மகாசக்தி மனிதர்கள் 42
ஷிரடி பாபாவின் பக்தரான நானா சாஹேப்
சந்தோர்கர் என்ற டெபுடி கலெக்டர் வாழ்வில் பாபா நிகழ்த்திய அற்புதங்களைப்
பார்த்தோம். நானாவிற்கு எதிர்மாறாய் படிப்பறிவே இல்லாமல் பக்தி மட்டுமே இருந்த
இன்னொரு பக்தரான மல்சபதி வாழ்வில் நடந்த நிகழ்வுகளை இனி பார்ப்போம். பாபா
ஷிரடியில் வந்த போது ஒரு கோயிலின் உள்ளே செல்ல முற்பட்ட போது முஸ்லீமான பக்கிரி
இந்து கோயிலுக்குள்ளே நுழையக்கூடாது என்று மறுத்தவர் மல்சபதி. “இந்துக்களுக்கும்
முஸ்லீம்களுக்கும், ஏன் எல்லா உயிரினங்களுக்கும் இறைவன் ஒருவனே. அப்படி
இருக்கையில் என்னை ஏன் தடுக்கிறாய்?” என்று கேட்டு விட்டு பாபா வேறிடம் சென்றார்.
தத்துவ ஞானமோ, உயர்
உண்மை நுணுக்கங்களோ புரியும் அளவு அறிவு படைத்தவர் அல்ல மல்சபதி. அதனால் பாபா
சொன்னது அவர் அறிவை அப்போது எட்டவில்லை. ஆனால் காலப்போக்கில் அவர் பாபாவின் பரம
பகதராக மாறியது தான் ஆச்சரியம். 1886 ஆம் ஆண்டு உடலை விட்டு மூன்று நாட்கள்
பிரிந்து போகும் முன்னர் பாபா இவரிடம் தான் தன் உடலை ஒப்படைத்துப் போனார் என்கிற
அளவு மிக நெருங்கிய பக்தராக மாறி இருந்தார்.
துவாரகமயியில்
பாபாவிற்கு சேவகம் செய்வதையே தன் பாக்கியமாக நினைத்திருந்த மல்சபதி அதற்குப்
பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்கவில்லை. பிற்காலத்தில் ஷிரடி பாபா பிரபலமாக
ஆரம்பித்து அவருடைய பக்தர்கள் தட்சிணையாகப் பெரிய தொகைகளைக் கொடுக்க ஆரம்பித்த
போது மிக ஏழ்மையான நிலையிலேயே இருந்த மல்சபதிக்குப் பணம் தந்து உதவ பாபா முன்
வந்தார். ”மூன்று ரூபாயாவது தினமும் எடுத்துக் கொள். வறுமையில்
இருந்து நீ மீள்வாய். சவுகரியமாய் வாழ்வாய். ஏழை என்பதால் உன்னைத் துச்சமாய்
நினைப்பவர்கள் எல்லாம் உன்னை மரியாதையுடன் நாடி வருவார்கள்” என்று சொல்லிப்
பார்த்தார். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூன்று ரூபாய் தினசரி கிடைப்பது என்பது
பெரிய தொகை தான். மூன்று பெண் குழந்தைகளைப் பெற்று அவர்களை வளர்க்கப் பாடுபட்டுக்
கொண்டிருந்த போதும் அந்தத் தொகையை வேண்டாம் என்று மல்சபதி வாங்க மறுத்து விட்டார்.
”உங்கள் சேவையைச் செய்து கொண்டிருக்கும் பாக்கியமே போதும்” என்று இருந்து விட்டார்.
”உங்கள் சேவையைச் செய்து கொண்டிருக்கும் பாக்கியமே போதும்” என்று இருந்து விட்டார்.
மூன்று மகள்கள் மட்டும் இருந்த மல்சபதிக்கு
ஒரு ஆண் குழந்தையும் பிறக்க வேண்டும் என்று விரும்பிய பாபா அதை ஒரு ஜென்மாஷ்டமி
அன்று மல்சபதியிடம் தெரிவித்தார். துவாரகமயியே கதியாய் இருக்கும் அவரைக்
கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அவ்வப்போது அனுப்பியும் வைத்தார். அடுத்த ஜென்மாஷ்டமி அன்று,
1897ல் மல்சபதிக்கு ஒரு மகன் பிறந்தான். மகனை எடுத்துக் கொண்டு மல்சபதி பாவாவிடம்
வந்தார். அந்தக் குழந்தையை ஆசிர்வதித்த பாபா ”உன் மகனை 25 வருட
காலம் பார்த்துக் கொள். அது போதும்” என்றார். உண்மையில் இனி 25 ஆண்டு காலம் தான்
மல்சபதிக்கு ஆயுள் உள்ளது என்பதை உணர்ந்து சொன்ன வார்த்தைகள் அது. “என்னுடைய
சக்தியில் எதுவுமில்லை. எல்லாம் உங்கள் அருளாலேயே நடக்க வேண்டும்” என்று பணிவோடு மல்சபதி கூறினார்.
சில காலம் கழித்து
மல்சபதி துவாரகமயியிலேயே வசிக்க ஆரம்பித்தார். இரவில் ஷிரடி பாபா ஒரு பழந்துணியினை
விரித்துப் பாதித் துணியில் படுத்துக் கொள்வார். மல்சபதி மறு பாதியில் படுத்துக்
கொள்வார். சில நாட்கள் பாபா எழுந்து ஜபம் செய்ய ஆரம்பித்து விடுவார். அப்போது
மல்சபதி தானும் எழுந்து உட்கார்ந்து கொள்வார். பாபா மல்சபதியிடம் சொல்வார். “நான் இறை நாமத்தை
ஜபிக்கும் போது நீ என் நெஞ்சில் கை வைத்து என் இதயத்துடிப்பைக் கவனித்துக் கொண்டே
வா. நான் ஜபித்துக் கொண்டே உறங்கி விட்டால் என் இதயத்துடிப்பில் நிச்சயம் மாற்றம்
ஏற்படும். அப்படி ஏற்பட ஆரம்பித்தால் நீ என்னை எழுப்ப வேண்டும்”.
அவர் சொன்னபடியே மல்சபதி செய்து வந்தார்.
பாபா தன் பக்தர்களின் நலனுக்காக இறைவனை ஜபிப்பார். அவர் அப்போது உறங்கி விட்டால்
அவரை மல்சபதி எழுப்புவார். இப்படி தன்னலம் இல்லாமல் சேவை செய்து வந்த சேவகன் பாபா
மனதில் எப்படிப்பட்ட இடத்தைப் பெற்றிருப்பார் என்று சொல்லத் தேவை இல்லை.
ஒரு முறை மல்சபதியின் மனைவி வெளியூரில்
இருந்த தன் தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார். அப்போது அவருக்கு தொண்டையில் கட்டி
வந்து அவதிப்பட்டார். கணவருக்கு அதை அவர் தெரிவிக்கவில்லை. ஆனால் அதை ஞான
திருஷ்டியால் அறிந்த பாபா “உன் மனைவி தொண்டையில் கட்டி வந்து அவதிப்படுகிறாள். அதை
நான் சரி செய்கிறேன்” என்று கூறி தன் சக்தியால் ஷிரடியில் இருந்தே குணப்படுத்தியும்
விட்டார். சில நாட்களில் மனைவி தனக்குத் தொண்டையில் கட்டி வந்ததையும் அது
தன்னாலேயே குணமானதையும் தெரிவித்து கணவருக்குக் கடிதம் எழுதினார்.
ஞான மார்க்கத்தில்
மல்சபதிக்குப் புரிகிற மாதிரி உபதேசங்கள் சொல்ல முடியாதென்று உணர்ந்த பாபா
அவருக்கு வேறு வழியில் சில விஷயங்களைப் புரிய வைப்பார். ஒரு அழகான உதாரணம்
பார்க்கலாம். எப்போதும் எல்லா
உயிர்களிடமும் அன்பாக இருக்கும் மல்சபதி சில சமயங்களில் கோபப்படுவதும் உண்டு. ஒரு
நொண்டி நாயிற்கு இரவு தினமும் அவர் உணவளிப்பது வழக்கம். சாப்பிட்ட பிறகு போகச்
சொன்னால் அந்த நாய் போய் விடும். ஆனால் ஒரு நாள் சாப்பிட்ட பின் அவர் போகச் சொன்ன
பிறகும் போகாமல் அங்கேயே அது அமர்ந்திருந்தது. கோபத்தில் தடியால் அடித்துத்
துரத்தினார். வலி தாளாமல் கத்திக் கொண்டே அந்த நாய் ஓடிப் போனது.
அன்று பாபாவின் பாத
பூஜை அவர் செய்த போது பாபா தன் அருகில் இருந்தவர்களிடம் சொன்னார். “இந்த ஊரில்
என்னைப் போலவே உடம்பு சரியில்லாத ஒரு நாயும் இருக்கிறது. அதை எல்லாரும்
அடிக்கிறார்கள்”
மல்சபதிக்கு சுருக்கென்றது. மிகச்சிறிய
விஷயம் தான். ஆனால் ஆன்மிகத்தில் பண்பட்டு மேம்பட்டு வரும் போது சின்னச் சின்ன
குறைகளையும் கூட ஒருவர் தவிர்க்க வேண்டும் என்பதையும், எந்த உயிரினத்திற்கும்
சிறிய அளவில் கூடத் தீங்கிழைக்கலாகாது என்பதையும் சொல்லாமல் பாபா சொன்னார். எல்லா
உயிர்களிலும் அந்தர்யாமியாய் இறைவன் இருக்கையில் எந்த உயிருக்குத்
தீங்கிழைத்தாலும் அது இறைவனுக்கே இழைக்கின்ற தீங்கல்லவா? அதைப் புரிந்து கொண்ட மல்சபதி அது போன்ற சின்னக் குறைகளையும்
தவிர்த்து வாழ ஆரம்பித்தார்.
1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தன்
அந்திமக்காலம் நெருங்குவதை உணர்ந்த பாபா அதைத் தன் பக்தனுக்கு குறிப்பால் உணர்த்தினார்.
அவருக்கு மல்சபதி சேவை செய்து கொண்டிருந்த போது ’இன்னும் சில நாட்களில் நான் எங்கோ சென்று
விடுவேன். அதன் பின் இரண்டு அல்லது நான்கு ஆண்டுகள் இரவு வந்து கொண்டிரு” என்று அவர் சொன்னார். அப்போது அவர் சொன்னதன் உள் அர்த்தம் மல்சபதிக்குப்
புரியவில்லை. சில நாட்களில் பாபா காலமான போது தான் மல்சபதிக்கு அர்த்தம்
புரிந்தது. பாபாவின் மறைவைத் தாங்க முடியாமல் 13 நாட்கள் மல்சபதி உண்ணாவிரதம்
இருந்தார். மற்றவர்கள் வற்புறுத்தலுக்குப் பின் உண்ண ஆரம்பித்த மல்சபதி பாபா
கூறியபடி தினமும் இரவு வந்து பாபாவுக்கு பூஜை செய்து வந்தார்.
நான்கு ஆண்டுகள் பூஜை
செய்த பின் பாபா முன்கூட்டியே சொன்னபடி மல்சபதியின் அந்திமக்காலமும் வந்தது. 1922
ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏகாதசி அன்று தன் ஊன்று கோலை மகனிடம் கொடுத்து மல்சபதி
சொன்னார். “உன்னதமான பக்தி மார்க்கத்தில் உன் காலத்தைக் கழி”. பின் ராமநாமத்தை
ஜபித்தபடியே அவர் உயிர் நீத்தார்.
பகவத் கீதையில்
எட்டாம் அத்தியாயத்தில் ஆறாம் சுலோகத்தில் ‘மரணகாலத்தில் எதை நினைத்தபடி ஒருவன்
உயிரை விடுகிறானோ அந்த நிலையையே அவன் அடைகிறான்’ என்று கிருஷ்ண
பரமாத்மா கூறுகிறார். அதன்படி புண்ணியமான ஏகாதசி நாளில் ராம நாமத்தைச் சொன்னபடி
உயிர் பிரிந்த மல்சபதி வைகுண்டத்திற்கே சென்றிருப்பார் என்பது பலரின் நம்பிக்கை.
பாபாவிற்கு கடைசி வரை சேவை செய்ததன் பலன் அல்லவா அது!
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி
5-6-2015
No comments:
Post a Comment