சொன்னார். “ஹரிணியை எனக்கு நல்லா தெரியும். நல்ல பொண்ணு. அம்மா சொன்னதை அவள் தட்டற
ரகம் அல்ல….”
கிரிஜாவுக்கு என்ன சொல்வதென்று
தெரியவில்லை. இவர் இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கார். முதலமைச்சரோ ரொம்ப கண்ணியமாய்
பிடிச்சா சம்பந்தியாகலாம்னு சொல்கிறார். ஹரிணி கேட்கணுமே…… தயக்கத்துடன் சொன்னாள்.
“நான் அவகிட்ட பேசிப் பார்க்கிறேன்…..”
தலையசைத்த இருவரும் எழுந்தனர்.
கிரிஜா வருத்தத்துடன் சொன்னாள். “முதல் தடவை வந்திருக்கீங்க. ஒன்னுமே சாப்பிடாம போறீங்களே…..”
சங்கரமணி சொன்னார். “நல்ல செய்தியா
சொல்லுங்க. விருந்து சாப்பாட்டுக்கே வந்துடறோம்….”
அவர்கள் போய் விட்டார்கள். போலீஸ்
பாதுகாப்பு, பரிவாரம் சூழ அவர்கள் போன பிறகு அக்கம் பக்கத்தினர் ஏதோ ஒரு காரணம் சொல்லிக்
கொண்டு வந்து முதலமைச்சர் வந்து விட்டுப் போன காரணம் கேட்டார்கள். சம்பந்தம் பேச வந்தார்கள்
என்று வெளிப்படையாகச் சொல்லிப் பெருமைப்பட முடியாத வருத்தம் கிரிஜாவுக்கு வந்தது.
“அவர் பையனும், என் பொண்ணும்
ஒரே காலேஜ்ல படிக்கறாங்க இல்லையா. ரெண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ். நீங்க மணீஷை இங்கே
பல தடவை பார்த்திருப்பீங்களே. பல தடவை ஹரிணி அவங்கள இங்கே வரக் கூப்பிட்டிருக்கா. இன்னைக்கு
ஏதோ தோணி வந்திருக்காங்க. இன்னைக்குன்னு பார்த்து இவ இங்கே இல்லை…..”
அவர்கள் முகத்தில் தெரிந்த பிரமிப்பையும்
பொறாமையையும் முழுவதுமாய் ரசிக்க விடாமல் தடுத்தது மகளின் போக்கு. சனியன் ஒத்துக்க
மாட்டாளே….. அந்த க்ரிஷைத் தானே காதலிக்கிறா….. இப்போதைய அவர்கள் நிலைமைக்கு க்ரிஷும்
அதிகம் தான். மந்திரியின் மகன். எம்.பியின் தம்பி…… ஆனாலும் முதலமைச்சர் மகனுக்கு இணையாகுமா?
மணீஷ் அளவு க்ரிஷ் மதிக்கவும் மாட்டானே? பல யோசனைகள் மனதைத் தாக்க, கிரிஜா அன்று ஆபிஸுக்கு
லீவு போட்டு விட்டு சிந்திக்க ஆரம்பித்தாள்.
(தொடரும்)
Manipulation of marma manithan is very calculative one. Will it work out? Tension is building up.
ReplyDeleteபுகழும் அதிகாரமும் கண்ணை மறைக்குது கிரிஜாவுக்கு ஹரிணியின் பதில் தெரிந்திருந்தாலும் அவளின் வழியை என்னவரும் என்று பார்க்க ...............
ReplyDeleteஆஹா... பந்தை எந்த பக்கம் அடிக்கலாம்
ReplyDeleteஎன்று மாணிக்கம் அறிந்து இருக்கிறார் ...
CM ஆச்சே. வச்ச குறி தப்புமா ....