சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Wednesday, January 17, 2018

மூவுலகங்களுக்கும் பயணிக்க முடிந்த ஷாமன்!

அமானுஷ்ய ஆன்மிகம் - 25  

ஷாமன்கள் தேர்ந்தெடுக்கும் விதங்களையும், ஒரு ஷாமனிடம் அவன் சார்ந்திருக்கும் சமூகம் எதிர்பார்க்கும் விஷயங்களையும் பார்த்தோம். அவன் எப்படி அறிவுக்கப்பாற்பட்ட அமானுஷ்ய ரகசியங்களை அறிந்து கொள்கிறான், அவன் அனுபவங்கள் எப்படிப்பட்டவை என்ற சுவாரசியமான  தகவல்களை இனி பார்ப்போம்.

ஷாமனிஸத்தில் மூன்று உலகங்கள் இருப்பதாகக் கருதப்படுகின்றன. அவை மேல் உலகம், நடு உலகம், கீழ் உலகம் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு ஷாமன் தன் ஆத்மபலத்தால் அந்த மூன்று உலகங்களிலும் பயணிக்கவும், அறிய வேண்டிய அரிய தகவல்களை அந்த உலகங்களில் இருந்து அறிய முடிந்த ஒருவனாகக் கருதப்படுகிறான்.

ஷாமனிஸத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் நடு உலகம் என்று அழைக்கப்படுகிறது. இதில் நாம் காண முடிந்த சக்திகளோடு காண முடியாத சக்திகளும் நிறைய இருப்பதாக ஷாமனிஸம் கருதுகிறது. வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் ஆவிகள் மட்டும் அல்லாமல் இறந்த பிறகும் பல காரணங்களால் இந்த உலகத்தை விட்டுப் பிரியாமல் இங்கேயே உலாவிக் கொண்டிருக்கும் ஆவிகள் ஷாமன் அறியவும், தொடர்பு கொள்ளவும் வேண்டிய முக்கிய சக்திகளாய் கருதப்படுகின்றன. அந்த ஆவிகளில் நல்ல ஆவிகள், அறிவுமிக்க ஆவிகள் இருப்பது போலவே தீய ஆவிகள், குரூரமான ஆவிகள், பொறாமை பிடித்த ஆவிகள், ஏமாற்றிச் சிக்க வைக்கும் ஆவிகள் கூட இருக்கின்றன என நம்புகிறார்கள். நல்ல ஆவிகளிடம் தொடர்பு கொள்ள முடிந்த ஷாமன், முடிந்த வரை தீய ஆவிகளிடம் இருந்து மிகவும் கவனமாக விலகியே இருக்க வேண்டும். அந்தத் தீய ஆவிகள் ஒருவரைத் தடம் மாற வைக்கவும், பிரச்னைகளுக்கு உள்ளாக்கவும் வல்லவை. அவற்றின் பிடியில் சிக்கிக் கஷ்டப்படுவோரை ஷாமன் காப்பாற்ற வேண்டும். நல்ல ஆவிகளிடம் இருந்து மனிதர்களுக்கு உதவும் அறிவுரைகளையும், தகவல்களையும் ஷாமன் கேட்டுப் பெற வேண்டும். பெரும்பாலும் வேட்டைக்கான விலங்குகள் இருக்கும் இடங்களையும், யுத்தம் மூண்டால் ஜெயிக்க உதவும் விஷயங்களையும், வானிலை பருவ மாற்றங்கள் குறித்த தகவல்களையும் ஒரு ஷாமன் இந்த ஆவிகளிடமிருந்து பெற்றுத் தருகிறான்.

கீழ் உலகம் தாவரங்கள் மற்றும் மிருகங்களின் ஆவிகள் உலகமாகக் கருதப்படுகிறது. இந்தக் கீழ் உலகத்தில் இப்போது உலகில் இருக்கும் விலங்கினங்கள் அல்லாமல் எப்போதோ அழிந்து விட்ட விலங்கு மற்றும் தாவர இனங்களின் ஆவிகள் கூட ஷாமனால் தொடர்பு கொள்ள முடிந்தவையாக இருக்கின்றன. மரப்பொந்துகள், குகைகள், பதுங்கு குழிகள், பாதாளங்கள், சுரங்கப் பாதைகள் ஆகியவை குறித்த ஞானம் கீழ் உலகம் மூலமாக ஒருவர் அறிய முடிந்ததாகக் கருதப்படுகிறது. நோய்களைத் தீர்க்கும் தாவரங்கள், மூலிகைகள், விலங்கினங்களின் எச்சங்கள் மற்றும் பாகங்கள் குறித்த ரகசியங்களை ஒரு ஷாமன் கீழ் உலகத்தில் இருந்து தான் அறிந்து சொல்கிறான். அது மட்டுமல்லாமல் புதையல்கள் மற்றும் பொக்கிஷங்கள் குறித்த தகவல்களும் கீழ் உலகத்தில் இருந்து பெற முடிந்தவையே.  

மனித வாழ்க்கையை வழி நடத்த முடிந்த மேலான தெய்வீக சக்திகள், எதிர்காலம் குறித்த தகவல்களை அறிவிக்க முடிந்த சக்திகள் எல்லாம் மேல் உலகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக ஷாமனிஸம் கருதுகிறது. ஆகாயம், வானவில் இரண்டும் மேல் உலகத்தின் தகவல்களையும், ஞானத்தையும் அளிப்பதாக இருப்பதால் ஒரு ஷாமன் அவற்றைப் படிக்க முடிந்தவனாக இருக்க வேண்டும். பெரும்பாலும் மேல் உலக ஞானம் பெற விரும்புகையில் ஷாமன் மர உச்சி, மலை உச்சி, பாறையின் உச்சி போன்ற உயரமான இடங்களில் இருந்தபடியே தியானநிலைக்குச் செல்கிறான்.

இந்த மூன்று உலக சக்திகளும் மனித வாழ்க்கையில் குறுக்கிட முடிந்தவை. பல சமயங்களில் அந்தக் குறுக்கீட்டால் மனிதன் தடுமாறி, மீள முடியாமல் கஷ்டப்படுகிறான். அந்த நேரங்களில் கஷ்டம் அல்லது பிரச்னைக்கான காரணத்தையும், அதற்கான தீர்வையும் சம்பந்தப்பட்ட மேல், நடு அல்லது கீழ் உலகின் சக்திகளிடமிருந்து ஒரு ஷாமன் அறிந்து சொல்ல வேண்டியிருக்கிறது. அதற்காக அவன் உணர்வு நுட்ப நிலைகளில் அந்தந்த உலகங்களுக்குப் பயணிக்க வேண்டி இருக்கிறது. அப்படிப்பட்ட ஒவ்வொரு பயணத்திலும் ஒரு விதத்தில் ஷாமன் இறந்து பிறப்பதாக ஷாமனிஸம் கருதுகிறது.

வேறொரு உலகிற்குப் போவதும், அதற்கு வேண்டிய சூட்சும நுட்ப நிலையைப் பெறுவதும் ஒரு ஷாமனுக்கு எவ்வளவு முக்கியமோ அதே போல், சென்ற நோக்கம் நிறைவேறிய பிறகு பழைய நிலைக்குத் திரும்புவதும் மிக முக்கியம். சில சமயங்களில் அப்படி வேறு உலகிற்குப் பயணிக்க முடிந்த ஷாமன் மறுபடியும் தன் பழைய உலகத்திற்குத் திரும்பாமல் சிக்கி மரணம் அடையும் அபாயமும் நேர்வதுண்டு. அதனாலேயே ஷாமன் ஒவ்வொரு முறை போய் வருவதும் இறந்து மறுபடி பிறப்பதைப் போலவே கருதப்படுகிறது.  

ஷாமனிஸ சித்தாந்தப்படி மனிதக் கண்களால் காண முடிந்த சக்திகளையும்,  காண முடியாத சக்திகளையும் ஒரு ஷாமன் முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிந்தவனாக இருக்கிறான். அவற்றில் எல்லா சக்திகளும் நல்லவையாக இருந்து விடுவதில்லை. அவற்றில் எதிர்மறை சக்திகளும் உண்டு. அந்த சக்திகளில் அவன் தன்னை இழந்து விடக்கூடாது. அப்படி இழந்து விட்டால் அவன் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது.  அதனாலேயே ஒரு உண்மையான ஷாமன் உறுதியான மனம் கொண்டவனாகவும், முழுக்கட்டுப்பாடு உடையவனாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

உதாரணத்திற்கு கீழ் உலக சக்திகளிடமிருந்து ஏதாவது அறிய வேண்டி இருக்கையில் ஒரு ஷாமன் ஒரு விலங்கின் சக்தி நிலைக்கே சென்று அதுவாகவே சக்தி நிலையில் மாறி விடுகிறான். அதே போல் இன்னொரு வகை விஷய ஞானம் பெற அவன் பறவையின் சக்தி நிலையை அடைந்து அதுவாகவே மாறி விடுகிறான். அப்படிப் பயணித்த ஷாமன் அறிய வேண்டியதை அடைந்து தன் பழைய நிலைக்குத் திரும்ப அந்த சக்தி நிலையை மிஞ்சிய ஒரு உயர்நிலை சக்தியை அடிப்படையிலேயே பெற்று இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் தற்காலிகமாய் அடைந்த விலங்கு அல்லது பறவையின் சக்தியிலிருந்து விடுபட்டு திரும்பத் தன் சுயநிலைக்கு வர முடியும். இல்லா விட்டால் அந்த விலங்கு அல்லது பறவையின் சக்தி நிலையிலேயே சிக்கிக் கொண்டு விட நேரிடும்.

ஷாமனிஸ ஆராய்ச்சியாளர் ஒருவர் இது குறித்து விளக்குகையில் கூறுகிறார். “ஷாமனிஸம் நம்புவது போல உண்மையாகவே ஒரு ஷாமன் தன் மனித உடலை விட்டு விட்டு உணர்வுநிலைகளில் வேறு வேறு உயிர்ச்சக்தி நிலைகளுக்குப் பயணித்து திரும்ப வர முடிவது உண்மையாக இருந்தால் அது அவன் மனம், உடல், ஆன்மா மூன்றுமே மிகவும் வலிமையாக இருக்கும் பட்சத்திலேயே சாத்தியப்படும். மூன்றில் ஒன்று பலவீனமாக இருந்தாலும் அது திரும்ப வர முடியாத ஆபத்திலேயே முடியும்.”

அதனாலேயே ஒரு வலிமையான சக்தி நிலையில் இருந்தே ஒரு ஷாமன் தன் பயணத்தை ஒவ்வொரு முறையும் துவங்குகிறான். மூவுலகங்களைப் போல நான்கு திசைகளும் கூட அவனுக்கு மிக முக்கியமானவையே. அவனது இந்த சக்திப் பயணச்சடங்குகளை ஆரம்பிக்கும் இடம் முதலில் சுத்தப்படுத்தப்பட்டு அதன் நான்கு பக்கங்களும் பூஜிக்கப்படுகின்றன. பின்னர் அவன் அந்த இடத்தின் மையப்பகுதியிலிருந்தே சடங்கை ஆரம்பிக்கிறான். அந்த மையப்பகுதி நாலாபக்கங்களையும் சமமாகக் கட்டுப்படுத்த முடிந்த வலிமையான இடமாகக் கருதப்படுகிறது.

ஒரு ஷாமன் அப்படித் தன் அமானுஷ்யப் பயணத்தை மேற்கொண்டு அமானுஷ்ய சக்திகளைத் தொடர்பு கொள்ள முடிவது ஒரு உயர்தியான நிலையின் போது என்று முன்பே குறிப்பிட்டிருந்தோம். அந்த உயர் தியான நிலை எந்தவொரு ஷாமனுக்கும் கூட எல்லா சமயங்களிலும் சுலபமாக அடைய முடிந்த நிலை அல்ல. அந்த நிலையை அடைய அவன் என்ன எல்லாம் செய்கிறான், எப்படி அந்த நிலைகளை அடைகிறான் என்பதை விளக்கும் சுவாரசியமான சடங்குமுறைகளை இனி பார்ப்போம்….

அமானுஷ்யம் தொடரும்….

என்.கணேசன்

நன்றி : தினத்தந்தி 25.08.2017

1 comment:

  1. ஆழ்மன சக்திக்கு இது பயனுள்ளதாக இருக்கும்...என நினைக்கிறேன் ஐயா....
    மூன்று உலகம்... அதற்க்கு செல்லும் முறை... அருமை...

    ReplyDelete