சாணக்கியன் நாவல் இரு பாகங்களாக வெளியாகியுள்ளது! ....

Monday, May 17, 2010

ஆழ்மனதின் அற்புத சக்திகள் 32



யோகாவின் எட்டு நிலைகள்

தியானம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் தேர்ச்சி பெற்றிருந்த கலையாக இருந்தது. யோகிகளும், சித்தர்களும் தியானத்தின் மூலம் மனதை அமைதிப்படுத்தியும், மனதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தும் மலைக்க வைக்கும் சக்திகளை எல்லாம் பெற்றிருந்தார்கள். இந்திய வரலாற்றை ஆராய்ந்த பல வெளிநாட்டு வரலாற்றாசிரியர்களும் யோகிகளின் இந்த யோக சக்திகள் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இந்திய யோகா பற்றி பல முனிவர்களும், யோகிகளும் பல வழிகளில் விவரித்திருந்தனர் என்றாலும் பதஞ்சலி மகரிஷி அவற்றை எல்லாம் சேர்த்து, தொகுத்து, சுருக்கி “யோக சூத்திரங்கள்” எழுதினார். அந்த யோக சூத்திரங்களைப் படித்துப் பார்த்தவர்களுக்கு ஒரு பிரமிப்பு வராமல் இருக்காது. அது என்னவென்றால் ஒரு தேவையில்லாத அலங்காரச் சொல்லைக் கூட அதில் யாரும் காண முடியாது.

முதல் சூத்திரமே ‘இப்போது யோகம் விளக்கப்படுகிறது’ என்ற ஒற்றை வாக்கியம் தான். இரண்டாவது சூத்திரத்தில் யோகா என்பது என்ன என்பதை ஒற்றை வாக்கியத்தில் ரத்தினச் சுருக்கமாகச் சொல்கிறார். “மனம் பல வடிவங்களை எடுக்க விடாமல் தவிர்ப்பதே யோகம்”
ஒரு குளத்தில் அலைகள் இல்லாத போது, அது நிச்சலனமாக இருக்கும் போது அதன் அடியில் உள்ளவை எல்லாம் மிகத் துல்லியமாகத் தெரியும். அதே போல மனமும் பல எண்ண அலைகளால் அலைக்கழிக்கப்படாமல், அது பல வித எண்ணங்களால் ஆட்கொள்ளப்படாமல் அமைதியாக இருக்கும் போது நம் ஆழ்மனதை நம்மால் முழுவதுமாக அறிய முடிகிறது. ஆழ்மனதை அறிகிற போது அதன் அற்புத சக்திகள் மிக எளிதில் நமக்குக் கை கூடுகின்றன. இதையே பதஞ்சலி மகரிஷி யோகமாகச் சொல்கிறார்.

இப்படி யோக சூத்திரங்களை மிகவும் பொருள் பொதிந்த வார்த்தைகளால் சுருக்கமாக விளக்கிக் கொண்டே போகிறார் பதஞ்சலி. முழுவதுமாக யோக சூத்திரங்களைப் படிக்க விரும்புபவர்கள் விவேகானந்தரின் ராஜ யோகம் நூலைப் படிக்கலாம். அதில் அவர் பதஞ்சலியின் சூத்திரங்களையும், அதற்கான விளக்கங்களையும் மிக அழகாகக் கொடுத்துள்ளார்.

பதஞ்சலி யோகத்தின் எட்டு அங்கங்களைக் குறிப்பிடுகிறார். அதில் ஏழாவது அங்கம் தான் தியானம். பெரும்பாலான தியான வகைகள் யோகாவின் சில அம்சங்களையாவது பின்பற்றி வலியுறுத்துகின்றன என்பதால் பதஞ்சலியின் யோகாவின் எட்டு நிலைகளை மிகச்சுருக்கமாக ஒரு சாமானியனுடைய பார்வையில் தெரிந்து கொள்வோம்.

1. யமா – அஹிம்சை, சத்தியம், திருடாமை, பிரம்மச்சரியம், பேராசையின்மை ஆகியவற்றை இதில் பதஞ்சலி கூறுகிறார்.
2. நியமா- சுத்தம் (உள் மற்றும் புறம்), திருப்தி, தவம், சுயமாய் கற்றல், இறைவனிடம் சரணாகதி ஆகியவற்றை பதஞ்சலி இதில் குறிப்பிடுகிறார்.
3. ஆசனா - யோகாசனங்கள்
4. ப்ராணயாமா- மூச்சுப் பயிற்சி மற்றும் மூச்சுக் கட்டுப்பாடு.
5. ப்ரத்யாஹரா- மனதைப் புலன்கள் வழியோ போகாமல் கட்டுப்படுத்துதல்
6. தாரணா- மனதை ஓரிடத்தில் குவித்தல்
7. தியானா- தியானம்
8. சமாதி - இறைநிலை அடைந்து அதிலேயே ஐக்கியமாதல்.

இந்த ஒவ்வொரு படியைப் பற்றியும் இங்கு கூறியிருப்பது துல்லியமான விளக்கமாகாது. இங்கு பதஞ்சலியின் யோக சூத்திரங்களை விரிவாக அறிந்து தேர்ச்சி அடைவது நம் குறிக்கோள் அல்ல என்பதால் பொதுவான விளக்கம் எளிய சொற்களில் தரப்பட்டிருக்கிறது. (அவற்றை மிகச்சரியாக, விரிவாக அறிய விரும்புபவர்கள் பதஞ்சலியின் யோகசூத்திரங்களை நல்ல நூல்கள் மூலம் படித்துக் கொள்ளலாம்)

இங்கு நம்முடைய ஆழ்மன சக்திகளை அடைய எட்டு படிகளை பதஞ்சலி காட்டுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். முதல் இரண்டு படிகளான யமா, நியமா இரண்டும் தீய பண்புகளை விலக்கி நற்பண்புகளை அடைவது என்று சுருக்கமாகச் சொல்லலாம். ஆரம்பப் படிகளாகவே இவற்றை சொல்வது ஏனென்றால் நற்பண்புகள் இல்லாதவன் எதைக் கற்றாலும் அதனால் அவனுக்கும், அவனைச் சார்ந்த சமூகத்திற்கும் தீமையே விளையும் என்ற ஞானம் அன்றைய யோகிகளுக்கு இருந்தது. இன்றைய காலக் கட்டத்தில் நற்குணங்கள் இல்லாத அறிவு எத்தனை அழிவுகளுக்குக் காரணமாக இருக்கின்றது என்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

அடுத்ததாக மூன்றாம் படியான ஆசனங்கள் மூலம் நம் உடல்நலனைப் பாதுகாக்க பதஞ்சலி வலியுறுத்துகிறார். உடல்நலம் சரியாக இருக்கும் வரை மட்டுமே மற்ற உயர்ந்த விஷயங்களில் முழுமையான கவனம் செலுத்துதல் சாத்தியம் அல்லவா?

நான்காவதாக மூச்சுப் பயிற்சி. இதன் மூலம் மனதைக் கட்டுப்படுத்தும் ஆரம்பப் பணி எளிதாகிறது என்பதை முன்பே பார்த்தோம்.

ஐந்தாவதாக மனம் புலன் வழிப் பிரயாணம் செய்து அலைந்து தன் சக்திகளை வீணடிக்காத வண்ணம் அது அலைய ஆரம்பிக்கும் போதெல்லாம் திருப்பிக் கொண்டு வரும் கலையே ப்ரத்தியாஹரா. திரும்பத் திரும்ப சலிக்காமல் அலையும் மனதை திரும்பக் கொண்டு வருதல் மிக முக்கியமான படி.

அப்படிக் கொண்டு வந்த மனதை ஓரிடத்தில் குவிப்பது தாரணா என்கிற ஆறாம் படி. மனம் ஓரிடத்தில் குவிய ஆரம்பிக்கும் போது தான் சக்தி பெற ஆரம்பிக்கிறது.
குவிய ஆரம்பிக்கும் மனம் அங்கு லயித்து விடுவது தியானம் என்கிற ஏழாம் படி. இந்த நிலையில் மனம் அமைதியடைந்து சக்திகள் பல பெறுகிறது.

சிறிது நேரம் லயிப்பது தியானம் என்றால் மனம் அதிலேயே ஐக்கியமாகி விடுவது கடைசி படியான சமாதியில். இந்த நிலையில் பிரபஞ்ச சக்தியுடன் ஐக்கியமாகி விடுவதால் இங்கு நாம் விரும்பும் எதையும் அடைய முடியும், தெய்வீக சக்தி கை கூடுகிறது என்கிறது யோகா.
இப்படி ஒரு கணிதக் கோட்பாடு போல் படிப்படியாக விளக்குகிறார் பதஞ்சலி. முன்பு கூறியது போல இந்த அடிப்படை விஷயங்களை வேறு வேறு முறைகளில் எளிமைப்படுத்தி சிறிது சேர்த்தும், மாற்றியுமே அனைத்து தியான முறைகளும் அமைந்துள்ளன.

இனி அந்த தியான முறைகள் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

மேலும் பயணிப்போம்.....
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி:விகடன்

15 comments:

  1. Srinivasan TV malaiMay 17, 2010 at 5:06 PM

    Excellent and continue your active job

    ReplyDelete
  2. நல்ல தகவல்கள்

    நன்றி

    ReplyDelete
  3. பெருமையான தகவல்கள்

    ReplyDelete
  4. Thank you. Its so simple and straight. Also give some reference books for further studies.

    ReplyDelete
  5. Please bring these ideas as Book for those who have no accesibility to Internet.Thank you.

    ReplyDelete
  6. sir i want to know this,i try to practice thiyanam but i coudnt,nw im doing s.kriya(art of living),now i feel better can i follow this?im a medical student ,very stress,but i dont have time 2 do that also regularly.can u give an advice please?
    im Lavan from Batticaloa

    ReplyDelete
  7. Dear Lavan,
    Try to give atleast 20 minutes to meditation. If you do regularly your reading quality will improve tremendously. You will grasp more in less time. So by doing meditation you save time actually.

    N.Ganeshan

    ReplyDelete
  8. thank yoy sir i will try-lavan

    ReplyDelete
  9. hi. lavan.
    i m also practicing s.k (AOL). IT s great. In the begining you need to spend some time regularly. once u reach a confident level. you can do 5 min meditation. it doesnt need any spl attn. anywhere, anytime u can do this thiyanam. many guidelines available in internet.

    ReplyDelete
  10. சனாதன தர்மம் என்று போற்றப் படும் இந்து மதத்தின் புராணங்கள், இதிகாசங்கள் அனைத்துமே இறை நோக்கை மறை பொருளாக கொண்டவை. அந்த வழியில் பதஞ்சலி யோக சூத்திரம் நவீன உளவியலுக்கான சாஸ்திரமாக விளங்குகிறது. சொல்லப் போனால் பதஞ்சலி யோக சூத்திரங்கள் தனி மனித மற்றும் உலக ஒழுங்குமுறைக்கே சிறந்த வழிகாட்டியாக விளங்கும். பதஞ்சலி யோக சூத்திரங்களை மனதின் இயல்பை அறிய விரும்பும் அனைவருக்கு படித்தால் மிக சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
  11. ஒரு கணிதக் கோட்பாடு போல் படிப்படியாக விளக்குகிறார் பதஞ்சலி. முன்பு கூறியது போல இந்த அடிப்படை விஷயங்களை வேறு வேறு முறைகளில் எளிமைப்படுத்தி சிறிது சேர்த்தும், மாற்றியுமே அனைத்து தியான முறைகளும் அமைந்துள்ளன.

    பயன்மிக்க பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  12. Muslims method of prayer movements standing, bending,kneeling,sitting, reciting the Holy Quran with full concentration, praising Allah the Almighty during each movements,contemplaring fully on prayers, are a kind of yogic movements. Muslim concept of prayer is to percieve Allah the Almighty, within self, without any idol or form. By doing so 5 times a day, the doer comes out of self and merges with the thought of Allah. This state is called 'Fana.Furtourmore 5 times prayer timings has absolute cosmic time connection between the soul of the man and the soul of the Almighty.ie. microcosm and macrocosm. Perfect Sufis posesses such virtue like yogi.

    ReplyDelete