சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Sunday, January 14, 2018

சத்ரபதி – 3


ஸ்ரீனிவாசராவின் வாக்கு சாதுரியத்தை லாக்கோஜி ஜாதவ்ராவ் ரசிக்கா விட்டாலும், தன் கர்ப்பிணி மகளுக்கு அடைக்கலம் தந்ததில் அந்தத் தந்தை தவறு காண முடியவில்லை.  அவர் யோசனையில் மூழ்கி நின்ற சமயத்தில் ஸ்ரீனிவாசராவ் சொன்னார். “வெளியிலேயே தங்களை நிறுத்திப் பேசிக்கொண்டிருக்கும் இந்த அடியவனை நீங்கள் மன்னிக்க வேண்டும் பிரபு. என் கோட்டைக்குள் வந்து என்னைப் பெருமைப்படுத்த வேண்டுமாய் பணிவுடன் தங்களை வேண்டிக் கொள்கிறேன்….”

லாக்கோஜி ஜாதவ்ராவ் சந்தேகத்தோடு ஸ்ரீனிவாசராவைப் பார்த்தபடியே கேட்டார். “இதையே அல்லவா நீ என் எதிரியிடமும் சொல்லியிருப்பாய்?”

“சத்தியமாய் இல்லை பிரபு! சிந்துகேத் அரசருக்கு இணையாக நான் அவரது மருமகனையும் நான் எப்படி நினைக்க முடியும். யாரோ என்னைப் பற்றித் தவறான அபிப்பிராயங்களைத் தங்கள் மனதில் ஏற்படுத்தியிருப்பது என் மனதை வேதனைக்குள்ளாக்குகிறது…”

ஸ்ரீனிவாசராவின் மனவேதனையைச் சட்டை செய்யாத லாக்கோஜி ஜாதவ்ராவ் ஷாஹாஜியைப் பின்தொடர்ந்து போய்ச் சிறைபிடிப்பது சாத்தியமா என்று யோசிக்க ஆரம்பித்தார். ”எதிரி எங்கே போவதாக உன்னிடம் தெரிவித்தான் ஸ்ரீனிவாசராவ்?”

“தன் பயணம் குறித்து அவர் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை பிரபு. ஆனால் இங்கு வரும் போது இருந்த வேகத்தை விட, இங்கிருந்து செல்லும் போது வேகம் கூடியிருந்ததை நான் கண்டேன். வந்ததே விரைவாகத் தான் என்றாலும் வரும் போது தங்கள் கர்ப்பிணி மகளும் கூட இருந்ததால் அவர் நலமும், சிசுவின் நலமும் கருதி வேகத்தைக் கட்டுப்படுத்தியே வர வேண்டியிருந்தது. போகும் போது அந்தப் பிரச்சினை இல்லாததால் அதிகபட்ச வேகத்துடனேயே போனார்கள். அதனால் தொலை தூரம் இன்னேரம் போயிருப்பார்கள் என்பது மட்டும் உறுதி”


இனி எத்தனை வேகமாகப் போனாலும் கூட ஷாஹாஜியைப் பிடிக்க முடியாது என்ற யதார்த்த நிலை ஸ்ரீனிவாசராவின் கருத்து மூலமாகவும் ஊர்ஜிதமாகவே லாக்கோஜி ஜாதவ்ராவ் ஷாஹாஜியைப் பின் தொடர்ந்து போகும் எண்ணத்தைக் கைவிட்டார்.  திரும்பத் திரும்ப உங்கள் கர்ப்பிணி மகள் என்று ஸ்ரீனிவாசராவ் சொன்னது மகளை ஒரு முறை பார்க்கும் ஆவலை உண்டு பண்ணியது. ஷாஹாஜி அவளுடனிருந்திருந்தால் மகளைப் பார்க்க லாக்கோஜி ஜாதவ்ராவ் சென்றிருக்க மாட்டார். ஷாஹாஜியும் அதை அனுமதித்திருக்க மாட்டார். தனியாக மகள் இருக்கையில் அவளைப் பார்க்காமல் திரும்பினால் அவர் மனைவி மால்சாபாய் வருத்தப்படுவாள்.


“பிரபு, உள்ளே வந்து என் குடிலில் உணவருந்தி இளைப்பாற வேண்டுகிறேன்” என்று ஸ்ரீனிவாசராவ் மறுபடி சொன்ன போது லாக்கோஜி “ஜீஜாபாய் எங்கேயிருக்கிறாள்?” என்று கேட்டார்.

படையினரை வெளியிலேயே நிற்க வைத்து விட்டு லாக்கோஜி ஜாதவ்ராவ் ஸ்ரீனிவாசராவ் வழிகாட்ட மகளைப் பார்க்கச் சென்றார். ஜீஜாபாய் தங்கியிருந்த சிறு மாளிகையைக் காட்டி விட்டு வெளியிலிருந்தே ஸ்ரீனிவாசராவ் விடைபெற்றுக் கொள்ள லாக்கோஜி ஜாதவ்ராவ் உள்ளே நுழைந்தார்.

தந்தையைப் பார்த்தவுடன் சிலையாய் சமைந்த ஜீஜாபாய் ஒரு கணம் ஒரு மகளாய் கண்மலர்ந்து மறு கணத்தில் ஒரு எதிரியின் மனைவியாய் முகம் இறுகினாள். ”சிந்துகேத் அரசர் தன் எதிரியின் மனைவியைச் சிறைப்பிடிக்க வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்…”

மகளின் ஆரம்பக் கண்மலர்ச்சியையும், பிந்தைய இறுக்கத்தையும் கண்டு, அடுத்து வந்த கர்ணகடூரமான வார்த்தைகளையும் கேட்க நேரிட்ட லாக்கோஜி ஜாதவ்ராவ் வருத்தத்துடன் ”சிந்துகேத் அரசர் தன் மகளைப் பார்க்க வந்திருக்கிறார் ஜீஜா” என்றார்.

”அவருக்கு இப்படி ஒரு மகள் இருப்பது இப்போது நினைவு வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது….”

“பிள்ளைகள் பெற்றவர்களை மறக்கும் காலம் ஒன்று அவர்களது திருமணத்திற்குப் பிறகு வருகிறது மகளே. ஆனால் பெற்றவர்கள் மனம் பிள்ளைகளின் நினைவை எக்காலத்திலும் இழப்பதில்லை….”

ஜீஜாபாயின் கண்கள் ஈரமாயின. சில நாழிகைகளுக்கு முன் அவளைப் பிரிந்து போன மகன் சாம்பாஜி நினைவுக்கு வந்தான். ஒவ்வொரு கணமும் அவன் நினைவில் அவள் மனம் துடித்துக் கொண்டிருக்கிறது. அவள் அவளுடைய தாயைப் பிரிந்து பல காலமாகி விட்டது. மகளை ஒரு மகாராணியாக ஆக்கிப் பார்க்க ஆசைப்பட்ட அவள் தாய் சாதாரணமாகக் கூட அவளைப் பார்க்க முடியாதபடி காலம் சதி செய்து விட்டது……

“தாயார் எப்படி இருக்கிறார்கள் தந்தையே?” ஜீஜாபாய் குரல் கரகரக்கக் கேட்டாள்.

“உன்னை நினைத்து அவள் கண்ணீர் சிந்தாத நாளில்லை மகளே” என்று சொன்னபோது லாக்கோஜி ஜாதவராவின் முகம் வேதனையைக் காட்டியது.

“தாய் ஆன பின் பெண் கண்ணீரிலிருந்து தப்பிப்பதில்லை தந்தையே” என்று ஜீஜாபாய் சாளரத்தின் வழியே தெரிந்த நட்சத்திரங்களைப் பார்த்தபடி சொன்னாள். தந்தைக்கும் மகளுக்கும் இடையே கனத்த மௌனம் சிறிது நேரம் நிலவியது. கர்ப்பிணியான மகள் தனியாய் நிர்க்கதியாய் இந்தக் கோட்டைக்குள் அடுத்தவர் தயவில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த அந்தத் தந்தையின் மனம் பெரும்வேதனையில் கனத்தது. சிந்துகேத் அரண்மனையில் இளவரசியாய் வலம் வந்தவள், எத்தனையோ கனவுகளுடன் உலாவியவள், பெற்றோரின் கண்ணாய், கண்மணியாய் இருந்தவள்,…. மஹூலிக் கோட்டையில் கணவனுடன் பாதுகாப்பாய் இருந்த அவள் இன்று இப்படி இருப்பதற்கு அவரே முக்கிய காரணம். அரசியல் நீதியில் அவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று உறுதியாகவே இப்போதும் நினைக்கிறார். ஆனால் ஒரு தந்தையாகக் குற்ற உணர்ச்சியை அவருக்குத் தவிர்க்க முடியவில்லை….  
   
மகளிடம் அவர் பாசத்துடன் கேட்டார். “என்னுடன் சிந்துகேத் வருகிறாயா ஜீஜா?”

ஜீஜாபாயின் ஈரக்கண்கள் இப்போது அனலைக் கக்கின. தந்தையை எரித்துவிடுவது போல் பார்த்தாள்.


லாக்கோஜி ஜாதவ்ராவ் சொன்னார். “பிரசவத்திற்கு ஒரு பெண் தாய்வீட்டுக்கு வருவது தவறல்லவே ஜீஜா. அது முறையும் உன் உரிமையும் தானே? அதனால் அல்லவா நான் உன்னை அழைக்கிறேன்….”

“இந்த அழைப்பை நீங்கள் என் கணவரிடம் விடுக்க வேண்டும் தந்தையே. அவர் அனுமதி இல்லாமல் அங்கே நான் வருவதற்கில்லை” கறாராக ஜீஜாபாய் சொன்னாள்.

லாக்கோஜி ஜாதவ்ராவ் பேச்சு மருமகன் பக்கம் திரும்புவதை விரும்பவில்லை. பேசுவது அவர் மகள் அல்ல. ஷாஹாஜியின் மனைவி. திருமணத்திற்குப் பின் ஒரு பெண்ணிற்கு மற்றெல்லா உறவுகளின் நெருக்கங்களும் மாற்றம் பெற்று விடுகின்றன… இதுவே அவள் நிலை. ஆனால் அவர் மருமகனிடம் என்றுமே சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை. ஷாஹாஜியும் இறங்கி வரப் போவதில்லை. வெறுமனே பேசி என்ன பயன்?

அங்கே நிற்பது மனவேதனையை ஆழப்படுத்துவதாக லாக்கோஜி ஜாதவ்ராவ் உணர ஆரம்பித்தார். ”நான் கிளம்புகிறேன் மகளே…..”

“மன்னிக்கவும் தந்தையே. தங்களை அமரச் சொல்லவில்லை. உணவருந்தவும் வைக்கவில்லை. தாங்கள் எனக்குக் கற்றுத்தந்ததும், என் புகுந்த வீட்டார் எனக்குக் கற்றுத்தந்ததும் இதுவல்ல. உணர்ச்சிகளின் அலைக்கழிப்பில் விருந்தோம்பல் தர்மம் விடுபட்டு விட்டது. அமருங்கள். சாப்பிட, இருப்பதைக் கொண்டு வருகிறேன்…..”

“நேரமில்லை மகளே. உன் கையால் தண்ணீர் மட்டும் கொடு. போதும்”

ஜீஜாபாய் ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். தண்ணீரைக் குடித்து விட்டு மகள் தலையில் கை வைத்து ஆசிகள் வழங்கிய லாக்கோஜி ஜாதவ்ராவ் விடைபெற்றார். வாசலைத் தாண்டிய போது அவருக்குக் கால் தடுக்கியது. மனம் பதைத்து ஜீஜாபாய் ஓடி வந்து கேட்டாள். “என்ன ஆயிற்று தந்தையே?”

லாக்கோஜி ஜாதவ்ராவ் மகளைக் கனிவுடன் பார்த்தார். “ஒன்றும் ஆகிவிடவில்லை மகளே.  கிளம்புகிறேன்.” லாக்கோஜி ஜாதவ்ராவ் சென்று விட்டார்.   திரும்பிப் பார்க்காமல் செல்லும் தந்தையைப் பார்த்துக் கொண்டே ஜீஜாபாய் நின்றாள். அவர் அவள் பாதுகாப்புக்காக 500 குதிரை வீரர்களை இருத்தி விட்டுப் போனதாகப் பிறகு தகவல் கிடைத்தது. திரும்பிப் பார்க்காத நேரத்தில் ’என் மகளுக்கு நான் என்ன செய்வது?’ என்று சிந்தித்துக் கொண்டே போயிருக்கிறார்…!

அன்றிரவு ஜீஜாபாயால் உறங்க முடியவில்லை. மகன், கணவன், தாய் தந்தை, சிந்துகேத் அரண்மனை என்று மனம் உலாப் போயிற்று. கடைசியில் வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பற்றி நினைத்தாள். அது பெண்ணாக மட்டும் இருக்கக்கூடாது என்று மனமுருக இறைவனை வேண்டிக் கொண்டாள். ஆண்குழந்தை உயர்வு, பெண் குழந்தை தாழ்வு என்ற பிற்போக்கு சிந்தனைகள் உடையவள் அல்ல அவள். பெண் குழந்தைகளுக்குப் பெரிதாய் சுதந்திரம் இல்லாத காலக்கட்டத்தில் பெண் குழந்தையைப் பெற அவள் விரும்பவில்லை. அவள் தாயும், அவளும் சிந்தும் கண்ணீர் போதும். அடுத்த தலைமுறைக்கு இந்தக் கண்ணீர் தொடர வேண்டாம்…. அதுமட்டுமல்ல. தாய் வீட்டாரிடம் கணவன் வீட்டாரை விட்டுக் கொடுக்காமல், கணவன் வீட்டாரிடம் தாய் வீட்டாரை விட்டுக் கொடுக்காமல் ஒரு பெண்  வாழ வேண்டியிருக்கிறது. இதில் இருபக்கமுமே அவள் கவனம் தங்கள் பக்கமில்லை, அந்தப்பக்கம் தான்  என்று நினைப்பது மேலும் கொடுமை. போதும்… எல்லாம் அவளோடு நிற்கட்டும். அவளுக்கொரு பெண் குழந்தை வேண்டாம்…..


மறுநாள் ஷிவ்னேரியில் உள்ள ஷிவாய் தேவி கோயிலுக்குப் போய் தேவியை மனமுருகப் பிரார்த்தித்தாள். “தேவி எனக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும். அவன் வீரபுருஷனாய் இருக்க வேண்டும். குணத்திலும் மிக உயர்வாய் இருக்க வேண்டும். என் தந்தையும் கணவனும் வீரர்கள் தான் என்றாலும் அவர்கள் வேறு அரசர்களிடம் சேவகம் புரியும் நிலையில் தான் இருக்கிறார்கள். தாழ்ந்த நிலை எங்களோடு முடியட்டும். என் மகன் அந்த நிலையில் வாழக்கூடாது. அவன் அரசனாக வேண்டும். பேரரசனாக வேண்டும். இந்த தேசமே தலை வணங்கும் நிலைக்கு உயர வேண்டும். தாயே அவனுக்கு அருள் புரிவாயாக!”

வணங்கி எழுந்த ஜீஜாபாய் பிரசவ வலியை உணர ஆரம்பித்தாள்.

(தொடரும்)

என்.கணேசன்

10 comments:

  1. உணர்ச்சிகரமான அப்டேட். சிவாஜியின் ஜனனம் எந்த சந்தர்ப்பத்தில் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். மேலே படத்தில் இருவேறு உலகம் பெரிதாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தவுடன் உடனே வாங்கிப் படிக்க ஆசையாய் இருக்கிறது.

    ReplyDelete
  2. Amazing episode. The interaction between the father and the daughter is superb and portray their characters beautifully.

    ReplyDelete
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. interesting update...
    Jeejabai's thought about woman is nice

    irrupakkamum vittu kudukka mudiyatha soozhal enbathu unamaiyae :)

    ReplyDelete
  5. அக்காலத்தில் மட்டும் இல்லை, எக்காலத்திலும் பெண்கள் நிலை மாறப் போவதில்லை...
    பிறந்த வீடு,புகுந்த வீட்டிற்கிடையே அல்லல் படும் பெண்களின் நிலையை
    அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.....
    சத்ரபதி ஜன்னதிற்காக ஆவலுடன்......

    ReplyDelete
  6. அற்புதம் ...!! சஸ்பென்ஸ் , த்ரில்லர் மட்டுமல்ல ... குடும்ப உறவுகளையும் , உணர்வுகளையும் கூட மனதில் தைக்குமாறு எழுத்தில் வடிக்கமுடியும் என்று நிரூபித்து விட்டீர்கள் ...!!

    ReplyDelete
  7. Hello Ganeshan,

    I love all your stories. How to buy your books from overseas?

    Thanks,
    Theepan.

    ReplyDelete
    Replies
    1. You may contact Mail: discoverybookpalace@gmail.com. Thanks.

      Delete
  8. இந்த தொடர் எத நோக்கி போகுனும்னு.... கணிக்க முடியவில்லை.... இருந்தாலும்... இதுவரை வந்தவை அருமை....

    ReplyDelete
  9. படித்துக் கொண்டிருக்கின்றேன்

    ReplyDelete