சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, June 25, 2018

சத்ரபதி – 26



தாதாஜி கொண்டதேவிடம் சுயராஜ்ஜியம் பற்றியோ தன் திட்டங்கள் பற்றியோ சிவாஜி பிறகு பேசவில்லை. அப்படி அன்றிரவு பேசினான் என்பதற்கான சுவடுகள் கூட அவனிடம் தெரியவில்லை. அப்படி எதுவுமே நடக்காதது போல் அவன் நடந்து கொண்டான். ஆனால் தன் மாணவனின் ஆழம் தெரிந்த தாதாஜி கொண்டதேவ் அவன் ஏதோ திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறான், சரியான சமயத்திற்காகக் காத்திருக்கிறான் என்பதை மட்டும் புரிந்து கொண்டார். அதைத் தெரிந்து கொள்ள ஆர்வமும் அவர் காட்டவில்லை. தெரிந்து கொண்டால் அவர் தர்மப்படி ஷாஹாஜிக்கும், ஆதில்ஷாவுக்கும் தெரிவிக்க வேண்டும். அது சிவாஜியைப் பாதிக்கும். தெரியாத வரை அவர் மனசாட்சிக்கும் நிம்மதி. சிவாஜிக்கும் அனுகூலம்….

காலம் உருண்டோடியது. சிவாஜிக்கு ஒன்றன்பின் ஒன்றாக இரு திருமணங்கள் நடந்தன. சாய்பாய் என்ற பெண்ணை ஜீஜாபாய் தேர்ந்தெடுத்து அந்தத் திருமணம் பூனாவிலும், சொய்ராபாய் என்ற பெண்ணை ஷாஹாஜி தேர்ந்தெடுத்து அந்தத் திருமணம் பீஜாப்பூரிலும் நடந்தது. தாதாஜி கொண்டதேவ் கட்டிய மாளிகையில் சிவாஜி சகல சௌகரியங்களுடனும் வாழ ஆரம்பித்தான்.

தாதாஜி கொண்டதேவ் தன் வாழ்க்கையின் இறுதி நெருங்குவதை உணர்ந்து எல்லா நிர்வாக வேலைகளிலும் சிவாஜியை ஈடுபடுத்தினார். சிவாஜி அவரிடமிருந்து நிர்வாக சூட்சுமங்களை நிறையவே கற்றான். தாதாஜி கொண்டதேவ் வரிவசூலிப்பதில் காலத்திற்கேற்றாற் போல விதிகளை இறுக்கியும் தளர்த்தியும் தங்கள் குடிமக்கள் அதிகமாய் கஷ்டப்படாமல் பார்த்துக் கொண்டார். வரி கொடுத்த பிறகு அந்தக் குடிமகனுக்கு என்ன மிஞ்சுகிறது, மிஞ்சுவது அவனுடைய அடிப்படை வசதி வாழ்க்கைக்குப் போதுமா என்று கவனிக்கும் பரந்த பார்வை அவருக்கு இருந்தது. அது அருகிலிருந்த பிராந்தியங்களில் இருக்கவில்லை. விளைச்சலில் இத்தனை பங்கு என்றால் அந்த அளவு கொடுத்தேயாக வேண்டும். கொடுக்கா விட்டால் தண்டனை, அபராதம் எல்லாம் இருந்தன.  மலைப்பாங்கான பகுதிகளில் விவசாயம் செய்பவர்களின் கஷ்டங்களை உணர்ந்து அவர்களுக்கு சலுகைகள் அதிகம் கொடுத்தார். மலைவாழ் குடியானவனை ஊக்குவிக்கா விட்டால் அவன் பழைய சோம்பல் நிலைக்கோ, திருட்டு வழிக்கோ போய்விடக்கூடும் என்ற கவலை அவருக்கிருந்தது.

நிர்வாகத்தின் மூலமாக ஆக வேண்டிய காரியங்களைச் செய்ய அவர் காலதாமதம் செய்ததே இல்லை. கோட்டைகளை அவ்வப்போது பழுதுபார்த்து நிவர்த்தி செய்து வலிமையான நிலையிலேயே வைத்திருப்பதற்கு அவர் அதிக முக்கியத்துவம் தந்தார். ஆபத்து சமயங்களில் நம்மைக் காப்பதும், வீழ்த்துவதும் அது தான் என்று சொல்வார். இந்தத் தொலைநோக்கும் அடுத்திருந்த பிராந்தியங்களில் இருக்கவில்லை. வரிவசூலில் கறாராக இருப்பவர்கள் நிர்வாகச் செலவினங்கள் செய்வதில் கஞ்சர்களாக இருந்தார்கள். பழுது பார்க்கும் வேலைகள் கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்கிற நிலை இருந்தது. எல்லாக் கோட்டைகளும் பீஜாப்பூர் சுல்தானின் ஆளுமைக்கு உட்பட்டே இருந்ததால் அதற்கு அவர்கள் பீஜாப்பூர் அரசிடமிருந்தே நிதி எதிர்பார்த்தார்கள். மனுக்கள் அனுப்புவதும், பதில் அனுப்புவதுமாகவே காலம் நிறைய வீணானது.

கொள்ளையர்களையும், திருடர்களையும் தங்கள் எல்லைக்கு நுழைவதைத் தடுக்க முக்கிய இடங்களில் முரட்டுக் காவலர்களை நிறுத்தினார். தண்டனைகளில் கண்டிப்பாக இருந்தார். உழைப்பை ஊக்கப்படுத்தினார். திறமைகளுக்குப் பரிசளித்தார். இவையெல்லாம் தக்காணப் பீடபூமியில் அதிகம் காண முடியாதவை. பல இடங்களுக்குச் சென்று வரும் யாத்திரிகர்கள் இந்த நிர்வாகத்தைப் புகழ்ந்தார்கள். சுற்றும் முற்றும் நடப்பதைக் கூர்ந்து கவனித்து வந்த சிவாஜிக்கும் தாதாஜி கொண்டதேவின் நிர்வாக முறைகள் ஒப்பற்றவையாகத் தோன்றின. கணக்கு வழக்குகளிலும் அவர் கறாராகவும், நேர்மையாகவும் இருந்தார். ஷாஹாஜிக்கு அவர் அனுப்பும் கணக்குகளில் சிறு பிழையைக்கூட சிவாஜியால் காண முடிந்ததில்லை. கண்டிப்பாக அவன் ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறான் என்பதால் தன் நிர்வாகத்திற்கான முன்மாதிரியை அவர் அருகிலிருந்தே அவன் கற்றான்.

ஷாஹாஜி பீஜாப்பூரிலிருந்து கர்நாடகத்திற்குச் சென்று விட்டார். கர்நாடகத்தில் கெம்பே கவுடாவை அடக்க அவரும் வேறொரு படைத்தலைவனும் போனார்கள். பீஜாப்பூர் அரசுக்கு தஞ்சை நாயக்கன்மார்களிடமும் அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அதனால் பீஜாப்பூர் சுல்தானின் கவனம் தெற்கிலேயே இருந்தது. வடக்கில் முகலாயர்களிடம் முன்பே ஒப்பந்தம் ஏற்பட்டு சமாதானம் ஆகி இருந்ததால் வடக்கே அவர் பயமில்லாமல் அலட்சியமாகவே இருந்தார்.

சிவாஜி முதலடி எடுத்து வைக்க இதுவே சிறந்த தருணம் என்று முடிவு செய்தான். இது போன்ற புரட்சிகரமான விஷயங்களை அவர்கள் தாதாஜி கொண்டதேவ் காதுபடும்படி பேசுவதில்லை என்று முன்பே முடிவெடுத்து இருந்ததால் நண்பர்களை மலைப்பிரதேசத்திற்கு அழைத்துப் போய் சிவாஜி பேசினான். “நாம் செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது நண்பர்களே!”

அவர்கள் உற்சாகமடைந்தார்கள். ரோஹிதீஸ்வரர் கோயிலில் சபதம் எடுத்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட போதெல்லாம் சிவாஜி அவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை கொடுத்து வந்தான். ”அங்கு போய் அந்தக் கோட்டைத் தகவல்களைப் பெற்று வாருங்கள்”, “இங்கு போய் இந்தப் பகுதியின் படைபலத்தை அறிந்து வாருங்கள்” என்றெல்லாம் சொல்வான். அவர்களும் அப்படிச் சென்று வந்து அவனிடம் தகவல்கள் சொல்வார்கள். அவர்கள் சென்று கேட்டு வந்ததை வைத்து அவன் எதாவது நடவடிக்கை எடுப்பான் என்று எதிர்பார்த்த போதெல்லாம், “பொறுங்கள் நண்பர்களே, இந்தத் தகவல்கள் நமக்கு மூலதனம். ஆனால் இதை வைத்துச் செயல்பட காலம் கனிந்து விடவில்லை. காலம் கனியாமல் செய்யும் செயல்கள் வியர்த்தமே அதனால் காத்திருப்போம்…..” என்று சொல்வான்.

காத்திருப்பது எல்லாருக்கும் எளிதல்ல. அதுவும் இளைஞர்களுக்கு அது இயலாததே. அவர்கள் அந்த சமயங்களில் உற்சாகம் இழந்து விடுவதுண்டு. அந்த சமயங்களில் “ஒரு வேளை நாம் அந்தப் பகுதியை வெற்றி பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும். உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் பார்ப்போம்” என்பான். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை உற்சாகத்துடன் சொல்வார்கள். அதைக் கேட்டு அதன் சாதக பாதகங்களை அவன் சொல்லும் போதெல்லாம் அவர்களுக்கு வியப்பாய் இருக்கும். எப்படியெல்லாம் யோசிக்கிறான் என்று பிரமிப்பார்கள். அவர்கள் சொல்லும் கருத்து அருமையாக இருக்குமானால் அதைத் தயக்கமில்லாமல் அவன் பாராட்டுவான். “நான் கூட அந்தக் கோணத்தில் சிந்திக்கவில்லை” என்று சொல்வான்.

இப்படித்தான் இத்தனை நாட்கள் சென்றிருக்கின்றன. அவன் முதல் முறையாக உண்மையாகவே செயல்படும் நேரம் வந்து விட்டது என்று சொன்னதில் புத்துணர்ச்சி பெற்ற அவர்கள் அவனிடம் கேட்டார்கள். “சொல் சிவாஜி நாம் என்ன செய்யலாம்”

தாங்கள் நின்றிருந்த இடத்திலிருந்து தென்மேற்குப் பகுதியில் தூரத்தில் தெரிந்த டோரணா கோட்டையைக் காட்டி சிவாஜி சொன்னான். “அந்தக் கோட்டையை நாம் நம் வசமாக்கிக் கொள்ளப் போகிறோம்”


டோரணா கோட்டை அப்பகுதியின் பெரும்பாலான கோட்டைகளைப் போலவே பீஜாப்பூர் சுல்தான் வசமிருந்தது.  அந்தப் பகுதியில் அது தான் மிக உயர்ந்த கோட்டை. அங்கு பெரிய படைபலம் இல்லை. கோட்டைத் தலைவனுக்கு அங்கு பெரிய வருமானமும் இல்லை. அவன் தாதாஜி கொண்டதேவ் போல அதைப் பழுது பார்த்தும் வைத்துக் கொள்ளவில்லை. ஒரு மந்தநிலையிலேயே அங்கு வாழ்க்கையை அவர்கள் ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.

சிவாஜியின் நண்பன் தானாஜி மலுசரே சொன்னான். “அந்தக் கோட்டையில் பெரிய படைபலம் இல்லை என்பது உண்மைதான். ஆனாலும் அதைப்பிடிக்க நம் படைபலம் போதுமா சிவாஜி?”

”படையா? இங்கு எதுவும் என் அதிகாரத்தில் இல்லை. என் ஆசிரியர் அதிகாரத்தில் தான் இருக்கிறது. அந்தக் கோட்டையைப் பிடிக்க நான் படை அனுப்பச் சொன்னால் அவர் முதலில் என்னை இங்கிருந்து அனுப்பி விடுவார். தவிரவும் இது போன்ற செயல்களில் அவரை எந்த விதத்திலும் நான் சம்பந்தப்படுத்தப் போவதில்லை என்று வாக்களித்திருக்கிறேன்”

“படையில்லாமல் எப்படி?...” இன்னொரு நண்பன் யேசாஜி கங்க் கேட்டான்.

“வாய்ப் பேச்சில் முடியும் வேலைகளுக்கு புத்திசாலிகள் வாளை எடுக்கக்கூடாது நண்பா!” என்று சொல்லி சிவாஜி புன்னகைத்தான்.

“புரிகிறபடிதான் சொல்லேன்” என்று இன்னொரு நண்பன் பாஜி பசல்கர் பொறுமையிழந்து சொன்னான்.

சிவாஜி அவர்களிடம் தன் திட்டத்தைச் சொன்னான். அவர்கள் திகைப்புடன் கேட்டுக் கொண்டார்கள். இறுதியில் தானாஜி மலுசரே கேட்டான். “அந்தக் கோட்டைத்தலைவன் ஒத்துக் கொள்வானா?”

“அது நீங்கள் எப்படிச் சொல்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. சரியான வார்த்தைகளை சரியான விதத்தில் சொன்னீர்களானால் அவன் நம் வழிக்குக் கண்டிப்பாக வருவான்.

”என்ன நாங்கள் சொல்வதா? நீ அங்கே வர மாட்டாயா?” யேசாஜி கங்க் திகைப்புடன் கேட்டான்.

“நான் வருவதானால் கண்டிப்பாக ஆசிரியரிடம் ஆசி பெற்றுத் தான் வர வேண்டும்.  சுயராஜ்ஜியம் நோக்கி நான் எடுத்து வைக்கும் முதல் அடி இது. பொய் சொல்லி ஆசி வாங்குவது சாபத்தை வாங்குவது போல. அதனால் அதையும் நான் விரும்பவில்லை. நான் இங்கே இல்லாமல் போனாலும் அவர் காரணம் கேட்பார். அவரிடம் பொய் சொல்ல என்னால் முடியாது. அதனால் நீங்கள் மூன்று பேர் செல்லுங்கள். நான் சொல்வது போல அங்கே பேசுங்கள். மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்”

என்ன சொல்ல வேண்டும் எப்படிச் சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து அவன் யேசாஜி கங்க், தானாஜி மலுசரே, பாஜி பசல்கர் என்ற நண்பர்களை டோரணா கோட்டைக்கு அனுப்பி விட்டு அமைதியாக தன் மாளிகைக்குத் திரும்பினான்.

(தொடரும்)
என்.கணேசன் 

4 comments:

  1. சுஜாதாJune 25, 2018 at 6:49 PM

    சிவாஜி தன் ஆசிரியருக்கு தரும் மரியாதை வியக்க வைக்கிறது. அந்தக் கோட்டையைப் பிடிக்க அவன் போடும் திட்டம் அறிய ஆவலாய் இருக்கிறது. வியாழக்கிழமைக்கு வெய்ட் செய்துட்டு இருந்தவங்கள திங்கட்கிழமைக்கும் வெய்ட் பண்ண வெச்சிட்டீங்களே கணேசன் சார்.

    ReplyDelete
  2. Dadaji's taxation system and his concern over the common man is excellent. A great lesson from Sivaji's teacher to modern rulers.

    ReplyDelete
  3. Story flow வேற level Sir. வாய்ப் பேச்சுல முடியும் வேலைக்கு வாள் எடுக்க கூடாது mass dialogue Sir. நம்ம life க்கும் set ஆக கூடிய dialogue.

    ReplyDelete
  4. சிவாஜியின் திட்டம் பற்றி அறிய ஆவலாக உள்ளேன்... ஆசிரியரை மதிக்கும் விதம் அருமை..

    ReplyDelete