சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, November 2, 2015

பாபா இருக்க பயமேன்?


மகாசக்தி மனிதர்கள்-41

ஷிரடி பாபா வாழ்ந்த காலத்தில் அவருடனே மிக நெருக்கமாக இருந்த பக்தர்களில் முக்கியமானவர் நாராயண் கோவிந்த் சந்தோர்கர். அவரை அனைவரும் நானா சாஹேப் சந்தோர்கர் என்று அழைத்தார்கள். அவர் டெபுடி கலெக்டராக இருந்தவர். வேதாந்த தத்துவ விசாரங்களில், முக்கியமாய் பகவத் கீதையில் மிக நல்ல பாண்டித்தியம் கொண்டவர். ஷிரடி பாபா பிரபலமடைய ஆரம்பிக்காத காலத்தில் நானா சாஹேப் சந்தோர்கரை சந்திக்க விரும்புவதாகச் சொல்லி அனுப்பினார். பொதுவாக ஷிரடி பாபா பெரிய பதவியில் இருப்பவர்கள், செல்வந்தர்கள் ஆகியோரை அவர்களுடைய பதவிக்கும் செல்வத்துக்கும் மதிப்பு தந்து சந்திப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. துறவிக்கு வேந்தன் துரும்பு என்பார்களே அந்த வகையைச் சார்ந்தவர் அவர். அப்படி இருக்கையில் குறிப்பாக நானா சாஹேப் சந்தோர்கரை மட்டும் காண அவர் ஆர்வம் காட்டியது அழைப்பு விடுக்கச் சென்ற உள்ளூர் கர்ணத்திற்கு ஆச்சரியம். ஆனாலும் அவர் சொன்னதைச் செய்தார்.

ஒரு டெபுடி கலெக்டரை ஒரு பக்கிரி சந்திக்க விரும்புவதாகச் சொல்லி அனுப்புவது இக்காலத்தில் கூட பரிகசிக்கக்கூடிய விஷயம் என்னும் போது படித்தவர்கள் மிகவும் அரிதாக இருந்த அக்காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. நானா சாஹேப் சந்தோர்கர் அந்த அழைப்பைக் கண்டு கொள்ளவில்லை. பாபா சலிக்காமல் மேலும் இரு முறை சொல்லி அனுப்பினார். கடைசியில் நானா சாஹேப் சந்தோர்கர் ஷிரடி வந்து பாபாவைப் பார்த்தார். தன்னைக் காண விரும்பிய காரணம் என்ன என்று கேட்டார். ஷிரடி பாபா தனக்கும் அவருக்கும் குரு சிஷ்ய பந்தம் நான்கு ஜென்மங்களாக இருக்கின்றன என்றும் அதைத் தொடரத்தான் அவரை அழைத்ததாக பாபா தெரிவித்தார்.

படிப்பறிவற்ற ஒரு பக்கிரியைத் தன் குருவாக நினைத்துப் பார்ப்பது துவக்கத்தில் நானா சாஹேப் சந்தோர்கருக்கு எளிதாக இருக்கவில்லை. ஆனால் நாளாவட்டத்தில் அவர்கள் இருவருடைய பிணைப்பு மிக வலிமையாகவும் ஆழமானதாகவும் மாறி விட்டது. தன் தேவை எதுவாக இருந்தாலும் அதைத் தன் குருவான ஷிரடி பாபா பார்த்துக் கொள்வார் என்று ஆழமாக நம்புகிற அளவு நானா சாஹேப் சந்தோர்கர் மாறி விட்டார். 

அவர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஷிரடி பாபாவின் மகாசக்திகள் எந்த அளவு செயல்பட்டன என்பதற்குச் சில நிகழ்ச்சிகள் பார்ப்போம்.

ஷிரடியில் இருந்து நாற்பது மைல் தூரத்தில் ஹரிச்சந்திர மலை இருக்கிறது. அதன் உச்சியில் அம்மன் ஆலயம் ஒன்று இருந்தது. அந்த மலை மரங்கள் இல்லாமல், வெற்றுப் பாறைகள் மட்டுமே நிறைந்த மலை. ஒரு கோடைகாலக் கொளுத்தும் வெயிலில் நானா சாஹேப் சந்தோர்கர் அந்த ஆலயத்திற்குச் செல்ல மலை ஏறினார். பாதியில் அவருக்குக் கடுமையான தாகம் எடுத்து விட்டது. தன்னை அழைத்து வந்த அதிகாரி நண்பரிடம் தண்ணீர் கேட்டார். அந்த நண்பர் தண்ணீர் இல்லை என்று தெரிவித்தார். தாகமும் தாங்காமல் தங்க நிழலும் இல்லாமல் அவதிப்பட்ட நானா சாஹேப் சந்தோர்கர் “பாபா இருந்திருந்தால் எப்படியாவது தண்ணீர் வரவழைத்து தந்திருப்பார்என்று ஆற்றாமையுடன் கூறினார்.

உடன் வந்த நண்பர் “பாபா தான் இங்கில்லையே இப்போது அவரைப் பற்றிப் பேசி என்ன பயன்?என்று கேட்டார். நானா சாஹேப் சந்தோர்கர் பயணத்தை மேலே தொடர முடியாமல் அங்கிருந்த ஒரு பாறையின் மேலே இருந்த கல்லில் அமர்ந்து விட்டார். அந்த சமயத்தில் அவர்களை நோக்கி ஒரு மலைவாழ் மனிதன் வந்தான். அவனை நிறுத்தி நானா சாஹேப் சந்தோர்கர் இங்கு குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?என்று கேட்டார். அவன் “நீங்கள் உட்கார்ந்திருக்கிற கல்லின் கீழேயே தண்ணீர் இருக்கிறதுஎன்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.

இந்த மலைக்கல்லில் தண்ணீரா என்று எண்ணிய நானா சாஹேப் சந்தோர்கர் தான் அமர்ந்திருக்கிற கல்லைத் தூக்கிப் பார்த்தார். அந்தப் பாறையின் ஒரு பள்ளத்தில் அவர் தாகத்தைத் தீர்க்கிற அளவுக்குத் தண்ணீர் தேங்கி இருந்தது. நானா சாஹேப் சந்தோர்கர் மிகவும் குளுமையாக இருந்த அந்தத் தண்ணீரைக் குடித்து தாகம் தீர்த்துக் கொண்டார். இது தற்செயலான நிகழ்வு என்று நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி. நானா சாஹேப் சந்தோர்கர் தாகத்தோடு தவித்த அதே நேரத்தில் துவாரகமயியில் தன் பக்தர்கள் சிலரோடு உரையாடிக் கொண்டிருந்த பாபா திடீரென்று நானாவுக்குத் தாகமாக இருக்கிறது. தண்ணீர் தர வேண்டாமா?என்று சொல்லி இருக்கிறார். நானாவுக்குத் தாகமாக இருந்தால் அவருக்குத் தண்ணீர் எடுத்துத் தர எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இதை ஏன் பாபா சொல்கிறார் என்று பக்தர்கள் நினைத்திருக்கிறார்கள். பின்பு தான் அவர்களுக்கும் நானாவுக்கும் நடந்ததெல்லாம் பாபாவின் அருளாலேயே என்பது தெளிவாக விளங்கியது.

இன்னொரு ஆச்சரியமான சம்பவம் பார்ப்போம். 1904 ஆம் ஆண்டு வாக்கில் நானா சாஹேப் சந்தோர்கர் ஜாம்னர் என்ற நகரில் டெபுடி கலெக்டராக இருந்தார். அப்போது ஜாம்னர் நகருக்கு ரயில் போக்குவரத்து கிடையாது. சாலை வழியாக மட்டுமே செல்ல முடிந்த ஊராக அது இருந்தது. நானா சாஹேப் சந்தோர்கரின் மகள் தலைப்பிரசவத்திற்கு அங்கு வந்திருந்தாள். வலி எடுக்க ஆரம்பித்து நீண்ட நேரம் ஆகியும் பிரசவம் ஆகவில்லை. மிகவும் கவலை கொண்ட நானா கஷ்ட நிவாரண ஹோமம் என்ற ஒரு ஹோமத்தையும் தன் வீட்டில் நடத்தினார். ஆனால் அதுவும் நிலைமையை மாற்றவில்லை. நானாவுக்கு பாபாவைப் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

தன் ஞான திருஷ்டியால் நிலைமையை அறிந்த பாபா துவாரகமயியில் சதா எரிந்து கொண்டிருக்கும் விறகின் சாம்பலைப் பொட்டலம் கட்டி ராம்கிர் புவா என்கிற ஆளிடம் தந்து நானாவிடம் விரைவாகத் தந்து விடுமாறு பணித்தார். பாவாவின் பக்தர் ஒருவர் போக்குவரத்திற்கு ராம்கிர் புவாவிடம் இரண்டு ரூபாய் தந்தார்.

ஜல்காவுன் நகருக்கு ரயிலில் சென்று பின் முப்பது மைல் சாலை வழிப் பயணம் செய்தால் தான் ஜாம்னர் நகரை அடைய முடியும் ஜல்காவுன் நகருக்கு ரயிலில் போகவே ஒரு ரூபாய் பதிநான்கு அணாக்கள் டிக்கெட் செலவு இருந்தது. மீதி இரண்டு அணாவில் ஜாம்னர் எப்படிச் சென்று அடைய முடியும் என்று ராம்கிர் புவா கேட்டான். ஜாம்னர் செல்லவும் பணம் போதாது. அவனுக்குச் சாப்பிடவும் இந்தப் பணத்தில் எதுவும் கிடையாது.

பாபா சொன்னார். “பாபுகிர் நீ முதலில் கிளம்பு. எல்லாம் உனக்குக் கிடைக்கும்”. ராம்கிர் புவாவை பாபா பாபுகிர் என்று தான் அழைப்பார். பாபா சொன்ன பின் மறுத்துப் பேச முடியாமல் ராம்கிர் புவா கிளம்பினான். ஆனால் அவனுக்கு ஜல்காவுன் நகரை அடைந்த பின் எப்படி ஜாம்னர் நகருக்குச் செல்வது என்று மனதில் பெரும் கவலை தங்கியே இருந்தது. ஜல்காவுன் நகரை அவன் அடைந்த போது அங்கு அதிகாரிகளின் கெடுபிடி அதிகமாய் இருந்தது. காலரா பரவிக் கொண்டிருந்த காலம் ஆனதால் வெளியூரில் இருந்து பயணிகளைச் சோதிக்காமல் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்லக்கூட யாரையும் அவர்கள் அனுமதிக்கவில்லை. கையில் இரண்டு அணாக்களை மட்டும் வைத்துக் கொண்டு இந்த சூழ்நிலையில் என்ன தான் செய்வது என்று ராம்கிர் புவா திகைத்து நின்றான்.

அப்போது சீருடை அணிந்த ஒரு பியூன் “ஷிரடியில் இருந்து வந்திருக்கும் பாபுகிர் புவா யார்?என்று சத்தமாகக் கேட்டான். ராம்கிர் புவா நான் தான் அது என்று முன்னுக்கு வர அந்தப் பியூன் “உன்னை அழைத்து வர எஜமான் வண்டி அனுப்பி இருக்கிறார்என்று சொல்லி வரிசையில் காத்திருந்த ராம்கிரி புவாவைத் தனியாக அழைத்துச் சென்றான். உண்ண உணவு கொடுத்து விட்டுப் பின் குதிரை வண்டியில் ஜாம்னர் நகருக்கு அழைத்துச் சென்று நானா சாஹேப் சந்தோர்கர் வீட்டுக்கு சற்று தள்ளியே வண்டியை நிறுத்தி “அது தான் எஜமான் வீடுஎன்று வீட்டைக் காண்பித்தான்.

இறங்கிக் கொண்ட ராம்கிர் புவா நானாவின் வீடு நோக்கி நடந்தான். சில அடிகள் நடந்து விட்டுத் திரும்பிப் பார்த்த போது குதிரை வண்டியும் பியூனும் மாயமாய் மறைந்திருந்தார்கள். நானாவின் வீட்டுக்குச் சென்று பாபாவின் விபூதியைத் தர நானா தன் மகளுக்கு அந்த விபூதியைப் பூசிவிட சிறிது நேரத்தில் சுகப்பிரசவம் ஆனது. ஆனால் குதிரை வண்டியில் வந்ததை ராம்கிர் புவா சொன்ன போது நானாவுக்குப் பேராச்சரியம். ஏனென்றால் அவர் வண்டி அனுப்பி வைத்திருக்கவில்லை! ராம்கிர் புவாவுக்கும் நானாவுக்கும் அது பாபாவின் அருளால் நிகழ்ந்த அற்புதம் என்று பிறகு தான் புலனாகியது.

(தொடரும்)
என்.கணேசன்
நன்றி: தினத்தந்தி-29.05.2015
  

4 comments:

  1. பாபாவின் பெருமையை அறிந்தேன்...

    ReplyDelete
  2. Thank u for your deepawali wishes.
    Hope u and family members are in goodhealth.may this deepawali brings peace
    &prosperity to you.
    Madhusoodanan.

    ReplyDelete