மறுநாள்
க்ரிஷ் கண்விழித்த போது உடல் மிக லேசாக இருப்பது போல் உணர்ந்தான். மனமும் எந்தச் சிந்தனை
ஓட்டமும் இல்லாமல் மிக நிசப்தமாக இருந்தது. படுக்கையில் இருந்து எழுந்த போது மிகக்
குறைந்த அளவு சக்தியே அதற்குத் தேவைப்பட்டது போல் இருந்தது. இதெல்லாம் அவனுக்குப் புது
அனுபவங்கள். எழுந்து அமர்ந்தவன் இன்று என்னவெல்லாம் செய்யப் போகிறோம், ஒவ்வொன்றையும்
எப்படிக் கையாளப் போகிறோம் என்பதை எல்லாம் மனதில் ஒரு பட்டியல் போட்டுக் கொண்டான்.
இன்று அவன் கல்லூரிக்குப் போகப் போகிறான். வீட்டுக்குள் சாதித்ததை அவன் வெளியேயும்
சாதிக்கப் போகிறான். சாதிப்பான். மனதில் எதிரியின் குணாதிசயங்கள் நினைவுக்கு வந்தன.
முகம் தெரியாத அந்த எதிரியே கற்றலில் அவனுக்கு ஒரு முன் மாதிரியாக மாறினான்.
மணல்கடிகாரத்தில்
ஒவ்வொரு துகளாக அவசரமில்லாமல் மேல் குடுவையிலிருந்து கீழ்க் குடுவைக்கு ஒரே சீரான வேகத்தில்
விழுந்து கொண்டு இருப்பது போல் அவன் வேலைகள் எல்லாம் ஒரே சீரான வேகத்தில் நடக்க ஆரம்பித்தன.
எல்லாவற்றிலும் கவனமாய் விழிப்புணர்வாய் இருந்தான். செய்ய வேண்டிய ஒவ்வொன்றையும் செய்தான்.
ஆனால் எதிலுமே அனாவசியமாய் சில கணங்கள் கூடக் கூடுதலாய் தங்கி விடவில்லை. ஒரு வித தாள
லயத்தோடு வாழ்வது அவனுக்குப் புது அனுபவம். ஆனால் அது அன்று நிகழ்ந்தது.
கல்லூரியில்
முதல் ஆளாக மணீஷைப் பார்த்தான். மணீஷ் ஒரு எந்திரம் போல எங்கேயோ வெறித்துப் பார்த்தபடி
ஒரு சிமெண்ட் பெஞ்சின் மீது அமர்ந்திருந்தான். க்ரிஷ் அவனருகே போய் அவன் தோளில் தட்டிப்
புன்னகைத்து விட்டுப் போனான். க்ரிஷிடம் எதோ ஒரு கூடுதல் உற்சாகத்தைக் கவனித்த மணீஷ்
அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். கூர்ந்து பார்த்ததில் க்ரிஷிடம் கூடுதலாய் துடிப்பும்,
வேறு ஏதோ ஒன்றும் சேர்ந்திருப்பதாய்த் தோன்றியது. நாளுக்கு நாள் அவன் எதை எல்லாம் சிறிது
சிறிதாக இழந்து வருகிறானோ அதை எல்லாம் க்ரிஷ் அதிகமாகப் பெற்றுக் கொண்டே போவதாக மணீஷுக்குத்
தோன்றியது. இறைவன் ஏன் இப்படித் தன் படைப்புகளிலேயே பாரபட்சம் காட்டுகிறான் என்ற அவன்
கேள்விக்கு நீண்ட நேரம் யோசித்தும் அவனுக்கு விடை கிடைக்கவில்லை…..
க்ரிஷ்
தூரத்தில் ஹரிணியைப் பார்த்தான். இத்தனை நேரம் தாக்குப் பிடித்த ஒன்று அவளருகே வந்தால்
போய் விடுமோ என்றச் சின்ன பயம் எட்டிப் பார்த்தது. ஆனால் தவிர்ப்பது என்பது தோல்வியை
ஒப்புக் கொள்வது போலவே அல்லவா என்றும் தோன்றியது. அவள் என்றுமே அவன் வாழ்க்கையில் ஒரு
அங்கம் தான். அவன் வாழ்வோடு நிரந்தரமாகப் பின்னிப் பிணையப் போகிறவள். சற்று முன் இதுவரை
தாக்குப்பிடிக்க முடிந்த ஒன்று இப்போது முடியாமல் போய்விடுமோ என்று அவன் பயப்பட்டதற்குக்
காரணம் அவள் சீண்டினால் இசைந்து விடுவோமோ என்ற எண்ணம் தான் என்பது புரிந்தது. எதற்கும்
உகந்த காலங்கள் இருக்கவே இருக்கின்றன, சில காலங்களில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது
மறுத்து விடுவதென்பது அல்ல, பொறுத்திருப்பதற்கான அடையாளம் என்பதை அவளுக்கும் புரிய
வைக்க முடியும் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் ஒரு இறை துளியென்றால், அவளும் ஒரு
இறை துளியே….. அவளும் தரம் தாழ்ந்தவளோ, கட்டுப்பாடு இல்லாதவளோ அல்ல…. அவள் அவனைக் கவனிக்காமல்
கல்லூரி அண்டெண்டர் பையனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். க்ரிஷ் அவளை நோக்கி இயல்பாகவே
நடந்தான்.
அவனைப்
பார்த்தவுடன் முகம் பிரகாசித்தவள் திரும்பவும் அந்தப் பையனிடம் திரும்பி சுருக்கமாக
எதையோ சொல்லித் தலையசைத்து அனுப்பி விட்டாள். க்ரிஷ் அருகில் வந்தவுடன் சொன்னாள்.
“இந்தப் பையன் டிகிரில ஒரு பேப்பர் அரியர்ஸ் வச்சிருக்கானாம். கணக்கு வராதுங்கன்னான்.
மூணு தடவை எழுதியும் போயிடுச்சாம். கடைசி வரைக்கும் அட்டெண்டராகவே இருந்துடறது கேவலம்டா.
இந்தத் தடவை பணம் கட்டுடா. நான் உனக்குச் சொல்லித்தர்றேன். உன்னைப் பாஸ் பண்ண வைக்க
வேண்டியது என் பொறுப்புடான்னு சொன்னேன்…..”
க்ரிஷ்
பெருமிதத்துடன் புன்னகைத்தான். இது தான் அவன் ஹரிணி! ஹரிணி அவனைப் பார்த்துக் கண்ணடித்தபடி
சொன்னாள். “க்ரிஷ் இன்னைக்கு என் கண்ணுக்கு நீ கூடுதல் அழகாய் தெரியறாய்”
பயந்தபடியே
சீண்டுகிறாள்…. க்ரிஷ் சீண்டலில் இருந்து அவளை சீரியஸாக மாற்ற வழி யோசித்தான். கணத்தில்
எதிரி நினைவுக்கு வந்தான். க்ரிஷ் மிக இயல்பாக அலைபாயாமல் சொன்னான். “தேங்க்ஸ். உன்
கிட்ட ஒரு ஆளைப் பத்தி நான் சொல்றேன். நீ என்ன
நினைக்கிறாய்னு சொல்லேன்… அவன் பல அமானுஷ்ய சக்திகள் படைச்சவன்……” என்று ஆரம்பித்து
மவுண்ட் அபுவின் சதானந்தகிரி சொன்னதையும், தார்ப்பாலைவனத்தின் பக்கிரி சொன்னதையும்
விவரிக்க ஆரம்பித்தான்.
அறிவுத்
தாகம் அதிகமிருந்த ஹரிணிக்கு வித்தியாசமான மேதைகள் மீது எப்போதுமே ஆர்வமும், பிரமிப்பும்
உண்டு. அவன் சொல்ல ஆரம்பித்தவுடன் எல்லாவற்றையும் மறந்து ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தாள்.
அவன் முடித்த போது அவள் முகம் பெருவியப்பைக் காண்பித்தது. “ஏய்… நிஜமாவே ஒருத்தன் இப்படி
இருக்கிறானா, இல்லை கதை விடறியா?’
“சத்தியமா
இருக்கிறான். அவன் என்னை எதிரியா நினைக்கிறான்…..”
“உன்னையெல்லாம்
எதிரியாய் நினைக்கிறவன் மனுஷனே கிடையாது” என்று காட்டமாய் ஹரிணி சொன்னாள்.
“இவனும்
மனுஷனாத் தெரியலை” க்ரிஷ் புன்னகையோடு சொன்னான்.
ஹரிணி
முகத்தில் கவலை படர ஆரம்பித்தது. இத்தனை பலம் வாய்ந்த ஒரு மனிதனிடம் க்ரிஷ் தாக்குப்
பிடிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதை வாய்விட்டு அவள் சொன்னாள்.
க்ரிஷ்
சொன்னான். “அவனுக்கு இருக்கிற பெரிய பலவீனத்தை நான் உனக்குச் சொல்லலையே. அதனால் தான்
பயப்படறே. அவன் பக்கம் தர்மம் நியாயம் இல்லை….. அதனால கடவுளும் அவன் பக்கம் இருக்க
வாய்ப்பில்லை. கடவுள் கூட இல்லாதவன் எத்தனை பலசாலியானாலும் சரி ஆழத்தில் பலவீனமானவனே”
கலிகாலத்தில்
வாழ்பவள் அவள். அவளுக்கு அவன் சொல்வதை முழுவதுமாக நம்பிவிட முடியவில்லை…
செந்தில்நாதனின்
அடுத்த தேடல் ப்ளாக் மேஜிக், மாந்திரிகம் ஆகியவற்றைக் கற்றுத்தரும் மந்திரவாதிகளைப்
பற்றியதாக இருந்தது. அவருடைய நண்பர் ஒருவர் டெல்லியில் சி.பி.ஐயில் இருந்தார். அவருடைய
நண்பர் ஒருவர் திகார் ஜெயிலின் வார்டனாக இருந்து ஓய்வு பெற்றவர். குற்றவாளிகள் பெரும்பாலோருடைய
வரலாறு அந்த ஜெயில் வார்டனுக்கு அத்துபடியானதால் அவர் ஐந்து பேருடைய முகவரிகளைக் கொடுத்து
“இவனுகளுக்குத் தெரியாத மந்திரவாதி இருக்க முடியாது” என்று உறுதியாகச் சொன்னார். அந்த
ஐந்து குற்றவாளிகளில் ஒருவன் சமீபத்தில் மரணமடைந்திருந்தான். மீதமுள்ளவர்களில் இருவர்
இப்போது வேறு வழக்குகளில் கைதாகி தூரத்துச் சிறைகளில் இருந்தார்கள். மீதமுள்ள இருவருமே
இமயமலையில் இருக்கும் ஒரு மந்திரவாதியைச் சொன்னார்கள். அவர்களில் ஒருவனை அழைத்துக்
கொண்டு செந்தில்நாதன் மந்திரவாதியைச் சந்திக்கச் சென்றார்.
கற்களால்
கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தின் நுழைவாயிலிலேயே பயமுறுத்தும் உருவங்களுடன் காகம், நரி,
ஆந்தை மூன்றின் வரைபடங்களும் அமானுஷ்யமாக வரையப்பட்டிருந்தன. உள்ளே மின் விளக்குகளுக்குப்
பதிலாக இரண்டு தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன. கருப்பு நிற ஆடையணிந்த ஒரு ஆஜானுபாகுவான
மந்திரவாதி புலித்தோலில் அமர்ந்து கொண்டிருந்தான். உள்ளே நுழைந்தவர்களைப் பயமுறுத்தும்
விதமாக ஒரு வௌவால் குறுக்கே பறந்தது.
ஆனால்
இதிலெல்லாம் செந்தில்நாதன் பிரமிப்படைந்து விடவில்லை. அந்த மந்திரவாதியிடம் குற்றவாளி
செந்தில்நாதனை தமிழ் நாட்டுப் போலீஸ் அதிகாரியாக அறிமுகப்படுத்தினான். அந்த மந்திரவாதி
அவருக்கு ஆசி வழங்கினான். அதனால் வேறு வழியில்லாமல் செந்தில்நாதன் கைகூப்பி வைத்தார்.
செந்தில்நாதன்
சுருக்கமாகச் சொன்னார். “நான் பல அமானுஷ்ய சக்திகள் இருக்கிற ஒரு நபரைப் பற்றி உங்களிடம்
கேட்க வந்திருக்கிறேன். உங்களிடம் கற்றுக் கொண்டவர்களில் அப்படிப்பட்ட ஆட்கள் இருக்கின்றார்களா?”
மந்திரவாதி
பெருமையுடன் சொன்னான். “அப்படி ஒன்று இரண்டு பேர் இல்லை. ஏகப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள்.
என்னிடம் இருக்கும் கலை அந்த அளவு மகத்தானது. அமானுஷ்யமானது”
செந்தில்நாதன்
நேரத்தை வீணாக்காமல் அடுத்த கேள்வியைக் கேட்டார். “அவர்களில் உங்களையே மிஞ்சின சீடன்
யாராவது இருக்கிறானா?”
மந்திரவாதி
அந்தக் கேள்வியே தனக்கிழைக்கப்பட்ட அவமரியாதையாக எண்ணி முகம் மாறினான். “என்னை மிஞ்சக்கூடிய
சக்தி யாருக்கும் வரவில்லை அதிகாரியே. உங்களுக்கு என் சக்தியின் அளவு தெரியாததால் தான்
இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள்?”
“உங்களை
அவன் மிஞ்சவில்லை என்றால் அவன் படிக்க இங்கே வரவில்லை என்று அர்த்தம் ஐயா. நன்றி. நான்
கிளம்புகிறேன்……”
செந்தில்நாதன்
கிளம்பி விட்டார். மந்திரவாதி ஒன்றும் புரியாமல் திகைப்புடன் அவரைப் பார்த்தான்.
(தொடரும்)
I enjoyed Senthilnathan's meeting with the manthiravathi. Krish's minute changes are shown in depth. Classic.
ReplyDeleteஅருமை
ReplyDeleteசெந்தில்நாதனின் அடுத்த தேடல் ப்ளாக் மேஜிக், மாந்திரிகம் ஆகியவற்றைக் கற்றுத்தரும் மந்திரவாதிகளைப் பற்றியதாக இருந்தது. அவருடைய நண்பர் ஒருவர் டெல்லியில் சி.பி.ஐயில் இருந்தார். அவருடைய நண்பர் ஒருவர் திகார் ஜெயிலின் வார்டனாக இருந்து ஓய்வு பெற்றவர்./////
ReplyDeleteஇந்த வரி சற்று குழப்பாக உள்ளது ஐயா.... 'அவருடைய நண்பர்' என்ற வாசகம் இரண்டு இடங்களில் ஒரே மாதிரி வருகிறது.யார்? யாருக்கு நண்பர்?? என்பது புரியவில்லை...
நண்பரின் நண்பர் திகார் ஜெயில் வார்டன்.
Deleteகிரிஷின் இந்த விழிப்புணர்வான செயல்பாடுகள் அருமை... அந்த விழிப்புணர்வு நிலையில் அவன் நடந்து கொண்டவிதம்,பேச்சு,செயல்... எல்லாமே வித்தியாசமாகவும்...அருமையாகவும் இருந்தது.
ReplyDeleteசெந்தில்நாதன் கடைசில குறைவான நேரம் வந்தாலும்... முடியுற நேரத்துல கலக்கிவிட்டார்....
ஆனால், மர்ம மனிதனை அவர் நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்... மர்ம மனிதனை நெருங்க,நெருங்க...அவருக்கு மரணமும் நெருங்குமே..? எப்படி தப்பிப்பாரோ?
உண்மை கிரிஷின் கூற்று கலியுகத்தில் ஏற்று கொள்ள முடியாதகவே நிலை பெற்று இருக்கிறது
ReplyDeleteசெந்தில்நாதன் கிரிஷியையும் விட என்னை கவர்கிறார் G அவரின் விட முயற்சி யார் துணையுமின்றி சூப்பர் waiting.......
இவ்வளவு மேன்மையான தொடுதல்களை எங்கிருந்து கற்றீர்கள்!
ReplyDelete