சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, April 12, 2018

இருவேறு உலகம் - 78


மாஸ்டர் க்ரிஷுக்கு சில மூச்சுப் பயிற்சிகள், ஒரு தியானப்பயிற்சி சொல்லிக் கொடுத்தார். மிகக் கவனமாகவும், ஆர்வமாகவும் படித்துக் கொண்ட அறிவாளியான அவன் அவற்றை வேகமாகவே கற்றுக் கொண்டான். மாஸ்டர் அந்தப் பயிற்சிகளுடன் அவன் மனதில் அவன் இறைசக்தியின் அங்கம் என்பதை ஆழத்திற்குக் கொண்டு போய் அந்த மனநிலையில் இருந்து பார்க்கச் சொன்னார். அவர் அந்த விஷயத்தைச் சொன்ன போதே அவன் தன் அந்தராத்மாவில் ஒரு சிலிர்ப்பை ஆரம்பத்திலேயே உணர முடிந்திருந்ததால் சிறிது நேரம் அவன் அந்த உண்மையை மனதில் நன்றாகவே நிலைநிறுத்த முடிந்தது. அவனுக்குள் ஒரு மிகப்பெரிய சக்தி மண்டலம் உருவாவது போல் இருந்தது. தனக்குள் அவன் ஒரு பெரும்பலத்தை உணர்ந்தான். அதை அவன் முகம் பார்த்த போதே மாஸ்டருக்கும் புரிந்தது. ஆரம்பத்திலேயே இந்த வேகம் இருப்பது வெகுசிலருக்கு மட்டுமே வாய்க்கும்…..

தான் உணர்ந்ததை அவன் அவரிடம் சொன்னான். அவர் தலையசைத்தார். அவன் உடனடியாக “மாஸ்டர் அடுத்தது சொல்லிக் கொடுங்க” என்றான்.

அவர் சொன்னார். “இந்த மனநிலையில் நீ வீட்டிற்குப் போன பிறகும் எத்தனை நேரம் இருக்க முடிகிறது என்று பார். நான் சொல்லிக் கொடுத்த எதையும் நீ யாருக்கும் சொல்லக்கூடாது. அதை எப்பவும் ஞாபகம் வச்சுக்கோ. இதுபத்தி விளக்குவது, விவாதிக்கறது எல்லாம் உன் சக்தியை விரயமாக்கிடும். போய் பயிற்சி செய்துட்டு நாளைக்கு வா.”

அவன் சரியென்று தலையசைத்தான். அவரை நமஸ்கரித்து விட்டுக் கிளம்பினான். வீட்டில் தன் அறையில் அமர்ந்து கொண்டு பயிற்சிகள் செய்து அந்த மனநிலையில் தொடர்ந்து இருந்தான். மனம் ஒரு குறிப்பிட்ட நேரம் கழித்து முரண்டு பிடிக்க ஆரம்பித்தது. வேறு ஏதேதோ யோசிக்க ஆரம்பித்தது. அந்த சமயத்தில் ஹரிணி போன் செய்தாள். “எப்படி இருந்தது உன் பாடம்”

”நல்லா இருந்துது. அது பத்தி யார் கிட்டயும் எதுவும் பேச வேண்டாம்னு மாஸ்டர் சொல்லிருக்கார்.”

“சரி சொல்லாதே. ஒன்னே ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ. சாமியாரா மட்டும் போயிடாதே. போனா நான் கொன்னுடுவேன்….”

“சரி சரி அதையே பேசி இப்ப என்னை சாகடிக்காதே. நான் இப்ப ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன்….”

“நானும் உன் கூடவே வந்து இதைக் கத்துகிட்டா என்னன்னு யோசிக்கிறேன். சேர்ந்தே ப்ராக்டிஸ் பண்ணலாமே….”

“அம்மா தாயே உன்னை இங்க இருந்தே கும்பிடறேன். ஆளை விடு”

“அந்தப் பயம் எப்பவுமே இருக்கட்டும்” என்று சிரித்துக் கொண்டே அவள் பேச்சை முடித்துக் கொண்டாள்.

அவனுக்கு மனம் மறுபடி பயிற்சியில் லயிக்க மறுத்தது. அதற்கு ஏதேதோ காரணம் சொன்னது. ஒருவழியாக திரும்பத் திரும்ப மனதை இழுத்து வந்து பயிற்சியிலும் அந்த மனநிலையிலும் நிறுத்தினான். அன்று முழுவதும் அவன் அறையை விட்டு வெளியில் வரவில்லை. இரவு சாப்பிட மட்டும் வெளியே வந்தான். சாப்பிடும் போதும் முடிந்த வரை பேச்சைக் குறைத்தான். எப்போதுமே அவன் வாயைக் கிளறும் உதய்க்கு அவனுடைய எம். பி நண்பன் ஒருவன் அந்த நேரத்தில் போன் செய்ததால் அவனும் நண்பனுடனே பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தான். தம்பியைத் தொந்திரவு செய்யவில்லை. அம்மா மட்டும் நன்றாகச் சாப்பிடு, இன்னும் சாப்பிடு என்று கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்தாள். அதற்கு மேல் அவளும் அதிகம் பேசவில்லை. அவள் கவனம் மூத்த மகன் போன் பேசியதில் இருந்தது. திரும்பவும் அறைக்கு வந்தவன் மறுபடி பயிற்சி செய்ய ஆரம்பித்தான். இரவு மனம் மறுபடி அமைதியடைந்து எண்ணங்களும் ஒரு புள்ளியில் லயிக்க ஆரம்பித்தன. மிக அமைதியான ஆழமான உறக்கம் வந்தது.

மறுநாள் எழும் போது புத்துணர்ச்சியோடும், புதிய சக்திப்பெருக்கோடும் இருப்பதாக க்ரிஷ் உணர்ந்தான். மாஸ்டரிடம் போய் தன் அனுபவத்தைச் சொன்னான். அவர் மென்மையாகப் புன்னகைத்தார்.

“சரி மாஸ்டர் அடுத்த பாடம் சொல்லிக் கொடுங்க” என்று அவன் ஆர்வத்துடன் கேட்டான்.

“முதல் பாடத்தில் பாஸ் ஆனா தான் இரண்டாம் பாடம்…. இன்னும் முதல் பாடத்திலேயே நீ பாஸாகல”

“என்ன மாஸ்டர் சொல்றீங்க?” க்ரிஷ் ஆதங்கத்துடன் கேட்டான்.

 ”நீ நேற்று யார் கிட்டயெல்லாம் பேசினாய்?….”

”ஹரிணி கிட்டயும் அம்மா கிட்டயும். ஹரிணி கிட்ட ரெண்டு நிமிஷம் தான் பேசியிருப்பேன். அம்மா சாப்பிடறது பத்தி பேசினாங்க. சரி சரின்னு சொன்னேன். அவ்வளவு தான். மத்தபடி பேச்சைக் கூடக் குறைச்சுட்டு ப்ராக்டிஸ் பண்ணிட்டு வந்திருக்கேன். ஆனாலும் பாஸாகலைன்னு சொல்றீங்களே மாஸ்டர்”

”ஆரம்பத்துக்கு நீ செய்திருக்கறது சாதனைன்னு சொல்லலாம். ஆனா போதாது. ரூமுக்குள்ளயே உட்கார்ந்துட்டு அமைதியையும் சக்தியையும் உணர்றது பெரிய விஷயமில்ல. நீ ஹரிணி கிட்ட ரெண்டு நிமிஷம் பேசினதா சொன்னாயே. பேசி முடிச்சு மனசு திரும்ப வழிக்கு வர எவ்வளவு நேரமாச்சு….”

”ரெண்டு மணி நேரம் இருக்கும்.”

“ரெண்டு நிமிஷம் பேசின பிறகு மனசைத் திரும்ப அமைதிப்படுத்த ரெண்டு மணி நேரம் தேவைப்படுதுன்னா முதல் பாடத்துல நீ ஜெயிச்சதா சொல்ல முடியாது க்ரிஷ். நீ திரும்ப போ. வழக்கமா வீட்டாளுக கிட்ட எப்பவும் இருக்கற மாதிரி இரு. மனம் இந்த அமைதியோடவே, சக்தியோடவே இருக்குதான்னு பாரு. அது முடிஞ்சுதுன்னா காலேஜுக்குப் போ. அங்கயும் வழக்கம் போல உன் வேலை எல்லாம் செய். அதை எல்லாம் செஞ்சுகிட்டே நான் சொல்லிக் கொடுத்த மனநிலையிலே தங்க முடியுதான்னு பாரு. உன் வழக்கமான வாழ்க்கைல செய்ய வேண்டியது எல்லாத்தையுமே செஞ்சுகிட்டே உன் மனநிலை இதே அமைதியோட இதே சக்தியோட தங்க ஆரம்பிக்கறப்ப தான் நீ முதல் வகுப்பு பாஸாயிட்டேன்னு அர்த்தம். அப்புறமா தான் அடுத்த பாடம், அடுத்த வகுப்பு….”

க்ரிஷ் திகைப்புடன் அவரைப் பார்த்தான். அவர் புன்னகை சிரிப்பாக நீண்டது.


ஜெய்சால்மரிலும் பலரிடமும் அந்தப் பக்கிரி பற்றிக் கேட்டு செந்தில்நாதன் சலித்துப் போனார். அங்கும் பேசிய நூற்றியெட்டு ஆட்களில் இரண்டு பேருக்கு மட்டும் அவர் சொன்ன ஆள் பற்றித் தெரிந்திருந்தது. அவர்கள் சதானந்தகிரி சுவாமிஜி போல அந்தப் பக்கிரி எங்கும் நிரந்தரமாகத் தங்காத ஆள் என்று சொன்னார்கள். மற்றவர்களில் முக்கால்வாசிப் பேருக்கு அந்தப் பக்கிரியைத் தெரிந்திருக்கவில்லை. மீதமுள்ளவர்கள் பிகானீர் நகரில் இருந்தவர்கள் செய்தது போலவே யார் யாரையோ சக்தி படைத்த ஆட்களாக அடையாளம் காட்டினார்கள். போனதில் ஏமாற்றம் தான் அவருக்கு மிஞ்சியது.

அவர் பலரிடமும் விசாரிப்பதை தூர இருந்தே பார்த்துக் கொண்டிருந்த பெரிய தலைப்பாகை அணிந்த ஒரு முதியவர் அவர் சலித்துப் போய் ஒரு தெருவோரக் கடையில் டீ குடிக்க அமர்ந்த போது அருகில் வந்தார். “நீங்கள் ஏன் அந்த பக்கிரியை விசாரிக்கிறீர்கள்?”

அந்த ஆளைப் பார்க்கையிலேயே அவருக்கு அந்தப் பக்கிரி பற்றி கூடுதலாகத் தெரிந்திருக்கலாம் என்று செந்தில்நாதனின் உள்ளுணர்வு சொல்லியது. அந்த முதியவரின் நெஞ்சைத் தொடும்படியான ஒரு கதையை செந்தில்நாதன் சொன்னார். “என் அம்மாவுக்கு நவீன மருந்தால் குணப்படுத்தாத முடியாத ஒரு வித்தியாசமான நோய். பார்க்காத மருத்துவம் இல்லை. செய்யாத செலவில்லை. ஆனால் பிரயோஜனமில்லை. அப்போது தான் என் ராஜஸ்தான் நண்பர் ஒருவர் இந்தப் பக்கிரி பற்றிச் சொன்னார். அவர் கையால் மந்திரித்து ஏதோ தாயத்து வாங்கினால் கண்டிப்பாகக் குணமாகும் என்றார். அவருக்குத் தெரிந்தவங்க யாரோ அப்படி குணமாயிருக்காங்களாம். அதனால் தான் இங்கே வந்தேன்…… ஆனால் அவர் எங்கேயிருக்கிறார் என்று இங்கே யாருக்குமே தெரியவில்லை….”

அந்த முதியவர் முகத்தில் கனிவு தெரிந்தது. “இந்தக் காலத்தில் வயதானவர்களுக்கு முடியலைன்னா எங்கயாவது கொண்டு போய் சேர்த்திட்டு போயிடறாங்க. உங்க மாதிரி அக்கறையோட குணப்படுத்த அலையறவங்க ரொம்பக்குறைவு….. நீங்க சொல்ற அந்தப் பக்கிரி இருக்கற இடம் எனக்குத் தெரியும்…. ஆனால் அந்தப் பக்கிரி பகல்ல யார் கண்ணுக்கும் அகப்பட மாட்டார். ராத்திரியானா தான் வெளியே வருவார்….”

செந்தில்நாதன் ஆர்வமாகச் சொன்னார். “பரவாயில்லை ராத்திரியே போய் பார்க்கிறேன். இடத்தைச் சொல்லுங்கள்”

முதியவர் அறுபது கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஒரு பாலைவனப்பகுதியைச் சொன்னார். “அங்கே கடைசி பஸ் சாயங்காலம் ஆறு மணிக்குப் போய்ச் சேரும். டாக்சிலயும் போகலாம். ஆனா டாக்சிக்காரங்களும் ராத்திரி ஒன்பது மணிக்கு மேல் போக மாட்டாங்க. கொஞ்சம் அமானுஷ்யமான காற்று அடிக்கும் பகுதி அது…. அங்கே பத்துப் பதினோரு மணிக்கு மேல தான் பக்கிரி வெளியே வருவார்….. நீங்க ராத்திரி ஒன்பது மணிக்குப் போனா காலைல வரைக்கும் திரும்பி வர முடியாத இடம் அது.”

செந்தில்நாதன் கைகூப்பிச் சொன்னார். “பரவாயில்லை. நான் போய்ப் பார்க்கிறேன். எப்படி எங்கேயிருந்து போவதுன்னு மட்டும் சொல்லுங்க”

(தொடரும்)
என்.கணேசன்

7 comments:

  1. first lesson itself is very tough....
    waiting

    ReplyDelete
  2. Master and Senthilnathan are rocking in this episode. Great lesson from Master, shrewdness from Sentnilnathan.

    ReplyDelete
  3. மாஸ்டர் ஆரம்பிச்ச முதல் பாடமே அருமை.... கிரிஷ் பரவாயில்லை... 2நிமிடம் பேசிட்டு.. 2 மணி நேரத்துல பழைய நிலைக்கு வந்தான்...
    நமக்கு 2 நாட்கள் கூட ஆன அனுபவங்கள் நிறைய உண்டு...

    செந்தில்நாதன் பக்கிரியை சந்திக்க செல்லும்... காட்சி இப்போதே... அமானுஷ்ய பீதியை கிளப்புகிறது...

    ReplyDelete
  4. அமானுஷ்ய கணேசன்!...

    ReplyDelete
  5. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

    கதை வேகமாகவும் விறுவிறுப்பாகவும் செல்கின்றது வாழ்த்துக்கள் .

    ReplyDelete