சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Thursday, March 28, 2013

பரம(ன்) ரகசியம் - 37





ந்த அனாதைக் குழந்தைகளுடன் நேரம் போவதே தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்த ஈஸ்வர் தற்செயலாகத் தான் ஜன்னல் வழியாக அந்த நபரைப் பார்த்தான். ஐந்தடிக்கும் குறைவான உயரம், குடுமி, வேட்டியைக் கச்சை கட்டி தோளில் ஒரு துண்டு போட்டுக்கொண்டு பிள்ளையார் சிலைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் அந்த நபர் ஏதோ மந்திரம் சொல்லிக் கொண்டிருப்பது போலத் தான் ஆரம்பத்தில் அவனுக்குத் தோன்றியது. ஆனால் அந்த நபரின் முகத்தில் தெரிந்த சிரிப்பும், கையை ஆட்டிய விதமும் அது மந்திரம் சொல்வதல்ல, எதையோ பேசிக் கொண்டு இருப்பது என்று பின்பு தான் அவனுக்குப் புரிய வைத்தது.

அன்பாலயம் நிர்வாகியை அழைத்து ஈஸ்வர் கேட்டான். “அது யார்? அந்த வினாயகருக்குப் பூஜை செய்பவரா?

அவர் ஜன்னல் வழியாகப் பார்த்து விட்டு சொன்னார். “யார்னு தெரியலையே. பிள்ளையாருக்கு பூஜை செய்ய இங்கே ஆள் எல்லாம் இல்லை. எங்கள்லயே யாராவது ஒருவர் பூஜை செய்வோம் அவ்வளவு தான்...

விஷாலியும் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். அவளுக்கும் அந்தக் காட்சி வித்தியாசமாக இருந்தது. சிறிது கவனித்து விட்டுப் புன்னகையுடன் சொன்னாள். வினாயகருக்கு ஃப்ரண்ட் போல இருக்கு. ஏதோ ஆள் கிட்ட பேசற மாதிரியே பேசறார்”.

ஈஸ்வருக்கு ஏனோ அந்த நபரிடம் சென்று பேசத் தோன்றியது. அவன் வெளியே வர விஷாலியும், நிர்வாகியும் கூட வெளியே வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து சில பிள்ளைகளும் வெளியே வந்தார்கள்.

தனித்து போரடித்துப் போய் உட்கார்ந்திருந்த பிள்ளையாருக்குப் பேச்சுத் துணை போல உட்கார்ந்திருந்த கணபதி திடீர் என்று ஆட்கள் வருவதைப் பார்க்கவே அவசர அவசரமாக எழுந்து நின்றான். கட்டிட உரிமையாளர்களிடம் அனுமதி வாங்கிக் கொள்ளாமல் உள்ளே வந்ததற்கு அவர்கள் கோபித்துக் கொள்வார்களோ என்ற பயம் அவனுக்குள் எழுந்தது.

கணபதி உடனே மன்னிப்பு கேட்டுக் கொண்டான். “மன்னிச்சுக்கோங்க. நான் இந்த வழியா கார்ல பிரயாணம் செய்துகிட்டு இருந்தேன். இங்கே வர்றப்ப கார் ரிப்பேர் ஆயிடுச்சு. மெக்கானிக்கை கூட்டிகிட்டு வர டிரைவர் போயிருக்கான். பிள்ளையாரைப் பார்த்தவுடனே சும்மா கார்ல தனியா உட்கார்றதுக்குப் பதிலா இவர் கூடயாவது பேசிகிட்டு இருக்கலாமேன்னு இங்கே வந்தேன். அவ்வளவு தான்...

கார்ல தனியா உட்கார்றதுக்குப் பதிலா இவர் கூடயாவது பேசிகிட்டு இருக்கலாமேன்னு இங்கே வந்தேன்என்ற வார்த்தைகள் ஈஸ்வரை மிகவும் கவர்ந்தன. இறைவனுடன் பேச முடிந்த ஆட்களை அவன் இது வரை பார்த்தது இல்லை. சொன்னவனின் முகத்தில் தெரிந்த வெகுளித் தனமும், பேச்சில் தெரிந்த கள்ளங்கபடமற்ற தன்மையும் நிஜமாகவே அவனால் இறைவனுடன் பேச முடியும் என்ற எண்ணத்தை ஈஸ்வர் மனதில் ஏற்படுத்தின.

ஈஸ்வர் கேட் வழியாகப் பார்த்த போது அவன் கார் அருகே இன்னொரு கார் இருப்பது தெரிந்தது. புன்னகையுடன் கணபதியிடம் அவன் கேட்டான். “இது தான் உங்க காரா?

கணபதி  கலகலவென சிரித்தான். “என் கிட்ட கார் எல்லாம் இல்ல. கடவுள் தந்த கால் மட்டும் தான் இருக்கு. இது ஒரு புண்ணியவான் தந்து ஒரு கோயிலுக்குப் போயிட்டு வர அனுப்பினது.... என்னவோ ரிப்பேராயிடுச்சு...

கடவுள் தந்த கால் மட்டும் தான் இருக்கு என்று தன் வறுமையை எந்தத் தயக்கமும் இல்லாமல் சிரித்தபடி சொன்ன கணபதியை ஈஸ்வருக்குப் பிடித்துப் போயிற்று. இல்லாமையை இப்படிச் சொல்ல எத்தனை பேரால் முடியும்?

கணபதிக்கு ஈஸ்வரையும், விஷாலியையும் பார்த்த போது சினிமா நடிகர்கள் போலத் தோன்றியது. “நீங்க சினிமாக்காரங்களா?என்று ஈஸ்வரிடம் கேட்டான்.

இல்லை என்று சிரித்துக் கொண்டே சொன்ன ஈஸ்வர் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டான். “நான் ஈஸ்வர். அமெரிக்கால இருக்கேன். மனோதத்துவ துறையில் உதவிப் பேராசிரியராய் இருக்கேன். இவங்க விஷாலி. ஃபேஷன் டிசைனராய் இருக்காங்க. சமூக சேவகியும் கூட... நீங்க?

நான் கணபதி. ஒரு கிராமத்துல சின்ன பிள்ளையார் கோயில்ல பூசாரியா இருக்கேன்... உங்களுக்கு இந்தியால யார் இருக்காங்க?

“அப்பாவோட அப்பா இருக்கார்....

“தாத்தான்னு சொல்லுங்க

ஈஸ்வர் சொல்லவில்லை. பேச்சுக்காகக் கூட பரமேஸ்வரனை தாத்தா என்று அவன் அழைக்காததை விஷாலி கவனித்தாள். இவனை விரோதித்துக் கொண்டால் அவ்வளவு சீக்கிரம் மன்னித்து விட மாட்டான் என்பது புரிந்தது.  

நீங்க எந்தக் கோயிலுக்குப் போய்ட்டு வரக் கிளம்பினீங்க?என்று ஈஸ்வர் பேச்சை மாற்றினான்.

“பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் ஒன்னு நூறு மைல் தொலைவுல இருக்கு. அங்கே போகத் தான் கிளம்பினோம். என்னை தற்காலிகமா வேறொரு இடத்துல பூஜை செய்யக் கூப்பிட்டாங்கன்னு அங்கே தான் இப்ப பூஜை செய்துகிட்டு இருக்கேன்.... என் பிள்ளையாரும் இப்படித் தான் லட்சணமா இருப்பார்... இவரைப் பார்த்தவுடனே அவர் ஞாபகம் எனக்கு வந்துடுச்சு...சொல்லும் போதே கணபதி குரலில் ஏக்கம் தெரிந்தது.

ஈஸ்வர் கணபதியின் பாசத்தை ரசித்தான். இந்தக்காலத்தில் கடவுள் கோரிக்கைகளை நிறைவேற்றும் சக்தியாகத் தான் பார்க்கப்படுகிறார் என்பதை அவன் அறிவான். அவர் இப்படி நேசிக்கப்படுவது அபூர்வம் தான். அந்தப் பிள்ளையார் மிகவும் கொடுத்து வைத்தவர் என்று புன்னகையுடன் நினைத்தவனாய் கேட்டான். “நீங்க இப்ப பூஜை செய்யப் போனதும் பிள்ளையாருக்குத் தானா?

“இல்லை.. அவரோட அப்பாவுக்கு... அவரும் நல்ல மாதிரி...

ஈஸ்வர் புன்னகை மேலும் விரிந்தது. கணபதிக்கு குருஜி ரகசியம் காக்கச் சொன்னது நினைவுக்கு வர மேற்கொண்டு தகவல்களை இத்தனை பேர் மத்தியில் சொல்ல வேண்டாம் என்று தோன்றியது. அவன் அன்பாலயம் பற்றி விசாரித்தான். அது அனாதை ஆசிரமம் என்பதையும் ஈஸ்வர் பின்னால் நின்று கொண்டிருந்தவர்கள் எல்லாம் அனாதைக் குழந்தைகள் என்பது தெரிந்த போது அவன் கண்களில் நீர் கோர்த்தது.

ஈஸ்வர் அந்த விழிகளின் ஈரத்தைக் கவனித்தான். அவனுக்கு கணபதியை மேலும் அதிகமாக பிடித்தது. இன்றைய உலகத்தின் சுயநலம், பேராசை, அலட்சியம் போன்றவைகளின் தாக்கம் சிறிதும் இல்லாமல் இத்தனை வெள்ளந்தியாக ஒரு மனிதன் இருக்க முடிவது சாத்தியம் இல்லை என்று அவனுக்குத் தோன்றியது.

அன்பாலயம் நிர்வாகியும் கணபதியால் கவரப்பட்டார். அவர் கணபதியை உள்ளே அழைக்க கணபதியும் அவர்களுடன் உள்ளே போனான். சிறிது நேரத்திலேயே ஈஸ்வரும், அவனும் மனதளவில் மிக நெருங்கி விட்டார்கள். கணபதி ஈஸ்வரை அண்ணா என்று பாசத்தோடு அழைக்க ஆரம்பித்து விட ஈஸ்வரும் ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்பு அவனுடன் இருக்க வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தான். அவனும் கணபதியை ஒருமையில் அழைக்க ஆரம்பித்தான்.

பேச்சின் போது கணபதியின் குடும்ப சூழ்நிலைகளும் தெரியவர ஈஸ்வருக்கு அப்பாவின் நினைவு நாளில் அவனுக்கு ஏதாவது நல்லதாய் வாங்கித் தர வேண்டும் என்று தோன்றியது. அன்பாலயத்தின் எதிரிலேயே ஒரு ஜவுளிக் கடை இருந்ததைப் பார்த்தது ஈஸ்வருக்கு நினைவு வந்தது. ஆனால் அவன் தவறாக நினைத்துக் கொள்வானோ என்ற தயக்கமும் அவனுக்கு இருந்தது. அனாதைகளுக்கு இணையாக நினைப்பதாக அவன் மனம் சங்கடமடைந்து விடக் கூடாது என்று ஈஸ்வர் நினைத்தான்....

கணபதி அவனிடம் கேட்டான். நீங்க எத்தனை நாள் இந்தியால இருப்பீங்க அண்ணா?

“ஒரு மாச லீவுல வந்திருக்கேன் கணபதி. அதுக்குள்ளே போயாகணும்...

முடிஞ்சா எங்க கிராமத்துக்கு ஒரு தடவை வாங்க. எங்க பிள்ளையாரைப் பாத்துட்டுப் போங்க. எங்க கிராமம் ரொம்ப தூரம் இல்லை. பக்கம் தான். அதுவும் உங்க மாதிரி கார் இருக்கிறவங்களுக்கு வர்றது கஷ்டமே இல்லை.

ஈஸ்வர் புன்னகைத்தான். டைம் கிடைக்கிறது கஷ்டம் கணபதி. பார்க்கிறேன். ஒரு வேளை உன்னை மறுபடி சந்திக்க முடியாமயும் போகலாம். என் ஞாபகார்த்தமா உனக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்தா தப்பா நினைக்க மாட்டியே கணபதி...

உங்க அன்பே போதும்ணா. நான் ஞாபகார்த்தமா அதையே வச்சுக்குவேன். வேற ஒன்னும் வேண்டாம்...

ஒரு அண்ணா தம்பிக்கு எதாவது வாங்கிக் கொடுக்கணும்னு நினைக்கிறது தப்பா கணபதி. நீ வேண்டாம்னு சொல்லறதைப் பார்த்தா என்னை வேற மனுஷனா நினைக்கிற மாதிரியல்ல தோணுது...

கணபதிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் தர்மசங்கடத்துடன் ஈஸ்வரைப் பார்த்தான்.

ஈஸ்வர் தொடர்ந்து கேட்டான். “டிரஸ் வாங்கித் தரட்டா. எதிரிலேயே ஒரு ஜவுளிக்கடை இருக்கு.

டிரஸ் எல்லாம் எதுக்குண்ணா. என் கிட்ட தேவையான அளவு இருக்கு. நாலு வேஷ்டி நாலு துண்டு இருக்கு. அதுக்கும் மேல என்ன வேண்டும் சொல்லுங்க பார்க்கலாம்... சட்டை நான் போட்டுக்கறதே அபூர்வம்...

நாலு வேஷ்டி நாலு துண்டுஎன்பதே அதிகம் என்பது போலப் பேசிய கணபதியை அதிசயப் பிறவியைப் பார்ப்பது போல விஷாலி பார்த்தாள். ஈஸ்வர் விடாப்பிடியாக கணபதியை எதிரில் இருந்த ஜவுளிக்கடைக்கு அழைத்துச் சென்றான். விஷாலி அன்பாலயத்திலேயே இருக்க ஈஸ்வரும், கணபதியும் மட்டும் எதிரில் இருந்த ஜவுளிக்கடைக்குப் போனார்கள்.  கணபதி சற்று தயக்கத்துடன் தான் போனான்.

அந்த ஜவுளிக்கடை பெரிதாக இருந்தது. வாடிக்கையாளர்கள் யாரும் இருக்கவில்லை. ஈஸ்வர் பட்டுத் துணிகள் பகுதிக்கு கணபதியை அழைத்துச் சென்று நல்ல பட்டு வேட்டி ஒன்று கேட்க கணபதி “ஐயோ பட்டு வேஷ்டி எல்லாம் வேண்டாண்ணா.....என்று ஆட்சேபித்தான்.

நீ கொஞ்சம் சும்மா இரு கணபதிஎன்று ஈஸ்வர் சொல்ல கணபதி தர்மசங்கடத்துடன் கைகளைப் பிசைந்தான். ஆனால் எடுத்துப் போட்ட வெண் பட்டு வேட்டி ஒன்று அவன் மனதை மிகவும் கவர்ந்தது.  கோயிலில் பிள்ளையாருக்கு இருக்கும் ஒரே பட்டுத்துணி மிக நைந்த நிலையில் இருப்பது நினைவுக்கு வந்தது. இதை பிள்ளையாருக்கு உடுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.

அதைக் கவனித்த ஈஸ்வர் கேட்டான். என்ன விஷயம்

இது எங்க பிள்ளையாருக்கு நல்லாயிருக்கும்என்று கணபதி புன்னகையுடனேயே சொன்னான்.

“அப்படின்னா இதுல ரெண்டு பேக் பண்ணிடுங்கஎன்று ஈஸ்வர் சொல்ல அந்தப் பட்டு வேட்டியின் விலையைப் பார்த்து மலைத்துப் போன கணபதி மறுத்தான். “அண்ணா ஒன்னு போதும். அந்தக் கணபதிக்கு வாங்கிக் கொடுத்தா இந்தக் கணபதிக்கு வாங்கிக் கொடுத்த மாதிரி தான்.

பரவாயில்லை. ரெண்டு கணபதிக்கும் இருக்கட்டும். எங்கப்பாவோட நினைவு நாள்ல நான் கடவுளை மறந்துட்டேன். நீ ஞாபகப் படுத்திட்டே....

கார் டிரைவருக்குப் போன் கால் வந்தது. உனக்கு அறிவு இருக்கா. எங்கே இருக்கே நீ...

“நம்ம கார் ரிப்பேர் ஆயிடுச்சுங்கய்யா. மெக்கானிக் வேற ஒரு வண்டிய ரிப்பேர் பண்ணிட்டு இருக்கான். அதை முடிச்சவுடனே அவனைக் கையோட கூட்டிகிட்டு போறதுக்காக நான் வெயிட் பண்ணிகிட்டிருக்கேன். ஏன் ஐயா?

கணபதியை அந்த ஈஸ்வர் கிட்டயே சேர்த்துட்டு ஏன்னா கேட்கறே?

நீங்க சொல்றது எனக்கு புரியலைங்களே ஐயா. கணபதி கார் ரிப்பேர் ஆன இடத்துக்குப் பக்கத்துல இருந்த பிள்ளையார் சிலை கிட்ட இருக்காரு

முட்டாள். நீ கார் ரிப்பேரே பண்ண வேண்டாம். வேற எதாவது காரை எடுத்துட்டாவது கிளம்பு.  முதல்ல அவனை அங்கே இருந்து கூட்டிகிட்டுப் போ.... கணபதியும், ஈஸ்வரும் கார் ரிப்பேர் ஆன இடத்துக்கு எதிர்ல இருக்கற ஜவுளிக்கடையில இருக்காங்க. ஓடு...

ணபதிக்கு பட்டு வேட்டி அல்லாமல் வேறு இரண்டு நல்ல காட்டன் வேட்டிகள், ஒரு சட்டை, இரண்டு துண்டுகள் எல்லாம் வாங்கிக் கொடுத்த ஈஸ்வரை கண்கள் கலங்க அவன் பார்த்தான். அவனுக்குப் பேச்சே வரவில்லை.  ’யாரிவன்? பார்த்த சிறிது நேரத்திலேயே இப்படி அன்பு மழை பொழிகிறானே? நிஜமாகவே எனக்கு ஒரு அண்ணன் இருந்தால் கூட இப்படி இருக்க முடிவது சந்தேகம் தானே? இந்தக் கடனை நான் எப்படித் தீர்ப்பேன்?

ஈஸ்வர் கேட்டான். “போகலாமா கணபதி?

கணபதி தலையை மட்டும் அசைத்தான். ஈஸ்வர் வாங்கிக் கொடுத்திருந்த உடைகள் இருந்த பை அவன் கையில் மனதைப் போலவே கனத்தது.  இருவரும் வாசலை நோக்கி நடக்க இருவருக்கு இடையில் யாரோ ஒருவர் நெருங்கினார். வழிக்கு வேண்டி இருவரையும் விலக்குவது போல அவர் இருவரையும் தொட்டார். இருவருமே மின்சாரம் உடம்பில் பாய்ந்தது போல் உணர்ந்தார்கள். சில வினாடிகள் மூவருக்கும் இடையே மின்சாரப் போக்குவரத்து நீடித்தது. ஈஸ்வரும் கணபதியும் உடல் நடுங்க நடுவே வந்த நபர் சாதாரணமாக நின்றார். அவர் தன் கைகளை அவர்கள் உடலில் இருந்து விலக்கிய போது அவர்கள் தங்களையும் அறியாமல் விலகி தள்ளிப் போனார்கள்.

அந்த நபர் கணபதி பக்கம் திரும்பவேயில்லை. ஆனால் ஈஸ்வர் பக்கம் திரும்பி லேசாகப் புன்னகைத்து விட்டுப் போனார். அவர் கண்களில் அக்னியைப் போன்றதொரு ஒளி தோன்றி மறைய ஈஸ்வர் தன் கண்களை நம்ப முடியாமல் பெரும் திகைப்புடன் அவரைப் பார்த்தான். போகும் அவரை ஓடிப் போய் பிடித்துக் கொள்ள ஈஸ்வரின் அறிவு அலறியது. ஆனால் சிலை போல அவனால் நிற்கத் தான் முடிந்ததே ஒழிய இம்மியும் நகர முடியவில்லை. அவன் நகர முடிந்த போது அந்த நபர் மறைந்து போயிருந்தார்.

கணபதி திகைப்புடன் ஈஸ்வரிடம் சொன்னான். ஏதோ கரண்ட் பாஸான மாதிரி இருந்துச்சு.

மின்சாரம் பாய்ந்த அனுபவம் தன்னுடையது மட்டுமல்ல என்பது உறுதியாகத் தெரிந்ததும் ஈஸ்வர் தெருவுக்கு ஓடிப் பார்த்தான். அந்த நபர் இரு பக்கமும் தென்படவில்லை.

மறுபடியும் கடைக்குள் ஓடி வந்தவன் கடைக்குள் இருந்த ஊழியர்களைக் கேட்டான். “இப்ப ஒருத்தர் போனாரே, யார் அவர்?

அவர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் வேறொரு நபர் இருந்ததையே கவனிக்கவில்லை. பார்த்த நபரும் ஈஸ்வர் கணபதிக்கு நடுவில் அந்த நபர் சென்ற போது தான் பின்னால் இருந்து பார்த்திருந்தார். அந்த நபர் எப்போது உள்ளே வந்தார், எப்படி வந்தார், எப்படி அவர்கள் இருவருக்கும் பின்னால் போனார் என்பது அந்த ஊழியருக்கும் தெரியவில்லை.

கடை முதலாளி கேட்டார். “உங்க பர்ஸ் எதுவும் காணாமல் போகலையே

ஈஸ்வர் இல்லை என்றவுடன் அவர் ஆர்வம் குறைந்து போய் கல்லாவில் அமர்ந்தபடியே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார். கணபதி என்ன நடந்தது என்பதை இன்னும் ஜீரணிக்க முடியாமல் அப்படியே சிலை போல நின்றான். ஈஸ்வர் தான் பார்த்ததை கணபதியிடம் கூட சொல்லவில்லை. அவனும் திகைப்பும் அதிர்ச்சியும் குறையாமல் அப்படியே நின்றான்.  அந்த மர்ம நபரைக் கடைசி நேரத்தில் கவனித்த அந்த ஊழியர் அந்த நபர் உள்ளே வந்ததை எப்படி அனைவரும் பார்க்கத் தவறி விட்டார்கள் என்று குழம்பிக் கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் கார் டிரைவர் ஓடி வந்தான். சாமி இங்கேயா இருக்கீங்க. வாங்க போகலாம் நேரமாச்சு

கார் சரியாயிடுச்சா?கணபதி கேட்டான்.

“இல்லை. அது மெக்கானிக் வந்து பார்த்துக்குவான். நான் வேற கார் கொண்டு வந்திருக்கேன். உங்களுக்கு சாயங்கால பூஜைக்குள்ளே வரணுமே... அதான்...

கணபதி ஈஸ்வரிடம் விடை பெற்றான். அண்ணா ரொம்ப நன்றி. இத்தனை வாங்கித் தந்திருக்கீங்க. திருப்பித் தர என் கிட்ட எதுவுமே இல்லை....

என்னை ஞாபகம் வச்சிரு கணபதி. அப்பப்ப உன் பிள்ளையார் கிட்ட என்னை கவனிச்சுக்கச் சொல்லு. அது போதும்.

அன்பு நிறைந்த கணபதி தலையாட்டினான். அவன் எதோ சொல்ல வந்தான். ஆனால் கார் டிரைவர் பேச விடாமல் அவனை இழுக்காத குறையாக “சாமி நேரமாச்சு.  அனுமார் கோயிலை மத்தியானம் சாத்திடுவாங்க...என்று சொல்ல ஈஸ்வர் கணபதியைக் கைகுலுக்கி அனுப்பி வைத்தான். அப்போது இருவருக்கும் இடையே முன்பளவு இல்லாவிட்டாலும் லேசான மின்சாரம் மறுபடியும் பாயந்தது. இருவரும் திகைத்தனர். ஆனால் கணபதி வாய் விட்டு எதுவும் சொல்வதற்கு முன் கார் டிரைவர் அவனை அழைத்துக் கொண்டு போய் விட்டான்.

கணபதி போகும் போது திரும்பிப் பார்த்துக் கொண்டே சொன்னான். சரி கிளம்பறேன்ணா. அண்ணி கிட்டயும் சொல்லிடுங்க

அவன் சொன்னது உடனடியாக ஈஸ்வரின் மூளைக்கு எட்டவில்லை. அவன் சிந்தனை எல்லாம் இப்போதைய மின் அதிர்வை சுற்றியே இருந்தது. அந்த மர்ம நபர் சித்தராகத் தான் இருக்க வேண்டும் என்பதில் அவனுக்கு சந்தேகம் இல்லை. அவர் இருவரையும் தொட்ட போது ஏதோ இனம் புரியாத ஒன்றை இருவருக்கும் ஒட்ட வைத்து விட்டுப் போனது போல் அவனுக்குத் தோன்றியது. அது தான் இப்போதும் அவர்களிடையே மின் அதிர்வுகளை ஏற்படுத்துகிறதோ?

நடந்தது எதுவும் கனவல்ல என்று ஈஸ்வர் ஓரிரு முறை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. திகைப்புடனேயே அவன் ஜவுளிக்கடையை விட்டு வெளியே வந்த போது கணபதி முதலில் வந்த காரும் காணவில்லை. கணபதியும் போய் விட்டிருந்தான்.
         
ஈஸ்வருக்கு இந்த சிவலிங்க விஷயத்தில் தான் அறியாமலேயே வேறு விதத்திலும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது.  இத்தனை நாட்கள் திரும்பத் திரும்ப சிவலிங்கம் தான் காட்சி அளித்தது என்றால் இப்போது அந்த சித்தரும் காட்சி அளித்து விட்டுப் போய் இருக்கிறார்.... அவர் தொட்டதன் பாதிப்பை நினைக்கையிலேயே உடல் மறுபடி சிலிர்த்தது. ஆனால் அவர் எதற்கு கணபதியையும் தொட்டார் என்ற கேள்விக்கு அவனால் விடை காண முடியவில்லை. அவனுடன் கணபதி இருந்ததாலா அல்லது வேறு காரணம் இருக்குமா?....


(தொடரும்)

-          என்.கணேசன்



17 comments:

  1. வாரம் வாரம் கதை மெருகேற்றி கொண்டு போகிறது

    ReplyDelete
  2. அந்த மர்ம நபர் சித்தராகத் தான் இருக்க வேண்டும் என்பதில் அவனுக்கு சந்தேகம் இல்லை. அவர் இருவரையும் தொட்ட போது ஏதோ இனம் புரியாத ஒன்றை இருவருக்கும் ஒட்ட வைத்து விட்டுப் போனது போல் அவனுக்குத் தோன்றியது. அது தான் இப்போதும் அவர்களிடையே மின் அதிர்வுகளை ஏற்படுத்துகிறதோ?

    கதைக்குள் மின்சாரம் பாய்ந்திருக்கிறது ..

    ReplyDelete
  3. அருமை...ஈஸ்வரை மட்டும் ரசித்த எனக்கு கணபதியும் இப்போதிலிருந்து பிடிக்க ஆரம்பித்து விட்டது. இந்த வாரம் அருமை.ஈஸ்வர் எப்போது அந்த சிவலிங்கத்தை நெருங்கப்போகிறான் என்பதை அறியத் துடிக்கிறேன்!!!

    ReplyDelete
  4. Every Thursday waiting for the afternoon, waiting to read this navel. i guess today am the first one read this out. Good keeping readers expectation for every week. keep it up :)

    ReplyDelete
  5. # இந்தக்காலத்தில் கடவுள் கோரிக்கைகளை நிறைவேற்றும் சக்தியாகத் தான் பார்க்கப்படுகிறார் #
    நிதர்சனமான உண்மை ....
    #சில வினாடிகள் மூவருக்கும் இடையே மின்சாரப் போக்குவரத்து நீடித்தது#
    உங்களுடைய எழுத்துக்கள் கண் வழியாக சென்று உணர்வுகளையும் தூண்டுகிறது.

    ReplyDelete
  6. எடுத்துப் போட்ட வெண் பட்டு வேட்டி ஒன்று அவன் மனதை மிகவும் கவர்ந்தது. கோயிலில் பிள்ளையாருக்கு இருக்கும் ஒரே பட்டுத்துணி மிக நைந்த நிலையில் இருப்பது நினைவுக்கு வந்தது. இதை பிள்ளையாருக்கு உடுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். அவன் முகத்தில் புன்னகை அரும்பியது.
    ------------
    கடை முதலாளி கேட்டார். “உங்க பர்ஸ் எதுவும் காணாமல் போகலையே” ஈஸ்வர் இல்லை என்றவுடன் அவர் ஆர்வம் குறைந்து போய் கல்லாவில் அமர்ந்தபடியே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.
    --------
    ------
    வாழ்வின் எதார்த்தமான வார்த்தைகள்.......


    ஈஸ்வர் பக்கம் திரும்பி லேசாகப் புன்னகைத்து விட்டுப் போனார். அவர் கண்களில் அக்னியைப் போன்றதொரு ஒளி தோன்றி மறைய ஈஸ்வர் தன் கண்களை நம்ப முடியாமல் பெரும் திகைப்புடன் அவரைப் பார்த்தான். போகும் அவரை ஓடிப் போய் பிடித்துக் கொள்ள ஈஸ்வரின் அறிவு அலறியது. ஆனால் சிலை போல அவனால் நிற்கத் தான் முடிந்ததே ஒழிய இம்மியும் நகர முடியவில்லை. அவன் நகர முடிந்த போது அந்த நபர் மறைந்து போயிருந்தார்.
    --------------
    கதையின் எதிர்பாராத திருப்புமுனை.........
    அருமை.......

    வாராவாரம் படிப்பவரின் மனதை எங்கும் அலைபாய விடாமல் அடுத்தவாரம் வரை இழுத்து கட்டிப் போட்டுவிடுகிறீர்கள்....
    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. Anandh kumarin karuththai naan valimolikiren.


      Sakthivel

      Delete
  7. சுந்தர்March 28, 2013 at 7:30 PM

    கண் முன்னே நடப்பது போல இருக்கிறது உங்கள் கதை. சின்ன சின்ன இடங்கள் கூட அருமை. சரவணகுமார், ஆனந்த்குமார் சொன்ன இடங்கள் போலவே இன்னொரு இடமும் சூப்பர்.

    //“நீங்க இப்ப பூஜை செய்யப் போனதும் பிள்ளையாருக்குத் தானா?”

    “இல்லை.. அவரோட அப்பாவுக்கு... அவரும் நல்ல மாதிரி...”//

    கணபதி கேரக்டரை மறக்க முடியாதபடி உருவாக்கி இருக்கிறீர்கள். இந்த கதை படிக்கும் வரை வியாழகிழமை சாயங்காலம் எந்த வேலையும் செய்ய மனம் வருவதில்லை.

    ReplyDelete
  8. Interesting Shiva Lingam story. Thanks. Ganapathi character is very interesting.

    ReplyDelete
  9. வணக்கம் கணேசன் அவர்களுக்கு.
    பரமரகசியம் தொடர்ந்து வாசித்து வியக்கும் நான் உங்களுக்கு
    வாழ்த்துக்களும்,நன்றியும் சொல்ல பலநாள் முயற்சித்து இன்றுதான் அதற்க்கு நாள் கூடியதாக
    கருதிகிறேன்.

    எத்தனையோ கதைகளும் கவிதைகளும் வாசிக்கிறோம்,அத்துனையும் மனதை அகலாமல்
    இருப்பதில்லை.சிலவற்றில் மனது லைத்துவிடும்,அதையும் தாண்டி இது ஏதோ மனதை பிசைகிறது .

    சொலத்தெரியவில்லை அல்லது வார்த்தை கனிந்து வரவில்லை.அதனாலேயே இத்தனை
    நாள் யோசிப்பிலே என்ன எழுதுவது என்றுகூட தெரியாமல் பலநாள் படித்து வியப்புடன்
    பக்கம் நகர்ந்து செல்வேன்.

    இன்றும் ஏதோ கூரவெண்டும் என்றுமட்டும் நினைத்து இப்பதிவை இடுகிறேன்.
    மீண்டும் ஒருநாள் ஆழ சிந்தித்து உங்களுடன் பகிர்வை செய்ய விரும்புகிறேன்.
    நன்றி நட்புடன் சேகர்..

    ReplyDelete
  10. கதையை படிக்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது

    ReplyDelete
  11. அருமை... என்று சொல்வதைத் தவிர வேறு தெரியவில்லை... இத்தகைய அரிய எழுத்தாற்றல் உங்களிடம் என்றும் நீடித்திருக்க, இறைவன் அருளட்டும்.

    ReplyDelete
  12. அருமை,என் மனதை மிகவும் கவர்கிறது.
    Arulmary

    ReplyDelete
  13. semaiya poguthu....adutha pathivirku kathurukiren :)

    ReplyDelete
  14. your writing skill & style is especially beautiful this week!!

    ReplyDelete