சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 19, 2017

இருவேறு உலகம் – 53


பேராபத்திலிருந்து தப்பி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாலும் பத்மாவதியைத் தவிர மற்ற மூவர்களால் அதிர்ச்சியிலிருந்து முழுவதுமாக மீண்டு விட முடியவில்லை. மரணத்தை எட்டிப்பார்த்து விட்டு வந்த அதிர்ச்சியில் அவர்கள் மௌனமாக அமர்ந்திருக்க பத்மாவதி கண்களை மூடி ஒருசில நிமிடங்கள் இஷ்ட தெய்வங்களை வணங்கி விட்டு உதயைப் பார்த்துப் பெருமையாகச் சொன்னாள். “எப்பப்பாரு அந்தச் சாமி, இந்தக் கோயில்னு அலையறேன்னு கிண்டலடிப்பியேடா இப்ப நம்மள யாருடா காப்பாத்துனது? ஒரு நிமிஷம் அந்த லாரி நின்னிருக்காட்டி பரலோகம் போய்ச் சேர்ந்திருப்போமேடா. இப்ப என்னடா சொல்றே?”

அதிர்ச்சி மனநிலையிலிருந்து மீள தாயிடம் சிறிது வம்பு பேசலாம் என்று உதய்க்குத் தோன்றியது. “எப்பவுமே நீ கும்பிடற கடவுள் நம்மள காப்பாத்துச்சா, இல்ல எப்பவுமே இவன் சொல்ற கர்மா நம்மளக் காப்பாத்துச்சான்னு இப்பவும் தீர்மானமா தெரியலயேம்மா”

இறுக்கம் உடனடியாகக் குறைந்து க்ரிஷும், கமலக்கண்ணனும் பத்மாவதியைப் பார்க்க அவள் மூத்த மகனை முறைத்தாள். ”காப்பாத்துனது கர்மாவா இருந்திருந்தா உன்னை எப்படிடா காப்பாத்தியிருக்கும். நரம்பில்லாத நாக்கால கண்டபடி பேசறே. கலாட்டா செய்யறே. இதெல்லாம் காப்பாத்தற கர்மாவாடா”

உதய் பதில் எதுவும் சொல்லாமல் ஒரு பாடலை மட்டும் பாடினான்.
எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே


க்ரிஷும் கமலக்கண்ணனும் புன்னகைக்க பத்மாவதி சொன்னாள்.  “ஆமா அந்த நாக்கை சின்னதுலயே இழுத்து வச்சு சூடு போடாதது என் தப்பு தான்”

உதய் தந்தையிடம் சொன்னான். “எப்படிப்பா இந்த லேடி கூட இவ்வளவு வருஷம் குடும்பம் நடத்தினீங்க. நீங்க பொறுமையின் சிகரம்ப்பா”

“வேற வழி தெரியலயேப்பா…” என்று சிவாஜி பாணியில் கமலக்கண்ணன் உருக்கமாகச் சொல்ல பத்மாவதி அவரை முறைத்தாள். அவர் அடக்கமாக ஜன்னல் வழியாகத் தெருவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.

உதயும் மேற்கொண்டு வாயைக் கிளறாததால் பத்மாவதி சகஜநிலைக்குத் திரும்பி  சொன்னாள். “வீட்டுக்குப் போனவுடனே அந்த மாஸ்டர் சாமிக்கும் இவன் வந்துட்டான்னு சொல்லணும். ஞான திருஷ்டில அவர் பார்த்துச் சொன்ன மாதிரியே இவன் நல்லபடியா வந்து சேர்ந்தானே. அவருக்கு என்னவொரு சக்தி…. என்னவொரு தேஜஸ்…”

க்ரிஷ் சந்தேகத்தோடு கேட்டான். “யாரது மாஸ்டர் சாமி?”


மாணிக்கத்தின் வீட்டில் ஒரு இழவு வீட்டின் துக்கம் சூழ்ந்திருந்தது. க்ரிஷ் திரும்ப வருகிறான், அவனை அழைத்து வர அவன் குடும்பமே போயிருக்கிறது என்ற செய்தி அவர்களுக்குப் பெரிய சோகச் செய்தியாய் இருந்தது. 

மணீஷ் தந்தையையும் தாத்தாவையும் பார்த்து “இனி என்ன செய்யறது?” என்று கேட்டான். ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற அவசரம் அவன் கேட்ட தொனியில் இருந்தது..

மாணிக்கம் அமைதியாய் சொன்னார். “முதல்ல இப்ப என்ன நடந்திருக்குன்னு புரிஞ்சுக்குவோம். அப்பறமா என்ன செய்யறதுன்னு யோசிப்போம்…”

”அதுவும் சரி தான்” என்று சங்கரமணி தன் கருத்தைச் சொன்னார். மணீஷ் தலையசைத்தான். தொடர்ந்து மூவரும் மௌனமாக இருந்தாலும் என்ன நடந்திருக்கிறது என்பதை உடனே புரிந்து கொண்டால் தேவலை என்று மூவருக்கும் தோன்ற ஆரம்பிக்க அவர்களுக்கு இருப்பு கொள்ளவில்லை. மாணிக்கமும், மணீஷும் உடனடியாக க்ரிஷ் வீட்டுக்குக் கிளம்ப சங்கரமணியும் அவர்களுடன் சேர்ந்து கிளம்பினார்.

மாணிக்கம் ’நீங்களுமா?’ என்பது போல் மாமாவைப் பார்த்தார். கமலக்கண்ணன் குடும்பத்தினர் அவரைப் பிடிக்கவில்லை என்பதை வெளிப்படையாகக் காண்பிக்க ஆரம்பித்த பிறகு சங்கரமணியும் அந்த வீட்டுக்குப் போவதைத் தவிர்க்க ஆரம்பித்திருந்தார்.  ஆனால் இன்று அவரால் போகாமல் இருக்க முடியவில்லை. அவர் வெளிப்படையாகவே மருமகனிடம் சொன்னார். “அவங்க என் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளினாலும் சரி, இன்னைக்கு நேர்ல பார்த்து நிலவரத்தை புரிஞ்சுக்கலன்னா எனக்கு தலையே வெடிச்சுடும்….”

அவர் ஒரு முடிவு செய்து விட்டால் பின் அதை யாராலும் மாற்ற முடியாது என்பதைப் புரிந்திருந்த மாணிக்கம் தங்களுடன் அவரையும் அழைத்துச் சென்றார். மூவரும் பதற்றத்தோடும், பரபரப்போடும் க்ரிஷைக் கண்டு எல்லாவற்றையும் அறிந்து கொள்ள ஆவலாய் இருந்தார்கள்…


மாஸ்டரைப் பற்றியும் அவர் அவர்கள் வீட்டுக்கு வந்து க்ரிஷ் அறையில் சிறிது நேரம் இருந்து தன் ஞான திருஷ்டியால் அறிந்து சொன்னதையும் மூவரும் சேர்ந்து விவரிக்க க்ரிஷ் அதிர்ந்து போனான். அவர்கள் சொல்வதைப் பார்த்தால் அவன் மனக்கண்ணில் ஒருமுறை படர்ந்த திடீர் காட்சியில் வாரணாசியில் இருந்த பாழடைந்த காளி கோயிலுக்குச் செல்வது போல் கண்ட அந்த இரண்டாம் நபர் போலத் தோன்றியது. அவரைத் தான் வேற்றுக்கிரகவாசி “உன்னை எதிரியின் ஆளாகப் பார்க்கிறவர்” என்று சொல்லியிருந்தான். அந்த மாஸ்டர், மாணிக்கம் மூலமாகத் தான் இவர்களுக்கு அறிமுகமாயிருக்கிறார்…. க்ரிஷ் கோபத்தோடு கேட்டான். “அவரை எல்லாம் எதுக்கு வீட்டுக்குக் கூட்டிகிட்டு வந்தீங்க…..?”

பத்மாவதி தான் கோபத்தோடு பதிலளித்தாள். “ஆராய்ச்சிக்குப் போறவன் வர நாளாகும்னு சொல்லிட்டுப் போயிருந்தா நாங்க ஏண்டா அவரைத் தேடி போறோம்…. இவன் பாட்டுக்கு சொல்லிக்காமப் போவானாம்…. நாங்க யாரையும் கேக்கக் கூடாதாம்….. அந்த மகான் நம்ம வீட்டுக்கு வந்ததே பெருசு….”

க்ரிஷுக்கு அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை. பத்மாவதி அதே வேகத்தோடு உதயிடம் கேட்டாள். “டேய் நான் உன்னை ஹரிணிக்குப் போன் செய்யச் சொன்னேனா இல்லையா?”

உதய் சொன்னான். “நான் தான் கார் ஓட்டரேனில்ல. நீயே உன் மருமகள் கிட்ட சொல்றது தானே”

அவன் உன் மருமகள் என்று அம்மாவிடம் சொன்னவுடன், அவனை முறைத்துப் பார்த்து விட்டு வெட்கம் கலந்த தர்மசங்கடத்துடன் அம்மாவிடம் க்ரிஷ் சொன்னான். “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ கொஞ்சம் சும்மா இரும்மா”

”நீ இருடா சும்மா. ஒரு பெண்ணோட மனசு இன்னொரு பெண்ணுக்குத் தான் தெரியும். பொண்ணு மனசக்கூட புரிஞ்சுக்க முடியாதவன் எத்தனை ஆராய்ச்சி பண்ணி என்னடா பிரயோஜனம்…. உன்னைச் சொல்லித் தப்பில்ல…. இந்த ஆம்பளகளே இப்படித் தான்…. உங்களுக்குத் தேவைன்னா ஈஷிகிட்டு வருவீங்க.. என்ன வேணும்னாலும் செய்வீங்க….. ஆனா மத்த சமயத்துல கண்டுக்கவே மாட்டீங்க…..”

அவள் பொரிந்து தள்ளியவுடன் உதய் தம்பியைப் பின்னால் திரும்பிப் பார்த்து உருக்கமாய் சொன்னான். “டேய் க்ரிஷ்…. உன்னால ஆண் இனத்துக்கே எந்த அளவு கெட்ட பேர் பார்த்தியா?”

க்ரிஷ் கோபமும், சிரிப்புமாய் கலந்து அண்ணனை முறைக்க, பத்மாவதி ஹரிணியிடம் பேசினாள். “ஹலோ….. நான் க்ரிஷோட அம்மா பேசறேன்மா. க்ரிஷ் வந்துட்டாம்மா. அவனைக்கூட்டிகிட்டு நாங்க வீட்டுக்குத் தான் போயிட்டிருக்கோம்…. அவன் கிட்ட பேசறியாம்மா….. வீட்டுக்கு வந்து பேசிக்கிறியா….. சரி வாம்மா….. நாங்க அரை மணி நேரத்துல போய்ச் சேர்ந்துடுவோம்…..”

க்ரிஷுக்கு அழுவதா சிரிப்பதா என்றே புரியவில்லை. எல்லாமே இன்னும் குழப்ப நிலையில் தான் இருக்கின்றன. எதிரி மகாசக்திகள் படைத்தவன் என்பது தவிர அவனைப் பற்றி எந்த விவரமும் அவனுக்குத் தெரியாது. ஒரு முறை கொல்ல முயன்று தோற்றுப் போன மாணிக்கம் குடும்பம் அடுத்த முயற்சி எப்போது எடுக்கும் என்று தெரியாது. இந்த மாஸ்டர் என்கிற மனிதர் மகாசக்தி வாய்ந்தவராகத் தெரிகிறார். அவரும் அவனை எதிரியின் பட்டியலில் தான் வைத்திருக்கிறார். இத்தனை எதிரிகள், இத்தனை ஆபத்தான சூழ்நிலைகள் இருக்கையில் ஹரிணி அவன் பக்கம் வருவதையே அவன் விரும்பவில்லை. அவனை வெறுத்தாவது காலப்போக்கில் மறந்து அவள் பாதுகாப்பான நல்ல வாழ்க்கை வாழ்ந்தால் போதும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். இவர்கள் புரியாமல் அவளை அவன் வாழ்க்கையில் மறுபடி வரவழைக்கப் பார்க்கிறார்கள்…..

கமலக்கண்ணன் “அண்ணனுக்கும் சொல்லணும்…..” என்றார். அண்ணன் என்று பொதுவாக அவர் சொன்னால் அது ராஜதுரையைத் தான். க்ரிஷ் திகைப்புடன் அவரைப் பார்க்க அவர், அவனைக் கண்டுபிடிக்க முதலமைச்சர் செந்தில்நாதனை நியமித்த தகவலையும் சொன்னார். அவன் காணாமல் போன விஷயம் முதலமைச்சர் வரைக்கும் போய் விசாரணை வரை வந்து விட்ட நிலையில் வீடு போய் சேர்ந்தவுடனேயே அவன் பலருக்கும் காணாமல் போனது எப்படி, திரும்பி வந்தது எப்படி என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பது புரிய வந்தது. என்னவென்று சொல்வான். சொன்னால் யார் நம்புவார்கள்?

‘என் வாழ்க்கையில் வந்து பெரிய குழப்பத்தை எல்லாப் பக்கங்களிலும் உருவாக்கி விட்டு நீ போய் விட்டாய். இனி நான் எதை, எங்கிருந்து, எப்படி சமாளிப்பேன்” என்று வேற்றுக்கிரகவாசியிடம் மானசீகமாய்க் கேட்டான். எப்போதும் வேற்றுக்கிரகவாசி பதில் சொல்கிறானோ இல்லையோ கேள்வி சென்று அவனை அடைந்து விட்டதை க்ரிஷால் உணர முடியும். இப்போது அந்த உணர்வில்லை. அவன் போயே போய் விட்டான்…..

மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கையில் கார் அவன் வீட்டின் முன் வந்து நின்றது. அவனை வரவேற்க மாணிக்கம், மணீஷ், சங்கரமணி, ஹரிணி, செந்தில்நாதன் ஆகியோர் நின்றிருந்தார்கள். அத்தனை பேர் கண்களும் அவனைக் கூர்மையாகப் பார்க்க மனநிலையை மறைத்துக் கொண்டு க்ரிஷ் புன்னகையுடன் காரிலிருந்து இறங்கினான்.

(தொடரும்)
என்.கணேசன்

11 comments:

  1. how he is gonna handle all these along with the Love on Harini?!?! it is thrilling to read:-)

    ReplyDelete
  2. Padmavathi characterization is really awesome. An ideal mom to be followed:-)

    ReplyDelete
  3. Amazing writing sir. A beautiful loving family clearly comes in front of our eyes. Padmavathy and Uday pair is really awesome.

    ReplyDelete
  4. க்ரிஷின் குடும்பத்தின் அன்பும், அன்புச்சண்டையும் அற்புதம் கணேசன் சார். அதிலும் பத்மாவதி அம்மா சூப்பர். பெண்களுக்காக பரிந்து பேசிய விதம் வெகுளித்தனம் நிறைந்த அழகு. க்ரிஷ் தனியாக எத்தனை தான் சமாளிப்பான் என்று எங்களைக் கவலைப்பட வைத்து விட்டீர்கள். இனி என்ன என்ற திகிலில் நாங்கள் இருக்கிறோம்.

    ReplyDelete
  5. Story is intresting and i am curious to know the approx. date.

    ReplyDelete
  6. மாஸ்டரை பற்றி அறிந்து கொண்டான் இன்னும் புரிபடவில்லை தான் எந்த பக்கம் போகணும் என்று தர்குள் இங்கு மற்றவரின் இக்கட்டுகள் அவன்கூறும் சமாளிப்பை சங்கரமணி கண்டுபிடிக்காமல் இருப்பாரா ?

    ReplyDelete
  7. Super mom, Padmamma.......
    கிரிஷின் கண்ணுக்கு தெரியாத எதிரி மர்ம மனிதன்....
    அவனை கதிரியாக நினைக்கும் மாஸ்டர்....
    கண்ணுக்கு முன் எதிரியாக மாணிக்கம் அண்ட கோ....
    க்ரிஷ் எவ்வாறு இவர்களை எதிர்கொள்ளப் போகிறாய்......?

    ReplyDelete
  8. Is this alien good or bad? If he can know and save krish, why can't he tell him who the real enemy is and the master is really trying to save krish?
    Instead of warning him that enemy is powerful?

    ReplyDelete
  9. கிரிஷ் பிரச்சனைகளை,வரும் தொடர்களில் சமாளிக்கும் விதம்....படிக்கும் எங்களுக்கும்.....நல்ல படிப்பினை தரும் என்று நினைக்கிறேன்...இனி வரும் தொடர்கள்களை படிக்க ஆவல் அதிகமாகிறது...ஐயா...

    ReplyDelete
  10. நல்லவர்கள் இருவரும் எதிர்...எதிரெதிரே இருப்பது.....வித்தியாசமாக உள்ளது...

    ReplyDelete
  11. அருமை...
    தொடர்கிறேன் ஐயா....

    ReplyDelete