சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, October 5, 2017

இருவேறு உலகம் – 50


ர்ம மனிதன் பரிகாரங்கள் பற்றிக் கேட்டதற்கு சதாசிவ நம்பூதிரி சிறிது யோசித்து விட்டு பதில் சொன்னார். “பரிகாரம் எதுவும் இவங்க ரெண்டு பேருக்கும் பிரயோஜனப்படும்னு தோணலை”

மர்ம மனிதன் அந்த பதிலில் கவலைப்பட்டதாகக் காட்டிக் கொண்டான். “ஜோதிடத்தில் பரிகாரங்களும் ஒரு பகுதின்னு என் குரு சொல்லி இருக்கிறார். நானும் என் அனுபவத்தில் அதை உணர்ந்திருக்கிறேன். அதனால் தான் கேட்டேன்” என்றான்.

“பரிகாரங்கள் ஆசுவாசம் தரலாம். விதியை மாத்தி எழுதிடாது. விதியை நேரடியாக சந்திக்க முடிஞ்ச மனுஷங்க இவங்க. அதனால இவங்க ரெண்டு பேருக்கும் ஆசுவாசம் தேவையில்லை”.

மர்ம மனிதன் அந்த இருவருக்கும் ஆசுவாசம் தரும் எதையும் அனுமதிப்பதாக இல்லை. அந்த இரண்டு மனிதர்களில் அவன் மிகவும் சக்தி வாய்ந்த மனிதனாக உணர்ந்திருந்தது மாஸ்டரைத் தான். அவர் சக்தியின் பல பரிமாணங்களை அவன் பலதடவை பார்த்திருக்கிறான். இன்று அவன் சக்திகள் அடைந்திருப்பதில் அவரை விட முன்னிலையில் இருக்கிறான் என்ற போதும் அவரும் மிகவும் பின் தங்கிய நிலையில் இல்லை என்பதை அவன் நன்றாகவே அறிவான். குருவின் பிரிய சீடனாக உயர்ந்திருந்த மாஸ்டர், சக்திகளை அடைவதை விட அதிக முக்கியத்துவம் மெய்ஞானத்துக்குத் தந்து அதில் அதிகம் பயணித்திருந்ததால் தான் அவனை விட சக்திகளில் பின் தங்கி இருக்கிறாரே ஒழிய மற்றபடி பலவீனமானவர் அல்ல என்பதை அவன் சரியாகவே கணித்திருந்தான். அதனாலேயே அவரைக் கையாள்வதில் அவன் அதிகபட்ச எச்சரிக்கையோடு இருந்து வருகிறான்.

’அவர் அணுகுண்டு போன்றவர். அவரை எச்சரிக்கையோடு கையாண்டு இயக்கினால் மட்டுமே அவன் நோக்கம் நிறைவேறும். இல்லாவிட்டால், இயக்கும் அவனையும் சேர்த்து அழிந்து போகும் சாத்தியம் இருக்கிறது. அதை மர்ம மனிதன் ஒவ்வொரு கணமும் நினவு வைத்திருக்கிறான். அதனாலேயே மிக மிக அவசியமான நேரங்களில் மட்டுமே அவர் எண்ண அலைகளை அறியும் முயற்சியில் அவன் ஈடுபடுவதுண்டு. அதுவும் மிகக் குறுகிய கால அளவில் மட்டுமே ஈடுபட்டிருப்பான். அதையும் அதற்கு முன்பு ஒரு சக்தி அரணை எழுப்பி விட்டுக் கொண்ட பின்னர் தான் முயலத் துவங்குவான். தன்னை அதே அலைவரிசையில் அவர் திரும்பப் படிக்காமல் இருக்க அவன் எடுத்துக் கொள்ளும் இந்த எச்சரிக்கையை அவன் இது வரை வேறு எந்த மனிதனிடமும் எடுத்துக் கொண்டதில்லை.

அந்த ஆன்மீக சக்தி ரகசிய இயக்கத்தில் மாஸ்டர் அளவுக்கு யாரும் சக்தி வாய்ந்தவர்கள் இல்லை. மாஸ்டரின் குருவிடம் கூட அவனுக்கு இவ்வளவு எச்சரிக்கை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கவில்லை. அதனால் அவர் தன் மரணத்துக்குச் சுமார் ஒரு மணி நேரம் முன்பு மட்டுமே அவனை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அவர் மனதில் கடைசி வரை ரகசிய பொக்கிஷமாய் வைத்திருந்த வாரணாசியின் புறப்பகுதியில் இருந்த பாழடைந்த காளி கோயிலில் அவர்கள் இயக்கம் மறைத்து வைத்திருந்த சங்கேதக் குறிப்பு பற்றியும் அவன் அறிந்த போது தான் அவர் அதே அலைவரிசையில் அவனைக் கண்டுபிடித்தார். அங்கு அவன் செல்லும் வரை எந்த விதத்திலும் அவர் மாஸ்டரைத் தொடர்பு கொள்ள முடியாதபடி ஒரு சக்தி தடுப்பு அரணை உருவாக்கி விட்டுத் தான் அவரை அழிக்க அவன் வேகமாகச் சென்றான். அவரை அழித்தவன்  அந்தக் காளி கோயிலுக்குப் போய் அந்தக் குறிப்பையும் எடுத்துக் கொண்டு வந்து விட்டான்.

அந்த இயக்கத்தின் தவசிகள் கட்டிக் காத்ததாய்  அந்த இயக்க குரு எண்ணிய அந்த ரகசியக் குறிப்பு வரைபடமான பனிமலையில் இருந்த திரிசூலமும், பறவையும் அவனுக்கு எந்த ஒரு தகவலையும் தெரிவித்து விடவில்லை. இமயத்தில் அவன் சஞ்சரிக்காத இடமில்லை. அந்தப் பனிமலை இமயம் தான் என்பதில் அவனுக்கு சந்தேகமில்லை. ஆனால் இமயத்தில் எங்கும் அந்த வரைபடத்தில் உள்ளது போல் பனிமலையில் இருந்து நீட்டிக் கொண்டிருக்கும் திரிசூலம் அவனுக்குக் காணக் கிடைத்ததில்லை. அந்த வரைபடத்தில் இருந்த அந்தக் கருப்புப் பறவை மட்டும் க்ரிஷ் அமாவாசை இரவில் மலை மேல் பார்த்த கருப்புப் பறவையாக இருக்கலாமோ என்ற சந்தேகம் இப்போது மனதில் மெல்ல எழுந்து வருகிறது…..  

இஸ்ரோவின் புகைப்படங்கள் மூலமாக க்ரிஷ் அவன் கவனத்துக்கு வரும் வரை தன் ஒரே எதிரியாக மர்ம மனிதன் மாஸ்டரை மட்டுமே எண்ணி வந்தான். அந்த ஆன்மீக சக்தி ரகசிய இயக்கம் எதிர்பார்த்த ரட்சகன் அவராகத் தான் இருக்க வேண்டும் என்று அனுமானித்திருந்தான். அவருடைய ஜாதகம் அதற்கு ஏற்ற மாதிரி தான் இருந்தது. க்ரிஷ் அவன் கவனத்திற்கு வந்தவுடன் எல்லாமே தலைகீழாக மாறியது.

கடும் விஷப்பாம்பு கடித்தும் க்ரிஷ் சாகாமல் உயிரோடிருப்பது அவன் முக்கிய கவனத்தை க்ரிஷ் மேலும் திருப்பியது. அதனாலேயே அவன் க்ரிஷின் பிறந்த நேரம் கண்டுபிடித்து ஜாதகம் கணித்து ஆராய்ந்தான். பல விதங்களில் க்ரிஷின் ஜாதகம் மிகவும் விசேஷமாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. சில அம்சங்களில் மிக உன்னதமாகவும், சில அம்சங்களில் குழப்பமாகவும் இருந்தது. அது எழுப்பிய சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளவே அவன் அங்கு வந்திருக்கிறான்.

க்ரிஷ் ஜீனியஸாக இருந்த போதிலும், பல துறைகளில் ஆழமான அறிவைப் பெற்றிருந்த போதிலும் மாஸ்டரைப் போல எந்த மகாசக்தியும் பெற்றிராதவன். அரசியல் குடும்பத்தில் இருந்த போதிலும் அரசியல் உட்பட எந்த அதிகார மையத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாதவன். அப்படிப் பட்டவன் மர்ம மனிதனுக்கு எந்த விதத்திலும் எதிராக இயங்க முடியாதவன். அது மட்டுமல்ல. மர்ம மனிதன் உச்சம் பெற்றிருந்த சக்திகள் பற்றி தெரிந்து கொள்ள க்ரிஷ் இதுவரை ஆர்வம் காட்டியிருக்கலாம், ஆழமாகத் தெரிந்து கொண்டும் இருக்கலாம் என்றாலும் எதிலுமே பயிற்சி செய்து ஆளுமை பெற்றவனல்ல. அறிந்தது அனுபவமாக மாறுவது எல்லோருக்கும் சாத்தியமல்ல. அது சுலபமானதும் அல்ல. அப்படியே சாத்தியமாகலாம் என்றாலும் கூட அதற்கு மிக நீண்ட காலம் ஆகும். இப்படி எல்லா விதங்களிலும் சமமான எதிரியாகக் கருத முடியாத ஒருவன் களத்தில் குதித்திருப்பது மர்ம மனிதனை எந்த தீர்க்கமான தீர்மானத்திற்கும் வர விடாமல் தடுத்தது.

சதாசிவ நம்பூதிரியிடம் சாதுர்யமாக மர்ம மனிதன் கேட்டான். “இந்த ரெண்டு ஜாதகங்கள்ல ஒரு ஜாதகர் தர்மாத்மான்னும், மகாசக்திகளை தன்வசப்படுத்தியிருப்பார்னும் நானும் கணிச்சேன். இன்னொரு ஜாதகர் மகா புத்திசாலியாயிருப்பார்னு சொன்னீங்க. நானும் அதைப் பார்த்தேன். ஆனா எனக்கு ஒரே ஒரு விஷயம் புரியலை ஐயா”

சதாசிவ நம்பூதிரி சொன்னார். “கேளுங்கோ”

“இந்த ரெண்டு ஜாதகங்கள்ல இருக்கற கிரக யுத்தம் பார்த்தா ரெண்டு பேருமே எதிரிகளாகக் கூட வாய்ப்பிருக்கற மாதிரி தோணுது. அதை உங்களாலயும் மறுக்க முடியல. இவங்க ரெண்டு பேருக்குமே ஒரு எதிரி இருக்கலாம்னு நீங்க சந்தேகப்படறீங்க. அப்படி இருக்கற எதிரியும் சக்திகள் நிறைஞ்சவனா இருப்பான்னும் சொன்னீங்க. சொல்லப்போனா எமனோட ஏஜெண்டுன்னே சொல்லீட்டீங்க. அப்படி இருக்கையிலே இந்த புத்திசாலிப் பையன், தர்மாத்மான்னு நீங்க சொன்ன ஒரு மகாசக்தி ஆளுக்கும், எமனோட ஏஜெண்டுன்னு சொன்ன இன்னொரு மகாசக்தி ஆளுக்கும் எந்த விதத்துல சமமான எதிரியாக இருக்க முடியும்? இந்த ஜாதகங்களை அலசினப்ப உங்களுக்கு இந்த சந்தேகம் தோணியிருக்கா? இதுக்கு எதாவது விடை கிடைச்சிருக்கா”

சதாசிவ நம்பூதிரி ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டு மௌனமாக இருந்தார். அந்த ஒரு நிமிடம் ஒரு யுகமாக மர்ம மனிதனுக்குத் தோன்றியது. இது வரை இந்த மனிதர் சொன்ன ஜாதக பலன்கள் ஆழமாகப் போக முடிந்த ஒரு ஜோதிட விற்பன்னருக்கே எட்ட முடிந்தவை. அப்படிப்பட்டவர் இதையும் சிந்தித்திருக்க வேண்டும் என்பது அவரைப் பார்க்கும் போதே தெரிந்தது. அவர் என்ன சொல்லப் போகிறார் என்பது அவனது அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு மிக முக்கியமான தகவலாக இருக்கும்…..

சதாசிவ நம்பூதிரி கண்களைத் திறந்து வெட்ட வெளியைப் பார்த்தபடி சொன்னார். “அந்த ரெண்டு சக்தி வாய்ந்த ஆள்களும் முறைப்படி ஒரு குருவிடம் படிச்சவங்க. அவங்க இப்ப பெரிய மரமா வளர்ந்துட்டவங்க. அந்தப் பையன் சாகாமல் இருந்தான்னா சாதாரணமா இருந்துட மாட்டான். இப்போதைக்கு அவன் இன்னும் விதையா தான் இருக்கலாம். ஆனா ஒரு விதைக்குள்ளே எத்தனை மரங்கள், எத்தனை காடுகள் ஒளிஞ்சிருக்குன்னு யாரால சொல்ல முடியும்!”

(தொடரும்)
என்.கணேசன் 

9 comments:

  1. சதாசிவ நம்பூதிரி கடைசியாக சொன்ன உதாரணம் அருமை. இனி க்ரிஷ் என்ன செய்யப் போகிறான் என்று அறிய ஆவலாய் இருக்கு. தீபாவளி போனஸ் எப்போது? முன்பே தருவது தான் நியாயம்.

    ReplyDelete
  2. Very nice conversation. Enemy is thorough in his approach and Namboodri is intelligent in his reply.

    ReplyDelete
  3. அற்புதம்....
    மிகவும் நன்றி...
    கடைசி வரிகள் சிந்திங்க வைக்கின்றது, ஒரு விதைக்குள் எத்தனை மரங்கள் என்று சொன்னவை...
    அது க்ரிஷ்க்கு மட்டும் அல்ல எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும்...

    ReplyDelete
  4. க்ரிஷின் அடுத்த நடவடிக்கைகள் இனி அறிவுப்பூர்வமாக இருக்கம் என்று நினைக்கிறேன்.இறுதி வரிகள் சிந்திக்க வைக்கிறது ஐயா...

    ReplyDelete
  5. தங்கள் எழுத்தின் சிறப்புகளில் ஒன்று,கதையின் ஊடே நிரவி இருக்கும் ஆழ்ந்த கருத்துக்கள்...அதனையும் பொருத்தமான இடத்தில்,எளிமையாக தருவது....
    //ஆன்மீகத்தின் முக்கிய இலக்கு , சக்திகளை அடைவதைக்காட்டிலும்,மெய்ஞானத்தை நோக்கிய பயணமே....// //ஒரு விதைக்குள்ளே எத்தனை மரங்கள், காடுகள் ஒளிஞ்சிருக்குன்னு யாரால சொல்ல முடியும்// வாசித்ததை யோசிக்கவும் வைக்கும் வரிகள்......
    இந்த அத்தியாயத்தில் , சில புதிர்களுக்கு விடை கிடைத்தது :-) கரிய பறவை ரூபத்தில் வந்த வேற்றுக்கிரகவாசியும் , ரகசிய மனிதனும் ஒருவரல்ல.. (ISRO pics பார்த்து தான் , மர்ம மனிதன் க்ரிஷ் பற்றி தெரிந்து கொள்வது...). மாஸ்டர் தான் வேற்றுக்கிரகவாசியை எதிரி என்று தவறாக புரிந்து கொண்டுள்ளார் போல...(alien என்ற வார்த்தையில் தான் , க்ரிஷ் சறுக்கி விட்டான்னு நினைப்பாரே....)...

    க்ரிஷும் மாஸ்டரும் எப்போது , எப்படி ஒன்று சேர்ந்து கலக்க போகிறார்கள்?.... மர்ம மனிதனின் அடுத்த step என்ன? Waiting eagerly for the next update Sir....

    ReplyDelete
  6. மர்ம மனிதன் ,தான் அறிந்த ஜாதக விஷயங்களை ,நம்பூத்திரியின் வாய்வழியாக உறுதிப் படுத்திக் கொள்கிறான்......மாஸ்டரை சக்தி அளவில் தன்னை விட குறைத்து மதிப்பிடுகிறான்...க்ரிஷிடம் சக்தி எதுவும் இல்லை என்பதை அனுமானிக்கிறான்...
    அவன் விதைப் போன்றவன்...அவனிடம் மறைந்திருக்கும் சக்தி அளவில்லாதது என்பதை
    மறைமுகமாக நம்பூத்திரி சொல்கிறார்....மாஸ்டரும், க்ரிஷூம் எதிரியாக இருப்பார்கள் என்று தெரிந்துகொண்ட மர்ம மனிதனுக்கு,இருவரும் இணைந்து செயல்படும் நிலை உண்டாகுமா என்ற சந்தேகம், ஏன் எழவில்லை.....????

    ReplyDelete
  7. ஜோதிடம்னா கேரளா தானா தமிழ்நாட்டையும் கொஞ்சம் டச் பண்ணலாமே!.

    ReplyDelete
  8. மர்ம மனிதன் எப்போதும் தன் திறமையை ஒப்பிட்டு செய்து பார்த்து கொண்டே இருக்கிறான் அதன் காரணமாய இப்போது அவனுடைய எதிரியாய் நிற்பவர்கள் அவனுக்கு சமானவர்களாக இருந்தாலும் தன்னை அழிக்கும் அளவுக்கு சக்தி படைத்தவர்கள் இல்லை என தப்பு கணக்கு போட்டு விடுகிறான் அகம்பாவம் அவன் கண்ணை மறைத்துவிடவேண்டும் என்பது பிரபஞ்ச மையபுள்ளியின் தீர்மானமாய் இருந்துவிடுமா ?G கடைசியில் நம்பூதிரி சொன்னதை எப்படி எடுத்து கொள்வான் G....

    ReplyDelete
  9. intha rendu perum marama valarnthutaanganu solla mudinjavarukku Krish marama valaruvaananu solla mudiyatha! Athoda, intha rendu maramum kooda oru periya kaada maara vaipu irukke.! I like this astrology part, but seems like here it has been just used to reveal whatever the author would like to reveal. I feel like astrologer is not equally revealing things about all three.!

    ReplyDelete