சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, April 2, 2018

சத்ரபதி – 14


போரைப் போலவே, அல்லது போரை விட ஒருபடி மேலாகவே சமாதான உடன்படிக்கை தக்காணப் பீடபூமி அரசியலில் முக்கியமாக இருந்தது. ஒரு போரின் வெற்றி தோல்வியின் முடிவில் எல்லாம் முடிந்து விடுவதில்லை. அடுத்ததாக எது, எந்த அளவு, யாருக்கு என்கிற பங்கீட்டில் இருதரப்பும் அதிகக் கவனத்துடன் இருப்பார்கள். இருக்க வேண்டும்…. நடந்து முடிந்த போரில் கைப்பற்றிய கோட்டைகளையும், இடங்களையும் பீஜாப்பூர் சுல்தானுக்கே தந்து விட்டு அதற்குப் பதிலாகப் பெரும் செல்வத்தைப் பெற்றுக் கொண்டு முகலாயப் பெரும்படை விடைபெற்றது. அதற்கு முக்கியமான காரணம் அந்தப் பகுதிகள் வரண்ட மற்றும் மலைப்பாங்கான பகுதிகளாக இருந்தன. செழிப்பில்லாத பகுதிகள், பெரும் பயனில்லாத கோட்டைகள் இவற்றை வைத்துக் கொள்வதால் செலவுகள் தான் அதிகமிருக்குமேயொழிய நல்ல வரவுகளோ, பலன்களோ இருக்காது. மேலும் ஏதாவது உள்கிளர்ச்சிகள் அங்கு நடந்தாலும் முகலாயர்கள் மிகத் தொலைவில் உள்ள தலைநகரிலிருந்து வந்து சமாளிப்பதும் சிரமமே. இந்தக் காரணங்களால் புத்திசாலித்தனமாக ஷாஹாஜியிடமிருந்து மீட்ட பகுதிகள், கோட்டைகள் உட்பட அனைத்தையும் பீஜாப்பூர் சுல்தானிடமே ஒப்படைத்து பெருஞ்செல்வம் பெற்று முகலாயர்கள் விடைபெற்றவுடன் ஷாஹாஜி பீஜாப்பூர் சுல்தானுடன் பேச்சு வார்த்தைக்குச் சென்றார்.

நடந்து முடிந்த போரில் ஷாஹாஜி போன்ற நட்பு பாராட்டிய பெரும் வீரரைக் கைவிட வேண்டி வந்ததில் பீஜாப்பூர் சுல்தான் ஆதில்ஷாவுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. முகலாயர்களைப் பகைத்துக் கொள்ள முடியாது என்றாலும் அவசரத்துக்கு அவர்களைத் துணைக்கு அழைப்பதும் இயலாது. காரணம் அவர்கள் உடனடியாக வந்து சேர முடியாது. அதனால் தென்னாட்டு அக்கம்பக்கத்து தலையீடுகளையும் போர்களையும் சமாளிக்க ஷாஹாஜி போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் உடன் இருப்பது அவசியம். இதையெல்லாம் மனதில் வைத்து ராஜமரியாதையுடன் ஷாஹாஜியை வரவேற்ற ஆதில்ஷா பேச்சு வார்த்தையின் முடிவில் அவரைத் தன் அரசவையில் சிறப்பான ஓரிடம் தந்து கௌரவித்ததோடு, ஷாஹாஜியிடம் முன்பிருந்த பகுதிகளில் பூனா மற்றும் சுபா என்ற இருபகுதிகளையும் திருப்பித் தந்தார்.

பீஜாப்பூர் அரசவையில் சிறப்பிடம் கிடைத்ததால் ஷாஹாஜி கசப்பான நினைவுகளை மட்டுமே தரக்கூடிய தன் பழைய இடங்களில் வசிக்க விருப்பப்படவில்லை. ஆனால் ஜீஜாபாய் விடுதலையாகி, சிவாஜி அவளிடம் வந்து சேர்ந்த செய்தி கிடைத்தவுடன் ஒருமுறை அங்கு சென்று எல்லாவற்றையும் முடிவு செய்து விட்டு வரவேண்டியிருந்தது. அதனால் மூத்த மகன் சாம்பாஜியை அழைத்துக் கொண்டு அவர் கிளம்பினார்.


ஜீஜாபாய் பலகாலம் கழித்து ஒரு பாதுகாப்பான சூழலை உணர்ந்தாள். எதிரி என்னேரம் வருவானோ என்ற பயம் இல்லாமல், என் குழந்தைக்கு எதாவது தீங்கு நேர்ந்து விடுவோமோ என்ற கவலை இல்லாமல் ஒரு இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பியது அவளுக்குப் பெரும் ஆசுவாசத்தைத் தந்தது. சிவாஜி அவளிடம் வந்து சேர்ந்த கணம் முதல் அந்த நிம்மதியை அவள் உணர்ந்து வருகிறாள்.

மகனுடன் மறுபடி இணைந்த அந்த முதல் கணம் உணர்ச்சிக்களமாக இருந்தது. ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்ட சிவாஜியை ஆனந்தக் கண்ணீருடன் தூக்கிக் கொண்டாடிய அவள், மகனை இறக்கி விட்டபின் கண்ணீருடனேயே சத்யஜித்தின் இருகைகளையும் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். ஒரு சாதாரண வீரனான தன்னை சகோதரன் என்று அவள் அழைத்ததும், சிவாஜி அவனை மாமனாக அழைத்ததும் மிகப்பெரிய கௌரவமாக எண்ணி வந்த சத்யஜித், ஜீஜாபாய் எந்த பேதமும் பார்க்காமல் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்ட போது சங்கோஜத்துடன் பதறி பேச்சிழந்து நின்றான்.

”இந்த சகோதரி உனக்கு என்றென்றும் கடன்பட்டவளாக இருப்பேன் சகோதரனே” குரல் தழுதழுக்க மானசீகமாக ஜீஜாபாய் சொன்ன போது சத்யஜித் மெல்ல சொன்னான். “சகோதரன் என்றழைத்தீர்கள். சகோதரனின் கடமையைச் செய்தேன். இப்போது கடன் என்று சொல்லி வேறுபடுத்துகிறீர்களே தாயே”

“மன்னித்து விடு சகோதரனே. இனி கடன் பற்றிப் பேச மாட்டேன்” என்று ஜீஜாபாய் ஈரக்கண்களுடன் சொல்லிப் புன்னகைத்தாள்.

சிவாஜி வளர்ந்திருந்தான். மிக மெலிந்திருந்தான். அவனுக்குத் தாயிடம் சொல்ல நிறைய இருந்தன. அணில்கள், முயல்கள், எலிகள், ஆடுகள், மரங்கள் இவற்றோடு தான் ஆடிய விளையாட்டுகளை எல்லாம் சொன்னான். இந்த மூன்று வருடங்களில் கற்றுக் கொண்டதையெல்லாம் விவரித்தான். ஆனால் அவன் குறைகளையோ, கஷ்டங்களையோ ஒன்று கூடச் சொல்லாததை அந்தத் தாய் கவனிக்கத் தவறவில்லை. அந்தக் கவனிப்பே அடிக்கடி அவள் கண்களை ஈரமாக்கின. என் மகன் உண்மையான வீரன் என்று உள்ளுக்குள் அவள் பெருமிதப்பட்டாள்.

பேசிக் கொண்டேயிருந்த சிவாஜி பேச்சை நிறுத்தி மிகவும் மெலிந்து வாடி இருந்த ஜீஜாபாயிடம் மெல்லக் கேட்டான். “கடவுள் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார். உன்னையும் நன்றாகப் பார்த்துக் கொண்டாரா அம்மா”

மகனை அணைத்துக் கொண்டபடி ஜீஜாபாய் சொன்னாள். “அவர் பார்த்துக் கொண்டதால் தான் நாம் பாதுகாப்பாய் இருக்கிறோம் சிவாஜி….”


ணவரும் மூத்த மகனும் வந்து கொண்டிருப்பதாய் செய்தி கிடைத்தவுடன் ஜீஜாபாய் ஆவலுடன் வாசலுக்கு வந்தாள். அவள் மூத்த பிள்ளையைப் பார்த்து பல ஆண்டுகள் கழிந்து விட்டிருந்தன. சாம்பாஜி தனிக்குதிரையில் வந்திறங்கினான். அவன் உயரமாக வளர்ந்திருந்தான். திடகாத்திரமாக இருந்தான். தாயைப் பார்த்துப் புன்னகைத்தான். அருகில் வந்து காலைத் தொட்டு வணங்கினான். மனமார மகனை ஆசிர்வதித்தாலும் ஜீஜாபாய் இருவருக்குள் ஏற்பட்டிருந்த மிக நீண்ட இடைவெளியை உணர்ந்தாள். ஏக காலத்தில் சந்தோஷத்தையும் துக்கத்தையும் ஜீஜாபாய் உணர்ந்தாள். பல ஆண்டுகள் கழித்து மகனைப் பார்த்ததால் சந்தோஷம், இடைவெளியால் துக்கம்…

குதிரையிலிருந்து இறங்கிய தந்தையைப் பார்த்து ஓடிச்சென்று சிவாஜி கட்டிக் கொண்டான். மகன் மெலிந்து போயிருப்பதைக் கண்டு ஷாஹாஜி மனம் வெந்தார். அந்த முட்டாள் இவனை என்னிடம் ஒப்படைத்திருந்தால் இவன் ஆரோக்கியமாய் இருந்திருப்பானே….. ஷாஹாஜி மூத்த மகனை இளைய மகனுக்கு அறிமுகப்படுத்தினார். “இது தான் உன் மூத்த சகோதரன்,,,”

சகோதரர்கள் மிக வேகமாகவே நெருக்கமாகி விட்டார்கள். சிவாஜி அண்ணனை அழைத்துக் கொண்டு விளையாடப் போனான். ஷாஹாஜி ஜீஜாபாயிடம் தங்களது தற்போதைய நிலைமையை விரிவாகச் சொன்னார். ஜீஜாபாய் அவர் சொல்வதைக் கூர்ந்து கவனித்தாள். இதுவே துகாபாயாக இருந்தால் கணவரின் திருப்திக்காகத் தலையாட்டுவாளேயொழிய அவர் சொல்வதில் எத்தனை புரியும் என்பது தெரியாது. ஜீஜாபாய் சந்தேகம் வந்த இடங்களில் கேள்விகள் கேட்டு நிவர்த்தி செய்து கொண்டாள்….

சாப்பிடும் போதும், மற்ற நேரங்களிலும் சாம்பாஜி தந்தையுடனேயே இருந்தான். அவன் சற்று அதிக நேரம் உடன் இல்லா விட்டால் ஷாஹாஜி அவனைப் பார்வையாலேயே தேடினார். இதையெல்லாம் ஜீஜாபாய் கவனிக்கவே செய்தாள்.  சாம்பாஜி பேசும் போது தாய் என்று துகாபாயைக் குறிப்பிட்டான். தாயைப் போல் வளர்த்தவளைத் தாயென்று அவன் அழைத்ததில் தவறெதுவுமில்லை என்ற போதிலும் பெற்றவளுக்கு அது சிறிது வலிக்கவே செய்தது….

சகோதரனிடம் பேசும் போது சிவாஜி சத்யஜித்தை மாமா என்று குறிப்பிட்டதை ஷாஹாஜி ரசிக்கவில்லை. மனைவியை அதிருப்தியுடன் பார்த்தார். ஜீஜாபாய் கணவரிடம் சொன்னாள். “நம் பிள்ளையை ஊதியத்தால் நாம் காப்பாற்றியிருக்க முடியாது…” அதன் பின் ஷாஹாஜி அதுகுறித்து எதுவும் சொல்லவில்லை.

அவர் அடுத்ததாக ஆக வேண்டியதை அவளிடம் பேசினார். “சிவாஜி கல்வி கற்கும் காலம் நெருங்கி விட்டது ஜீஜா….”

“பூனாவிலேயே அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்…” என்று சுருக்கமாகத் தன் முடிவை ஜீஜாபாய் சொன்னாள். அவர் ஒன்றும் சொல்லாமல் யோசித்தார். பின் பெருமூச்சு விட்டபடி சம்மதித்தார். சிவாஜிக்குக் கற்றுத்தரவும் பூனா பகுதியை நிர்வாகிக்கவும் சேர்ந்து தகுதியான ஒரு ஆள் கிடைத்தால் தேவலை என்று யோசித்த போது அவருக்கு தாதாஜி கொண்டதேவ் நினைவுக்கு வந்தார். அந்தணர், நிறைய கற்றவர், தற்காப்புக் கலைகளில் வல்லவர், எல்லாவற்றிற்கும் மேலாக சிறந்த நிர்வாகி….

அவர் பெயரை ஷாஹாஜி சொன்ன போது ஜீஜாபாய் உடனே சம்மதித்தாள். அவளும் தாதாஜி கொண்டதேவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள்….

ஷாஹாஜி மறுநாளே கிளம்பி விட்டார். அவரும் சாம்பாஜியும் போவதையே பார்த்துக் கொண்டிருந்த ஜீஜாபாய் ஒரு மனக்கசப்பை உணர்ந்தாள். அவர்கள் குடும்பம் என்றென்றைக்குமாய் இரண்டுபட்டுவிட்டது. கணவரும், மூத்த மகனும் ஒரு புறம். அவளும், இளைய மகனும் ஒரு புறம். இரு பக்கங்களும் இரு துருவங்களாய்….. இரண்டும் என்றும் இணையப்போவதில்லை…..

(தொடரும்)
என்.கணேசன்   


4 comments:

  1. சுஜாதாApril 2, 2018 at 5:32 PM

    சிவாஜியின் பெற்றோர் இருவருமே சூழ்நிலை கைதிகள் பாவம். படிக்கையில் அவர்களை நேரில் பார்ப்பது போலவே உணர்கிறேன்.

    ReplyDelete
  2. Excellent narration sir.

    ReplyDelete
  3. ஏதோ... போர் முடிந்து...‌‌‌சிவாஜி தன் தாயுடன் இணைந்தது... நிலைமை சீரானது.. சற்று ஆறுதலாக உள்ளது...

    ReplyDelete
  4. சிவாஜி தன் தாயுடன் பேசுகின்ற வார்த்தைகள் நெகிழவைத்தன.

    ReplyDelete